மண்.. மனம்.. மனிதர்கள்! - 24

இறை இசை ராஜா அரவிந்த்
மண்.. மனம்.. மனிதர்கள்! - 24

இந்திய அளவில் திரைக்கதை புனைவில் ஈடு இணையற்ற மகா படைப்பாளியான இயக்குநர் கே. பாக்கியராஜ் அவர்களின் சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் ‘அந்த 7 நாட்கள்.’

அதில், ‘பாலக்காடு மாதவன்’ என்னும் அப்பாவி இசையமைப்பாளர் வேடத்தில் அசத்தியிருப்பார். அந்த வெகுளியான பாலக்காட்டு மாதவன் கேரக்டருக்கு இன்ஸ்பிரேஷனாக அமைந்தவர்தான் தலைப்பில் இருக்கும் நமது அரவிந்த்.

எண்பதுகளில்... கையில் ஒரு சிறுடேப் ரிக்கார்டரும் ஹெட்போன்ஸும் வைத்துக்கொண்டு ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்குவது அரவிந்த்தின் அன்றாடமாக இருந்தது.

எதிர்ப்படுவது அசிஸ்டென்ட் டைரக்டரோ, மேக்கப் அசிஸ்டென்டோ, கம்பெனி டிரைவரோ யாராயிருந்தாலும் சரி அவர்களைப் பணிந்து வணங்குவார். வணங்கிய அடுத்த நொடி டக்கென்று அவர்களின் காதில் ஹெட் போனை மாட்டிவிட்டு “கோவிக்காம கொறச்ச கேக்கணும்...” என்று கெஞ்சுவார்.

“என்னாய்யா இது...” என்பவர்களிடம், “ஓ...நானே இட்ட ட்யூங்களானு... இதிலிண்டு சாரே...” என்றபடி கையைக் கட்டிக்கொண்டு முகம் பார்த்தபடியே நின்று கொண்டிருப்பார்.

அவரது குழைந்த குரலும் மலையாளியான அவரிடமிருந்து வெளிவரும் உடைந்த தமிழும் அவர்மேல் ஒரு பச்சாதாபத்தை ஏற்படுத்தி விடும்.

“அட்டகாசம்... பின்றீங்க... கண்டிப்பா உங்களைப் பத்தி டைரக்டர்கிட்ட ப்ரேக்ல எடுத்துச் சொல்றேன்... கட்டாயம் கூப்பிடுவார் பாருங்க...” என்று அவர்கள் சொல்வதை அப்படியே நம்பியபடி கனவுகளோடு வெளியேறுவார்.

வருடங்களானதுதான் மிச்சம். எங்கிருந்தும் அழைப்பு வந்த பாடில்லை.

விடாது மோதிக்கொண்டிருந்தவர் ஒரு கட்டத்தில் பாக்கிய ராஜ் அவர்களுக்கு அறிமுகமானார். அரவிந்த் சாரின் வெகுளித் தனமான கேரக்டர் பாக்கியராஜ் அவர்களுக்குப் பிடித்துப் போக அவரது இசையில் பாடல்களுக்கு ட்ராக் பாடியிருக்கிறார்.

எதிர்காலம் குறித்த நம்பிக்கை இருந்தாலும் வருமானத்துக்கு வழி இல்லாமல் போக உடனடி சாப்பாட்டுக்கு சினிமா கை கொடுக்காது என்று தெரிந்துகொண்ட அரவிந்த் சார், ‘இறை இசை’ எனப்படும் டிவோஷனல் ஆல்பங்களின் பக்கம் திரும்பினார்.
அதன் பின் அவர் மறைக்க முடியாத வரலாறாகிப் போனார். ஆம், இறை இசை உலகத்தின் முகத்தை அடியோடு மாற்றி அமைத்தார். இறை இசை உலகின் இளையராஜா என்னும் அளவுக்குப் பேரெடுத்தார்.

நம் சமூகத்துக்கு ஒரு வியாதி உண்டு. எந்தச் சாதனை ஆனாலும் அது சினிமாத் துறையில் நடந்தால் மட்டுமே கவனத்தில் கொள்ளும். மற்றவற்றை எல்லாம் ஏதோ பிரண்டையைக் கடித்தாற் போலவே அணுகும்.

