மஹா பெரியவா 54: அருளே ஆனந்தம்

மஹா பெரியவா 54: அருளே ஆனந்தம்

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

காஞ்சிபுரம் வரவேண்டி அடம்பிடித்த அந்தக் குடும்ப நண்பர், பாரம்பரிய உடை அணிந்து வருவதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. அமெரிக்காவில் இருந்து விடுமுறையைக் கழிக்க தமிழகம் வந்திருப்பவர் அவர்.

‘காஞ்சி மகா பெரியவாளைத் தரிசிக்கப் போகிறோம்... இந்த வேளையிலாவது வேட்டியும், சட்டையும் அணிந்து வாருங்கள்’ என்று தங்கள் குடும்ப நண்பரை அந்தத் தம்பதியர் எவ்வளவோ வற்புறுத்திப் பார்த்தனர். ஆனால், அவரோ மறுத்து விட்டார்.
ஒரு ‘பெர்முடாஸ்’ (அரை டிராயர்) மற்றும் ‘டி ஷர்ட்’ அணிந்து காஞ்சிபுரம் வந்திருக்கிறார். இதுதான் தனக்கு வசதி என்று பாரம்பரிய உடை அணிய மறுத்து விட்டார்.

‘சரி, இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது’ என்று தம்பதியரும் அவரை அழைத்துக் கொண்டு மகானின் திருச்சந்நிதிக்கும் வந்து விட்டார்கள்.

தம்பதியர் இருவரும் மகானுக்கு முன்னே நின்று கொண்டிருந்தார்கள். தாங்கள் கொண்டு வந்த காணிக்கைப் பொருட்களை அவரது திருச்சந்நிதியில் சமர்ப்பித்து விட்டு, நமஸ்கரித்து எழுந்து மகானைப் பார்த்துக் கைகூப்பியபடி நின்று கொண்டிருந்தார்கள்.
அவர்களை ஒரு புன்னகையுடன் பார்த்த பெரியவா, குடும்ப நலன்களைப் பற்றி விசாரித்தார். சொந்த ஊர் போன்ற எல்லாத் தகவல்களையும் கேட்டறிந்தார்.

பல காலமாக அமெரிக்காவில் வசித்து வந்தாலுமே, இந்தத் தம்பதியர் மகானிடம் தெள்ளிய தமிழிலேயே பேசினார்கள். இவர்களுடன் வந்த குடும்ப நண்பர் இந்த இடத்தில் இருந்து சற்றுத் தள்ளி நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தார். அவர் நின்று கொண்டிருந்த கோலத்தைப் பார்த்தால், ‘இந்த இடத்துக்கும் எனக்கும் எந்தச் சம்பந்தம் இல்லை... நான் ஒரு ‘டூரிஸ்ட்’ போல் வந்திருக்கிறேன்’ என்பதுபோல் காணப்பட்டார்.

‘மகா பெரியவா என்கிற மகானது திருச்சந்நிதி இது... எத்தனையோ பேர் இங்கே வர வேண்டும்... ஆசி பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். ஆனால், எல்லோராலும் நினைத்த மாத்திரத்தில் வர முடியவில்லை. இங்கே வர வேண்டும் என்றால் ஏதோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். பூர்வ ஜன்ம நல்வினை நம்முடன் சேர்ந்திருக்க வேண்டும். சிந்தனை சிதறாமல் இருக்க வேண்டும்...’ என்பனவற்றைப் பற்றியெல்லாம் அவர் யோசித்ததாகத் தெரியவில்லை.

தன் சந்நிதிக்குள் வந்த ஒருவனை, அவன் தன்னைத் தரிசிக்கவே வரவில்லை என்றாலும், மகான் அப்படியே விட்டு விடுவாரா என்ன?
பெரியவா பார்வை அந்தக் குடும்ப நண்பர் மீது படிந்தது. சற்று அழுத்தமாகவே படிந்தது என்றும் சொல்லலாம்.

எதிரில் இருந்த தம்பதியரை அழைத்து, அவர்களிடம் அந்த அன்பரை நோக்கி ஜாடை காண்பித்து, ‘‘அவர் உங்ககூட வந்தவரா?’’ என்று கேட்டார்.

உடனே தம்பதியர், குரலில் சற்றே நடுக்கத்துடன், ‘‘ஆமா பெரியவா... அவரும் எங்ககூட வந்தவர்தான்...’’ என்றனர்.

‘‘சென்னைலேர்ந்தா... அமெரிக்காலேர்ந்தா?’’

மகா பெரியவாளின் இந்தக் கேள்வியைக் கேட்டதும், விதிர்விதிர்த்துப் போன தம்பதியர், ‘‘அமெரிக்காலேர்ந்து எங்க கூட வந்திருக்கார். அவரும் ‘வெகேஷனு’க்கு எங்க கூடவே வந்திருக்கார்’’ என்றனர்.

