உலகம் சுற்றும் சினிமா - 33: ஓடும் ரயிலில் ஒரு புரட்சி

‘ஸ்னோபியர்ஸர்’ (2013)
உலகம் சுற்றும் சினிமா - 33: ஓடும் ரயிலில் ஒரு புரட்சி

ஏற்றத்தாழ்வுகளைத் தனது அங்கமாகக்கொண்டே சமூகம் இயங்கிவருகிறது. சமத்துவத்தை நோக்கிப் பயணிக்க எத்தனை பிரயத்தனங்கள் எடுத்தாலும் அவை முழுமையான தீர்வுகளைத் தருவதில்லை. ஏற்றத்தாழ்வின் விகிதாச்சாரம் விரிவடைந்து, சமூக அடுக்கின் அடிமட்டத்தில் இருக்கும் மனிதர்களின் உரிமைகள் ஒட்டுமொத்தமாகப் பறிக்கப்படும்போது அங்கே புரட்சி உருவாகும். உரிமைகள் பறிக்கப்படுவதும், உரிமைகளுக்காகப் புரட்சி கிளர்ந்து எழுவதும், இறுதியில் சர்வாதிகாரம் அடிபணிவதும்தான் மனித வரலாறு நமக்குக் கற்றுக்கொடுக்கும் பாடம்.

இந்தக் கருத்தை மையமாகக் கொண்டு ஒரு ராட்சத ரயிலுக்குள் உருவாகும் மக்கள் புரட்சியைப் பற்றிச் சொல்லும் படம்தான் ‘ஸ்னோபியர்ஸர்’. 2013-ல், கொரிய மொழியிலும் ஆங்கிலத்திலும் வெளியான இந்தப் படத்தை இயக்கியவர், பொங் ஜூன் ஹோ. ஆம், இந்த ஆண்டு ஆஸ்கர் விழாவில் சிறந்த படத்துக்கான விருதைப் பெற்ற ‘பாரஸைட்’ படத்தை இயக்கிய அதே இயக்குநர்தான். ஆங்கிலத்தில் இவர் இயக்கிய முதல் படம் இதுதான். பரபரப்பான திரைக்கதைக்காகவும், நேர்த்தியான பாத்திரப் படைப்புக்காகவும் சிறந்த ‘டிஸ்டோப்பியன்’ வகை திரைப்படமாக இப்படம் கொண்டாடப்படுகிறது.

உயிர் சுமக்கும் ரயில் 

2031-ம் வருடத்தில் நடக்கும் கதை இது. புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த உலக நாடுகளின் தலைவர்கள், உலகைக் குளிர்விக்க முடிவெடுப்பார்கள். சி.டபிள்யூ.7 என்ற செயற்கைக் குளிரூட்டியை வெளிமண்டலத்தில் தூவுவதன் மூலம் புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடிவெடுப்பார்கள் விஞ்ஞானிகள். ஆனால், அந்தச் செயல்முறையில் வேறுவிதமான விளைவுகள் ஏற்படும். எதிர்பார்த்ததை விடப் புவியின் தட்பவெப்பம் மிகக் கடுமையாகக் குறைந்துவிட, ஒட்டுமொத்த உலகமும் உறைந்துவிடும்.
இப்படி ஒரு ஆபத்தான சூழல் எழலாம் எனும் உள்ளுணர்வுடன் அழிக்க முடியாத தொடர்வண்டி ஒன்றை வில்ஃபோர்ட் என்பவர் உருவாக்கியிருப்பார். உலகம் முழுக்க வட்டமடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அந்தத் தொடர்வண்டியில் ஏறியவர்களைத் தவிர உலகில் உள்ள அனைவரும் உயிரிழந்துவிடுவார்கள். ஒருகட்டத்தில், அந்தத் தொடர்வண்டியே ஒரு முழுமையடைந்த சமூகமாக மாறியிருக்கும். அந்தச் சமூகம் வில்ஃபோர்டின் கட்டுப்பாட்டில் இருக்கும்.

ஏற்றத்தாழ்வின் நெடும் பயணம்

விவிலியத்தில் வரும் நோவாவின் படகைப் போன்றது தான் அந்தத் தொடர்வண்டி. அதனுள் விவசாயம், கோழிப்பண்ணை, கடலில் வாழும் மீன்கள் என்று எல்லாமே இருக்கும். கூடவே, சமூகத்தைப் பீடித்திருக்கும் சாபக்கேடான சமூக ஏற்றத்தாழ்வும் இருக்கும். பணம் படைத்தவர்கள் தொடர்வண்டியின் முன் பகுதியில் சொகுசாக வாழ்வார்கள். பணமில்லாத ஏழை எளிய மக்கள் வால் பகுதியில் வாழ்வார்கள். இன்ஜினில் இருந்துகொண்டு வால் பகுதியில் வாழ்பவர்கள் மீது, ஆயுதமேந்திய தன் அடியாட்களின் துணையுடன் ஆதிக்கம் செலுத்திவருவார் வில்ஃபோர்ட்.

