வனமே உன்னை வணங்குகிறேன்..! 17 - பறவைகளிடம் சரணடைவோம்

வனமே உன்னை வணங்குகிறேன்..! 17 - பறவைகளிடம் சரணடைவோம்

நாம் மகிழ்வாக இருக்கும்போதெல்லாம் நம் மனசுக்கு ஒரு சிறகு முளைத்திருப்பதாகவே உணர்கிறோம். ஆனால், அப்படி ஏன் உருவகப்படுத்துகிறோம் என்று பெரும்பாலும் ஆராய்வதில்லை. சற்றே ஆழமாக யோசித்துப் பார்த்தால், நினைத்த இடத்துக்குப் பறந்துசெல்லும் பறவைகளின் அற்புத ஆற்றல்தான் அந்த ஈர்ப்புக்குக் காரணம் என்று புரியும்.

உருவகப்படுத்துதலோடு நமக்கு நின்றுபோகும் ஆவல், சிலருக்கு ஆத்மார்த்தமான தேடலாகிறது. அவர்கள் பறவை
களைக் காண பயணமாகிவிடுகிறார்கள். தமிழகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பு நடந்துகொண்டிருக்கும் வேளை
யில் பறவைகள் சரணாலயத்துக்குப் பயணப்படுவது, அர்த்தமுள்ள சூழல் இணக்கச் சுற்றுலாவாக அமையும்.

பறவைகள் ஏன் அவசியம்?

பறவைகளை ஏன் கணக்கெடுக்கிறார்கள்? பறவைகளை ஏன் தேடித்தேடி ஆய்வு செய்கிறார்கள்? தெரிந்துகொள்வோமே…

வளமான சுற்றுச்சூழலை சில தாவரங்களும் உறுதிசெய்கின்றன. அவற்றின் இனப்பெருக்கத்துக்குப் பறவைகள் உதவுகின்றன. மகரந்தச் சேர்க்கைக்கு ஹம்மிங் பறவைகள் தேவைப்படுகின்றன.

பழம் உண்ணும் பறவைகள் தாவரங்களின் பரவலுக்கு உதவுகின்றன. ஊசி இலைக்காடுகளின் செழிப்புக்குப் பறவைகள்தான் காரணம்.

பருந்துகளும் ஆந்தைகளும் பூச்சிகளையும், கொறி விலங்குகளையும் கட்டுப்படுத்துகின்றன. ஈக்களைக் கட்டுப்படுத்துவதும் பறவைகள்தான்.

பாகிஸ்தானுக்குப் படையெடுத்து விவசாய நிலங்களைப் பதம்பார்த்துக்கொண்டிருக்கும் வெட்டுக்கிளிகளை அழிக்க, சீனா ஆயிரக்கணக்கில் வாத்துகளைத் தந்து உதவியிருப்பது சமகால உதாரணம்.

இந்த அடிப்படைப் புரிதல்களோடு நாம் இந்த வாரம் ராமநாதபுரம் மாவட்டத்துக்குச் செல்வோம்!

வறட்சியைத் தாண்டி…

ராமநாதபுரம் மாவட்டம் என்றவுடனேயே வறட்சியை அடைமொழியாக யோசிக்கவே நாம் பழகியிருக்கிறோம். ஆனால், வறட்சியைத் தாண்டி அதிகமான பறவைகள் சரணாலயம் கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது ராமநாதபுரம். தேர்த்தங்கல், கீழ - மேல செல்வனூர், சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், சக்கரைக்கோட்டை ஆகிய இடங்களில் பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

பருவமழை மட்டும் சரியாகப் பொழிந்துவிட்டால், கூழைக்கடா, கரண்டிவாயன், மஞ்சள் மூக்கு நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட ஏராளமான பறவை இனங்கள் இனப்பெருக்கம் செய்வதற்காக இங்கு வந்து குவியும்.