அந்தப் பாழும் மாய மயக்கத்தினால் எத்தனையோ சாதனை கள் இங்கே புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. அதில் ஒன்றுதான் அரவிந்த் சாரின் சாதனை வரலாறு.

இது ஆடி மாதம். ஊரெங்கும் இருக்கும் அம்மன் கோயில் களில் ஓயாமல் பாட்டு ஒலித்துக்கொண்டிருக்கக் கேட்கிறோம். அந்தப் பாடல்களில் அதாவது டிவோஷனல் பாடல்களில் சுமார் 70 சதவீத ஹிட் பாடல்களுக்கு இசையமைத்தவர் அரவிந்த் சார்தான்.
கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை, ஆயிரம் கண்ணுடை யாள், சூலம், மாங்கல்ய வரம், எல்லாம் வல்ல தாயே, எங்களுக்கு குறையுமுண்டு, ஆவணி வந்தது, லம்போதரனே, அம்மன் அலங்காரம், காளியிடம் சில வரம் கேட்டேன் என இவரது ஹிட் ஆல்பங்களின் - பாடல்களின் வரிசை நீண்டுகொண்டே போகும்.

சொந்த ஊர் கோவை. பிஞ்சுவயது முதலே இசைப்பித்து. அங்கே மேடைக் கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தவருக்கு சென்னை சென்று இசையமைப்பாளர் ஆகி விட வேண்டும் என்று தீரா தாகம்.

உடன்பிறந்தவர்களைக் கரையேற்ற வேண்டிய கடமை முன் நிற்க தன் கனவை பரணேற்றிவிட்டு மில் ஒன்றில் ஃபிட்டராக வேலைக்குச் சேர்ந்து கடுமையாக உழைத்தார்.

ஏறத்தாழ 16 வருடங்கள் ஓயாமல் உழைத்து உடன்பிறந்தார் அனைவரையும் கரையேற்றி முடித்த பின் இரும்படித்துக் காய்த்த கையோடு சென்னைக்கு வந்தார். அதன்பிறகுதான் அவரது ஸ்டுடியோ விஜயங்களெல்லாம்...

1990-க்கு முந்தைய இறை இசை உலகம் என்பது பட்டும்படாமல் மிகச் சிறிய அளவில்தான் இயங்கிக் கொண்டிருந்தது. பொதுவாக ஒரு பாடலுக்கு மூன்று பிஜிஎம்-கள் அமைக்கப்பட வேண்டும். அதுதான் வழக்கம்.

அதாவது பல்லவிக்கு முன் ஒரு பேக்கிரவுண்ட் மியூஸிக். முதல் சரணத்துக்கு முன் ஒன்று. இரண்டாவது சரணத்துக்கு முன் ஒன்று. ஆக மொத்தம் மூன்று.

எம்.எஸ்.வி - இளையராஜாவின் சினிமாப் பாடல்களைக் கேளுங்கள். அப்படித்தான் அமைந்திருக்கும். ஆனால், இறை இசைப் பாடல்களில் 1 - 2 - 2 என்னும்படி இரண்டே பிஜிஎம்-கள்தான் இருக்கும்.

அதுவும் மூன்று அல்லது நான்கு இசைக் கலைஞர்களை மட்டுமே கொண்டு வாசிக்கப்பட்டிருக்கும். ஒல்லியான அந்த ட்ராக்குகளைக் கேட்டாலே அதன் பூஞ்சைத்தனம் புரிபடும்.

பொதுவாக இறை இசை ஆல்பங்களுக்கு மியூஸிக் செய்ய ஆல் இண்டியா ரேடியோ அல்லது தூர்தர்ஷன் காரர்கள்தான் வருவார்கள். அவர்களும் பல்லவி சரணங்களுக்கிடையே சம்பந்தப்பட்ட ராகத்தில் 18 அல்லது 24 பாருக்கு ஒரு இண்டர்லூட் மியூஸிக் ஒன்றைப் போட்டு விடுவார்கள். அவ்வளவுதான்.

சினிமாப் பாடல்களில் இருக்கும் ஆப்ளிகேட்டர்ஸ், கவுன்ட்டர்ஸ், செகண்ட் அரேஞ்ச்மென்ட்ஸ், ஹார் மொனீஸ், பாஸ் மூவ்மென்ட்ஸ் போன்ற எந்த மெனக் கிடலும் அதில் இருக்காது.

