மஹா பெரியவா 37: அருளே ஆனந்தம்

மஹா பெரியவா 37: அருளே ஆனந்தம்

பி. சுவாமிநாதன்
swami1964@gmail.com

ஜெமினி ஸ்டுடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனை காளஹஸ்திக்கு வருமாறு மகா பெரியவா உத்தரவிட்டிருந்தார்.

மகானை வாசன் தரிசிப்பதற்கு முன்னதாக பெரியவாளுக்கு வசதியான நேரத்தையும் இன்னபிற சம்பிரதாயங்களையும் தெரிந்து கொள்வதற்காக ஜெமினியில் பணி புரிந்த ராமமூர்த்தி, காளஹஸ்திக்கு அனுப்பப்பட்டார்.

ராமமூர்த்தி பகல் வேளையில் புறப்பட இருந்தபோது எழுத்தாளர்கள் மணியனும் ஜெயகாந்தனும் தற்செயலாக இந்தப் பயணத்தில் இணைந்து கொண்டார்கள்.

பெரியவாளிடம் ராமமூர்த்தி யையும் ஜெயகாந்தனையும் மணியன் அறிமுகம் செய்து வைத்தாலும், மகானைப் பார்க்க சிலர் வந்ததால், சுமார் ஒண்ணரை மணி நேரத்துக்கும் மேலாக காளஹஸ்தியில்  மூவரும் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ராமமூர்த்தியும் மணியனும் மகா பெரியவாளைப் பற்றி அறிந்தவர்கள். ‘இந்த மகானின் தரிசனத்துக்காக எத்தனை மணி நேரம் என்ன... எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் காத்திருக்கலாம். அவருடைய திருக்கண் பார்வைக்கும், திருவடி தரிசனத்துக்கும்தானே பலரும் ஏங்குகிறார்கள்? பல பிரபலங்களும் இதற்காகத்தானே இந்த மகானின் சந்நிதிக்கு வந்திருந்து காத்துக் கிடக்கிறார்கள். நாமும் காத்திருப்பதில் தவறில்லை’ என்பதை நன்றாகவே புரிந்து கொண்டவர்கள்.

ஆனால், ‘நாத்திகச் சிந்தனை கொண்ட ஜெயகாந்தனும் இங்கே நம்மோடு இத்தனை நேரம் காத்திருக்க வேண்டிய
தாக இருக்கிறதே... தன் மனதுள் ஏற்பட்டிருக்கிற சில கேள்விகளுக்கு விளக்கம் பெறுவதற்காக நம்முடன் வந்திருக்கிறாரே... இப்படிக் காத்திருப்பதனால் அவர் மனம் சங்கடப்படுமோ?’ என்று இருவருமே தங்களுக்குள் பேசியபடி நெளிந்து கொண்டிருந்தார்கள்.
பக்தி சிந்தனையோடும் குருவருள் வேண்டியும் வந்தவர்கள் பரமேஸ்வர சொரூபமாக வீற்றிருக்கக் கூடிய மகானை தரிசிப்பதற்குக் காத்திருக்கலாம். தவறில்லை. சொல்லப்போனால் இதுவும் அந்த மகானின்அனுக்ரஹம்தான்! ‘இத்தனை மணி நேரம் இந்த சந்நிதியில் இருக்கும்படியான ஒரு யோகத்தை அந்த மகானே நமக்கு அருளி இருக்கிறார்’ என்று சிலர் பரவசப்பட்டுப் போவார்கள். இந்த இடத்தில் காத்திருப்பதும் ஒரு சுகம்தான்!

ராமமூர்த்தியும், மணியனும் ஜெயகாந்தன் நின்று கொண்டிருக்கிற திசைப் பக்கம் ஒரே நேரத்தில் திரும்பினார்கள். ‘‘இன்னும் கொஞ்ச நேரம்தான். இவர்கள் இங்கிருந்து கிளம்பி விடுவார்கள். அடுத்து நாமதான் பெரியவாளைப் பாக்கப்போறோம்’’ என்று மகா பெரியவா திருச்சந்நிதியில் அமர்ந்து கொண்டிருப்பவர்களைக் காட்டிப் பேசி ஜெயகாந்தனை சமாதானப்படுத்த முயன்றார்கள்.

ஜெயகாந்தன் ஏதோ சிந்தனையில் இருந்தாரே தவிர, ராமமூர்த்தியும் மணியனும் சொல்வதை அவர் செவிமடுத்தாரா என்பது தெரியவில்லை. தன்னை சமாதானப்படுத்த ஏதோ தகவல் தெரிவிக்கிறார்கள் என்பதை உணர்ந்து கொண்ட ஜெயகாந்தன், வெறுமனே தலையை மட்டும் ‘பரவாயில்லை... பரவாயில்லை’ என்பது போல் அசைத்தார்.

இரண்டு மூன்று நிமிடங்கள் கடந்திருக்கும்.

