காதல் ஸ்கொயர் - 02

காதல் ஸ்கொயர் - 02

அருண், “டேய்… வாடா…” என்று கௌதமின் தோளைப் பிடித்து உலுக்கினான். கௌதம் சுயநினைவுக்குத் திரும்பி, “அங்க பாருடா… செம சூப்பரா ஒரு பொண்ணு” என்று காண்பித்தபோது அந்தப் பெண் திரும்பி ஃபுட்கோர்ட்டினுள் நுழைந்துவிட, அவள் முதுகு மட்டும்தான் தெரிந்தது.

“இங்கதான்டா இருப்பா. அப்புறம் பாத்துக்கலாம். வாடா பத்து மணிக்குள்ள போகணும்” என்று அருண், கௌதமின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு நடந்தான்.

அட்மின் அலுவலகத்தில் ஏராளமான பயிற்சியாளர்கள் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். கௌதம், நெற்றியில் சந்தனம் வைத்திருந்த ரிசப்ஷன் பெண்மணியிடம், “மேடம்... ஸாஃப்ட்வேர் இன்ஜினீயர் ட்ரெய்னி...” என்றபடி தனது ஆஃபர் லெட்டரை நீட்டினான். அவள் அதை வாங்கிப் பார்க்காமலே, “விச் பேட்ச்?”என்றாள். கௌதம், “எல்ஸி 3 பேட்ச்” என்றான். அவள் ரிஜிஸ்ட்ரேஷன் ஃபார்ம்களை நீட்டி, “ஃபில் அஃப் தி ஃபார்ம் அண்ட் கோ டு கவுன்ட்டர் நம்பர் 6” என்று கூற, அவர்கள் கவுன்ட்டர் நம்பர் 6-க்குச் சென்று நின்றுகொண்டார்கள்.

அவர்களின் பின்னால் வந்து நின்ற ஒரு பெண் அருணின் மீது மோதிவிட, பரவசத்துடன் அருண் அந்தப் பெண்ணைப் பார்க்க, அவள் “ஸாரி...” என்றாள். ‘ஸாரி’யில் மலையாள வாடை.

“இட்ஸ் ஆல்ரைட். ஆக்ச்சுவலா பாத்தா நீங்க இடிச்சதுக்கு நான் தாங்க்ஸ்  சொல்லணும். பினராயி விஜயன் நல்லா இருக்காரா?” என்று அருண் ஆங்கிலத்தில் கேட்க, அவள் முறைத்தாள். “பாப்பா முறைக்குது...” என்று அருண், கௌதமின் தோளில் சாய்ந்து கிசுகிசுத்தான்.

அவர்கள் ரிஜிஸ்ட்ரேசன் படிவங்களை கவுன்ட்டர் 6 சேட்டனிடம் கொடுத்தார்கள். அவர் சான்றிதழ்களைச் சரி பார்த்துவிட்டு ஒரு தற்காலிக அடையாள அட்டையைக் கொடுத்து, “உங்க ரெண்டு பேருக்கும் ஒரே ரூம். லோட்டஸ் பிளாக்ல ரூம் நம்பர் 222. இந்த ஹாஸ்டல் அட்மிட் கார்டை அங்க கொடுத்திடுங்க...” என்று அடையாள அட்டைகளை நீட்டினார். அடையாள அட்டையைக் கழுத்தில் மாட்டிக்கொண்டு வெளியே வந்தார்கள். ஒரு பேட்டரி கார் இவர்கள் அருகில் வந்து நின்று அதன் டிரைவர், “விச் ப்ளாக்?” என்றான்.

“லோட்டஸ் பிளாக்.”

