கண்ணான கண்ணே..! - 03: உணவின் பின்னால் கட்டமைக்கப்படும் அரசியல்

கண்ணான கண்ணே..! - 03: உணவின் பின்னால் கட்டமைக்கப்படும் அரசியல்

குழந்தை வளர்ப்பு என்றால் என்னவென்பதைப் புரிந்துகொண்டால்தான் அவர்களுக்கு ஆரோக்கிய உணவு அளித்தல் என்ற வாய்ப்பைப் பெற்றோராகிய நாம் சரியாக நிறைவேற்ற இயலும். உணவின் பின்னால் வலுவாகக் கட்டமைக்கப்பட்டுவரும் அரசியலைப் புரிந்துகொண்டால் மட்டும்தான் நம் சந்ததிகளை ஆரோக்கியமான சந்ததிகளாக வளர்த்தெடுக்க முடியும்.

மீண்டும் தலையெடுக்கும் காலனித்துவம்

அன்று கிழக்கிந்திய கம்பெனி வணிகம் என்ற போர்வையில் நம் தேசத்துக்குள் நுழைந்து ஆதிக்கம் செய்தன. இன்று உணவுத் தொழிற்சாலைகள், வியாபாரம் என்ற பெயரில் ஊட்டச்சத்து மரபு மாற்றத்தையும், ஊட்டச்சத்து பேதத்தையும் புகுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

ஊட்டச்சத்து மரபு மாற்றம் உங்களை உணவுக்குப் பதிலாக நுண்சத்துகளைத் தேடிச் சாப்பிடப் பழக்குகிறது. ஊட்டச்சத்து பேதம், உள்ளூர் உணவு போதுமான ஆரோக்கியத்தை உள்ளடக்கியது அல்ல என்ற மாயையை உருவாக்குகிறது. நார்ச்சத்துக்கு, வாழைப்பழத்துக்கு மாற்றாக ஓட்ஸை நாட வைக்கிறது.கொழுப்புக்கோ உணவைக் கடலை எண்ணெய்யில் சமைப்பதற்குப் பதிலாக ஆலிவ்எண்ணெய்யில் சமைக்கப் பழக்கப்படுத்துகிறது, புரதத்துக்குப் பருப்பு வகைகள் வேண்டாம் சோயா சாப்பிடுங்கள் என்று போதிக்கிறது. ஆனால், எதைச் சாப்பிடக் கூடாது என்பதை மட்டும் இந்த உணவுத் தொழிற்சாலைகள் ஒருபோதும் வெளிப்படையாகச் சொல்வதில்லை. இங்கே உள்ளூர் உணவை விட்டொழி என்பது மட்டும் மறைமுகமாக உணர்த்தப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இதனைக் காலனியாதிக்கம் என்று சொல்லாமல் வேறு எப்படிப் பொருள்படுத்த முடியும்?

ஆனால், இதனை மிகவும் மென்மையாக நாசூக்காகவே இந்தத் தொழில்நிறுவனங்கள் நடத்துகின்றன. வெகுஜன ஊடகங்கள் வழியாகவோ, பிரபலங்களை விளம்பரத் தூதுவர்களாக்குவதன் மூலமாகவோ அல்லது நேரடியாக அரசின் கொள்கை முடிவுகளிலேயே தாக்கத்தை ஏற்படுத்துவதிலோ மட்டும் உணவு காலனித்துவத்தை இவர்கள் புகுத்தவில்லை. நமது கல்விஅமைப்பிலேயே இதனைப் புகுத்துகின்றனர்.

இந்தியாவும் ஊட்டச்சத்துக் கல்வியும்

நான் ஸ்போர்ட்ஸ் சயின்ஸ் மற்றும் நியூட்ரீஷன் பாடத்தில் பட்ட மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்தேன். உணவை நான் பார்க்க வேண்டிய கோணம் என்ன மாதிரியாக இருக்க வேண்டும் என்பது திணிக்கப்பட்டது. உணவை நான் உணவுக்குழுக்களாக, கலோரிக்களை கணக்கிடும் அளவுகோலாக, கிராம் கணக்குகளில் சொல்லப்படும் அளவீடுகளாகவே மட்டுமே பார்க்கப் பழக்கப்படுத்தப்பட்டேன்.

ஊட்டச்சத்துப் பாடத்தை அறிவியல்ரீதியாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், முதலில் அது எங்கிருந்து விளைவிக்கப்படுகிறது என்ற ஆதாரத்தை அறிந்துகொள்ள வேண்டும். ஆனால், கல்லூரிப் புத்தகத்தில் என் விவசாயியைப் பற்றியோ விவசாயத்தைப் பற்றியோ நான் படிக்கவில்லை.

