வனமே உன்னை வணங்குகிறேன்..! 9- கேளிக்கை தருணத்துக்கோர் கெவி

வனமே உன்னை வணங்குகிறேன்..! 9- கேளிக்கை தருணத்துக்கோர் கெவி

இந்த வாரம் உங்களின் கரம் பற்றி கடவுளின் தேசத்தில் இருக்கும் சூழல் இணக்கச் சுற்றுலா மையத்துக்கு அழைத்துச் செல்வதில் அகம் மகிழ்கிறோம்.

2014-ல், சூழல் இணக்கச் சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்பட்ட இடம் கெவி வனவிலங்கு சரணாலயம். ஐப்பசி தொடங்கி மாசி வரை குடும்பத்தோடு சென்றுவர உகந்த இடம் இது என கேரள வனத் துறையே பரிந்துரைக்கிறது. மழைக்காலங்களில் மண்சரிவு ஏற்படும் என்பதால் அந்தச் சமயங்களில் இங்கு வருவதைத் தவிர்ப்பதே நல்லது என்ற யோசனையையும் சொல்கிறது.

கேரள வனத் துறையின் அக்கறை மிக்க ஆலோசனைக்கு செவி மடுத்து கெவி சென்றால், நம் பயணத்தை இனிதாக்கும் அளவுக்கு அவர்களின் ஏற்பாடுகள் மெச்சும்படியாகவே இருக்கின்றன.

எங்கிருக்கிறது, எப்படிச் செல்வது?

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் இருக்கிறது கெவி வனவிலங்கு சரணாலயம். குமுளியிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கெவிக்கு, பெரியார் வனவிலங்கு சரணாலயம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
பெரியாரிலிருந்து 8 கிலோமீட்டர் பயணித்தால் வல்லக்கடவு சோதனைச் சாவடி. அங்கிருந்து 26 கிலோமீட்டர் பயணித்தால் கெவியை அடைந்துவிடலாம்.

ஆனால், கெவி செல்வதற்கு நீங்கள் கேரள வனத்துறையிடம் முன் அனுமதி பெறுவது கட்டாயம். இல்லாவிட்டால் வல்லக்கடவு சோதனைச் சாவடியிலிருந்து திருப்பி அனுப்பப்படுவீர்கள். அனுமதி பெறுவதற்கு அதிகம் சிரமப்படத் தேவையில்லை. கேரள வனத் துறையின் https://gavi.kfdcecotourism.com/ என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்துகொண்டால் போதும். 

குமுளி தொடங்கி கெவி செல்லும் பாதை வரையில் படர்ந்துகிடக்கும் பசுமை, நீங்கள் வேறொரு உலகத்துக்குள் பிரவேசித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒவ்வொரு நொடியும் உணர்த்திக்கொண்டே வரும்.

யானைகளின் சொர்க்கம்

கேரள வனங்களில் யானைகள் அதிகம் என்பது நாம் அறிந்ததே. அதிலும் கெவியில் யானைகளைக் கூட்டம் கூட்டமாகப் பார்க்கலாம். குறிப்பாக, காலை நேரங்களிலும், பிற்பகலிலும் யானைக் கூட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு அதிகம். காட்டெருமைகள், மான்கள்,
குரங்குகள், கரடிகள், விதவிதமான அணில்கள், வண்ணவண்ணப் பறவைகள், பட்டாம் பூச்சிகள் உள்ளிட்டவையும் பார்க்கலாம். அதிர்ஷ்டம் இருந்தால் புலிகளையும் பார்க்கலாம். பூத்துக் குலுங்கும் மலர்களுடன் ஏலக்காய் நறுமணம் நாசிகளைத் துளைக்க நாடி, நரம்புகளைப் புத்துணர்வு தீண்டுவதை உணர்வீர்கள்.

2 பேக்கேஜ்… உங்கள் சாய்ஸ்

கெவியின் அழகை ரசிக்க கேரள வனத் துறை இரண்டு வகையான டூரிஸம் பேக்கேஜ்களை வழங்குகிறது. அது தொடர்பான முழு விவரங்களும் மேலே குறிப்பிட்ட இணையதளத்திலேயே விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. காலை 6.30 மணி தொடங்கி மாலை 4.30 மணி வரை ஒரு பேக்கேஜ்.

முதல் நாள் மதியம் 2 மணிக்குத் தொடங்கி மறுநாள் மதியம் 2 மணி வரை 24 மணி நேரம் இன்னொரு பேக்கேஜ். இரண்டாவது பேக்கேஜைத் தேர்வுசெய்பவர்களுக்கு இரவு தங்குவதற்காக க்ரீன் மேன்ஸன், ஸ்விஸ் காட்டேஜ் என இருவிதமான தங்குமிடங்களும் இருக்கின்றன. விருப்பத்துக்கேற்ப, வசதிக்கேற்ப நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம். இந்த பேக்கேஜில் உணவும் அடங்கும். சுவையான சைவ உணவு வழங்கப்படுகிறது.