இப்படியே பதினேழு வருடங்கள் கடந்துவிடும். இடைப்பட்ட காலத்தில் பல தடவை ஒடுக்கப்பட்டவர்கள் கிளர்ந்தெழுந்தாலும், அதை வில்ஃபோர்ட் முறியடித்திருப்பார். பதினேழு வருடங்கள் கழித்து, தன் குருவான கில்லியமின் வழிகாட்டுதலில் கர்டிஸ் என்பவர் மக்களை ஒன்றிணைத்து மாபெரும் புரட்சிக்குத் திட்டமிடுவார். இவர்களின் நோக்கமெல்லாம் வால் பகுதியிலிருந்து போராடி தொடர்வண்டியின் பல அடுக்குகளைக் கடந்து இன்ஜினைக் கைப்பற்றுவதே. இவர்களின் போராட்டம் வெற்றிபெற்றதா இல்லையா என்பதை இரண்டு மணி நேரத் திரைக்கதையில் திக்திக் திருப்பங்களுடன் சொல்லியிருப்பார் இயக்குநர்.

‘பாரஸைட்’ - ‘ஸ்னோபியர்ஸர்’

பொங் ஜூன் ஹோ இயக்கிய ‘பாராஸைட்’ படத்தின் கதைக்கும் ‘ஸ்னோபியர்ஸர்’ படத்தின் கதைக்கும் அடிநாதம் ஒன்றுதான். அன்றாட வாழ்க்கைக்கே போராட வேண்டியுள்ள மக்களுக்கும், வாழ்வில் அதீத சுகபோகங்களுடன் வாழும் மக்களுக்கும் இடையே நீறு பூத்த நெருப்பாகக் கனன்றுகொண்டிருக்கும் வன்மம் வெடிக்கும்போது ஏற்படும் விளைவுகளை அடிப்படையாகக் கொண்டே இரண்டு படங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ‘பாரஸைட்’ படம் யதார்த்தமாகவும், ‘ஸ்னோபியர்ஸர்’ படம் அதீத கற்பனை கலந்தும் உருவாக்கப்பட்டிருக்கும். ஒரே கருத்தை இருவேறு பாணியில் சொல்லி தன் மேதைமையை நிரூபித்திருப்பார் பொங் ஜூன் ஹோ.

ஹாலிவுட் நட்சத்திரங்கள்

ஹாலிவுட் நடிகர்களை வைத்துப் படங்களை இயக்குவதன் மூலம், உலக சினிமா ரசிகர்களின் பார்வையைக் கொரிய சினிமாவின் மீது திருப்பிவிட முடியும் என்று கொரிய இயக்குநர்கள் நம்புகிறார்கள். அதற்குச் சிறந்தஉதாரணம் ‘ஸ்னோபியர்ஸர்’ திரைப்படம்.

இத்திரைப்படத்தின் கதாநாயகன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் க்ரிஸ் ஆவன்ஸ், ‘கேப்டன் அமெரிக்கா’ கதாபாத்திரத்தில் நடித்து உலகம் முழுக்க ரசிகர்களைப் பெற்றவர்.

கொரிய இயக்குநர் ஒருவரின் இயக்கத்தில் க்ரிஸ் ஆவன்ஸ் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தி வெளியானதுமே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. இப்படத்தில் இன்னும் பல ஹாலிவுட் நட்சத்திரங்களையும் நடிக்கவைத்திருப்பார் பொங் ஜூன் ஹோ. ரசிகர்களின் எதிர்பார்ப்பைக் கச்சிதமாக பூர்த்திசெய்த இத்திரைப்படம், சிறந்த டிஸ்டோபியன் திரைக்கதைக்காகக் கொண்டாடப்பட்டது.

வாழ்வில் அனைத்து வசதிகளையும் பெற்றவனுக்கும், அடுத்த வேளை உணவையே போராடிப் பெற வேண்டிய சூழலில் இருப்பவனுக்கும் இடையிலான போராட்டங்கள் உலகமெங்கும் நிகழ்வதைப் பார்த்துவருகிறோம். இந்நிலை நீடித்தால் ‘ஸ்னோபியர்ஸர்’ படத்தில் இருக்கும் சூழல் நிஜத்திலும் நிகழும் சாத்தியம் அதிகம் என்பதைப் பூடகமாகச் சொல்லியிருப்பார் இயக்குநர்.

பரபரப்பான திரைக்கதையைக் கொண்ட டைம் லூப் திரைப்படத்தைப் பற்றி அடுத்த வாரம் பார்ப்போம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in