தமிழ்வழி பயின்றோருக்கு முன்னுரிமை: வரவேற்கத்தக்க நடவடிக்கை!

தமிழ்வழி பயின்றோருக்கு முன்னுரிமை: வரவேற்கத்தக்க நடவடிக்கை!

தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை வழங்கும் சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ஒருவழியாக ஒப்புதல் அளித்துவிட்டார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் உட்பட அரசு சார்பில் நடத்தப்படும் தேர்வுகளில் இந்த முன்னுரிமை வழங்கப்படும். தாய்மொழிக் கல்வியைப் போற்றுபவர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விஷயம் இது.

தமிழ் வழியில் பட்டப் படிப்பை முடித்திருந்தால் அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை என்பது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த விஷயம்தான். எனினும், பள்ளிக் கல்வியிலும் தமிழைப் படித்திருந்தால்தான் முன்னுரிமை கிடைக்கும் என்று தமிழக அரசு கொண்டுவந்த சட்டத்திருத்தம் மிக முக்கியமானது. ஏனெனில், பணிக்குத் தேவைப்படும் அடிப்படைக் கல்வித் தகுதியைத் தமிழ் வழியில் படித்திருந்தாலே, 20 சதவீதம் முன்னுரிமை பெறலாம் என்று முந்தைய சட்டத்தில் கூறப்பட்டிருந்தது. இதனால், பள்ளிப் படிப்பை ஆங்கில வழியில் படித்தவர்கள்கூட, பட்டப் படிப்பில் தமிழ் வழியில் படித்ததன் அடிப்படையில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெற்றனர். இது தாய்மொழிக் கல்வியின் அடிப்படையையே சிதைப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில், கடந்த மார்ச் 16-ல் இந்தச் சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், கடந்த 8 மாதங்களாக இதற்கு ஒப்புதல் வழங்க காலம்தாழ்த்தி வந்தார் ஆளுநர். எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த பின்னர்தான் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதுகுறித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையும் கேள்வி எழுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏற்கெனவே, மருத்துவ கல்லூரி சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்குப் பல மாதங்கள் கழித்தே ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். கல்வி, வேலைவாய்ப்பில் கூடுதல் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர மாநில அரசு எடுக்கும் முயற்சிகளுக்குத் தாமதம் ஒரு தடையாகிவிடக் கூடாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in