ஹாட் லீக்ஸ்: கேடிஆர் நடத்திய யாகம் சசிகலாவுக்காகவா?

ஹாட் லீக்ஸ்: கேடிஆர் நடத்திய யாகம் சசிகலாவுக்காகவா?

புது ரூட்டில் பிரியங்கா!

உபி மாநிலம் சஹரான்பூரில் பிப்ரவரி 10-ம் தேதி நடைபெற்ற மஹாபஞ்சாயத்தில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார். இதற்காக, டெஹ்ராடூன் விமான நிலையம் வந்தவர் அங்கிருந்து புறப்படும் வழியில் ஐந்து முக்கிய கோயில்களுக்கும் விசிட் அடித்தார். அங்கெல்லாம், உபி பெண்களைப் போல் தலையில் முக்காடிட்டு அமர்ந்து சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டார் பிரியங்கா. அங்கிருந்து செந்தூரத் திலகமிட்டு கிளம்பிய அவர் செந்தூரம் கலையாமல் மஹாபஞ்சாயத்திலும் பேசினார். அடுத்த நாள் அலகாபாத் கும்பமேளாவுக்கும் சென்று புனித நீராடினார். உபியில், கோயிலையும் கடவுளையும் பிரதானப்படுத்தி அரசியல் செய்யும் பாஜகவை சமாளிக்க காங்கிரஸ் எடுத்திருக்கும் புதிய உத்தி இது என்கிறது உபி காங்கிரஸ் முகமை.

பலே பலே பவுன்ராஜ்!

சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் செயலாளராக வி.ஜி.கே. செந்தில்நாதனை அறிவித்தது அதிமுக தலைமை. அறிவித்து சில மாதங்கள்கூட இருக்காது, செந்தில்நாதன் இப்போது அதிரடியாய் பதவியைவிட்டு தூக்கப்பட்டிருக்கிறார். இவருக்குப் பதிலாக, பூம்புகார் எம்எல்ஏ-வான பவுன்ராஜ் அந்தப் பதவியில் அமரவைக்கப்பட்டிருக்கிறார். இத்தனைக்கும் செந்தில்நாதன் பம்பரமாய் சுழன்று கழகப் பணியாற்றியவர். அப்படியிருக்க அவர் ஏன் மாற்றப்பட்டார் என்று விசாரித்தால், “பாமக - அதிமுக கூட்டணி அமைந்தால் பூம்புகார் தொகுதியை அந்தக் கட்சி பிடிவாதமாகக் கேட்டு வாங்கும். அதனால் பவுன்ராஜுக்கு தொகுதி இல்லாமல் போகும். அதேநேரம், ஆக்டீவாக செயல்படும் செந்தில்நாதனுக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்படும். இந்தச் சிக்கலைச் சமாளிக்கவே, தலைமைக்கு நெருக்கடி கொடுத்து மாவட்டச் செயலாளர் ஆகியிருக்கிறார் பவுன்ராஜ். முதலில் இவரது அழுத்தத்துக்கு அதிமுக தலைமை இறங்கிவர தயங்கியது. ஆனால், மாவட்டத்தின் மற்ற இரண்டு எம்எல்ஏ-க்களையும் உடன் அழைத்துக் கொண்டு சென்னைக்குப் பறந்த பவுன்ராஜ், ‘என்னை மாவட்டச் செயலாளர் ஆக்காவிட்டால் நாங்கள் மூவரும் வேறு முடிவு எடுப்போம்” என்று குரலை உயர்த்தி இருக்கிறார். இதையடுத்தே பவுன்ராஜை மாவட்டச் செயலாளராக்கியிருக்கிறது தலைமை” என்கிறார்கள் மயிலாடுதுறை அதிமுகவினர். இனி செந்தில்நாதன் என்ன சொல்லி மிரட்டுவாரோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in