மகா பெரியவா: அருளே ஆனந்தம் - 02

மகா பெரியவா
மகா பெரியவாமகா பெரியவா - ஓவியம்: A.P.ஸ்ரீதர்

திருமணத் தேதி நெருங்கிவிட்ட நிலையில், தன்னால் இனிமேலும் பணத்துக்காகக் காத்திருக்க முடியாது என்ற தீர்மானத்துக்கு வந்தார் பெண்ணைப் பெற்றவர். இதை அடுத்து துணிச்சலான ஒரு காரியம் செய்கிற முடிவுக்கு வந்துவிட்டார். தான் செய்யப்போகிற இந்தக் காரியத்துக்கு சாட்சியாகத் தன் குடும்பத்தில் எவரையும் சேர்க்கவில்லை. அதாவது மகள், மனைவி உட்பட குடும்பத்தினர் எவருக்குமே தெரியாமல் தைரியமான மனசுடன் இந்தக் காரியத்தைச் செய்தார்.

குடும்பத்தினருக்கே தெரியாமல் அப்படி என்ன காரியம்?

தான் வாங்கிப்போடுவதாகச் சொன்ன பவுன் நகைகளுக்கு மாற்றாக ‘கவரிங்’ நகைகளை வாங்கி மகளுக்கு அணிவித்துச் சரிக்கட்டி விட்டார். இந்த நகைகளைப் பார்க்கின்ற எவருக்கும் சந்தேகமே எழவில்லை; குறிப்பாக சம்பந்தி குடும்பத்தினருக்கு!  இப்படிப்பட்ட ஒரு தவறான காரியத்தைச் செய்வதற்கு முன், தான் வணங்குகிற குலதெய்வத்திடமும் இஷ்ட தெய்வங்களிடமும் வேண்டிக் கொண்டு தன்னை மன்னிக்கும்படி பிரார்த்தித்தார்.

பெண்ணைப் பெற்றவருக்கு என்ன எண்ணம் என்றால், கல்யாணம் முடிந்தவுடன் தனக்குப் பணம் கிடைக்கும், அதைக் கொண்டு தங்க நகை வாங்கி மகளிடம் கொடுத்து, அவளுக்கு மட்டும் இந்த விவரத்தைச் சொல்லி, ‘கவரிங்’ நகைகளை திரும்ப வாங்கிக் கொள்ளலாம் எனத் திட்டம்!

திருமணமும் ஜாம்ஜாமென்று நடந்து முடிந்தது. மணமகள் அணிந்திருக்கின்ற நகைகளின் பளபளப்பையும் மினுமினுப்பையும் பார்த்தால், எவருக்கும் சந்தேகம் வரவில்லை. ‘திருமணம் நன்றாக முடிந்துவிட்டதே’ என்று மகளின் தந்தைக்கும் சந்தோஷம். ‘கூடிய விரைவில் பணத்தைப் புரட்டி ‘கவரிங்’கை தங்கமாக மாற்றிக் கொடுத்து விட வேண்டும்’என்று உறுதியும் எடுத்துக் கொண்டார்.

ஆனால், விதியின் விளையாட்டோ வேறு மாதிரி இருந்தது!

நான்கைந்து மாதங்கள் ஓடின.

வாழ்க்கைச் சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. ஏற்றமும் இறக்கமும் மாறிமாறி வரும்.

அதுபோல் பையனின் தகப்பனாரான ஜமீன்தாருக்கு என்ன கிரகம் எங்கே இடம் பெயர்ந்ததோ, திடீர் இறக்கம். மனிதர் ஆடிப் போய்விட்டார். புன்னகை முகத்துடன் பொலிவுடன் வலம் வந்தவர் களையிழந்து காணப்பட்டார். வியாபாரத்தில் பெரும் நஷ்டம். கடும் பண நெருக்கடி.

வெளியே கடன் கேட்டால், நிலைமையை உணர்ந்தவர் கள் கொடுக்க மாட்டார்கள். இந்தக் கஷ்டத்தில் இருந்து  எப்படி வெளியே வருவது என்று ஜமீன்தார் யோசித்தார். அப்போது வீட்டில் நடமாடிக்கொண்டிருந்த மருமகள் அவரது கண்களில் பட்டார். நான்கைந்து மாதங்களுக்கு முன் திருமணத்தின்போது அவரது பெற்றோர் போட்ட தங்க நகைகள் (?) கண்களில் பட்டன. ‘ஆகா... ஆத்திர அவசரத்துக்கு மருமகளிடம் இருந்து இவற்றை வாங்கிப் போய் மார்வாடியிடம் அடகு வைத்துப்  பணம் வாங்கலாமே... இவளுடைய கழுத்திலும் கைகளிலும் இருக்கும் நகைகளை வாங்கிக் கொண்டுபோய் கொடுத்தால், தற்போதைக்கு இருக்கும் பிரச்னை தீர்ந்து நிலைமை சரியாகிவிடுமே’ என்கிற எண்ணம் அவர் மனதில் உதித்தது.