தன் அருகே இருந்த சிப்பந்தி பக்கம் பெரியவா திரும்பினார். ‘அவரை என்கிட்ட கூட்டிண்டு வா’ என்பது போல் ஜாடை காண்பித்தார்.

நசுங்கிப்போன பாத்திரங்களை அந்த நாட்களில் உரிய நபர்களிடம் கொடுத்து ‘ஒடுக்கு’ எடுப்பார்கள். அதாவது, நசுங்கல்களை சரி செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு உரியதாக புதிதுபோல் தருவார்கள். மனித மனங்களில் இருக்கும் நசுங்கல்களை ‘ஒடுக்கு’ எடுப்பவர்கள் மகான்கள். வந்தவருக்கு ‘ஒடுக்கு’ எடுப்பதற்காக மகான் அழைக்கிறார்!

அவரை நோக்கிச் சிப்பந்தி ஓடினார். அடுத்து என்ன ஆகுமோ என்று தம்பதியர்க்குக் கையும் ஓடவில்லை; காலும் ஓடவில்லை.
குடும்ப நண்பரை சிப்பந்தி நெருங்கி விட்டார். சிப்பந்தி தன்னை நோக்கி வருவதைப் பார்த்ததும், மகானிடம் இருந்து உத்தரவு வந்து, தன்னை அழைக்கத்தான் வருகிறார் என்பதைப் புரிந்து கொண்டார்.

ஆனால், பெரியவாளைத் தரிசிப்பதற்காக அவர் இங்கு வரவில்லை. பெரியவா போன்ற சந்நியாசிகள் மீது அவருக்கு ஏனோ நம்பிக்கை இல்லை. மேலைநாட்டு நாகரிகத்தில் தொடர்ந்து பல ஆண்டுகள் திளைத்து வாழ்ந்த காரணத்தால், இந்தச் சூழ்நிலைகள் அவருக்கு சுகப்படவில்லை. ‘அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்திருக்கிறோமே... அப்படியே எங்கேயாவது வெளியே போகலாம்’ என்றுதான் ‘ரிலாக்ஸ்’டாக காஞ்சிபுரத்துக்கு வந்திருக்கிறார். மற்றபடி தரிசிப்பது, பிரசாதம் வாங்குவது இதெல்லாம் அவருக்குப் பிடிக்காது!

பெரியவா தன்னை அழைக்கும்போது அருகே செல்லவில்லை என்றால், அது நாகரிகம் இல்லை என்று மட்டும் அவருக்குப் புரிந்தது. ‘சரி, எதற்காகக் கூப்பிடுகிறார் என்றுதான் பார்த்து விடுவோமே’ என்று சிப்பந்தியுடன் நடந்து பெரியவாளை அடைந்தார்.

இவரைப் பார்த்துப் பெரியவா ஒரு புன்னகை பூத்தார். பதிலுக்கு இவரும் ஒரு புன்னகை. அவ்வளவே!

‘கலியுக தெய்வம்... கண்கண்ட தெய்வம்... நடமாடும் தெய்வம்’ என்று அகில உலகமே போற்றுகிற அந்த மகானுக்கு முன்னால் நிற்கிறபோது குடும்ப நண்பரின் உடல் சிலிர்க்கவில்லை. மனம் பரவசப்படவில்லை. கண்கள் பனிக்கவில்லை.

அங்கு பெரியவா தரிசனத்துக்காக நின்று கொண்டிருந்த பலரும் இவரது நடவடிக்கையைப் பார்த்துவிட்டு முகம் சுளித்தார்கள். ஏன், இவரை அழைத்து வந்த தம்பதியரும்கூடத்தான்!

ஆனால், பரப்பிரம்ம சொரூபமான பெரியவா மட்டும் இயல்பாக இருந்தார். தவிர, இந்தச் சூழ்நிலையை சாதாரணமாக்க தன் கேள்வியை ஆரம்பித்தார்.

குடும்ப நண்பரைப் பார்த்து, ‘‘நீங்களும் அமெரிக்கா விலேர்ந்து வந்துருக்கேளா?’’