“கம்...” என்று கூற, அவர்கள் பேட்டரி காரில் ஏறி அமர்ந்தார்கள். கார் மெதுவாக நகர ஆரம்பித்தது. சாலைகளின் இருபக்கமும் உயர உயரமான பைன் மற்றும் சைப்ரஸ் மரங்கள். வழியில் ஆங்காங்கே சிறு சிறு பூங்காக்கள். பூங்காக்களில் இன்றைய காதலர்கள் இரண்டு  இஞ்ச் நெருக்கத்திலும், நாளைய காதலர்கள் பத்து இஞ்ச் தொலைவிலும் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். திடீரென்று குளிர் அதிகரிக்க, கௌதம் கைகளை இறுகக் கட்டிக்கொண்டான்

லோட்டஸ் பிளாக் வார்டனிடம் சாவியை வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றார்கள். அறையைத் திறந்து பார்த்து அசந்துபோனார்கள். ஒரு பயிற்சி இன்ஜீனியரின் அறை இப்படி இருக்கும் என்று எதிர்பார்க்கவே இல்லை. ஏறத்தாழ 5 நட்சத்திர ஹோட்டல் அறைபோல் இருந்தது. பளபளக்கும் விளக்குகள். சோஃபாக்கள். மர வார்ட்ரோப்கள். இரண்டு தனித் தனிக் கட்டில்களில் மெத்தைகள். சுவரில் எல்இடி டிவி. இரண்டு ஸ்டடி டேபிள்கள். எலக்ட்ரானிக் அடுப்பு. காஃபி மேக்கர். ஜன்னல்களில் அழகிய வண்ணத் திரைகள். “கலக்கிட்டானுங்க மாப்ள...” என்றபடி அருண் ஜன்னல் திரையை விலக்கினான். அறையின் அழகை ரசிக்க முடியாமல் கௌதமுக்கு வயிற்றைக் கலக்கிக்கொண்டிருந்தது.

“முதல்ல டாய்லட் போறேன்” என்ற கௌதம் சிகரெட்டை எடுத்துக் கொண்டு டாய்லட்டுக்குள் புகுந்தான். வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்துகொண்டு “அப்பாடா...” என்று சிகரெட்டைப் பற்ற வைத்தான். அடுத்த வினாடியே, “விய்ங்...விய்ங்...” என்று சைரன் ஒலி சத்தமாக கேட்க, பயந்து போய் எழுந்துவிட்டான். அப்போது திடீரென்று  மேலே ஸ்ப்ரிங்ளரிலிருந்து ஷவர் போல் தண்ணீர் சுற்றிச் சுற்றி அடித்து கௌதம் உடலை நனைக்க... கௌதம் அரண்டு போய்விட்டான்.

கதவைத் தட்டிய அருண், “டேய்... சிகரெட் பத்த வச்சியா?” என்று கத்தினான்.

“ஆமாண்டா...”

“அறிவுகெட்ட நாயே... ரூல்ஸ் புக்குல படிக்கல? ரூம்ல சிகரெட் பிடிக்கக் கூடாது.புகையோ தீயோ வந்தா ஸென்ஸார் உடனே மோப்பம் பிடிச்சு, சைரன் கத்தும். வார்டன் ரூம்ல, நம்ம ரூம் நம்பருக்குன்னு ஒரு லைட் வச்சிருப்பாங்க. அது எரியும்” என்று அருண் கூறிக்கொண்டிருக்கும்போதே காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டது.

ஹெச்ஆர் அலுவலகத்தில் அந்த விசாரணை ஆங்கிலத்தில் நடைபெற்றது.

“கைட்லைன்ஸ் புக்கு எதுக்குக் கொடுத்தோம்... படிச்சுப் பாக்கல?” என்றான் அந்த மலையாளி ஹெச்ஆர், ஆங்கிலத்தில்.

“ஸாரி சார்... பாக்கல.”

“முத நாளே பாயின்ட் வாங்கிட்டீங்க.”

“என்ன பாயின்ட்?” என்று கௌதம் திருதிருவென்று விழிக்க... அருண், கௌதமின் காதில் கிசுகிசுப்பாக, “டேய்... ஹாஸ்டல் ரூல்ஸ மீறுற ஒவ்வொரு முறையும் நம்ம கணக்குல பாயின்ட் வைப்பாங்க. மேக்ஸிமம் பத்து பாயின்ட் வரைக்கும்தான் அனுமதி.”