எல்லாவற்றுக்கும் காரணம், இறை இசை பாடல் களுக்கு உண்டான ஊதியம். திரை இசைத் துறையை ஈடு வைத்துப் பார்த்தால் இறை இசைத் துறையின் ஊதியம் என்பது இளைத்த கொசுவின் கால் தடத்துக்கும் கீழே காய்ந்த கண்ணீரோடு கவிழ்ந்திருக்கும்.
அதுசரி, நல்லவற்றுக்கு என்றுதான் அள்ளிக் கொடுக்கப்பட்டிருக்கிறது ?

1992-ல், இறை இசை உலகத்தில் கால்பதித்தார் அரவிந்தன் சார். அவருக்குப் பிறகு டிவோஷனல் மியூஸிக்கின் முகமே மாறியது. சினிமா பாடல்களுக்கு இணையாக ட்யூன்களைப் போட்டார்.

ரிதம் செக் ஷன், ஸ்ட்ரிங்க் செக் ஷன், ஹார்மொனி செக் ஷன் என சகலவற்றிலும் தன் உழைப்பைக் கொட்டினார். சினிமாப் பாடல்களுக்கு இணையாக மெருகேற்றினார்.

அவரை அறிமுகப்படுத்திய சிம்பொனி கம்பெனி அவர் கேட்ட ஆர்கெஸ்ட்ராக்களை எல்லாம் தர முன்வர, தன் ஒவ்வொரு ஆல்பத்துக்கும் ஏறத்தாழ 25 அல்லது 30 இசைக் கலைஞர்களை வைத்து திகட்டத் திகட்ட இசை ஜாலங்களைச் செய்தார்.
1992 முதல் ஏறத்தாழ பத்தாண்டுகள் அனைத்து ஸ்டுடியோக்களும் அரவிந்த் சாரின் இசையால் நிறைந்தி ருந்தன. அனைவரும் அவரை ‘இறை இசை உலகின் இளையராஜா’ என்று கொண்டாடினார்கள்.

அவருக்கு உதவியாக இருந்த சுபின் என்றழைக்கப் படும் கோவை சுப்ரமண்யத்தையும் இங்கே குறிப்பிட்டாக வேண்டும்.
டி.எம்.எஸ், எஸ்.பி.பி, ஜேசுதாஸ், எல்.ஆர். ஈஸ்வரி, பி. சுசீலாம்மா, ஜானகியம்மா, சித்ரா, வீரமணிதாசன், வீரமணி ராஜு, உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், மனோ, மகாநதி ஷோபனா, சைந்தவி என அரவிந்த் சாரின் இசையில் பாடாத பாடகர்களே இல்லை எனலாம்.

தனக்கான ஊதியத்தைவிட இசையின் மீதான தன் காதலை முன் வைத்தே அதிகம் உழைத்தார் அரவிந்த் சார். இளையராஜாவைப் போல் ஆழ்ந்து உழைக்க வேண்டும் என்ற வெறி அவரிடம் இயல்பாகவே இருந்தது.

அசோக் நகரின் ஒதுக்குப்புறத்தில் ஒரு சிறிய வீட்டின் மொட்டை மாடியில் அமைந்திருந்த ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரை வேய்ந்த அறைதான் அவரது அன்றைய வீடு.

ஒரு புறத்தில் சிறிய அடுப்பு ஒன்று இருக்கும். காலையில் குடித்தது போக மீதமிருக்கும் கஞ்சி மத்தியான லஞ்சுக்காக அதில் ஆறிப் போய்க் காத்திருக்கும்.

ஒவ்வொரு முறை சந்திக்கும்போதும் ஏதோ புதிதாக சந்திப்பது போல கூச்சப்பட்டுக்கொண்டே “வாங்க...வாங்க...” என்று மென் குரலில் வரவேற்பார் அரவிந்த் சார்.

கோடையில் கொளுத்தும் வெயிலை கூராக்கிக் கடத்தும் ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்குக் கீழ் கம்போஸிங் ஆரம்பிக்கும்.
லுங்கியை மடித்துக்கொண்டு அவருடைய பழைய ஆர்மோனியத்தின் முன் உட்கார்ந்து விட்டார் என்றால் விதவிதமான ட்யூன்கள் ஆறாகப் பெருக்கெடுக்கும்.

