உலகம் சுற்றும் சினிமா - 3: தொட முடியாத நேர்மையாளர்கள்

தி அன்டச்சபிள்ஸ் (1987)
உலகம் சுற்றும் சினிமா - 3: தொட முடியாத நேர்மையாளர்கள்

அமெரிக்க உள்நாட்டுப் போர் முடிவுற்ற பிறகு அந்நாட்டில் தொழில் வளம் பெருகத் தொடங்கியிருந்தது. கூடவே மது பழக்கமும் அதிகரிக்கத் தொடங்கியது. மதுவின் தீமைகளும் உச்சத்தில் இருந்தன. பலரும் போர்க்கொடி உயர்த்தியதைத் தொடர்ந்து  'வோல்ஸ்டெட் சட்டம்’ (Volstead Act) கொண்டுவரப்பட்டு, 1920-ல் மது தயாரிப்பு, விற்பனை என்று அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. நல்ல நோக்கத்துக்காகக் கொண்டுவரப்பட்டாலும், அது சட்டவிரோத கும்பல்களுக்குத்தான் பெரிய அளவில் உதவியது. அவர்களில் ஒருவர்தான் சிகாகோ மாகாணத்தில் கோலோச்சிய அல் கபோன். அவரை மது தடுப்புப் பிரிவு அதிகாரி ஒருவர் சிறைக்கு அனுப்பிய கதைதான் ‘தி அன்டச்சபிள்ஸ்.’

‘ஸ்கார்ஃபேஸ்’, ‘மிஷன் இம்பாசிபிள்’ போன்ற படங்கள் மூலம் புகழ்பெற்றவரும், ஹாலிவுட்டின் புதிய அலை இயக்குநர்களில் ஒருவருமான ப்ரையான் டி பால்மா இயக்கத்தில் 1987-ல், வெளியான படம் இது. அல் கபோனாக ராபர்ட் டி நீரோவும், மது தடுப்புப் பிரிவு அதிகாரி எலியட் நெஸ்ஸாக கெவின் காஸ்ட்னரும் நடித்திருக்கும் இந்தப் படத்தில் நேர்மையான போலீஸ் அதிகாரியாக ஜேம்ஸ் பாண்ட் புகழ் ஷான் கானரியும் அசத்தலாக நடித்திருப்பார். தனது அனுபங்களைத் தொகுத்து ஆஸ்கர் ஃப்ராலேவுடன் இணைந்து நெஸ் எழுதிய  'தி அன்டச்சபிள்ஸ்' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டது.

சரிந்த சாராய சாம்ராஜ்யம்

இத்தாலிய அமெரிக்கக் குடும்பத்தில் பிறந்த அல் கபோன், சிகாகோவின் மிகப் பெரிய டான். மதுக் கடத்தல், போதை மருந்துக் கடத்தல் என்று சட்டவிரோதப் பட்டியல்களில் என்னென்ன உண்டோ அனைத்தையும் செய்பவர். அதேசமயம், தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி செய்வதன் மூலம் ராபின் ஹூட்டாக அறியப்படுபவர். காவல் துறை, நீதித் துறை என்று அரசின் அத்தனை துறைகளிலும், ஊடகங்களிலும் தனக்கு ஆதரவான ஆட்களைக் கொண்டவர்.

இந்தக் காலகட்டத்தில் மதுத் தடுப்புப் பிரிவு அதிகாரியாக, சிகாகோவுக்கு வரும் எலியட் நெஸ், அல் கபோனின் சாம்ராஜ்யத்தை முடிவுக்குக் கொண்டுவர முயற்சி செய்வார். ஆனால், அவருக்கு எல்லாமே தோல்வி ரகம்தான். அல் கபோனுக்குச் சொந்தமான ஆலையில் மது பாட்டில்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக வரும் தகவலையடுத்து அங்கு போலீஸ் படையுடன் செல்லும் நெஸ், பெட்டிகளை உடைத்துப் பார்த்தால் உள்ளே அலங்காரக் குடைகள் இருக்கும். நெஸ் குடையை விரித்துப் பிடித்தபடி தேமேவென்று நிற்கும் படத்தைப் போட்டு செய்தித் தாள்கள் கலாய்த்துத் தள்ளிவிடும்.

