Published On : 10 Aug 2019

இது வடிவேல் சார் கொடுத்த வாழ்க்கை- நெகிழும் வெங்கல்ராவ்

vengalrao-interview

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

கலைஞனுக்கு மொழி ஒருதடை இல்லை என நிரூபித்தவர் வெங்கல்ராவ். தமிழும் தெலுங்கும் கலந்துகட்டி பேசும் வெங்கல்ராவ், அதையே தனக்கான அடையாளமாக்கி ரசிகர்களை சிரிக்கவைப்பவர். வடிவேலுவின் நகைச்சுவைப் பட்டாளத்தில் இவருக்கும் முக்கிய இடம் உண்டு. அதிலும் தலையில் இருந்து கையை எடுத்தால் சங்கை கடித்துவிடுவார் என வடிவேலுவும், வெங்கல்ராவும் சேர்ந்துசெய்த காமெடி கலட்டா கலக்கல் ரகம்!

சமீபத்தில் நெல்லை மாவட்டம், காவல்கிணறுக்கு இன்னிசை கச்சேரிக்காக வந்திருந்தார் வெங்கல்ராவ். “தமிழ்ப் பாட்டெல்லாம் பாடுவீங்களா?” என்று கேட்ட மறுநொடியே, “ கடவுள் என்னும் முதலாளி கண்டெடுத்த தொழிலாளி விவசாயி...’’ எனப் பாடவே ஆரம்பித்துவிட்டார். பாட்டுக்கு ஒரு பிரேக் போட்டுவிட்டு அவருடனான எனது பேட்டியை ஆரம்பித்தேன்.

உங்க இளமைக்காலம் பத்தி சொல்லுங்க...

எனக்கு விஜயவாடாதான் பூர்வீகம். என்னோட அப்பா சின்ன சஞ்சீவி விவசாயி. அம்மா கொண்டம்மா அப்பாவுக்கு உதவியா விவசாய வேலை செய்வாங்க. ரெண்டு தம்பி, ஒரு அக்கான்னு என்னோட சேர்த்து வீட்டுல நாங்க நாலுபிள்ளைங்க. சின்னவயசுலயே வீட்ல ரொம்ப கஷ்டம். அப்பா ஒருத்தரு விவசாயம் செஞ்சு, நாங்க ஆறுபேரு சாப்பிடணும். அதனாலேயே எனக்கு நினைவு தெரிஞ்சு நான் ஸ்கூல் பக்கமே போகலை. இந்த சோகம் பத்தாதுன்னு என்னோட பத்து வயசுல அப்பாவும் இறந்துட்டாங்க. வீட்ல ரொம்பக் கஷ்டம். வயித்துப்பாட்டுக்காக என்ன வேலை கெடைச்சாலும் பார்த்தேன். என்னோட இளமைக்காலம் கஷ்டகாலமாத்தான் போச்சு.

சினிமா ஆசை எப்படி வந்துச்சு?

வேலைக்குப் போன நேரம் போக மத்த நேரத்துல கொம்பு சுத்துறது, கத்திச்சண்டைன்னு போவேன். லங்கா யங்டேஸ்வரராவ்னு ஒருத்தரு விஜயவாடால இருந்தாரு. அவருதான் என்னோட குருநாதர். அவருக்கிட்ட அம்பது பேருக்கு மேல இருந்தோம். கோயில் திருவிழா, கல்யாணம், காதுகுத்து, சாவு வீடுன்னு எங்கயாச்சும் மக்களுக்கு பொழுதுபோக்க கம்புசுத்த கூட்டிட்டுப் போவாரு. ஒருநிகழ்ச்சிக்கு போயிட்டு வந்தா ரெண்டுலருந்து மூணுரூபாய் வரை கொடுப்பாரு. அதையும் கொண்டுபோய் அம்மாகிட்ட கொடுப்பேன். 10 வயசுல கம்பு சுத்தப் போன நான், 15 வருசம் அவருகிட்ட ட்ரெய்னிங் எடுத்தேன். 25 வயசுல நான் சினிமாவுக்கு வந்ததே ஃபைட்டர் ஆகணும்னுதான்.