கல்யாணி, கௌரி மனோகரி, சிந்துபைரவி போன்ற ராகங்களை மிக நுணுக்கமாக அதே சமயம் ஜனரஞ்ச கமாக அணுகுவதில் அவருக்கு இணை அவரே.

மணிக்கணக்கில் சளைக்காமல் ட்யூன் போட்டுக் கொண்டிருப்பார். பேச்சைக் குறைத்து அதிகம் பாடுவார்.
சிகரெட், மது, மாது, குட்கா பாக்கு என எந்தக் கெட்டப் பழக்கங்களும் அண்ட முடியாத அளவுக்கு ஒழுக்க வாழ்க்கை வாழ்ந்தார்.

பெரிய பக்திமானும் கிடையாது. மனதளவில் சுத்தமாக இருப்பதே உயர்ந்த ஆன்மிகம் என்பார். ஏறத்தாழ நூறு ஆல்பங்களைக் கடந்த பின்தான் திருமணம் செய்து கொண்டு நல்ல வீட்டுக்கு மாறினார்.

திருவல்லிக்கேணி சிம்பொனி அலுவலகத்தில் வைத்துத்தான் அரவிந்த் சாரை முதன்முதலில் சந்திக் கும் வாய்ப்பைப் பெற்றேன். அவரும் நானும் ஒரே ஆல்பத்தில்தான் சிம்பொனி நிறுவனத்தால் அறிமுகப் படுத்தப்பட்டோம். சில வருடங்கள் எழுதிவிட்டு பின்பு வேறு துறைக்கு நான் சென்றுவிட்டேன்.

ஆனால், அரவிந்த் சார் கடைசி வரைக்கும் இசை அமைத்துக் கொண்டேயிருந்தார். கடைசி வரைக்கும் அவரை நிராசை கொண்டவராகவே மன அழுத்தத்தில் வைத்திருந்தது அந்தத் துறை.

ஆம். அவருக்குண்டான நியாயமான ஊதியமோ, புகழோ கடைசி வரைக்கும் அவருக்குக் கிடைக் கவே இல்லை எனலாம்.
திடகாத்திரமாக இருந்த அரவிந்த் சார் யாரும் எதிர்பாராத வகையில் ஒருநாள் திடீரென்று மாரடைப்பில் இறந்து போனார்.
நம்புவீர்களா..? அவரை வீட்டு வாசலுக்குக் கொண்டுவந்து இறக்கிய ஆம்புலன்ஸுக்குத் தந்தனுப்ப வெறும் 350 ரூபாய் இல்லை அந்த வீட்டில்...

அவரோடு இணைந்து பணியாற்றியவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் காசைக் கைம்மாறாய் தந்து நிற்க கடைசி காரியங்கள் நடந்தேறின.

அதற்குப் பிறகு சில பாடகர்களும் நிறுவனங்களும் சிறிய அளவில் உதவியதாகச் சொல்கிறார்கள்.

ஆனால், அவருக்கு முறையாக சேர வேண்டிய காப்பிரைட் தொகை ஐபிஆர்எஸ் (IPRS - The Indian Performing Right Society) அமைப்பில் இன்னும் ஊனப் பார்வையோடு ஒருக்களித்துக் கொண்டிருக்கிறது.

ஒருவேளை அது முறையாக வந்திருந்தால் அவர் இன்றும் நம்மிடையே இருந்திருப்பார்.

எந்தத் தீய வழக்கங்களும் இல்லாத அரவிந்த் என்னும் அந்த எளிய கலைஞனை மன அழுத்தத்தில் தள்ளி மாரடைப்புக்கு ஆளாக்கியதில் இந்திய காப்பிரைட் சட்டத்துக்குக் கணிசமான பங்குண்டு, பழியுண்டு என்பது வேதனை, வெட்கக்கேடு.

ஆரோக்கியமாக நிறைந்து வாழ்ந்திருக்க வேண்டிய அரவிந்த் என்னும் அந்த மகா கலைஞனை அவசர அவசர மாககாலனிடம் அனுப்பி வைத்தது இந்த மண்ணுக்கே உண்டான சாபக்கேடு.

