நிழற்சாலை

நிழற்சாலை

காலப் பயணி

எல்லோரும் பார்த்து நிற்க
கையசைத்துக்கொண்டிருக்கிறேன்
கண்களை விட்டு மறையும் வரை
இப்பொழுது அசைந்துகொண்டிருக்கும்
நினைவுகளின் மீது
பயணிக்கின்றன சக்கரங்கள்
மாருதம் வீச
சாளரத்தின் வழியே
வெளியில் தேடுகிறேன்
கவிதையை எவரேனும்
விதைத்துச்
சென்றிருக்க மாட்டார்களா என்று
எல்லைகளைக் கடந்து
உரசிக்கொள்ளும் காதலர்கள்
பக்கத்து இருக்கையில்
பட்டினத்தாரின் கரும்பு கிட்டும் வரை
அவர்கள் ருசிக்கட்டும் 
மன்மதனின் கரும்பை
இப்போது என் கண்களுக்கு
கொஞ்சம் ஓய்வு தேவைப்படுகிறது
நீங்களும் கொஞ்சம்
மூடிக்கொள்ளுங்கள்
உங்கள் கண்களை.
- ஸ்ரீகா

தேவையுள்ள ஆணி

யார் எப்போது
அந்த ஆணியை
அந்தச் சுவரில்
அடித்தார்கள் எனத் தெரியாது.
குறைந்தது
பத்து வருடம் இருக்கலாம்.
அந்த அறையில்
அது ஒன்றுதான்
இருந்திருக்க வேண்டும்.
சாவிக்கொத்து
ஓர் ஆணின் கால்சட்டை
தாம்பூலப் பை
இன்ன பிற
மாட்டித்
தொங்கியிருக்கும்
என்பதை
ஆணியைச் சுற்றியிருந்த
சுவடுகள்
சொல்லிக்கொண்டே இருந்தன
அறையைக் காலிசெய்ய
காத்திருந்த
என்னிடம்.
- பெ.பரிதிகாமராஜ்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in