கரோனா மரணங்களில் வெளிப்படைத்தன்மை தேவை

கரோனா மரணங்களில் வெளிப்படைத்தன்மை தேவை

கரோனாவைக் கட்டுப்படுத்துவதில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துவருகிறது தமிழ்நாடு அரசு. இருப்பினும் ஆங்காங்கே புகார்களும் வெடிக்கின்றன. கரோனா மரணங்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்படுவதாகவும், கரோனா தொற்றுக்குள்ளானவர்கள் இறப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என ரிசல்ட் வந்தால், கரோனாவுக்குப் பலியானோர் பட்டியலில் அவர்கள் சேர்க்கப்படுவதில்லை என்றும் புகார்கள் எழுந்திருக்கின்றன. இதனால், பலியானோரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளோ, இழப்பீடோ கிடைப்பதில்லை என்றும் குற்றம்சாட்டப்படுகிறது.

சமீபத்தில் இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய விமர்சனங்களுக்கு விளக்கமளித்திருக்கும் தமிழ்நாடு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) வழிகாட்டுதல்களின்படியே கரோனா மரணங்கள் அறிவிக்கப்படுவதாகவும், முந்தைய அதிமுக அரசும் அந்த வழிகாட்டுதல்களையே பின்பற்றியதாகவும் சுட்டிக்காட்டியிருக்கிறார். இது ஏற்கத்தக்கதல்ல. கரோனா தொற்றுக்குள்ளாகி உடல்நலன் பாதிக்கப்பட்டவர்கள், இறக்கும்போது நெகட்டிவ் என்று சான்றளிக்கப்பட்டால் அது கரோனா மரணம் இல்லை எனும் நிலைப்பாடே கேள்விக்குரியது. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயம். தடுப்பூசிகளின் கையிருப்பு தொடர்பாக பொதுவெளியில் எதையும் பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று மத்திய அரசு கூறியிருக்கும் நிலையில், “கையிருப்பு குறித்து சொல்லவில்லை எனில் மக்கள் காத்திருந்து ஏமாற்றம் அடைவார்கள். எனவே, உண்மை நிலையை சொல்வதுதான் உகந்தது” என்று வெளிப்படையாகப் பேசும் சுகாதாரத் துறை அமைச்சர், கரோனா மரணங்கள் விஷயத்திலும், வழக்கமான வழிகாட்டு நெறிமுறைகளைத் தாண்டி வெளிப்படைத்தன்மையை உறுதிசெய்ய முன்வர வேண்டும்.

இதுபோன்ற நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மையும் மனிதாபிமானமும் அரசுக்கு அவசியம். ஏனெனில், எத்தனையோ ஆண்டுகள் நீடித்திருக்க வேண்டிய மனிதர்களின் ஆயுள், ஒரு பெருந்தொற்றால் திடீரென முடிவுக்கு வருவது சம்பந்தப்பட்டவர்களின் குடும்பத்தையே நிலைகுலையச் செய்யும் விஷயம். இவ்விஷயத்தில் அரசு பக்கபலமாக இருந்தால்தான் பாதிக்கப்பட்டவர்கள் ஓரளவுக்கேனும் மீண்டுவர முடியும். ஆட்சியாளர்கள் இதை நினைவில் கொள்ளட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in