Published On : 12 Oct 2019

கேஜ்ரிவால் பயணத்துக்கு கேட்- மாசு பிரச்சினையில் மல்லுக்கட்டும் பாஜக - ஆஆக

arvind-kejriwal

வெ.சந்திரமோகன்
chandramohan.v@hindutamil.co.in

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் டென்மார்க் பயணத்துக்கு மத்திய அரசு தடைவிதித்திருப்பது பாஜகவுக்கும் ஆம் ஆத்மிக்கும் இடையிலான பல்லாண்டுப் பகையை மீண்டும் உச்சத்துக்குக் கொண்டுசென்றிருக்கிறது.

அக்டோபர் 9 முதல் 12 வரை டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்த சி-40: உலக மேயர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்ளத் தயாராகிவந்த கேஜ்ரிவால், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் இந்த முடிவால் பயணத்தை ரத்துசெய்துவிட்டார். இது மாநில அரசின் அதிகாரத்தில் தலையிடும் விவகாரம் என்று ஆம் ஆத்மி தரப்பும், வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து மத்திய அரசுதான் இறுதி முடிவு எடுக்கும் என்று பாஜக தரப்பும் பரஸ்பரம் பேசிவருகின்றன.

பின்னணி என்ன?

மத்திய பாஜக அரசுக்கும் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கும் இடையிலான மோதல்கள் புதிதல்ல. டெல்லி ஆட்சி நிர்வாகத்தில் துணை நிலை ஆளுநர் மூலம் மத்திய அரசு தலையீடு செய்துவருவதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டிவருகிறது ஆம் ஆத்மி. ஆனால், விளம்பர மோகத்துடன் மலிவான அரசியல் செய்கிறார்கள் என்று பாஜக பதிலடி கொடுத்துவருகிறது.

இந்நிலையில், டெல்லியின் காற்று தரத்தை மேம்படுத்தியது டெல்லி அரசின் சாதனை என்று கடந்த மாதம் நாளிதழ்களில் முழுப் பக்க விளம்பரங்களைக் கேஜ்ரிவால் அரசு வெளியிட்டது. டெல்லியின் காற்று மாசுபாடு 25 சதவீதம் குறைந்ததற்குத் தனது அரசே காரணம் என்று பேசத் தொடங்கினார் கேஜ்ரிவால். டெல்லி சாலைகளில் ஒற்றை இலக்க வண்டிகள் ஒரு நாளும், இரட்டை இலக்க வண்டிகள் இன்னொரு நாளும் போக வேண்டும் என்று அமல்படுத்தப்பட்ட திட்டம் உட்பட தாங்கள் முன்னெடுத்த பல்வேறு திட்டங்கள் இதற்குக் கைகொடுத்தன என்றது ஆம் ஆத்மி அரசு.

அடுத்த சில தினங்களில் இவ்விஷயத்தில் மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்டார் சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். “சுற்றுச்சூழல் மாசைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு தொடர்ந்து போராடிவருகிறது. இவ்விஷயத்தில் கிடைத்திருக்கும் பலன்களுக்கு மற்றவர்கள் சொந்தம் கொண்டாடுவதை மக்கள் புரிந்துகொள்வார்கள்” என்றார் சூசகமாக.

உண்மையிலேயே, டெல்லியின் காற்றுமாசு கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதா என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் விவாதித்துக் கொண்டிருக்க, அது தொடர்பான அரசியல் போட்டியில் ஆம் ஆத்மியும் பாஜகவும் மும்முரமாக இறங்கிவிட்டன. அதன் ஒரு பகுதிதான் கோபன்ஹேகன் மாநாட்டுக்குச் செல்ல கேஜ்ரிவாலுக்கு அனுமதி மறுக்கப் பட்ட விவகாரம் என்கிறார்கள் அரசியல் பார்வை யாளர்கள்.

வாத - பிரதிவாதங்கள்

பிற நாடுகளுடனான உறவைப் பராமரிப்பது மத்திய அரசின் பணி. எனவே, மாநில முதல்வர்களின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய பொறுப்பும் மத்திய அரசுக்குத்தான் இருக்கிறது. மாநில அரசுகளுக்கும் அதற்கும் தொடர்பில்லை என்று பாஜக தரப்பு சுட்டிக்காட்டுகிறது. இதுபோன்ற பயணங்களின் தன்மை குறித்து தங்களுக்கு வரும் தகவல்களின் அடிப்படையிலேயே வெளியுறவுத் துறை அமைச்சகம் முடிவெடுக்கிறது என்றும் காரணம் சொல்கிறார்கள் பாஜகவினர்.

ஆனால், இது ஒரு அதிகார விளையாட்டு என்பது ஆம் ஆத்மியினரின் வாதம். 2018 நவம்பரில் டெல்லி துணை முதல்வர் மனீஷ் சொஸாடியாவின் ஆஸ்திரேலியப் பயணத்துக்கும் இதுபோன்ற தடையை மத்திய அரசு விதித்திருக்கிறது என்று கொந்தளிக்கிறது அந்தக் கட்சி.

