மண்.. மனம்.. மனிதர்கள்! - 2

மண்.. மனம்.. மனிதர்கள்! - 2

தாய் மண்ணைத் தொட்டவனைத் தாய் தடுத்தாலும் விடக்கூடாது என்பது முதுமொழி !

ஏறத்தாழ 190 ஆண்டுகளாக வெள்ளையர்களிடம் சிக்கிப் போராடிக்கொண்டிருந்தது பாரதம்.

விவரமற்ற சிலர், வெள்ளையர்கள் மட்டும் இல்லாதிருந்தால் நமக்கு ரயில்வே ட்ராக் கிடைத்திருக்குமா... அணை, பாலங்கள், சாலைகள், கட்டிடங்கள் எல்லாம் கிடைத்திருக்குமா என்பார்கள்.

இவை மொத்தமும், வெள்ளையர்கள் தங்கள் வியாபார வசதிகளுக்காகக் கட்டமைத்துக் கொண்டவை என்பதே உண்மை. அவர்களைக் குற்றம் சொல்ல முடியாது. சுயநல வியாபாரிகளுக்கே உண்டான குணம் அது.

கடல்கடந்து வந்த வியாபாரிகளுக்கு உள் நாட்டு மக்களின் நலம் அவசியமற்றது. அப்படி எதிர்பார்ப்பதில் அர்த்தமுமில்லை. விதி விலக்காக ஒரு சிலர் இருந்திருக்கலாம் என்பதை மறுப்பதற்கில்லை என்றாலும் கூட்டிக் கழித்தால் வெள்ளையர்கள் அக்மார்க் வியாபாரிகள். அவ்வளவே.

மேலே செல்வோம்...

வெள்ளையர்களுக்கு முந்தையது முகலாய ஆட்சி. நாடு பிடிப்பதும் செல்வம் குவிப்பதும் நோக்கமாக வந்த முகலாயர்கள் ஒற்றுமையற்ற இந்தியத்தை ஆக்கிரமித்தார்கள்.

டெல்லி சுல்தான்கள் தங்கள் சார்பில் வரி வசூலிப்பாளர்களாக 1540 துவக்கம் ஆங்காங்கே நவாபுகளை நியமித்தார்கள்.

நவாப் என்றால் பிரதிநிதி என்று பொருள். வசூலித்துத் தரும் வரிப் பணத்தில் குறிப்பிட்ட பர்சன்டேஜ் நவாபுக்கு உண்டு.

நவாபுகளால் வசூலிக்கப்படும் லோக்கல் வரிகளை ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது வசதிப்படும்போதோ ஆளனுப்பி வாங்கிக்கொள்வது சுல்தான்களின் வழக்கம் என்பதனால் பெருஞ்செல்வம் குவியத் துவங்கியது நவாபுகளிடம்.

குந்தித்தின்ற நவாபுகளுக்கு நாக்கில் தேன் சுரந்தது. குவிந்து கிடந்த வரிப்பணத்தை எடுத்து அண்டிவந்த அசலூர் வியாபாரிகளுக்கு வட்டிக்கு விடத் துவங்கினார்கள். மேலும், மேலுமாய் குவியத் துவங்கியது பகோடாப் பணம்.

அதில் ரிஸ்க் இருந்தது. சுல்தான்கள் திடீரென்று ஆளனுப்பி விட்டால் அவர்களிடம் மொத்த வரிப் பணத்தையும் கொடுத்தனுப்பியாக வேண்டிய அவசியம் இருந்தது.

விருந்து - மருந்து  என்று  மூன்று நாள் வேண்டுமானால் கடத்தலாம். அதற்குள் கொடுத்த இடத்திலிருந்து பணத்தைக் கட்டியிழுத்தாக வேண்டும். இல்லாவிட்டால் தொலைத்து விடுவார்கள் சுல்தான்கள்.

மிகப் பெரிய ரிஸ்க்தான். ஆனால், ரிஸ்க் என்பது பேராசையின் செல்லக் குழந்தை அல்லவா ?

