நிழற்சாலை

நிழற்சாலை

பெருமரத் தத்துவம்

இலைகளே உலகமென்றிருந்தன
அவற்றில் சுருண்டிருந்த நரம்புகள்…
கிளைகளே உலகமென்றிருந்தன
அவற்றைப் பற்றியிருந்த இலைகள்…
கொம்புகளே உலகமென்றிருந்தன
அவற்றை ஒட்டியிருந்த கிளைகள்…
விழுதுகளே உலகமென்றிருந்தன
அவற்றைச் சார்ந்திருந்த கொம்புகள்…
நிலமே உலகமென்றிருந்தன
அதில் ஊடுருவியிருந்த விழுதுகள்…
கோடானு கோடி இலைகள்…
லட்சோப லட்சம் கிளைகள்…
ஆயிரமாயிரம் கொம்புகள்…
பல நூறு விழுதுகளென
பிரசவித்த அப்பெருமரம்
எவர்க்கும் தெரியாமல் அகண்டு
எல்லாவற்றின் நடுவில் நின்றது
புரிந்துகொள்ளப்படாத
மானுட தத்துவார்த்தம் போல!
- சின்னப்பையன்

அசையும் கூடுகள் அசைகின்றன

அந்த ஏரிக்கரையோரத்து
புளியமரத்தில் வெறுமையாய்
ஒரு காக்கையின் கூடு.
முட்டையிட்டனவா?
முட்டையிலிருந்து
வெளிவந்த குஞ்சுகள்
சிறகுமுளைத்துப் பறந்தனவா?
தெரியவில்லை.
புகைப்படக் கலைஞர்கள் அவ்வப்போது
அந்த நேர்த்தியான தோற்றத்தைப்
படமெடுத்தனர்.
அதுவும் சூரியன் மறையும் நேரம்
இளஞ்சிவப்பு மஞ்சள் என அடிவானம்
மெல்ல மெல்லக் கருக்கையில்
அந்தப் புளியமரத்துக் கூடு
கோட்டோவியம்போல் தெரிந்தது.
தினம் தினம் மாலைப்பொழுதில்
குயிலொன்று அந்தக் கூட்டருகே
குரலெழுப்பிப் பாடுகிறது.
தனது பிறப்பின் ரகசியத்தில்
அடைகாத்த நேசச் சிறகுகளின்
பங்களிப்பை நினைவுகூர்ந்தவாறு.
இப்போது மெல்ல அசைகின்றன
கூடு இழக்காத
அந்தப் புளியமரத்தின் கிளைகள்.
- கா.ந.கல்யாணசுந்தரம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in