கலாச்சாரம், பயிர் சுழற்சி, வானிலை சார்ந்த விவசாய பழக்க வழக்கங்கள், விவசாயத் திருவிழாக்கள், விவசாயிகள் என எதைப் பற்றியும் எனது புத்தகமோ பேராசிரியர்களோ எனக்குப் பாடம் எடுத்ததில்லை.

ஆனால் ஊட்டச்சத்து அறிவியல் என்றால் இவற்றையல்லவா முதலில் போதித்திருக்க வேண்டும். இத்துடன் பாரம்பரியப் பயிர் வகைகள், நிலத்தை மதிநுட்பத்துடன் கையாள்வது, குறைந்துவரும் நீராதாரம் குறித்த விழிப்புணர்வு, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள் குறித்த புரிதல், அரசின் உணவுக் கொள்கைகள், பயிர்களுக்கு அரசு வழங்கும் குறைந்தபட்ச ஆதார விலையின் அடிப்படை என்ன என்பது போன்றவை அல்லவா கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். இவற்றைப் பற்றி எனது பேராசிரியர்கள் ஒருநாளும் பேசியது இல்லை.

மதமும் சடங்குகளும்கூட உணவின் மீதும் உணவுப் பழக்க வழக்கத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால், அவற்றைப் பற்றியும் எந்தப் பேச்சும்இல்லை.

கல்லூரிகளில் எங்களுக்கு நடத்தப்படும் போட்டிகளுக்கு ஏதாவது ஒரு தானிய நிறுவனம் விளம்பரதாரராக இருக்கும். மாணவர்களுக்கு டீஷர்டுகளை யோகர்ட் தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கியிருக்கும், பதப்படுத்தப்பட்ட பழச்சாறுகளைப் பழச்சாறு நிறுவனங்கள் இலவசமாகக் கொடுத்திருக்கும். அங்கு இவர்களுக்கு எதிராகக் கேள்விகள் எழ, எழுப்பப்பட வாய்ப்புகள் ஏதேனும் இருந்திருக்குமா? கருத்து வேற்றுமையை வெளிப்படுத்த விட்டிருப்பார்களா?

உணவும் ஊட்டச்சத்தும் சார்ந்த படிப்புகள் புனிதமானவை. அவற்றில் இப்படியான தன்னலம் சார்ந்த விருப்புகளை உணவுத் தொழிற்சாலைகள் புகுத்துவதை அனுமதிக்கக் கூடாது. இதுவும் காலனித்துவத்துக்கு எதிரான போராட்டம்தான்.

இன்றைய காலகட்டத்தில் களத்தில் இருக்கும் நியூட்ரீஷனிஸ்ட்டுகளும், டயட்டீசியன்களும் புத்திசாலிகள் இல்லை என்பதே எனது பார்வை. ஏனெனில் பாடப்புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பதை எதிர்த்து, வகுப்பறையில் திணிக்கப்பட்டதை எதிர்த்து இவர்கள் ஒருநாளும் கேள்வி கேட்டதில்லை. மக்கள்சேவைதான் உங்கள் எதிர்கால இலக்கு என்றால் வகுப்பறையிலேயே கேள்வி கேளுங்கள். கல்வியின் பெயரில் நினைவில் நிலை நிறுத்தப்பட்டதை அழித்துக் கேள்விகள் மூலம் புதிதாகக் கற்றுக்கொள்ளுங்கள். பின்னர் உணவு சேவை செய்யுங்கள்.

உணவுக் குழப்பத்தைத் தீர்ப்போம்

கடந்த அத்தியாயத்தில் நான் குறிப்பிட்டிருந்ததைப் போலவே நமது சந்ததிகளின் ஆரோக்கியத்தைப் பேண உணவுக் குழப்பத்திலிருந்து விடுபடுவதற்கான வழிமுறைகளை அறிவோம்.

மிகக் கடினமான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதுதான் இந்த உலகிலேயே மிக எளிமையான விஷயம் என்பேன். உணவையும் ஊட்டச்சத்தையும் பொறுத்தவரை இதுவே முழு உண்மையும்கூட.