பொறுப்பு அவசியம்

திறந்த ஜீப்பில் சவாரி அழைத்துச் செல்கின்றனர். கூடவே, வனத் துறை சார்பில் ஒரு வழிகாட்டியும் அனுப்பிவைக்கப்படுகிறார்.
வனத்திற்குள் கூச்சலிடக் கூடாது, எந்த இடத்திலும் வாகனத்திலிருந்து இறங்கக் கூடாது, புகைப்படங்கள் பிடிப்பதில் கவனம் தேவை, குப்பைகளை வீசக் கூடாது, பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக் கூடாது என்பன போன்ற அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
கெவி சுற்றுலா மைய ஒருங்கிணைப்பாளர் அஜு குமார் நம்மிடம் பேசும்போது, கெவியில் 2015-ல், குஜராத்தைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருவர் வழிகாட்டியின் அறிவுரையை மீறி யானைகளைப் புகைப்படம் எடுத்து அவற்றை எரிச்சல்படுத்தும் விதம் கூச்சலிட்ட சம்பவத்தைக் கசப்புடன் நினைவுகூர்ந்தார்.

“அதனாலேயே ஒரு பொறுப்பான சூழல் இணக்கச் சுற்றுலா பயணி எப்படிச் செயல்பட வேண்டும் என்ன வென்பதை உணர்த்திய பின்னரேஉள்ளே அழைத்துச் செல்கிறோம்” என்றார் அஜு. இங்கு நாளொன்றுக்கு100 பேருக்கு மேல் அனுமதிக்கப்
படுவதே இல்லை.

வாகன சவாரி தவிர ட்ரெக்கிங், கெவி அணைக்கட்டில் பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய படகுச் சவாரி, அருவியில் குளியில் எனப் பயணிகளை மகிழ்விக்க ஏராளமான அம்சங்கள் இருக்கின்றன. கெவியில் சபரிமலை பாயின்ட் எனும் இடம் உள்ளது. அங்கிருந்து பார்த்தால் சபரிமலை ஐயப்பன் கோயில் கோபுர தரிசனம் கிடைக்கும். புல்மேடு விபத்துக்கு முன்னதாக சபரிமலை வரும் பக்தர்கள் பயன்படுத்திய பாதைக்கு அருகில்தான் கெவி இருக்கிறது.

கெவியைச் சுற்றிய பகுதிகளில் 1970-களில் குடியமர்த்தப்பட்ட இலங்கைஅகதிகள் வசிக்கின்றனர். அவர்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் கெவி சுற்றுலா மையத்தில் வழிகாட்டிகளாக, பணியாட்களாக அவர்களுக்கு வேலை வழங்கப்படுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஏலக்காய் தோட்டங்களில் பணிபுரிகின்றனர். கெவி வரும் பயணிகளுக்கு ஏலக்காய் தோட்டமும் சுற்றிக் காண்பிக்கப்படுகிறது.

பயணங்கள் பண்படுத்தும்

“பயணங்கள் உல்லாசத்துக்காக, குதூகலத்துக்காக மட்டுமல்ல; நம்மை பண்படுத்தவும்தான்” என்கிறார் மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஆதீஸ்வரன்.

மரங்கள் வெட்டப்படுவதை எதிர்த்து தொடர்ந்து பிரச்சாரம் செய்துவரும் இவர், தனது ஹெல்மெட்டில்கூட மரங்களை வெட்டக் கூடாது என்பதை வாசகமாக எழுதிவைத்திருக்கிறார். ஓவியம் வரையும் கலையில் கைதேர்ந்தவரான இவர், அண்மையில் கெவி சென்று வந்த அனுபவத்தை நம்முடன் பகிர்ந்துகொண்டார்.

“நான் அடிக்கடி பயணப்படுவேன். பல நேரங்களில் தனியாகவும் ஒருசிலநேரங்களில் நண்பர்களுடனும் பயணிப்பேன். ஒவ்வொரு முறையும் பயணம்எனக்கு புதுப் புது அனுபவங்களைத் தரும். அதைவிட முக்கியமாகப் புதிய மனிதர்களின் அறிமுகத்தைத் தரும். அண்மையில், என் தம்பிதான் என்னை கெவி கூட்டிச் சென்றார். காலை முதல் மாலை வரை நேரம் சென்றதே தெரியவில்லை. யானைக் கூட்டங்களைக் கண்டு பிரமித்தேன். குடும்பத்துடன் சென்றுவர சிறப்பான இடம் என்றே பரிந்துரைப்பேன்.

 பயணங்கள் இந்த உலகம் எவ்வளவு பெரியது என்ற எண்ணத்தை நமக்குள் விதைக்கும். நம்மை நாமே தள்ளி நின்று பார்க்கும் வாய்ப்பைத் தரும். வனத்தில் பல்லுயிர்களையும் ஓரிடத்தில் பார்க்கும்போது ஏற்படும் பிரமிப்பை நிச்சயம் ஒவ்வொரு மனிதரும் உணர வேண்டும். வனம் மனிதனின் ஆதி வீடு. வனங்களில் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த நாம் இன்று விலகி இருக்கிறோம். ஏன், வனத்துக்குப் பகைவனாகவும் இருக்கிறோம். வனத்தை வணங்க வேண்டுமென்றால் அதை அடிக்கடி தரிசிக்க வேண்டும். நாம் வனத்துக்குள் செல்லும்போது எப்படி தூய்மையை உணர்கிறோமோ அந்தத் தூய்மைக்கு ஒரு சிறு மாசும் ஏற்படுத்திவிடாமல் வெளியே வர வேண்டும்" என்கிறார் ஆதீஸ்வரன்.

சதுப்பு நிலங்கள் அருகி வருவது தொடர்பாக சில அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த வாரம் மற்றுமொரு சதுப்பு நிலத்துக்குப் பயணப்படுவோம்.

தயாராக இருங்கள்!

(பயணம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in