மகா பெரியவாளுக்கு முன்னால் அமர்ந்து அதுவரை பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தவர்கள் மெள்ள எழுந்தார்கள். மீண்டும் நமஸ்கரித்து விட்டு, பிரசாதம் பெற்றுக் கொண்டு அங்கிருந்து நடக்க ஆரம்பித்தார்கள்.

ஜெயகாந்தனை படபடப்புடன் நெருங்கிய ராமமூர்த்தி, ‘‘உங்க மனசுல இருக்கிற கேள்விகளைக் கேக்கறதுக்கு உண்டான நேரம் இது... என்னென்ன கேக்கணுமோ, எல்லாத்தையும் கேட்டுடுங்க... இன்னும் ஒரு சில விநாடிகள்ல அவர்கிட்ட நாம போகப் போறோம்’’ என்று உஷார்ப்படுத்தினார்.

எந்த அளவுக்கு முணுமுணுப்புடன் ராமமூர்த்தி சொன்னாரோ, அதே குரலில் ஜெயகாந்தனும் சொன்னார்: ‘‘அவர்கிட்ட நான் கேக்கணும்னு நினைச்ச எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எனக்குக் கிடைச்சாச்சு.’’

ராமமூர்த்திக்கும், மணியனுக்கும் ஒரே நேரத்தில் திகைப்பு. இருவரும் பிரமிப்புடன்  ஜெயகாந்தனைப் பார்த்தார்கள். ‘என்னது... இவர் மகா பெரியவா அருகிலேயே போகலை. அதுக்குள்ள இவரது கேள்விகளுக்கு எப்படி மகா பெரியவா பதில் சொல்லி இருக்க முடியும்?’
இருவரது தவிப்பையும் பார்த்த ஜெயகாந்தனே, ‘‘ஒரு மணி நேரமா இங்கே ஒரு குடும்பத்தோட இந்த மகான் பேசிட்டிருந்தார் அல்லவா? அவங்க கேட்ட கேள்விகள் பெரும்பாலானவை என் மனசில் இருந்தவை. என்ன பதிலை வேண்டி இந்த காளஹஸ்திக்கு வந்தேனோ, அத்தனையும் எனக்குக் கிடைச்சாச்சு. இனிமே நாம சென்னைக்குப் புறப்பட வேண்டியதுதான்’’ என்று தெளிவாகவும் தீர்க்கமாகவும் கூறினார்.

அடுத்த ஒரு சில விநாடிகளில் இவர்கள் மூவரையும் பார்த்து அருகே  வருமாறு மகா பெரியவா ஜாடை காண்பித்தார்.
மூவரும் மகானை நெருங்கினார்கள்.

எஸ்.எஸ். வாசன் காளஹஸ்திக்கு வருவது குறித்த விவரத்தை சுருக்கமாகத் தெரிவித்தார் ராமமூர்த்தி. தன் பக்கத்தில் இருந்த ஒரு சிப்பந்தியை அழைத்தார் பெரியவா. பிறகு, ராமமூர்த்தியிடம், ‘‘இவர்கிட்ட விவரம் எல்லாத்தையும் சொல்லிடு’’ என்றார்.
ராமமூர்த்தி கைகூப்பி வணங்கி, நமஸ்கரித்தார்.

அடுத்து மூவருக்கும் தனித் தனியே பிரசாதம் வழங்கினார் மகா பெரியவா.‘எனது நீண்ட கால சந்தேகங்களுக்கு உண்டான பதிலை உங்கள் சந்நிதியில் இருந்து பெற்றுக் கொண்டு விட்டேன். உங்களுக்கான தர்மத்தில் இருந்து நீங்கள் விலகவில்லை. எனக்குண்டான கொள்கையில் இருந்து நானும் மீறவில்லை’ என்று சொல்லாமல், ஒரு நெகிழ்ச்சியோடு கைகூப்பி நன்றியைத் தெரிவித்து விடைபெற்றார் ஜெயகாந்தன்.

மூவரும் வெளியே வந்தார்கள். காரில் ஏறினார்கள்.

சென்னையை நோக்கி விரைந்தது வாகனம்.

அடுத்த நாள் காலை பத்து மணி இருக்கும்.

ஜெமினி நிறுவனர் எஸ்.எஸ். வாசனிடம் அலுவலகத்தில் எல்லாவற்றையும் ‘ரிப்போர்ட்’ செய்துவிட்டுத் தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தார் ராமமூர்த்தி.போன் மணி அடித்தது.

எதிர்முனையில் ஜெயகாந்தன்.

‘‘சொல்லுங்கோ சார்... மகா பெரியவா தரிசனம் எப்படி இருந்தது?’’  ராமமூர்த்தி இயல்பாகக் கேட்டார்.