எழில் கொஞ்சும் தேர்த்தங்கல்

இந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் குளங்களும், கண்மாய்களும் இன்னும் பிற நீர்நிலைகளும் நிறைந்தே இருக்கின்றன. அதனால், எழில் கொஞ்சும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலய சூழலை அனுபவிக்க புள்ளி அழகு கூழைக் கிடா, மஞ்சள் மூக்கு நாரை, கரண்டி வாயன் உள்ளிட்ட 50 வகைகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வந்து குவிந்துள்ளன. நீர்வரத்துப் பகுதிகளைத் தூர்வாரி வைத்ததால் மழை நல்ல பயன் தந்துள்ளது.

தேர்த்தங்கல் பகுதி மக்கள் வனத் துறையினருடன் இணைந்து ஆண்டுதோறும், “பறவைகளைப் பாதுகாப்போம், பறவை
களை வேட்டையாட மாட்டோம்” என உறுதிமொழி எடுத்துக்கொள்வதாகக் கூறுகிறார் ராமநாதபுரம் சரக வன அலுவலர் சதீஷ்குமார்.

தேர்த்தங்கலில் பறவை காணலுக்காகவே கரையில் ஆங்காங்கே கல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது வரவேற்பைப் பெற்றுள்ளது.

தேர்த்தங்கலைப் பார்த்துவிட்டு சித்திரங்குடி பறவைகள் சரணாலயம் செல்லலாம். முதுகுளத்தூர் வட்டத்தில் சித்திரங்குடி கிராமத்தில் உள்ள இந்தச் சரணாலயம் 1989-ல், பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. கடல் தாண்டி, கண்டம் தாண்டி வரும் பறவைகள் நீர் வேலம், நாட்டுக் கருவேல மரங்களில் கூடமைத்து இனப்பெருக்கம் செய்கின்றன. காஞ்சிரங்குளம் பறவைகள் சரணாலயமும் முதுகுளத்தூரிலேயே அமைந்துள்ளது. அதிக அலைச்சல் இல்லாமல் அங்கேயும் ஒரு விசிட் அடிக்கலாம்.

அடுத்ததாக சாயல்குடி அருகில் உள்ள மேலசெல்வனூர் - கீழசெல்வனூர் பறவைகள் சரணாலயத்துக்குச் செல்லலாம். இது 1998-ல், பறவைகள் சரணாலயமாக அறிவிக்கப்பட்டது. இதன் மொத்தப் பரப்பளவு 593.08 ஹெக்டேர். தமிழகத்தின் பெரிய சரணாலயங்களில் இதுவும் ஒன்று.

இந்த ஆண்டு ராமநாதபுரம் நீர்நிலைகள் செழிப்பாக இருப்பதால் குடும்பத்துடன் ஒருநாள் பயணமாக ஐந்து பறவைகள் சரணாலயத்தையும் தரிசித்து வரலாம். பகல் நேர பறவை காணலுக்கு வனத் துறை அனுமதி தேவையில்லை. ஆனால், அதுவே தங்கியிருந்து பறவை காணலில் ஈடுபட விரும்பினால் வனத் துறையின் அதிகாரபூர்வ இணையதளத்தில் முன்பதிவு செய்து தங்குமிட வசதி பெறலாம்.

இயற்கை ஆர்வலரான பொறியாளர்

“மின்னணுப் பொறியாளராக வாழ்க்கையைத் தொடங்கிய நான் இயற்கை, சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல விரும்பி ‘இறகுகள்’ என்ற அமைப்பை நிறுவினேன். அதன் மூலம் ஆண்டுதோறும் குறைந்தது, 10,000 மாணவர்களையும், 1,500 ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து விழிப்புணர்வு முகாம்கள் நடத்திவருகிறேன்" என்ற அறிமுகத்தோடு பறவை காணல் பற்றிய பல சுவாரசியங்களை நம்முடன் பகிர்ந்துகொண்டார் ரவீந்திரன் நடராஜன்.

வாழுமிடத்தில் தொடங்குவோம்…

சூழலியல் ஆர்வத்தை நாம் வாழுமிடத்திலிருந்தே தொடங்க வேண்டும் என்பதுதான் ரவீந்திரனின் முதல் அறிவுரை
யாக இருக்கிறது.