பல படங்கள்ல ஃபைட்டரா வேலை செஞ்சுருக்கீங்க. சினிமா வாய்ப்பு ஈஸியா கிடைச்சுதா?

விஜயவாடாவுலேயே குதிரை ஓட்டத்துல ஆரம்பிச்சு ஜிம்னாஸ்டிக் வரை எல்லாம் கத்துகிட்டுத்தான் சென்னைக்கு வந்தேன். ஆனா, சினிமாவுல ஃபைட்டர் ஆகுறதுக்கு கார்டு எடுக்கணும்னு ஆரம்பிச்சு, எப்படி வாய்ப்புத் தேடுறதுன்னு கத்துக்கிறதுக்கே கொஞ்ச வருசம் ஆகிடுச்சு. ஒருதடவை, சென்னையில ஃபைட்டர் செலக்ஷன் நடக்குதுன்னு தெரிஞ்சுட்டு அதில் கலந்துக்கப் போனேன். லங்கா யங்டேஸ்வராவ் டீமில் இருந்த பல பேரு அந்த டெஸ்டுக்குப் போனோம். அங்க வந்துருந்த 350 பேருல எங்க டீமில் இருந்தே பத்துப் பேரு செலக்ட் ஆனோம்.

30 வருசத்துக்கு மேல நம்ம லைஃப் ஃபைட்டராவே ஓடிருச்சு சார். ரஜினி சாரோட, ராஜாதிராஜா, பணக்காரன், மாப்பிள்ளை படங்கள்ல ஃபைட் பண்ணிருக்கேன். கமல்ஹாசன், விஜயகாந்த், கார்த்திக், சத்யராஜ்னு அன்னிக்கு உச்சத்துல இருந்த எல்லா சாரோடோவும் ஃபைட் செஞ்சுருக்கேன். தமிழுக்கு வெளியிலயும் அமிதாப்பச்சன், சிரஞ்சீவின்னு பெரிய லிஸ்ட்டே சொல்லலாம். தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடிசா, பெங்காலி, ஏன்... இங்கிலீஷ் படத்துலகூட ஃபைட் பண்ணிருக்கேன்.

பைட்டரா இருந்த நீங்க காமெடிக்கு மாற என்ன காரணம்?

வயசுதான் சார். ஃபைட்டரா இருந்தப்போ பல தடவை கீழ விழுந்து காயம்பட்டு இருக்கேன். இப்போ மூட்டுவலி இருக்கு. ஒரு தோள்பட்டையில் அடிபட்டு அது கொஞ்சம் உயரமா இருக்கும். இனியும் ஃபைட்டரா காலம் தள்ள முடியாது. அதேநேரத்துல எனக்கு சினிமாவை விட்டா வேற எதுவும் தெரியாது. முன்னயே சில படங்களில் ஃபைட்டிலேயே காமெடி செஞ்சுருக்கேன். அந்த அனுபவங்கள வெச்சு சரி, ட்ரை பண்ணுவமேன்னு காமெடி டிராக்குக்கு மாறுனேன்.

வடிவேலு டீம்ல எப்டி வாய்ப்புக் கிடைச்சுது?

ஃபைட்டரா இருக்கிறப்பயே ஒருநாளு ஷூட்டிங் ஸ்பாட்ல வடிவேலு சாரைப் பார்த்தேன். அப்போ, “வயசாகிடுச்சு... ஃபைட்டரா இருக்க முடியல. நீங்க ஏதாச்சும் வாய்ப்புக் கொடுங்க”ன்னு சொன்னேன். அவரு உடனே வாய்ப்புக் கொடுத்தாரு. வடிவேலு சார் தான் என்னோட தெய்வம். அவரு மட்டும் இல்லைன்னா வெங்கல்ராவ் என்னிக்கோ ஆந்திரா போயிருப்பான். என்கூட ஃபைட்டரா செலக்ட் ஆன எல்லாருமே இப்போ சொந்த ஊருக்குப் போயிட்டாங்க. வடிவேலு சாரு கொடுத்த வாழ்க்கையால நான் இன்னிக்கும் கோடம்பாக்கத்துல இருக்கேன்.