“அதுக்கு மேல போச்சுன்னா?”

“ம்... உனக்குக் கல்யாணம் பண்ணி வைப்பாங்க. கேள்வியப் பாரு... வீட்டுக்கு அனுப்பிடுவாங்க.”

ஹெச்ஆர், “ஃபர்ஸ்ட் டைம்ங்கிறதால வார்னிங்கோட விடுறேன். இனிமே சிகரெட் பிடிக்கணும்னா ஸ்மோக்கிங் ஜோன்லதான் குடிக்கணும்”என்றான்.

“அது எங்க சார் இருக்கு?” என்று கௌதம் அவரிடமே கேட்க, அவன் “கெட் லாஸ்ட்”என்று கத்தினான். அவர்கள் நகர ஆரம்பித்தார்கள்.

அப்போது நீலச்சட்டைப் பணியாளருடன் உள்ளே நுழைந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் கௌதம் நின்றுவிட்டான்.

“டேய்… நான் சொன்னன்ல்ல… அந்தப் பெண் இவதான்” என்றான் கௌதம், அருணிடம்.

“செமையா இருக்கா மாப்ள…”

ஹெச்ஆர் அவளை முறைப்பாக பார்க்க, அவளது விழியோரம் துளிர்த்த உலகின் மிக அழகிய கண்ணீரைக் கண்டு கௌதம் அதிர்ந்தான். “ஸ்மோக் வயலேஷன்” என்று

அந்தப் பெண்ணைக் காண்பித்து அந்த நீலச்

சீருடைக்காரன் கூற, கௌதம் “இந்தப் பொண்ணு தம்மடிக்குமா?” என்பதுபோல் அருணைப் பார்த்தான்.

“நீங்க சிகரெட் பிடிச்சீங்களா?” என்று ஹெச்ஆர்க்காரன் அந்தப் பெண்ணிடம் கேட்க, அவள் உலக மகா அதிர்ச்சியுடன், “சார்... நோ... நான் ஊதுபத்தி கொளுத்தினேன்” என்றாள்.

“ஏன் ஊதுபத்தி கொளுத்தினீங்க?”

“எங்கம்மா, முதல் நாள் வடபத்திரக் காளியம்மன் படத்தை வச்சு, ஊதுபத்தி காட்டச்சொன்னாங்க” என்று வெகுளித்தனமான குரலில் கூறியதை கௌதம் சிரிப்புடன் ரசித்தான்.

“வாட் வடபத்ர காளியம்மன்?” என்றான் அந்த ஹெச்ஆர் சத்தமாக.

“எங்க ஊரு தஞ்சாவூர்ல, சக்தி வாய்ந்த அம்மன். ராஜராஜசோழன் போருக்குப் போறதுக்கு முன்னாடி அங்கதான் வாள வச்சு...” என்று அவள் தொடர்ந்து கூற... “ஸ்டாப் இட்...” என்று கத்தினான், அழகான பெண்களிடம் அதிர்ந்து பேசக் கூடாது என்ற அடிப்படை அறிவு கூட இல்லாத அந்த ஹெச்ஆர்க்காரன்.

பயந்துபோன அந்தப் பெண் குரல் தழுதழுக்க… “ஸாரி சார்... இந்த ஒரு தடவை மன்னிச்சுடுங்க. ப்ளீஸ்” என்றபோது அவள் கன்னங்களில் கண்ணீர் வழிந்தது.அவளின் கண்ணீரைப் பார்த்து மனம் இளகிய ஹெச்ஆர், “ஓகே... இனிமே இந்த மாதிரி தப்பு நடக்கக் கூடாது. ஹாஸ்டல் ரூல்ஸ ஒழுங்கா படிங்க. யூ கேன் லீவ் நௌ”என்று கூறிவிட்டு மொபைலை எடுத்துப் பார்க்க ஆரம்பித்தான். அவள் முன்னால் நடக்க, கௌதம் அருணின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு அவள் பின்னால் சென்றான்.

(தொடரும்...)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in