இனி எல்லாமே ஏ.ஐ - 9: இயற்கை எவ்வழி, சட்டம் அவ்வழி!

இனி எல்லாமே ஏ.ஐ - 9: இயற்கை எவ்வழி, சட்டம் அவ்வழி!

ஏ.ஐ நுட்பத்தின் தோற்றம் மற்றும் தேவையைப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், ஆலன் டியூரிங், ஜான் மெக்கார்த்தி, கிளாடு ஷனான், லீப்னிஸ் உள்ளிட்ட முன்னோடிகளைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

கணித மேதையான ஆலன் டியூரிங் செயற்கை நுண்ணறிவுக்கான தெளிவான கருத்தாக்கத்தை முன்வைத்தவர்களிலும் ஒருவராகத் திகழ்கிறார். ‘இயந்திரங்கள் யோசிக்க முடிந்தால்?’ எனும் இவரது ஆய்வுக் கட்டுரை செயற்கை நுண்ணறிவுத் துறைக்கான அடித்தளங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுக்கான பரிசோதனையாகக் கருதப்படும் டியூரிங் சோதனையும் பிரபலமானது. டியூரிங் செயற்கை நுண்ணறிவின் முன்னோடி என்றால், மெக்கார்த்தி இந்தத் துறையைத் தொடங்கிவைத்த கணினி மேதைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார். 1956-ல் இவர் முன்னின்று நடத்திய செயற்கை நுண்ணறிவு மாநாடுதான், இத்துறைக்கான அதிகாரபூர்வத் தொடக்கம். ‘செயற்கை நுண்ணறிவு’ (Artificial intelligence) எனும் வார்த்தையை அறிமுகம் செய்ததும் இவர்தான்.

கிளாட் ஷனான், ‘தகவல் யுகத்தின் தந்தை’ என வர்ணிக்கப்படுபவர். டிஜிட்டல் யுகத்தின் ஆணிவேரான பிட்களின் (எண்மத் துகள்கள்-0,1) கருத்தாக்கத்தை அளித்த ஷனான், இயந்திரங்களைச் செஸ் ஆட வைப்பது தொடர்பான ஆய்விலும் முக்கிய பங்காற்றியிருக்கிறார். டியூரிங்கும், கணினியைச் செஸ் ஆட வைக்கும் புரோகிராம் எழுதியவர்தான்!

பன்முகத்திறன் கொண்ட வழக்கறிஞர்

இந்த மேதைகள் எல்லாமே ஓரளவு சமகாலத்தவர்கள் என்றால், ஜெர்மனியைச் சேர்ந்த கோட்ஃப்ரீட் லீப்னிஸ் காலத்தால் இவர்களையெல்லாம் முந்தியவர். 17-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். பல்துறை வித்தகர். கணிதம், அறிவியல், தத்துவம் என பல்வேறு துறைகளில் முக்கிய சிந்தனைகளையும், கருத்தாக்கங்களையும் முன்வைத்த லீப்னிஸ், நியூட்டனுக்கு நிகரான கணித மேதை. நியூட்டன் போலவே அவரும் சுயேச்சையாகக் கால்குலஸ் கணிதப் பிரிவைக் கண்டுபிடித்தார்.

19-ம் நூற்றாண்டின் பிற்பகுதியில்கூட செயற்கை நுண்ணறிவின் சாத்தியங்கள் பற்றி சரியான புரிதல் இல்லாத நிலையில், 17-ம் நூற்றாண்டிலேயே கருத்துகளை உருவாக்கும் இயந்திரத்தைக் கண்டுபிடிக்க முற்பட்டவர் லீப்னிஸ். எல்லாவற்றையும் தாண்டி, அடிப்படையில் அவர் ஒரு வழக்கறிஞர். அவரது தந்தையும் ஒரு வழக்கறிஞர்தான். கூடவே சட்ட வல்லுநராகவும், தத்துவம் அறிந்தவராகவும் இருந்தார். தாயும் கல்விக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர்.

எனவே, லீப்னிஸுக்கு இளம் வயதிலேயே சட்டம், தத்துவம் ஆகியவற்றில் ஆர்வமும், ஆழமான புரிதலும் இருந்தது. சட்டமும், தத்துவ விசாரணையும் தனித்தனித் துறைகளாகக் கருதப்பட்ட நிலையில், இரண்டையும் இணைக்கும் விதமாக அவரது சிந்தனை அமைந்திருந்தது. சட்டத்துக்குத் தத்துவம் சார்ந்த புரிதல் தேவை என்பதை வலியுறுத்திய லீப்னிஸ், இயற்பியல் மற்றும் கணிதத்தைச் சட்டத்துடன் பொருத்திப் பார்க்கவும் செய்தார்.

கணிதமும், தர்க்கமும் இன்று எல்லாத் துறைகளுடனும் தொடர்புகொள்ளக்கூடியதாக இருந்தாலும், இவை தனித்தனி துறைகளாகக் கருதப்பட்ட காலத்தில், கணிதம் அல்லது தர்க்கம் கொண்டு சட்டத்தைச் சரியாக அணுகலாம் எனும் லீப்னிஸின் கருத்துகள் நிகரில்லாத மூலச் சிந்தனையாக அமைகின்றன. அதுமட்டுமல்ல, வடிவியலின் கூறுகளை சட்டச் சிக்கல்களுக்குத் தீர்வுகாணப் பயன்படுத்தலாம் என்றும் லீப்னிஸ் கருதினார்.