தங்களது உள்வியாபாரத்தைத் தற்காத்துக் கொள்வது முக்கியம் என்று எண்ணிய நவாபுகள் தங்களுக்கென ஓர் படையினைக் கட்டமைத்தார்கள்.

விசுவாசமும் நிர்வாகத் திறனும் மிக்க தமிழர்களைத் தேடித் தேடித் தங்கள் படையில் சேர்த்துக்கொண்டார்கள். தென் தமிழகத்தில் நவாபுகளின் படையில் முக்குலத்தோர் இருந்தனர். ஒருபக்கம் கடன் வசூலிப்பது, கணக்குப் பார்ப்பது, காவல் காப்பது என நவாப்களின் நம்பிக்கைக்கு உரியவர்களாக இருந்த அவர்கள், சொந்த நாட்டு மக்களின் அன்பிற்குரியவர்களாகவும் திகழ்ந்திருந்தனர். கூடவே, கிழக்கிந்திய கம்பெனி வியாபாரிகளின் பேராசைகளுக்குப் பெரும் சவாலாகவும் இருந்தனர்.

ஒரு கட்டத்தில் முகலாய ஆளுமைகள் முற்றாக ஒழிந்து, 1858ல் விக்டோரியாவின் ‘க்ரௌன் ஆட்சி’ வந்தபோது அதனிடம் வரி வசூலிக்கும் மொத்த உரிமையையையும் வாரிக்கொடுத்துவிட்டு சரண்டரானார்கள் நவாபுகள்.

அன்னியர்களின் உத்தரவுப்படி பரம்பரையாகத் தங்களுக்குக் காவல் செய்த படைகளை அன்றைய நவாபுகள் ஒரே இரவில் தடாலடியாகக் கலைத்தனர். தங்களுக்கு அரணாக இருந்த படைவீரர்களைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் கை கழுவினர்.

நட்டாற்றில் விடப்பட்டவர்கள் தங்கள் குடும்பங்களைக் காப்பாற்ற வழியின்றி தத்தளித்தனர்.

“உங்களுக்கு வசதியாக மேலிடமாகச் சரிக்கட்டிக் கொண்டீர்களே... எங்கள் கதி என்ன... எண்ணிப் பார்த்தீர்களா?” எனக் கண் சிவந்தனர்.

“ஏன்... நவாபுகளுக்குச் செய்த பணியை எங்களுக்குச் செய்யலாமே..?” என்று வலைவீசிய வெள்ளையர்களிடம்...

“இல்லை, எங்கள் மக்களிடம் நீங்கள் வசூலிக்கப் பார்ப்பது அநியாயமான வரி. அதற்காக எங்கள் மண்ணின் வீர அடையாளங்களாக பூலித்தேவர், சிவகங்கை மகாராணி வேலு நாச்சியார், மாமன்னர்கள் மருது பாண்டியர்கள், தீரன் சின்னமலை, கயத்தாற்றுக் கட்டபொம்மன் உட்பட பலர் உங்களை எதிர்த்தார்கள்... எதிர்த்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அந்தப் பரம்பரையில் வந்த தமிழர்கள் நாங்கள். எங்களால் உங்களோடு இணைந்து வேலை செய்வது ஆகாது. மேலும், கேட்க ஆளில்லை என்று எண்ணிக் கொண்டு எங்கள் மண்ணின் வழிபாட்டை, கலாச்சாரத்தை நீங்கள் அழிக்கத் துடிக்கிறீர்கள். முடியாது. எங்கள் மண்ணுக்கும், எங்கள் மக்களுக்கும் துரோகம் செய்ய எங்கள் பரம்பரைக் குணம் அனுமதிக்காது...” எனக் கூட்டறிக்கை விட்டனர்.

கட்டாய வரியினை வசூலித்துப் போகும் வெள்ளையர்களின் கூலிப்படைகளை காட்டு வழிகளில் மறித்தனர். வீரத்தோடும் தீரத்தோடும் கலகம் செய்தபடியே இருந்தனர்.