பிறகென்ன... சமையல்கட்டை நோக்கிச் சென்ற மருமகளை அன்புடன் குழைவாய் அழைத்தார்.

‘‘என்னப்பா... என்ன வேணும். காபி கொண்டு வரட்டுமா?’’ என்று மாமனாரை அப்பாவாகவே வரித்துக் கொண்ட மருமகள் பாசத்துடன் கேட்டாள்.

‘‘காபி இருக்கட்டும்மா. எனக்குக் கொஞ்சம் நெருக்கடி. அவசரத்துக்குப் பணம் தேவைப்படறது...’’ என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தார்.

குத்துவிளக்காக வந்த மருமகள் கேட்டாள். ‘‘சொல்லுங் கப்பா... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்... நீங்க சொன்னா, எது வேணாலும் செய்யறேன்’’ என்று மாமனாரின் முகம் பார்த்தாள்.

‘‘யம்மாடீ... உன் வார்த்தைகளே எனக்கு ஆனந்தத்தைக் குடுக்கறது’’ என்று இரு கரங்களையும் அவளைப் பார்த்துக் குவித்தவர், ‘‘உன் கழுத்துலயும், கையிலேயும் இருக்கிற தங்க நகைகளைக் கழற்றித் தர முடியுமா? அதை அடகு வெச்சு பணக் கஷ்டத்தை இப்போதைக்குச் சமாளிச்சிடுவேன்...’’ என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, தன் கழுத்தில் இருக்கின்ற சங்கிலிகளையும், கைகளில் இருக்கின்ற வளையல்களையும் கழற்றி மாமனாரிடம் மலர்ந்த முகத்துடன் கொடுத்தாள் மருமகள்!

ஜமீன்தாரே இதை எதிர்பார்க்கவில்லை.

‘‘யம்மாடீ... தப்பா நினைக்காதே... இது ஒரு அவசரத்துக்குத்தான். இன்னும் ரெண்டு மாசத்துல பணம் வந்தவுடனே இந்த நகைகளை எல்லாம் அடகுக் கடைலேர்ந்து மீட்டு உடனே குடுத்துடறேன்’’ என்று வாங்கி, தன் மேல்துண்டில் பத்திரப்படுத்திக் கொண்டார்.

புன்னகையுடன் மருமகள் அங்கிருந்து சமையல் கட்டுக்குச் சென்றுவிட்டாள்.

அடுத்த கணமே அந்த நகைகளை எடுத்துக் கொண்டு தன் ஊரில் இருக்கிற மார்வாடியிடம் சென்றார் ஜமீன்தார். தங்கம் எது, ‘கவரிங்’ எது என்கிற வித்தியாசம் இந்த மாமனாருக்கு வேண்டுமானால் தெரியாமல் இருக்கலாம். ஆனால், மார்வாடிக்குத் தெரியாமல் இருக்குமா? வளையல்களையும் நகைகளையும் வாங்கி உரசிப் பார்த்தவர், ஜமீன்தாரை ஏளனமாகப் பார்த்தார். உள்ளுக்குள் சிரித்தார்.

ஜமீன்தாருக்குப் புரியவில்லை. அவருக்குள் சிந்தனை ஓடியது..‘என்னடாது... ரொம்ப நேரமா உரசிப் பார்த்துண்டே இருக்கார்... பணத்தைக் குடுக்க மாட்டேங்கிறார்?’

ஜமீன்தாரை ஏறெடுத்துப் பார்த்தார் மார்வாடி. ‘‘என்ன சாமி?.. ஊர்ல ஜமீன்தாரா வலம் வர்றீங்க... மனுஷனுக்கு ஒரு கஷ்டம் சொல்லிட்டு வராது, பொசுக்குன்னுதான் வரும். சரி, பரவால்லை. அப்படி ஒரு கஷ்டம் உமக்கு இப்ப வந்திடுச்சு. அதுலேர்ந்து மீள்றதுக்கு ஒரிஜினல் தங்க நகை குடுக்காம, ‘கவரிங்’ நகைங்களைக் கொண்டு வந்து குடுத்தா, நியாயமா சாமி?’’