இயந்திரமும் சிந்தனையும்

எண்களைக் கொண்டு கணக்குப் போடுவது போல, எளிமையான அடிப்படை விஷயங்களை வைத்துக்கொண்டு சட்ட வழக்குகளுக்கும் கணக்குப் போட்டு தீர்வு காணலாம் என்பது லீப்னிஸின் சிந்தனையாக இருந்தது. கணிதம் சார்ந்த அணுகுமுறை மூலம் வழக்கு விவகாரங்களில் காணக்கூடிய நிச்சயமற்றத்தன்மையை நீக்கிவிடலாம் என அவர் நம்பினார்.

இந்தச் சிந்தனைகளுக்கான அடிப்படைக் கருத்துகளைத் தனது 20-வது வயதில் எழுதிய ‘ஆன் தி காம்பினேடோரியல் ஆர்ட்’ (On the Combinatorial Art) ஆய்வுக் கட்டுரையில் லீப்னிஸ் விளக்கியிருந்தார். விதிகள் அடிப்படையிலான சின்னங்களைக் கொண்டு, கருத்துகள் உருவாக்குவதைத் தானியங்கிமயமாக்கிவிடலாம் என இந்த ஆய்வு மூலம் வாதிட்டார்.

‘மனிதச் சிந்தனைகள் எவ்வளவுதான் ஆழமானதாகவும், சிக்கலானதாகவும் இருந்தாலும் அவை அடிப்படையான அம்சங்களின் கலவையே’ என லீப்னிஸ் நம்பினார். எப்படி எழுத்துகள், வார்த்தைகளாகவும், வரிகளாகவும் அமைந்து பொருள் தருகின்றனவோ அவ்விதமே மனிதச் சிந்தனைகளும் அடிப்படையான கூறுகளைக் கொண்டுள்ளன என்றார். அத்துடன் நின்றுவிடாமல், இந்த அடிப்படை அம்சங்களைக் கணக்கிட்டு செயல்படக்கூடிய இயந்திரம் ஒன்றின் மூலம் மனிதச் சிந்தனைகளைப் புதிதாக உருவாக்கலாம் என்றும் அவர் கருதினார்.

இந்த விஷயத்தில், 13-ம் நூற்றாண்டு மாயாவாத அறிஞர் ரோமான் லுல் (Ramon Lull) முன்வைத்த கருத்துகள் அவர் மீது தாக்கம் செலுத்தியது எனக் கூறலாம். கிறிஸ்துவத்தில் தீவிர நம்பிக்கை கொண்டிருந்த லுல், வட்டமாகப் பெருகிக்கொண்டிருக்கும் வளையங்களைக் கொண்ட காகித இயந்திரத்தை வடிவமைத்திருந்தார். இந்த வளையங்களில் எழுதப்பட்டிருந்த கடவுளின் அருங்குணங்களை அடிப்படையாகக் கொண்டு, காகித இயந்திர சுழற்சியில் கடவுகளின் சிறப்புகளை உணர்த்தும் புதிய கருத்துகளை உருவாக்க முடியும் எனக் கருதினார்.

300 ஆண்டுகளுக்குப் பின்னர் நனவான கனவு

கருத்துகளை உருவாக்கும் இந்தக் காகித இயந்திரத்தால் ஈர்க்கப்பட்ட லீப்னிஸ், தன்னுடைய கணித ஆற்றல், சட்ட நுண்ணறிவு, வடிவியல் என எல்லாவற்றையும் கலந்து, உருவக அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு இயந்திரம் மூலம் புதிய கருத்துகளையும், சிந்தனைகளையும் உருவாக்கலாம் என நம்பினார். இதற்கான முயற்சியிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டார். இந்த முயற்சியில் அவர் வெற்றிபெறவில்லை (வேறு ஒரு கணக்கு போடும் இயந்திரத்தை உருவாக்கினார்). என்றாலும், அவரது கருத்துகள் தற்போது சாத்தியமாகத் தொடங்கியுள்ளன.

சட்டத்துக்கான அடிப்படையாக லீப்னிஸ் கருதிய, கணக்கிடுதல் நோக்கில் சட்டத்தை அணுகும் போக்கில் அடுத்தகட்டப் பாய்ச்சல் ஏற்படத்தான் 300 ஆண்டுகளுக்கு மேல் காத்திருக்க வேண்டியிருந்தது!

(தொடரும்)

கணக்குப் போட்டு தீர்ப்பு!

வம்பு, வழக்குகளை நியாயமாக விசாரித்துத் தீர்ப்பு சொல்ல வேண்டும் என்பதுதான் வரலாறு முழுவதும் மனித குலத்தின் வேட்கையாக இருந்து வந்திருக்கிறது. ஆனால், எது நியாயம் என்பதில் எப்போதுமே விவாதங்களுக்குப் பஞ்சமில்லை. ஆனால், இந்த அணுகுமுறையிலிருந்து வேறுபட்டு, ‘தர்க்கம் சார்ந்த ஒரு மொழியை உருவாக்க முடிந்தால் அதனடிப்படையில் வழக்குகளுக்குத் தீர்வு காணலாம்’ என்று லீப்னிஸ் கருதினார். அதாவது, பொருள் மாறக்கூடிய இயற்கை மொழி வாதங்களை அடிப்படையாகக் கொள்ளாமல், மீற முடியாத தன்மை கொண்ட கணிதவியல் சமன்பாடுகளாக வாதங்களை அணுக வேண்டும் என்றார். வழக்குகளில், தர்க்கவியல் துணையோடு, இரு பக்க வாதங்களையும் கணக்குப் போட்டு தீர்ப்பு சொல்வோம் என்றார் லீப்னிஸ்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in