காதல் ஸ்கொயர் 24

காதல் ஸ்கொயர் 24

பணிக்குப் புதிது என்பதால், அருண் அலுவலகத்தில் ஆரம்பத்தில் தடுமாறினான். இந்த நெருக்கடியில் அருணால் கௌதமை வேலை நாட்களில் சந்திக்க முடியவில்லை. சனி, ஞாயிறுகளில் மட்டும் பார்த்தான். ஆனால் பூஜா தினந்தோறும் பகல் ட்யூட்டி முடிந்து, மாலை நான்கு மணிக்கெல்லாம் கௌதம் வீட்டுக்கு வந்துவிடுவாள். ஒரு மாத காலத்தில், கௌதமை தினமும் எங்காவது வெளியே அழைத்துச் சென்றாள். ஒருநாள் மாலை வெளியில் கிளம்பும்போது கௌதம், “அம்மா… எனக்கு பைக் ஓட்டத் தெரியும்ல்ல?” என்று ரேணுகாவிடம் கேட்டான்.

“ம்…தெரியும்.”
“இப்ப பைக் ஓட்டுறதும் மறந்து போயிருக்குமா? நான் வேணும்னா ட்ரை பண்ணட்டுமா?” என்றவுடன் பூஜா, “ட்ரை பண்ணலாம். வா…” என்று அழைத்துச் சென்றாள்; ஆனால் பைக் ஓட்டுவதில் கௌதமுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அனிச்சை செயலாக, மிகவும் இயல்பாக, எந்தக் குழப்பமுமின்றி பைக்கை ஓட்டினான். பைக்கில் பூஜாவை ஏற்றிக்கொண்டுச் சென்ற கௌதமை ரேணுகா சந்தோஷத்துடன் பார்த்தார்.

தெருமுனைத் தாண்டியவுடன் பின்னாலிருந்து அவனை இறுக அணைத்துக்கொண்ட பூஜா அவன் காதில் மெதுவாக, “ஐ லைக் இட்…” என்றாள். அப்போது அவள் உதடுகள் அவன் காதில் உரச… காது சில்லென்றிருந்தாலும், உள்ளுக்குள் அனலடித்தது. கெளதம் முதுகில் அவள் மார்புகள் இறுக்கமாகப் பதிந்து அழுத்த….. அவனுக்குள் அனல் அதிகரித்துக்
கொண்டே இருந்தது. திரும்பிப் பூஜாவைப் பார்த்தான். ஆனால் பூஜாவின் முகத்தில் எந்த ஒரு விசேஷ உணர்வுமின்றி, சிறு குழந்தைபோல் சிரித்துக்கொண்டிருந்தாள்.

“எங்க போகணும்? எனக்கு வழில்லாம் தெரியாது” என்றான் கௌதம்.
“ம்…அமேதிஸ்ட் போலாமா? கார்டன் கஃபே.”
“போலாம். அது எங்க இருக்கு?”
“ஒய்ட்ஸ் ரோட்டுல.”
“அது எங்க இருக்கு?”
“ராயப்பேட்டைல.”
“அது எங்க இருக்கு?”
“அய்யோ…கடவுளே…நீ போ. நான் வழி சொல்றேன்.”
அமேதிஸ்ட்டின் உள்ளே நுழைந்து, பாதையின் இரு பக்கமும் அடர்த்தியாக வளர்க்கப்பட்டிருந்த செடி, கொடிகள் நடுவே நடந்து சென்றபோது பூஜா, கௌதமின் கையைக் கோத்துக்கொண்டாள். ஒரு அழகான புதர்ச் செடியருகே இருந்த டேபிளில் அமர்ந்தனர். கௌதம் ஆர்வத்துடன் சுற்றிலும் பார்த்தான். டேபிள்களில் ஆங்காங்கே இளஞ்ஜோடிகள், பிசினஸ் பேசும் நடுத்தர வயதுக்காரர்கள் என்று கலவையான வாடிக்கையாளர்கள்.