“மாநிலத் தலைவர்கள் என்றாலும் இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படிதான் அவர்கள் பதவியேற்கிறார்கள். இந்தியப் பிரதிநிதிகளாகத்தான் இது போன்ற நிகழ்ச்சிகளில் அவர்கள் கலந்துகொள்கிறார்கள். இப்படித் தகுந்த காரணம் சொல்லாமல் தடை விதிப்பது முற்றிலும் தவறு” என்று வாதிடுகிறது ஆம் ஆத்மி.

ஆனால், “அழைப்பு விடுப்பது சம்பந்தப்பட்ட நாட்டின் அரசு சார்ந்த அமைப்புகளா, தனியார் அமைப்புகளா என்றெல்லாம் வெளியுறவுத் துறை அலசி ஆராயும். கேஜ்ரிவாலின் டென்மார்க் பயணத் திட்டத்தைப் பொறுத்தவரை, அது டெல்லியின் மாசைக் கட்டுப்படுத்தியதாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ள அரசியல் ரீதியாகத் திட்டமிடப்பட்டது. அரசியல் ரீதியான இந்தப் பயணத்துக்கு அரசியல் ரீதியாகவே தடை விதிக்கப்பட்டிருக்கிறது” என்பது பாஜக ஆதரவாளர்களின் வாதம்.

வெளியே வந்த பூனை

இத்தனைக்கும் நடுவில், கேஜ்ரிவாலின் பயணத்தை ரத்துசெய்ததற்கு வெளிப்படையான காரணத்தை மத்திய அரசு சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், “அது நகர மேயர்கள் அளவிலான மாநாடு” என்று மட்டும் பிரகாஷ் ஜாவடேகர் விளக்கமளித்திருக்கிறார். டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரியோ இன்னும் பல படிகள் கீழே இறங்கி, மட்டையடி அடித்திருக்கிறார். “கொல்கத்தா மேயரும்தான் அதில் பங்கேற்கிறார். அவருக்குத் தடைவிதிக்கப்பட்டதா? மேயர்கள் மாநாட்டில் ஒரு மாநில முதல்வருக்கு என்ன வேலை? எல்லோரும் உயர்ந்த நிலைக்குச் செல்லவே விரும்புவார்கள். கேஜ்ரிவாலோ முதல்வர் எனும் நிலையிலிருந்துகொண்டு இறங்கி மேயர் பதவிக்குப் பிரதிநிதித்துவம் செய்ய முயல்கிறார்” என்று கேலி செய்திருக்கிறார்.

கேஜ்ரிவாலுக்கு எதிரான முட்டுக்கட்டைகளை ரசிக்க மனோஜ் திவாரிக்கு வேறொரு காரணமும் உண்டு. சமீபத்தில், என்.ஆர்.சி பட்டியல் குறித்து கருத்து தெரிவித்த கேஜ்ரிவால், “ஒருவேளை டெல்லியில் இப்படி ஒரு பட்டியல் அமல்படுத்தப்பட்டால், டெல்லியைவிட்டு மனோஜ் திவாரியே வெளியேற வேண்டியிருக்கும்” என்று சொல்லிவிட்டார். இதையடுத்து, டெல்லியில் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தியது பாஜக. மனோஜ் திவாரி பிஹாரைச் சேர்ந்தவர் என்பதால், கேஜ்ரிவால் இப்படிச் சீண்டியிருக்கிறார் என்று பாஜகவினர் ஆவேசப்பட்டனர்.

நஷ்டம் யாருக்கு?

2005-ல், லண்டனில் தொடங்கப்பட்ட ‘சி-40 நகர பருவநிலை தலைமைக் குழு’ எனும் அமைப்புதான், இந்த உச்சி மாநாடுகளை நடத்திவருகிறது. இந்த அமைப்பில் லண்டன், நியூயார்க், ஹாங்காங் தொடங்கி டெல்லி, சென்னை, கொல்கத்தா உட்பட 90-க்கும் மேற்பட்ட நகரங்கள் அங்கம் வகிக்கின்றன.

அதேசமயம், நகர மேயர்கள் மட்டும்தான் அந்த மாநாடுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மேயர்கள், துணை மேயர்கள், நகரப் பிரதிநிதிகள், பருவநிலை வல்லுநர்கள், பருவநிலை விஷயத்தில் ஆர்வம் காட்டும் தொழிலதிபர்கள், மாற்றத்துக்கு வித்திடுபவர்கள், குடிமக்கள் எனப் பல தரப்பினரும் கலந்துகொள்கிறார்கள்.

காற்று மாசு விஷயத்தை வைத்து இரு தரப்பும் அரசியல் செய்துகொண்டிருக்கும் நிலையில், தலைநகரின் காற்று மாசு பிரச்சினை நிரந்தரத் தீர்வை எட்டிவிடவில்லை என்பதைச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலையுடன் சுட்டிக்காட்டுகிறார்கள். இரு தரப்பும் இணைந்து செயல்படுவதை விட்டுவிட்டு இப்படி மோதிக்கொள்வதால் என்ன பயன் என்பதுதான் டெல்லிவாசிகளின் கவலை.

You May Like

More From This Category

More From this Author


More From The Hindu - Tamil