ஆண்டாண்டு காலமாக நமது முன்னோர்கள் அவர்கள் வசிப்பிடத்தைச் சுற்றி என்ன பயிரானதோ அதையே உண்டனர். எல்லா உணவையும் புது மலர்ச்சி மாறாமல் உண்டனர். ஒவ்வொரு பருவ காலத்திலும் எது விளைந்ததோ அதை உண்டனர். தங்கள் தட்டில் கிடைக்கப்பெற்ற உணவுக்கு நன்றியுடையவர்களாக இருந்தனர். உணவு என்ற வளத்தை வீணடிக்கவோ அதைத் தவறாகப் பயன்படுத்தவோ கூடாது என்ற விழிப்புணர்வைப் பெற்றிருந்தனர். அதனாலேயே உணவைப் பகிர்ந்துண்டனர். தேவைக்கு அதிகமாக இருந்ததைச் சேமித்து வைத்தனர். நொதிக்க வைத்தும் ஊறுகாய் போட்டும்கூட பயன்படுத்தினர்.

ஐநா சபையின் நீடித்த வளர்ச்சிக் குறிக்கோள் ஆவணத்தை சற்றே ஆழமாகப் படித்தீர்கள் என்றால் அதில் நம் பாட்டியின் ஞானம் ஒளிந்திருப்பதை அறிவீர்கள். ஆம், ஐநா பெரும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக சிறிய காரியங்களையே பரிந்துரைக்கிறது. தேவைப்படாதபோது மின்விளக்குகளை அணைத்து வையுங்கள். உங்கள் தட்டில் இருக்கும் உணவு எங்கிருந்தோ விமானத்தில் பறந்து வந்ததாக இல்லாமல்  உள்ளூரிலேயே விளைந்ததாக இருக்கட்டும். இப்படி ஐநா சில பரிந்துரைகளைக் கொடுத்துள்ளது.இவையெல்லாம் வேடிக்கையான விஷயங்களாகத் தோன்றலாம். ஆனால், உங்கள் உடலைக் கட்டுமஸ்தாக வைத்துக்கொள்ள நீங்கள் செய்யும் உடற்பயிற்சியைப் போல் இவை நீடித்த பலன் தரக்கூடியவை. அந்த 5 அல்லது 10 நிமிடப் பயிற்சியை ஒவ்வொரு நாளும் ஆயுள் முழுக்க நீங்கள் செய்யும்போது கிடைக்கும் பலனைப் போன்றது.

அத்தகைய பலனைப் பெற உங்கள் பிள்ளைகளைப் பழக்கப்படுத்துங்கள்.

நமது குழந்தைகளுக்கான எதிர்கால உலகம் இன்னும் அதிகமான சவால் நிறைந்ததாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு, காலநிலை மாற்றம், உணவுக்கும் தண்ணீருக்குமான போர் இன்னும் என்னவெல்லாம் இந்தப் பட்டியலில் சேரப்போகிறது என ஊகிக்க இயலாது அளவுக்கு நம் குழந்தைகளுக்கு சவால் இருக்கும். ஆனால் அதற்குள் நாம் அவர்களுக்கு சரியான உணவு ஒழுக்கத்தை விதைத்து விட்டோம் என்றால் அவர்கள் நிலைமையைச் சமாளிக்கப் பழகிக்கொள்வார்கள்.

2050-ல் பசியும் தொற்றாநோய்களுமே மனித குலத்துக்கு மிகப் பெரிய சவாலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நம் கைகளில் இன்னும் 30 ஆண்டுகளே இருக்கின்றன. அதற்குள் நாம் செயல்பட வேண்டும். நம் செயலை அன்னத்திலிருந்து துவக்குவோம். அன்னம்தான் ஆனந்தத்தின் அடிப்படை ஆதாரம்.

அறிவோம் 4 உண்மைகள்

உண்மையானது மறைக்கப்படும் போதே குழப்பம் ஏற்படுகிறது. உணவுக்குழப்பமும் அப்படி ஏற்படுத்தப்பட்டதுதான். அத்தகைய உணவுக் குழப்பத்தைத் தீர்க்க 4 உண்மைகளை அறிந்து கொண்டால் போதுமானது. பெற்றோர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் அவற்றைப் பட்டியலிடுகிறேன்.