“சூப்பர்… இவ்ளோ ட்ராஃபிக்குக்கு நடுவுல இப்படி ஒரு அழகான, அமைதியான கஃபேவா?’’ என்றான் கௌதம்.
“ஆமாம்…ஆனா இந்த அழகு, அமைதி, செடி, கொடி, நிழல் எல்லாத்துக்கும் சேத்து வச்சு பில்லுல தீட்டிடுவாங்க” என்றபோது பேரர் வந்து மெனு கார்டை நீட்ட…“என்ன ஆர்டர் பண்ண?” என்றாள் பூஜா. “எனக்கு என்ன தெரியும்?” என்று கௌதம் கூறியவுடன், “ஸாரி…ஸாரி… நானே ஆர்டர் பண்றேன்” என்று மெனு கார்டைப் புரட்டினாள். சில நிமிட யோசனைக்குப் பிறகு, “ஒன் பொட்டேட்டோ பாஸ்கெட், டூ மெக்ஸிகன் டோஸ்ட் அண்ட்…டூ கோல்ட் சாக்லேட்” என்றாள்.
உருளைக்கிழங்கு ஃப்ரையை சாஸில் தொட்டுத் தின்றபடி கௌதம், “அம்மாப்பா எனக்கு வீட்டுக்குள்ள ஒரு உலகத்தைக் காமிக்கிறாங்க. ஆனா நீதான் வெளியுலகத்தக் காமிக்கிற….. அதுவும் நீ பைக்ல இறுக்கமா அணைச்சுகிட்டு வந்தப்ப ஒரு மாதிரி நல்லா இருந்துச்சு.”
“ஒரு மாதிரின்னா?”
“அது… ஒரு மாதிரி… எனக்கு சொல்லத் தெரியல” என்றவனின் இடது கையைப் பிடித்த பூஜா, அவன் கைவிரல்களைத் தனது கைவிரல்களுக்குள் கோத்துக்கொண்டு அழுத்தினாள். அவன் மெலிதான கிறக்கத்துடன் அவளைப் பார்க்க… பூஜா, “நீ சொன்ன ‘ஒரு மாதிரி’ இதுதானா?” என்றாள். “இதேதான்… இதேதான்…” என்று உற்சாகத்துடன் கூறிய கௌதம், கோல்ட் சாக்லேட்டை அருந்த… அவன் உதட்டிலிருந்து திரவ சாக்லேட் தாடையில் வழிந்தது. “ஏய்…” என்ற பூஜா அவன் தாடையில் வழிந்த சாக்லேட்டைத் தன் விரலால் தொட்டிழுத்து, அப்படியே அவன் உதட்டுக்கு வந்தாள். உதட்டிலிருந்து சாக்லேட்டை வழித்தெடுத்த பூஜா, தனது நாக்கில் வைத்துச் சுவைத்தபடி அவனைக் காதலுடன் பார்த்தாள்.