‘‘ஆமாம்’’  பதில் சொன்ன விதத்தில் பணிவு இல்லை. மரியாதை இல்லை. விநயம் இல்லை. சமுதாயத்தில் எப்பேர்ப்பட்ட அன்பரிடம் பேசும் போதும் நாகரிகத்துடன் நடந்து கொள்ள வேண்டும். நமக்குப் பிடிக்காவிட்டால்கூட, மிகுந்த தன்மையாகப் பதிலளிக்க வேண்டும். இதெல்லாம் அடிப்படை குணங்கள். ஆனால், குடும்ப நண்பர் எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. ‘நீங்க பெரியவாளா இருந்தா எனக்கு என்ன...’ என்பது மாதிரியான ஒரு அசிரத்தை மனோபாவம். ‘அமெரிக்காவில் இருக்கிறவ னுடன் உங்களால் ஆங்கிலத்தில் பேச முடியுமா? நீங்களெல்லாம் ஒரு சந்நியாசி. துறவிக்கு என்ன தெரியப் போகிறது’ என்கிற அலட்சிய மனோபாவம்.

தம்பதியர் ஏகத்துக்கும் நெளிந்தனர். அவர்களால் மெல்லவும் முடியவில்லை; விழுங்கவும் முடியவில்லை. அவமான உணர்வுடன் மகா பெரியவாளையும், அந்த அன்பரையும் பார்த்துக் கொண்டிருந்தனர்.

அடுத்து மகான் கேட்டார்: ‘‘உங்களோட பூர்வீகம் தமிழகம்தானே?’’

‘‘ஆமாமாம்.’’

‘‘அமெரிக்காவில இருக்கறப்ப எந்த பாஷையில பேசுவேள்?’’  மகானிடம் இருந்து அடுத்த கேள்வி.

‘‘சந்தேகமென்ன... ‘இங்கிலீஷ்’லதான் பேசுவேன்.’’

புன்னகைத்தார் பெரியவா. பிறகு, ‘‘இப்ப அமெரிக்காவில உங்க கிரஹத்துல இருக்கிறவாகிட்ட ஏதேனும் நீங்க கேள்வி கேக்கணும்னு வெச்சுக்குங்கோ... அப்ப அந்தக் கேள்வியை உங்க மனசுல தமிழ்ல தயார் பண்ணிட்டு அப்புறம் ‘இங்கிலீஷ்’ல பேசுவேளா? அல்லது மனசுல ‘காயின்’ ஆறப்பவே ‘இங்கிலீஷ்’லதான் வார்த்தைகள் வருமா?’’

‘‘தமிழ்ல பேச வேண்டிய அவசியமே எங்களுக்கு இல்லாதப்ப, ஏதேனும் ஒரு விஷயத்தைப் பேசுவதற்கு நான் எதற்கு வார்த்தைகளை தமிழ்ல ‘காயின்’ பண்ணணும்? தமிழ் அவசியமே இல்லை. எல்லாம் ‘இங்கிலீஷ்’லதான்.’’

ஒருவர் எத்தனை மொழியில் புலமை பெற்றிருந்தாலும், தாய்மொழி அல்லாத வேறு ஒரு மொழியில் மற்றவருடன் பேசுகிறார் என்றால், அதற்கான வார்த்தைகள் நிச்சயம் தாய்மொழியில்தான் உருவாகும்.

இப்போது ஆங்கிலம் தெரிந்த ஒருவரிடம் அவர் பெயரைத் தெரிந்து கொள்ள தமிழ் பேசக் கூடியவர் விரும்புகிறார் என்று வைத்துக் கொள்வோம். தமிழ் பேசுபவர் என்ன செய்வார்? ‘உங்க பேரு என்ன?’ என்ற தமிழ் வார்த்தைகள்தான் அவரது மனதுக்குள் முதலில் சரளமாக வரும். இந்தத் தமிழ் வார்த்தைகளை வைத்துக் கொண்டுதான் ‘வாட் ஈஸ் யுவர் நேம்?’ என்று ஆங்கிலத்தில் ‘காயின்’ செய்து கேட்பார் அவரிடம். இதுதான் எல்லோரது வழக்கமும்.

இதைத்தான் மகா பெரியவா அந்தக் குடும்ப நண்பரிடம் கேட்டிருக்கிறார். ஆனால், அவரோ வறட்டு கவுரவம் காரணமாக ‘எனக்குத் தமிழே வேண்டாம்... எல்லாமே ஆங்கிலம்தான்’ என்று பதிலளிக்கிறார்.

குடும்ப நண்பர் மனதில் என்ன ஓடுகிறது என்றால்... ‘இந்த சந்நியாசிக்குத் தமிழ் தவிர வேறு எந்த பாஷையும் தெரியாது போலிருக்கிறது. இவரிடம் நாம் தொடர்ந்து பேசினால் ஆங்கிலத்தில் பேச வேண்டி இருக்கும். ஆனால், இவருக்கு ஆங்கிலமே தெரியாதே!’

தன்னிடம் இருக்கக் கூடிய நசுங்கல்கள் இன்னும் சற்று நேரத்தில் அகலப் போகின்றன என்பதை அவர் அறியவில்லை!

(ஆனந்தம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in