முதன் முதலா, ‘நீ மட்டும்’ படத்தில் வடிவேலு சாரு கூட சேர்ந்து நடிச்சேன். அதில் அவரோட ஒரு பெட்டியைத் தலையில் தூக்கி இன்னொரு இடத்தில் வெச்சுட்டு பீடி கேட்குற கதாபாத்திரம். அதுவே மக்கள்கிட்ட நல்ல வரவேற்பை வாங்கித் தந்துச்சு. வடிவேலுசார் கூட மொத்தம் 50 படம் பண்ணிட்டேன். அவரு எனக்குச் செஞ்ச உதவியெல்லாம் நன்றின்னு ஒரு வார்த்தையில் அடக்கிட முடியாது.

எல்லாம் சரி, இன்னிசை கச்சேரிக்கு வந்துருக்கீங்க... ஃபைட்டர், காமெடியனைக் கடந்து உங்களுக்குள்ள ஒரு பாடகரும் இருக்காரா?

சின்ன வயசுல எம்ஜிஆர் பாட்டெல்லாம் ரொம்ப கேட்பேன். அதைத்தான் இப்போ பாடுறேன். இப்பவும் வடிவேலு சார் ஆபீஸுக்கு மாசத்துக்கு ரெண்டுவாட்டி போயிடுவேன். அவரைப் பார்த்து, “வணக்கம் ஐயா... உங்களாலே எல்லா இடமும் ரீச் ஆகிட்டேன். உங்க மூலம் தான் எனக்கு மெட்ராஸ் கிடைச்சுது. இந்த வாழ்க்கை கிடைச்சுது...”னு சொல்லிட்டு வருவேன். முப்பது வருசமா சண்டை போட்டுகிட்டு இருந்தப்போ, என் ஊருக்காரங்களுக்கு கூட என்னைத் தெரியாது. ஆனா இப்போ, ரோட்ல யாரைப் பார்த்தாலும் ‘உங்க தலையில கை வெச்சுப் பார்க்கலாமா?’ன்னு கேட்குறாங்க. அதுதான் வடிவேலு சாரோட நடிச்ச மகிமை!

அவரு நடிக்கிற காலத்துல நிறைய சான்ஸ் கிடைச்சுது. இப்போ எங்களுக்கும் வாய்ப்பு அதிகம் வர்றதில்ல. அதனால நகைக்கடை திறப்பு, இன்னிசை கச்சேரின்னு போயிட்டு இருக்கேன். இதுக்கெல்லாம் மக்கள்கிட்ட என்னைக் கொண்டுபோய் சேர்த்த வடிவேலு சாருதான் காரணம். அவரு சீக்கிரம் திரும்ப நடிக்க வருவார். அவருக்கான இடம் அப்படியே, அவருக்காகவே இருக்கு.

திரும்பியும் ஃபைட்டரா கூப்பிட்டா போவீங்களா?

அய்யோ சாமி...வேணவே வேணாம். போகவே மாட்டேன். நான் அதிலருந்து விஆர்எஸ் வாங்கிட்டேன்.

இப்ப என்ன படங்கள்ல நடிச்சுட்டு இருக்கீங்க?

மன்சூர் அலிகான் சொந்த தயாரிப்பான ‘கடம்பான் பாறை’ படத்தில் நடிச்சுட்டு இருக்கேன். பேரு வைக்காத இன்னும் ரெண்டு மூணு படங்களும் போயிட்டு இருக்கு.

படங்கள் உதவி: சிவகுமார்


Related Articles

Popular Articles