மார்வாடி குத்தலாகச் சொன்னதைக் கேட்டதும், விதிர்விதிர்த்துப் போனார் ஜமீன்தார்.

‘‘என்ன சொல்றீங்க? இதெல்லாம் ‘கவரிங்’கா?’’

‘‘ஆமா... நானும் உரசி உரசிப் பாக்கறேன்.. நீங்க கொண்டு வர்றது எப்படி ‘கவரிங்’கா இருக்கும்னு’’ என்ற மார்வாடி,‘‘எங்கே ஏமாந்தீங்க?’’ என்று கேட்டார்.

‘‘எம் பையன் கல்யாணத்துல வரதட்சணையா பொண்ணு வீட்டுலேர்ந்து போட்டது’’

‘‘அத்தனையும் ‘கவரிங்’. எடுத்துட்டுப் போய் பழைய பாத்திரக்காரன்கிட்ட போடுங்க...’’ என்று சலித்தபடி மார்வாடி கொடுத்தார். வாங்கும்போது ஜமீன்தாரின் கைகள் நடுங்கின.

ஏமாற்றம் அத்தனையும் கோபமாக மாறியது.

இயற்கைதானே! இயலாமையையும் ஏமாற் றத்தையும் சகித்துக்கொள்கிற மனம் பெரும் பாலானோருக்கு இல்லை. அந்தச் சந்தர்ப்பத்தில் அதுவே கோபமாக மாறுகிறது.

கல்யாணத்தின்போது தன்னை ஏமாற்றிய சம்பந்தியின் மீது கோபம் வந்தது. ‘அந்த ஆசாமி மட்டும் இப்ப என் கையில கிடைச்சான்னா...’ என்று பற்களை நறநறவென்று கடித்தபடி, ‘கவரிங்’ நகைகளுடன் வீட்டுக்குள் நுழைந்தார்.

சம்பந்தி மீதான கோபம் மொத்தமும் மருமகள் மீது திரும்பியது.

கோபம் கொந்தளிக்கும் முகத்துடன் மருமகளைத் தேடினார்.

பெயரைச் சொல்லி உரக்கக் குரல் கொடுத்தார்.

வந்தாள். எதிரே நின்றாள் புன்னகை முகத்துடன். ‘‘என்ன வேணும்பா?’’ என்றாள் இயல்பாக.

மருமகளை அங்கே நிற்க வைத்துவிட்டு அவளது அறைக்குள் போனார் ஜமீன்தார். அங்கே இருக்கிற ஒரு காலிப்பெட்டியை எடுத்தார். அங்கே இறைந்து காணப்பட்ட அவளது துணிமணிகளை அதற்குள் அடைத்தார். பெட்டியை வெளியே கொண்டு வந்தார்.

‘‘இனி ஒரு விநாடிகூட நீ இங்கு இருக்கக் கூடாது. போயிடு, உன் வீட்டுக்கு...’’

மாமனாரின் கோபத்தைப் புரிந்து கொள்வதற்கு மருமகளுக்குக் கொஞ்சம் நேரம் பிடித்தது. அந்த நேரம் பார்த்து மாமியாரும், கணவனும் வீட்டில் இல்லை.

‘‘அப்பா... என்ன சொல்றீங்க..? நான் என் பொறந்த வீட்டுக்குப் போகணுமா?’’

‘‘ஆமா... இனி ஒரு கணம்கூட என் முன்னால நீ நிற்கக் கூடாது. உங்கப்பா என்னை ஏமாத்தின காரியத்துக்கு இதைத் தவிர வேற வழியில்லை. என்னோட மானம், மரியாதை அத்தனையும் ஏற்கெனவே போயாச்சு. மிச்சம் இருந்த கொஞ் சமும் மார்வாடி கடைல போயிடுச்சு’’ என்று மருமகளைப் பார்த்து உறுமினார்.

‘மகா பெரியவா... இதென்ன சோதனை... என்ன சொல்ல வர்றார் மாமனார்’ என்று யோசித்த மருமகளுக்கு, அடுத்த விநாடியே காரணம் புரிந்து விட்டது.

‘இந்த நேரத்தில் மாமனாரிடம் பேசுவது முறையல்ல...’ என்று தீர்மானித்தவள், பெட்டியை வாங்கிக்கொண்டாள்.

வீட்டுக்கு விளக்கேற்ற வந்த மகாலட்சுமி, நான்கைந்து மாதங்களில் வெளியேறினாள்.

அவள் கலங்கவில்லை. தன் தந்தையின் களங்கத்தைத் துடைக்க நினைத்தாள்.

அடுத்து என்ன ஆனது?

(ஆனந்தம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in