‘‘சார்... ஒரு ரெண்டு நிமிஷம் உங்க அலுவலகத்துக்கு வந்து பார்க்கலாமா?’’ அனுமதி கேட்டார் ஜெயகாந்தன். ‘‘தாராளமா... காத்துண்டிருக்கேன்.’’

அடுத்த சில நிமிடங்களில் ராமமூர்த்தியில் அறையில் ஜெயகாந்தன் இருந்தார்.

எழுத்தாளரின் முகம் ஏதோ ஒரு இன்பத்தில் இருந்து இன்னமும் மீளாதது போல் பரவசத்துடன் காணப்பட்டது.

அவரே ஆரம்பித்தார்: ‘‘சார்... வீட்டுல எங்கம்மாகிட்ட காளஹஸ்தி போனதைப் பத்திச் சொன்னேன். அங்கேநடந்த எல்லாத்தையும் விவரிச்சேன். ரொம்ப ஆர்வமா கேட்டாங்க. அப்ப என்னை மணியன் அறிமுகப்படுத்தினதைப் பத்திச் சொன்னேன். அதுக்கு பெரியவா ‘முனுசாமியா?’னு கேட்டதையும் சொன்னேன்... அதுவும் மூணு தடவை திரும்பத் திரும்ப ‘முனுசாமியா?’னு கேட்டதையும் ஆச்சரியமா சொன்னேன்.’’

ராமமூர்த்தி இருக்கையின் விளிம்புக்கு வந்தார்.

‘‘எங்கம்மா ரொம்ப பிரமிச்சுப் போனாங்க. ஒரு சில நிமிடங்களுக்கு அவங்களால பேச முடியலை. பிறகு, சொன்னாங்க, ‘அந்த சாமீ சொன்னது சரிதான்டா. உன் பேரு முனுசாமிதான். அந்தப் பேரைத்தான் உங்கப்பா உனக்கு வெச்சாருன்னாங்க...’’
ஆச்சரியமும் மகிழ்ச்சி கலந்த அதிர்ச்சியும் விலகாமல் ஜெயகாந்தன் பேசுவதைப் பார்த்த ராமமூர்த்திக்கு மெய்சிலிர்த்தது.
ஜெயகாந்தன் தொடர்ந்தார்.. ‘‘எங்கம்மா அடுத்துச் சொன்ன தகவல்கள் எனக்கு ரொம்ப பிரமிப்பா இருக்கு.

‘நீ குழந்தையா இருக்கறப்பவே உங்கப்பா இறந்துட்டாரு. அதனால் உன்னைப் பள்ளிக்கூடத்துல சேர்க்கறப்ப உன் மாமா வேற பேரைக் கொடுத்துட்டாரு. பின்னாட்கள்ல நீ வளர்ந்து எழுத்தாளனா ஆனபிறகு ‘ஜெயகாந்தன்’கிற பேரைத் தேர்வு பண்ணி வெச்சுட்டே. ஆக, இந்த முனுசாமிங்கிற பேரு என்னையும் உன் அப்பாவையும் தவிர வேறு யாருக்குமே தெரியாதுன்னு சொன்னாங்க.’’

ராமமூர்த்தியின் கண்கள் பனித்தன. ‘‘பிறந்தப்ப உங்களுக்கு வெச்ச பேரு உங்கம்மாவுக்கும் உங்கப்பாவுக்கும் மட்டும் தெரியும்னு சொல்றீங்க... இன்னொருத்தருக்கும் தெரியும்’’ என்றார்.

ஜெயகாந்தன் திகைத்தார். ‘‘யாரந்த இன்னொருத்தர்?’’
‘‘அவர்தான் நம்மைப் படைச்ச சர்வேஸ்வரன். அவருக்கு எல்லாமே தெரியும். நேத்திக்கு நாம தரிசனம் பண்ண மகா பெரியவா, சாட்சாத் சர்வேஸ்வர சொரூபம்’’ என்று சொல்லும்போதே ராமமூர்த்தியின் குரல் பக்தி மேலீட்டால் தழுதழுத்தது.

ஜெயகாந்தனும் நெகிழ்ந்து போனார். இத்தகைய தரிசனத்தை ஏற்படுத்திக் கொடுத்ததற்காக ராமமூர்த்தியைப் பார்த்து நன்றியுடன் கைகளைக் கூப்பினார்.

இந்தப் பிறவியை மட்டுமல்ல... தன்னைத் தரிசிக்க வருகின்றவர்களின் பூர்வ ஜன்மம் என்ன, அடுத்து ஜன்மம் உண்டா என்று சகலத்தையும் அறிந்தவர் அந்த முக்காலமும் உணர்ந்த முனிபுங்கவர்!

நடமாடும் தெய்வம் என்று மகா பெரியவாளை அனைவரும் அழைப்பது வார்த்தை அலங்காரத்துக்கு அல்ல!

அதுவே சத்தியம். அதுவே சாஸ்வதம்!

(ஆனந்தம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in