தலை மட்டுமல்ல... சாலையும் காப்போம்!

தலை மட்டுமல்ல... சாலையும் காப்போம்!

இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் செல்பவர்கள் இனி ஆயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டும் என அறிவித்திருக்கிறது சென்னை மாநகர போக்குவரத்துக் காவல் துறை. சமீபத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கும் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின்படி இந்த அபராதத் தொகை உயர்வு விரைவில் நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கிறது.

தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை உணர்த்த, காவல் துறை பல்வேறு வகைகளில் முயன்று வருகிறது. ஆனாலும், பெரும்பாலானோர் தலைக்கவசம் அணிவதில் இன்னமும் அசட்டையாகவே இருக்கிறார்கள்.

தமிழகத்தில் நிகழும் இருசக்கர வாகன விபத்துகளில், 50 சதவீத உயிரிழப்புகள், தலைக்கவசம் அணியாத காரணத்தால் நேர்வதாக சமீபத்தில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. 2018-ல் மட்டும், 26,470 சாலை விபத்துகளில் இரு சக்கர வாகனங்கள் சிக்கியிருக்கின்றன. இவற்றில், 3,965 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். இவர்களில் 50 சதவீதத்தினர் தலைக்கவசம் அணியாதவர்கள்.
தலைக்கவசம் அணிவது தொடர்பாக நீதிமன்றங்கள் வழங்கிய உத்தரவுகளும், காவல் துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் விபத்து மரணங்களை ஓரளவுக்குக் குறைத்தாலும் இன்னமும் உயிர்ப் பலிகள் நின்றபாடில்லை.
தலைக்கவசம் அணியும் விஷயத்தில் அரசும், நீதிமன்றமும் எடுக்கும் தீவிர நடவடிக்கைகளை வரவேற்கும் அதேசமயம், மரணக் குழிகள் பல்லிளிக்கும் சாலைகள், மூச்சுத் திணற வைக்கும் நெருக்கடியான போக்குவரத்து, விதிகளை மதிக்காமல் அசுரத்தனமாக ஒலி எழுப்பியபடி பறக்கும் பேருந்துகள் என இரு சக்கர வாகன ஓட்டிகளை அன்றாடம் பதறித் துடிக்க வைக்கும் அவலங்களையும் சரி செய்ய வேண்டாமா?

இல்லை என்றால், அபராதம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தலைக் கவசங்களை விற்கும் நிறுவனங்களுக்குதான் லாபத்தைக் கொட்டுமே தவிர, அப்பாவி வாகன ஓட்டிகளின் உயிருக்கு முழுமையான உத்தரவாதமாக அமையாது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in