வெறுப்படைந்த வெள்ளையர்கள் அவர்களை முற்றுமாக முடக்கிவிட சட்டத்தின் வழியே சதித் திட்டம் தீட்டினர்.

குற்றப் பரம்பரைச் சட்டம். (CRIMINAL TRIBES ACT): 

1871-ல் வட இந்தியாவில் புனையப்பட்ட அந்த அயோக்கிய சட்டம் 1876-ம் ஆண்டு வங்க தேசத்தில் அமல்படுத்தப்பட்டு கடைசியாக தமிழகத்தில் எட்டிப் பார்த்தது.

ஆண்டு 1911. ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் இந்தச் சட்டத்தினால் அவமானப்படுத்தப்பட்டனர்.

கச்சேரி எனப்பட்ட போலீஸ் பூத்களில் கைரேகை பதிக்க வேண்டும். கிழிக்கப்பட்ட கோடுகளுக்குள் இருந்துவிட்டு, வெள்ளைக் காவலர்கள் சொன்ன பிறகுதான் வீடுகளுக்குச் செல்ல வேண்டும்.

அக்கம்பக்க சொந்த பந்தங்களின் நல்லது கெட்டதுகளுக்குப் போக வேண்டும் என்றாலும் ஆங்கே ‘மேனேஜர்’ பொறுப்பிலிருக்கும் வெள்ளையனிடம் ‘ராத்திரி சீட்டு’ பெற்றுக்கொண்ட பின்பே செல்ல முடியும்.

குற்றப் பரம்பரைச் சட்டம் என்பது இந்தியர்களின் மேல் ஏவப்பட்ட பேரவமானம். இது ‘நீ ஒரு குற்றவாளி... அதை நீயே ஏற்றுக்கொள்...’ என எளிய மனிதர்களின் மனதில் அன்றாடம் ஆழப் பதிக்கப் பார்ப்பது, அவமானப்படுத்துவது அல்லாமல் வேறென்ன?

இந்தக் கேவலத்தை ஏற்க மறுத்து கலகம் செய்தார்கள் நம் முன்னோர்கள். சுட்டுத் தள்ளினார்கள் வெள்ளையர்கள். 17 பேரை பலி கொண்டனர்.

கலகம் மேலும் பரவிவிடக் கூடாது என்று பதற்றப்பட்ட அன்னியர்கள், அந்த மக்களை அவர்களது வாழ்விடத்தில் இருந்து வேரும் வேரடி மண்ணுமாகப் பிடுங்கி நாடெங்கும் பிரித்து அடித்தனர்.

அவ்வாறு தென் மாவட்டங்களை சார்ந்த 32 கிராமங்களிலிருந்து பிடுங்கி எறியப்பட்டவர்கள் ஆரம்பத்தில் விழுப்புரம் பகுதியில் தங்க வைக்கப்பட்டார்கள்.

அவர்களின் அன்றைய குடியிருப்புக்கு ஏதோவோர் நவாபின் பெயரால் ‘ஹசீஸ் நகர் செட்டில்மென்ட்’ என்று பெயர் வைக்கப்பட... தலையெழுத்தே என்று வாழ்ந்துகொண்டார்கள்.

அதன்பின் பம்மலில் பிரித்து வைக்கப்பட்டார்கள்.

அவர்களை மேலும் இரண்டு பிரிவாகப் பிரித்தார் அன்றைய சென்னை மாகாண லேபர் கமிஷனரான பிரிஸ்ட்லி.

அந்த வெள்ளையரின் பெயரோடு இன்றும் இருப்பதுதான் சென்னை ஓட்டேரியில் 270 குடும்பங்களோடு அமைந்திருக்கும் ‘பிரிஸ்ட்லி நகர் செட்டில்மென்ட்.’

அங்கே அழுக்காகத் தொங்கிக் கொண்டிருக்கும் ‘பிரிஸ்ட்லி நகர் செட்டில்மென்ட்’ என்னும் அந்தப் பெயர்ப் பலகை சுதந்திர இந்தியாவை கேலி செய்தபடி இன்னும்கூட இருப்பது காணச் சகிக்காத காட்சி!

