போதைப் பொருட்களை முற்றாக ஒழிப்போம்!

போதைப் பொருட்களை முற்றாக ஒழிப்போம்!

தமிழகத்தில் போதைப் பொருள் விற்பனை அதிகரித்திருக்கிறது என்றும், பெண்கள், சிறார்கள் எனப் பலரும் போதைப் பொருள் பயன்பாட்டிலும் விற்பனையிலும் ஈடுபட்டிருக்கின்றனர் என்றும் வெளியாகும் செய்திகள் வேதனை தருகின்றன.

மளிகைக் கடையில் குட்கா, ஹான்ஸ் போன்ற போதைப்பொருட்கள் விற்பனை, காய்கறி ஏற்றிவரும் வாகனத்தில் கஞ்சா கடத்தல் என அன்றாடம் செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன. ஆந்திரம் போன்ற மாநிலங்களிலிருந்து சாலைமார்க்கமாகத் தமிழகத்துக்கு போதைப் பொருட்கள் கடத்தல், சட்டவிரோதமாகப் படகுகள் மூலம் இலங்கைக்குப் போதைப் பொருட்கள் கடத்தல், வெளிநாடுகளிலிருந்து விமானங்களில் போதை ஸ்டாம்புகள் கடத்தல் எனத் தொடரும் குற்றங்கள் தற்போது சிறார்களையும் குறிவைத்திருக்கின்றன. கஞ்சா போன்ற பொருட்களை, சிறுவர்களே விற்பனை செய்யும் நிலையும் தற்போது உருவாகியிருக்கிறது. இந்தக் குற்ற வலையில் சிக்கும் சிறார்களும் இளைஞர்களும் வாகனத் திருட்டு முதல் வழிப்பறி வரை பல்வேறு குற்றங்களிலும் ஈடுபடுகிறார்கள். போதையில் பாலியல் குற்றங்களில் சிறார்கள் ஈடுபடும் சம்பவங்களும் நிகழ்கின்றன. இதன் விளைவுகளை உணர்ந்ததால்தான் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு இளைஞர்கள், மாணவர்களை அடிமையாக்கும் கும்பலைக் கைது செய்ய வேண்டும் என்றும், தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனையைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் மகளிர் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியிருக்கின்றன.

குட்கா, பான் மசாலா உள்ளிட்ட போதைப் பொருட்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையிலும், அவற்றை முற்றிலுமாக ஒழிக்க முடியாத நிலைதான் தொடர்கிறது. போதாக்குறைக்கு, கரோனா முடக்க காலத்தில் பள்ளி மாணவர்கள் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கை திசை மாறியிருக்கிறது. இப்படியான ஒரு சூழலில், போதைப் பொருட்களை முற்றிலுமாகக் களைவதற்கான நடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க வேண்டும். போதை அரக்கனுக்கு இளம் சிறார்கள் பலியாவதைத் தடுக்க வேண்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in