“பறவை காணலை வாழுமிடப் பறவை காணல், வலசைவரும் பறவை காணல் என இரண்டாகப் பிரித்துக்கொள்ளலாம். நம் வாழ்விடச் சூழல் வளமாக இருக்கிறதா என்பதை, நம் வசிப்பிடத்தில், பள்ளிவளாகத்தில், தொழிற்சாலை வளாகத்தி
லிருந்து அறிய முற்படலாம். அங்குள்ள பறவைகளைக் கண்டு கணக்கெடுத்தாலே, நாம் வாழும் சூழல் பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறதா என்பதை அறியலாம்.

வலசை வரும் பறவைகளில் வெளி நாட்டுப் பறவைகள், உள்நாட்டுப் பறவைகள் என இரு வகைகள் உள்ளன. உலகம் முழுவதும் பறவைகள் வலசை வர 13 பாதைகள் இருந்தாலும் இந்தியாவுக்கு மத்திய ஆசியா, கிழக்கு ஐரோப்பா என இரண்டு தடங்களிலிருந்து மட்டுமே வெளிநாட்டுப் பறவைகள் வலசை வருகின்றன.

மழைக்காலம் முடிந்தவுடன் வலசை தொடங்கும். அக்டோபர், நவம்பரில் பறவைகள் கூடமைத்து முட்டைகளை அடைகாக்கின்றன. டிசம்பரில் குஞ்சுகள் வெளிவருகின்றன. ஜனவரி, பிப்ரவரிக்குள் குஞ்சுகள் வளர்ந்து பறந்துபோவதற்குத் தயாராகிவிடும். வெளிநாடுகள் தவிர இமயமலை, மத்திய இந்தியாவிலிருந்து வலசை வரும் பறவைகளும் உள்ளன. அதனால் பறவை காணலுக்கு அக்டோபர் தொடங்கி மார்ச் இறுதி வரையே சரியான காலகட்டம்.

உள்ளூர்ப் பறவைகள் நீராதாரத்தைப் பொறுத்தும், காற்றின் ஈரத்தன்மையைப் பொறுத்தும் மேற்குத் தொடர்ச்சி மலையின் மேலிருந்து கீழ் இறங்குவதும், பின் கீழிருந்து மேல் செல்வதுமாக வலசை வந்து போகின்றன.

சிலருக்கு வனங்களில் பறவை காணல் மேற்கொள்ள ஆர்வம் இருக்கும். அப்படியான பயணங்களில் கண்டிப்பாக வனத் துறையிடம் அனுமதி பெற்று வனக்காப்பாளர்களின் உதவியுடன் பறவை காணல் மேற்கொள்வது நல்லது. யானை போன்ற விலங்குகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளலாம். சூழல் இணக்கச் சுற்றுலா என்பது பொறுப்புடன் கூடிய பயணம் என்பதை மறக்கவே கூடாது” என்று தனது அனுபவ அறிவைப் பகிர்ந்துகொண்டார் ரவீந்திரன்.

தமிழகத்தில் வேட்டங்குடி, வேடந்தாங்கல், உதயமார்த்தாண்டபுரம், வடுவூர், வெள்ளலூர் என 15-க்கும் மேற்பட்ட பறவைகள் சரணாலயம் இருக்கின்றன. இவை தவிர அறிவிக்கப்படாத சில இடங்களும் பறவைகளின் புகலிடமாக உள்ளன. உள்ளூர் மக்கள் சூழல் அறிவை மேம்படுத்திக் கொண்டால் அவற்றையும் சரணாலயமாக அறிவிக்க அரசுக்கு அழுத்தம் தரலாம் என்கின்றனர் ஆர்வலர்கள்.

நகரமயமாக்கலை வெறும் கான்க்ரீட் கட்டிடங்களால் மட்டுமே கட்டமைக்காமல் ஆங்காங்கே பூங்காக்கள், தோட்டங்கள், சாலையின் இருபுறங்களில் மரங்கள் என்று திட்டமிட்டால், பறவைகள் துணையுடன் பசுமையை நிலைநிறுத்தலாம்!

இன்னும் என்ன யோசனை... ‘பறவையே எங்கு இருக்கிறாய்.. பறக்கவே என்னை அழைக்கிறாய்…’ என்று பறவை காணலுக்குப் புறப்படுங்கள்!

படங்கள் உதவி: ரவீந்திரன் நடராஜன்

(பயணம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in