முதலாவது உண்மை, உள்ளூரில் உற்பத்தி செய்யப்பட்ட உணவும், பருவத்துக்கு ஏற்றவாறு விளைவிக்கப்படுகிற காய்களும் கனிகளும் தானியங்களும், பாரம்பரியமாக நாம் சாப்பிட்டுப் பழக்கப்பட்ட உணவும்தான் தலைசிறந்தது. இந்த உண்மையை மறைக்கவே நார்ச்சத்து இவ்வளவு, புரதம் இவ்வளவு, கொழுப்பும் கார்போஹைட்ரேட்ஸும் இவ்வளவு என விகித்தாச்சார அடிப்படையில் உண்பது நலம் போன்ற பிம்பத்தைத் தோற்றுவித்துள்ளனர். இந்த பிம்பத்தை உருவாக்கியதில் ஆரோக்கிய நிபுணர்களுக்கும் ஊடகங்களுக்கும் பங்கு இருக்கிறது.

நம் வீட்டில் சமைக்கும் உணவு ஊட்டச்சத்து தன்னிறைவானது அல்ல என்ற பிம்பத்தை உருவாக்கித்தான் நம்மை நிறைய உணவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் நுகர்வோர் ஆக்கியிருக்கிறது.

நமது பாட்டி உணவில் நெய் சேர்த்துச் சாப்பிடுவதை நமக்கு பழக்கிக் கொடுத்திருந்தார். ஆனால், 1970 தொடங்கி 2000 வரை ஏன் இப்போதும்கூட சில மருத்துவர்களும், டயட்டீசியன்களும் நெய்க்கு எதிரான பிரச்சாரத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கின்றனர்.

நெய், வைட்டமின் டியை உடல் கிரகித்துக்கொள்ள உதவுகிறது, குடலுக்கு நண்பனாக இருக்கும் சிலவகை பாக்டீரியாக்களைப் பாதுகாக்கிறது, ரத்த சர்க்கரை அளவைக் காக்கிறது. ஆனால் இந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுவிட்டன.

இதனால் நெய்யிலிருந்து தாவர எண்ணெய்க்கு மாறிய இந்தியச் சமூகம் இப்போது ஆலிவ் எண்ணெய் பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறது.

அமெரிக்காவின் க்ளெவ் லேண்டில் உள்ள பிரபல இதயநோய் சிகிச்சை மருத்துவமனை 2016-ல்தனது வளாகத்தில் ஒரு சுவரொட்டியை வைத்தது. அதில்,நெய் உடலுக்கு சேர்க்கும் நன்மைகளைப் பட்டியலிட்டது. அதன் பின்னர் மேற்கத்திய நாடுகளின் சூப்பர் மார்க்கெட்டுகளில் க்ளாரிஃபைடு பட்டர் (Clarified Butter) பிரபலமாகிவிட்டது.

1970-களில் நெய் இதய நோய்க்கு வழிவகுத்தது. 1980-களில் நெய் சர்க்கரை நோய்க்கு வழிவகுத்தது. ஆனால், 2016-ல் நெய்க்கு மருத்துவச் சான்றிதழ் கிடைக்கிறது. ஓர் உணவுப் பொருள் உடலில் ஏற்படுத்தும் விளைவு ஆண்டுதோறும் இப்படி மாறுபடக்கூடும் என்றால் அது உணவு அறிவியல் அல்ல; உணவு வியாபாரம். இந்த வியாபாரச் சுழலில் சிக்கிக்கொண்டது நெய் மட்டுமல்ல. தேங்காய், அரிசி, கரும்பு இன்னும் சில நமது பாரம்பரிய உணவுகளும் இதில் சிக்கிக்கொண்டிருக்கின்றன.

மேற்கத்திய நாடுகள் தேங்காய் எண்ணெயைக் கொண்டாடுகின்றன. அமெரிக்காவின் மான்ஹாட்டன் நகரின் சூப்பர் மார்க்கெட்டுகளில் அரிசிக் கஞ்சி (Rice Konjee) ஏகபோக விற்பனையில் இருக்கிறது. சான் பிரான்ஸிஸ்கோவில் கரும்புச்சாறு விற்பனையோ அமோகம்.

ஆனால், இவையெல்லாம் நம் இந்திய சமையலறையில் சர்வ சாதாரணமாகக் கிடைக்கக் கூடியவை. நாம்தான் உள்ளூர் உணவின் மகத்துவமும் பாரம்பரிய உணவின் மகிமையையும் புரிந்துகொள்ளாமல் நுண்ணூட்டச் சத்துகளைத் தனித்தனிப் பொருட்களில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

முதல் உண்மையை உணர்ந்துவிட்டீர்கள் என்றால் உங்கள் குழந்தைகளுக்கு அதைக் கடத்துங்கள்.

அடுத்து வரும் அத்தியாயங்களில் அடுத்தடுத்த உண்மைகளை அறிந்து தெளிவுபெறுவோம்.

(வளர்வோம் வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in