விரக்தியில் இருக்கும் நெஸ்ஸுக்கு, நேர்மையான, அதிரடியான போலீஸ் அதிகாரி ஜிம்மி மலோனின் அறிமுகம் கிடைக்கும். லஞ்ச ஊழலுக்கு அடி பணியாத நேர்மையான குழுவை உருவாக்கும் முயற்சியில் இருவரும் இறங்குவார்கள். அதற்காக ஜார்ஜ் ஸ்டோன் என்பவரைத் தேர்ந்தெடுப்பார்கள். வாஷிங்டனில் இருந்து அனுப்பப்பட்ட கணக்காளர் ஆஸ்கர் வாலஸும் இவர்களுடன் இணைந்துகொள்வார். சட்டவிரோத கும்பல்கள் கைவைக்க முடியாத அளவுக்கு நேர்மையாகவும், அதிரடியாகவும் இயங்கும் இந்தக் குழுதான் ‘அன்டச்சபிள்ஸ்’ (தொட முடியாதவர்கள்).

உண்மையில், அல் கபோன் செய்யும் சட்டவிரோதச் செயல்களுக்கு ஆதாரம் கிடைக்காத நிலையில், அவர் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை வைத்தே அவர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்துவார் நெஸ்.
அங்கேயும் தன் பண வலிமையைக் காட்டித் தப்பிக்க நினைக்கும் கபோனின் முயற்சியை நெஸ் சாமர்த்தியமாக முறியடிப்பார். கபோன் சிறையில் அடைக்கப்படுகிறார். எல்லாம் முடிந்து நெஸ் ஊரைவிட்டு கிளம்பும்போது, அவரை முதலில் குடையுடன் படம் பிடித்த நிருபர் வந்து,  “மதுவின் மீதான தடையை நீக்கப் போவதாகப் பேச்சு அடிபடுகிறதே. அப்படி நடந்தால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்பார்.  “ஒரு குவளை மது அருந்துவேன்”  என்பார் நெஸ் அலட்சியமாக.

கெவின் காஸ்ட்னர் இந்தப் படத்தின் மூலம்தான் ஹாலிவுட்டில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்றார். இதை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். படத்தில் அல் கபோனாக வரும் ராபர்ட் டி நீரோவின் அலட்சியமான உடல்மொழி மிரட்டலாக இருக்கும். ஷான் கானரியின் நடிப்பை விமர்சகர்கள் கொண்டாடினர். இந்தப் படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது அவருக்குக் கிடைத்தது.

இப்படத்தில் ரயில்வே ஸ்டேஷன் படிக்கட்டுகளில் துப்பாக்கிச் சண்டை நடக்கும் காட்சி மிகவும் புகழ்பெற்றது. அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பைக் கூட்டக்கூடிய வகையில் (‘டென்ஷன் பில்டிங்’) காட்சி அமைக்க நினைக்கும் இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள் காண வேண்டிய காட்சி அது. பின்னணி இசைக்கென்றே புகழ்பெற்ற என்னியோ மோரிக்கோன் இப்படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படத்தின் இசையின் பாதிப்பை ரஹ்மானின் ‘பாபா’ படத்தின் தீம் இசையில் உணரலாம்.

நேர்மையின் விலை

எலியட் நெஸ் நேர்மைக்கு உதாரணமாக வாழ்ந்தவர். சராசரி வருமானத்தில் இருந்தாலும் அல் கபோன் கும்பல் மாதத்திற்கு 33,000 டாலர்கள் லஞ்சம் தருவதாக ஆசைகாட்டியும் மறுத்துவிட்டாராம். பிற்காலத்தில் பல சர்ச்சைகளில் சிக்கி, வறுமையில் வாடியவர் நெஸ், இறக்கும்போது சல்லிக்காசு இல்லாமல்தான் இறந்தார் என்பதுதான் வேதனையான உண்மை. அவருக்கு மரியாதை செய்யும் விதமாக இந்தப் படம் எடுக்கப்பட்டது. நல்லவர்கள் இறந்த பின்புதானே சமூகம் அவர்களைக் கொண்டாடும்?
போலீஸ் மீது நம்பிக்கையற்று நீதியை நிலைநாட்ட ஒரு சாமானியன் கையில் துப்பாக்கி எடுத்தால் என்னவாகும்? அதைப் பற்றிப் பேசும் படத்தை அடுத்த வாரம் அலசுவோம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in