சாய்ந்தபடி நக்கலாய் சுளிக்கும் அதன் அன்னிய உதடுகள் அந்தமான் வரை நீள்கிறது. ஆம், அங்கும் இதுபோல் ஒரு ‘செட்டில்மென்ட்’ இருக்கிறது.

குற்றப் பரம்பரைச் சட்டம் என்பது இந்தியர்கள் மேல் செலுத்தப்பட்ட உளவியல் போர் என்றால் அதன் நீட்சியாக இன்றும் அவலமாடிக்கொண்டிருகிறது ‘செட்டில்மென்ட்’ என்னும் அந்தக் கெட்ட வார்த்தை.

யாருடைய மண்ணில் யார் யாரை செட்டில் செய்வது ?

இந்த சுதந்திர மண்ணில் அந்த அவமான முகவரி தூக்கி எறியப்பட்டாக வேண்டாமா?

சில நாட்களுக்கு முன் எனது சுதேசி தியேட்டர் பயிற்சிப் பட்டறைக்கு வந்து சேர்ந்தார் குருநானக் கல்லூரியின் மாணவர் நித்தீஷ். அந்தச் சிலம்பாட்ட மாணவரின் மூலமாகத்தான் சென்னைக்குள் இருக்கும் அந்தக் குக்கிராமத்தைக் கண்டடைந்தேன்

இன்று அவர்களுக்கு வீடு என்று ஒன்று இருக்கிறது என்றாலும் அதற்குண்டான வீட்டு மனைப்பட்டா இன்னமும் தரப்படவில்லை. அதற்காக 70 வருடங்களாகப் போராடி வரும் வெள்ளந்தியான அந்த மக்களின் தனிச் சோகத்தை நேரில் கண்டறிந்து மனம் சலித்தேன்.

முன்னொரு நாளில் நவாபுகளால் கைவிடப்பட்டு, பின்பு வெள்ளை வியாபாரிகளால் விரட்டப்பட்ட அந்த விசுவாசமிக்க மக்கள்...

இன்றைய சுதந்திர இந்தியாவிலும் பட்டா இல்லாமல் அநாதையாக நிறுத்தப்படுவது சுதந்திர இந்தியாவுக்கு மேன்மை சேர்க்கக் கூடியதா ?

எத்தனை புறக்கணித்தாலும் அவர்கள் ஆகஸ்ட் பதினைந்துக்குக் காத்திருந்து கொடியேற்றி வணங்கி கண்ணீர் மல்க நிற்கிறார்கள் என்றால் அது அவர்களின் ரத்தத்தில் ஊறிய தேசாபிமானம் அல்லவா?

500 சதுர அடிக்கும் குறைவான அந்த மண்ணுக்கு பட்டா அளிப்பதன் மூலம் இந்த மண்ணை இன்னமும் அவர்களுக்கு உறுதி செய்து கொடுக்காமல் அல்லாட வைப்பது சரிதானா?

சென்னைக்குள் ஒடுங்கியிருக்கும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த சிலம்ப வாத்தியாரான இளைஞர் நந்தகுமாரிடம் பேசிக்கொண்டிருந்த போது சுவாரசியமான தகவல் ஒன்றைச் சொன்னார்.

தமிழ் சினிமாவின் ஈடு இணையற்ற நவரச நடிகையான மனோரமா ஆச்சி அவர்கள் 2012-ல், கிராமத் தெய்வமான முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவுக்காக அங்கே வந்திருக்கிறார்.

வந்தவர் ஊர்ப் பெரியவர்களிடம் உணர்ச்சி வசப்பட்டு இப்படிச் சொல்லியிருக்கிறார்.

“இன்னும் எதுக்குங்க இந்த அசிங்கமான பேரைச் சுமக்கணும்... அழகா ‘வேலு நாச்சியார் நகர்’னு வெச்சுக்கலாமேங்க..!”

களங்கமற்ற ஆச்சியின் ஆதங்கம் நிறைவேறுமா என்று இன்னமும் காத்துக் கிடக்கிறார்கள் அந்த மக்கள்!

(தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in