இன்று அவரது ஆயிரக்கணக்கான பாடல்கள் கிராமத்துக் கோயில்கள் முதல் அமேரிக்க, சிங்கப்பூர் காளியம்மன் கோயில் வரை பரந்து ஒலித்துக் காற்று வெளியெங்கும் கணகணவெனப் பரவசப்படுத்திக் கொண்டிருக்கின்றன. உங்கள் வீட்டிலும் கூட அவரது பாடல்கள் அடங்கிய சிடி-க்கள் இருக்கலாம்.

பாடும் குரல்களை மட்டும்தான் ஜனங்களுக்குத் தெரியும். அதன் பின்னால் இருக்கும் இசைக்கு சொந்தக் காரரையோ அல்லது பாடல் வரிகளுக்கு உரியவரையோ மக்கள் அறிய மாட்டார்கள். 

ஆனால், ஐபிஆர்எஸ் நன்கு அறியும். முறை செய்யாமல் முரண்டு பிடித்துக் கொண்டு இருக்கிறது.

ஆச்சரியப்படுவீர்கள்.

எனது கணிப்பில் அரவிந்த் சாருக்கு நியாயமாக வந்து சேர வேண்டிய காப்பிரைட் தொகை மட்டும் சுமார் ஒரு கோடியை மிஞ்சும். அது பூதம் காத்த புதையலாய் ஐபிஆர்எஸ் அமைப்பில் இன்னமும் முனகிக் கொண்டிருக்கின்றது.

நம்புங்கள். இதனைப் பல்லாண்டுகால அவதானிப்புக்குப் பின் மிக மிக உறுதி யோடுதான் எழுதுகிறேன்.
படைக்கப்பட்ட எண்ணிக்கையில் பார்த்தால் திரை இசைப் பாடல்களை விட மத்து மடங்கு அதிகமானது இறை இசைப் பாடல்கள். ஒலிபரப்பு எண்ணிக்கையிலும் அது பரந்து விரிந்ததே .

ஆனாலும், அரவிந்த் சாரைப் போல எத்தனையோ அப்பாவிக் கலைஞர்களின் குடும்பங் கள் பலகோடி ரூபாய் பெறுமானமுள்ள தங்கள் அறிவுச் சொத்தை ஒருசிலரிடம் பறி கொடுத்துவிட்டு அன்றாடத் துக்கே அல்லாடிக் கொண்டிருக்க...
‘வலுத்தது வாழும்' என்னும் மானுடத்துக்கு எதிரான பாழ்த்த சூத்திரமோ ஊழல் நிறைந்த சுயநலக்காரர்கள் சூழ அங்கே நரகலித்துக் கொண்டிருக்கின்றது.

காலம் மாறட்டும்.

கருத்த மனங்கள் பழி பாவத்துக்கு அஞ்சியேனும் இளகட்டும்.

அரவிந்த் சாருக்கு ஸ்ரீராம் என்ற பெயரில் ஒரு மகன் இருக்கிறார். தற்சமயம் காலேஜ் படித்துக் கொண்டு இருக்கிறார். அவருக்கும் இசைக்கனவுகள் இருக்கின்றன.

அரவிந்த் சாருக்கு உதவாத ஐபிஆர்எஸ்ஸின் தொகை அவரது மகனுக்கேனும் உதவட்டும். அங்கே புதைந்து கிடக்கும் அவருக்கே உண்டான பணம் அவரது குடும்பத்தை விரைந்து அடையட்டும். காஷ்மீர் சட்டத்தை திருத்த வல்லவர்கள் காப்பிரைட் சட்டத்தையும் முறைப்படுத்தி வைக்கட்டும்.

ஆகா, படைப்பாளர்களுக்கு உண்டான நீதி முறைப் படுத்தப்பட்டுவிட்டது, எளிய படைப்பாளிகளின் முகங் களின் நிம்மதி ரேகை படர்கிறது என்னும் நற்செய்தி மங்கலக் காற்றோடு கலந்து பரவட்டும்.

அரவிந்த் என்னும் அந்த இசைக் காதலனின் பேரான்மா இறைவெளி மோனத்தில் ஏகாந்தமாய் தவழ்ந்திருக்கட்டும்.

(நிறைவு)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in