‘‘ஏய்… இப்ப உனக்கு ஒரு மாதிரி இருக்கா?” என்றான் கௌதம்.
“இல்ல…ரெண்டு மாதிரி இருக்கு.”
“என்ன ரெண்டு மாதிரி?”
“முதல்ல உன் உதட்டுல பட்ட சாக்லேட்ட சாப்பிடுறது ஒரு மாதிரி. அப்புறம்… உன்ன பாத்துகிட்டே சாப்புடுறது இன்னொரு மாதிரி” என்றாள். சில வினாடிகள் அவளை உற்றுப் பார்த்த கௌதம், பூஜாவின் உதட்டில் ஒட்டியிருந்த சாக்லேட்டை மெல்ல தன் விரலால் வழித்தெடுக்க… பூஜாவிற்குள் இப்போது ஏகப்பட்ட மாதிரியாக இருந்தது.
இன்னொரு நாள் மாலை, பூஜா தான் சேவை செய்யும் முதியோர் இல்லத்துக்கு கௌதமை அழைத்துச் சென்றாள். பூஜா ஒரு அறையில் அமர்ந்துகொண்டு, அருகில் ஒரு சேர் போட்டு கௌதமையும் அமரச் சொன்னாள். வரிசையாக முதியவர்களாக வந்தனர். அனைவரும் அவளிடம் உடல் நலப் பிரச்சினைகளைச் சொன்னதைவிட, வெட்டிக் கதைகள் பேசியதே அதிகம். அனைவரையும் பார்த்து முடித்தவுடன் கௌதம், “ஏன் எல்லார்கிட்டயும் ரொம்ப நேரம் பேசுற?” என்றான்.
“கௌதம்…இன்னைக்கி வயசானவங்களோட பெரிய பிரச்சினை என்ன தெரியுமா?”
“ஹெல்த்.”
“இல்ல… பேச ஆள் இல்லாம தவிக்கிறது. அது மகா கொடுமை. வயசானவுடனே அவங்க பேசுற பல விஷயம் நமக்கு போரடிக்குது. அதனால எல்லாரும் அவங்ககிட்ட, ‘சாப்ட்டியா? தூங்குனியா? உடம்பு நல்லாருக்கா?’ன்னு நாலு வார்த்தை பேசுறதோட நிறுத்திக்கிறோம். ஆனா, அவங்க ஒவ்வொருத்தரும், யாராச்சும் நம்மகூட கொஞ்சம் நேரம் உக்காந்து பேச மாட்டாங்களான்னு தவிச்சுட்டிருக்காங்க. அதான் என்னால முடிஞ்ச அளவு பேசுறேன். அதுல அவங்களுக்கு ஒரு  சந்தோஷம்.”
“பரவால்ல… உன்னால அவங்களுக்கு சந்தோஷத்தத் தர முடியுது” என்ற கௌதமை உற்றுப் பார்த்த பூஜா, “உனக்கு நான் சந்தோஷம் தர்றனா?” என்றாள். கௌதம், “நிறைய சந்தோஷம் தர்றே” என்று சிரித்தான்.
“இந்த சந்தோஷம் போதுமா?”
“இன்னும் நிறைய வேணும்” என்று கௌதம் கூறியதற்கு பூஜா சத்தமாகச் சிரித்தாள்.
புதன்கிழமை. கௌதமின் அம்மா ரேணுகாவும், அப்பா மூர்த்தியும் அத்திவரதரை தரிசிப்பதற்காக காஞ்சிபுரம் சென்றனர். பூஜா தான் விடுமுறை எடுத்துக்கொண்டு, கௌதமைப் பார்த்துக்கொள்வதாகக் கூறியிருந்தாள். அதன்படி காலை ஐந்து மணிக்கே வந்துவிட்டாள். அவர்கள் கிளம்பிச் சென்றதும், காபியுடன் கௌதமை எழுப்பினாள். காலையிலேயே அவனுடன் விவேகானந்தர் இல்லம் வரை வாக்கிங் சென்றாள். பத்து மணிக்கு மேல் ஹிக்கின் பாதம்ஸ் அழைத்துச் சென்று அவனுக்குப் புத்தகங்கள் வாங்கித் தந்தாள். மதியம் உட்லண்ட்ஸில் தஞ்சாவூர் இலை சாப்பாடு சாப்பிட்டுவிட்டு, ஐநாக்ஸில், ‘தி லயன் கிங்’ திரைப்படத்திற்குச் சென்றனர்.
மாலை இருவரும் வீட்டுக்கு வந்தபோது, கௌதமின் பெற்றோர் இன்னும் வந்திருக்கவில்லை. சோபாவில் அமர்ந்த பூஜா, “இன்னைக்கி டைம் போனதே தெரியலல்ல?” என்றாள்.
கௌதம், “ஆமா… தினம் இந்த மாதிரி இருந்தா நல்லாருக்கும்” என்றவுடன் அவனை உற்றுப் பார்த்த பூஜா, எழுந்து அவனருகில் வந்து அமர்ந்தாள். அவன் கண்களையே காதலுடன் பார்த்தபடி, “நம்ப எல்லா நாளும், 24 மணி நேரமும் ஒண்ணாவே இருக்கணுமா?” என்றாள்.
“ஆமா.”
“ஏன்?”
“ஏன்னா…. எனக்கு சொல்லத் தெரியல” என்றவுடன் அவன் முகத்தருகில் நெருக்கமாகத் தனது முகத்தைக் கொண்டுசென்ற பூஜா, “அன்னைக்கி ஒருநாள் காதல்ன்னா என்னான்னு கேட்டீல்ல? இதான் காதல். வாழ்நாள் முழுசும் ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ ஆசைப்படறதுக்குப் பேர்தான் காதல்” என்றபோது அவளுடைய உதடுகள், கௌதமின் உதடுகளில் உரசின. கிறக்கத்துடன் கௌதம் அவள் தோள்களைப் பற்றி அழுத்தினான். சட்டென்று கௌதமின் உதட்டில் அழுத்தமாக முத்தமிட்ட பூஜா, அவனை இழுத்துத் தனது மார்போடு இறுக்கி அணைத்துக்கொண்டு, “ஐ லவ் யூ கௌதம்…” என்றாள்.
கௌதமும் அவள் இடுப்பை அணைத்தபடி, “ஐ லவ் யூ…” என்று கூற… பூஜாவின் கண்கள் கலங்கிவிட்டன. அவன் முகத்தை நிமிர்த்திய பூஜா, “நிஜமாதான சொல்ற… என்னை விட்டுட்டு எங்கயும் போய்ட மாட்டியே…” என்றாள்.
“எங்கயும் போக மாட்டேன்” என்ற கௌதம் தலையை உயர்த்தி அவள் கழுத்தில் முத்தமிட…பூஜா ஆவேசத்துடன் இழுத்து கௌதமின் உதடுகளைத் தனது உதடுகளில் ஏந்தியபோது, காலிங்பெல் அடித்தது. இருவரும் அவசரமாக விலகிக்கொண்டனர்.
ஞாயிற்றுக்கிழமை. அருண், கௌதமைப் பார்க்க வந்திருந்தான். கௌதமின் அறையில் கௌதமுக்கு எதிரே அமர்ந்திருந்த அருண், “கௌதம்… ரொம்ப நாளா உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்
சுட்டிருக்கேன்” என்றான் நந்தினியை நினைத்தபடி.

“நானும் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். பரவால்ல…நீயே முதல்ல சொல்லு.”
“இல்ல…நீயே சொல்லு” என்று அருண் சொன்னவுடன், அவன் அருகில் நெருங்கிய கௌதம், “நானும், பூஜாவும் லவ் பண்றோம்” என்று கூற… அருண் அதிர்ச்சியுடன் கௌதமைப் பார்த்தான்.
(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in