ராஜா சந்திரசேகர் கவிதை

ராஜா சந்திரசேகர் கவிதை

மழையில் ஆடிக்கொண்டிருந்தான்
சத்தம் எழுப்பினான்
அதில் இசை ஒழுங்கு இருந்தது
பார்க்கப் பார்க்க
பரவச நிகழ்வாயிற்று
மழைக்காளி என
அவனுக்குப் பெயர் வைத்தேன்
அவன் கால்மிதியில்
உயரம் போனது நீர்
விழும்போது
அருவியானது
ஆட்ட வீச்சில்
கைகால்கள்
வெளியே போய்
திரும்பவந்து சேர்ந்துகொள்வது
போலத் தோன்றியது
மழைக்காளி
என் காட்சிப் பிரார்த்தனையை
ஒரு குரல் கலைத்தது
“பைத்தியக்காரன் சார் அவன்,
இப்படித்தான் ஆடுவான்
வெறிபிடிச்சு
பக்கத்துல போயிடாதீங்க”
குடைக்குள் மழை வராமல்
பார்த்துக்கொண்டவர்
வாயில் எச்சில் வழியச்
சொல்லிவிட்டுப் போனார்
மழைக்கு நன்றி
சொல்வது போலிருந்தது
அவன் நடனம்
மண்டை உள்ளிருந்து
பாய்ந்து நீர் வெளியேறுவதுபோல்
தலையின் இருபுறமும் சிதறியது
பித்துநிலை பெரிதான ஞானநிலை
எனக் காதில் வந்து
காற்று சொல்லிப்போனது
உருமாறி உருமாறி
மழையாடிக்கொண்டிருந்தான்
இப்போது அவனுக்கு
இன்னொரு பெயரும்
சேர்ந்துகொண்டது
சொல்லிப் பார்த்தேன்
நீர் ராவணன்...
மழைக்காளி என்கிற நீர் ராவணன்
இரண்டும் அவனுக்குப்
பொருந்திப்போனது
அவனருகில் போய்
“உன்னோடு ஆட அனுமதிப்பாயா?”
கேட்டேன்
தலையாட்டினான்
அவன் பிரம்மாண்டம் முன்
என் அசைவு
நீர்க்கோடானது
ஆனாலும் மிதப்பது போன்ற
உணர்வைத் தந்தது
மழைபிடித்து ஏறி
இறங்கி வருவது போலிருந்தது
பிறவி அழுக்கு
கரைந்தோடியது
கண் மூட
மழைத் தியானமும்
கண் திறக்க
மழை நடனமுமாக
கழிந்தது
மழையின்
மாயவிளையாட்டில்
அவன் யார்
நான் யார்
மழை நின்று
தூறலானபோது
ஒருவரை ஒருவர்
பார்த்துக்கொண்டோம்
என் முகம்
அவனுக்கிருந்தது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in