பேசும் படம் - 12: எழுந்தது இந்தியா... வீழ்ந்தது பாகிஸ்தான்!

பேசும் படம் - 12: எழுந்தது இந்தியா... வீழ்ந்தது பாகிஸ்தான்!

இந்தியாவிடம் வலிய வந்து வம்பிழுப்பதும், பின்னர் பின்வாங்கி ஓடுவதும் பாகிஸ்தானுக்கு ஒன்றும் புதிதல்ல. பலமுறை இந்தியாவிடம் மோதி அந்நாடு தோல்வியைத் தழுவியுள்ளது. அந்த வகையில் 1971-ம் ஆண்டு நடந்த போரில் இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான் ராணுவத்தினர், ஒப்பந்த பத்திரம் எழுதிக் கொடுப்பதைத்தான் இங்கே படத்தில் பார்க்கிறீர்கள்.

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது வங்கதேசம், பாகிஸ்தானுடன் இணைந்துகொண்டது. கிழக்கு பாகிஸ்தான் என்று அறியப்பட்ட அப்பகுதி, நாளடையில் மேற்கு பாகிஸ்தானுடன் (தற்போதைய பாகிஸ்தான்) பல விஷயங்களில் முரண்பட்டது. தங்கள் பகுதியின் மேம்பாட்டுக்குத் தேவையான நிதியுதவியை மேற்கு பாகிஸ்தான் வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டு கிழக்கு பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் மத்தியில் இருந்தது. வங்காள மொழியை பாகிஸ்தானின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக உறுதி செய்வதில் அந்நாட்டு அரசு காட்டிய சுணக்கமும் இரு தரப்புக்கும் இடையிலான உரசலை அதிகப்படுத்தியது. 1970-ல், கிழக்கு பாகிஸ்தானில் வீசிய சூறாவளியில் ஏராளமானோர் உயிரிழந்தனர். அந்தச் சமயத்தில் கிழக்கு பாகிஸ்தானுக்கு தேவையான உதவிகளை மேற்கு பாகிஸ்தான் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இவையெல்லாம் ஒன்றுசேர்ந்து பாகிஸ்தானிடம் இருந்து பிரிந்து கிழக்கு பாகிஸ்தானைத் தனி நாடாக்க வேண்டும் என்ற குரல் அங்கு ஓங்கி ஒலித்தது.

இந்த நேரத்தில் வங்க தேசத்தின் தந்தை என்று போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரகுமான் தலைமையில் பாகிஸ்தானுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் அணி திரளத் தொடங்கினர். 1970-ல், கிழக்கு பாகிஸ்தானில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஷேக் முஜிபுர் ரகுமான் தலைமையிலான அவாமி லீக் கட்சி வெற்றி பெற்றது. ஆனால், அவர் பதவியேற்க மேற்கு பாகிஸ்தான் அனுமதிக்கவில்லை.

 பாகிஸ்தானின் அப்போதைய ஆட்சியாளரான யாஹியா கான், அங்கு ராணுவச் சட்டத்தைக் கொண்டுவந்தார். அவாமி லீக் கட்சியைத் தடைசெய்து, அதன் முன்னணி தலைவர்களைக் கைது செய்தார். இதனால் கொந்தளித்த கிழக்கு பாகிஸ்தான் மக்கள் முக்தி வாஹினி என்ற படையை உருவாக்கி உள்நாட்டுப் போரைத் தொடங்கினர். இந்தப் போரில் ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதுடன் பலர் இந்தியாவுக்குள் அகதிகளாக வரத் தொடங்கினர்.

இந்த விடுதலைப் போரில் முக்தி வாஹினிக்கு இந்தியா உதவுவதாகக் குற்றம் சாட்டிய பாகிஸ்தான் அரசு, 1971-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் போர் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசியது. இந்தியாவைத் தாக்குவதால், அவர்கள் கிழக்கு பாகிஸ்தானுக்கு உதவுவதை நிறுத்துவார்கள் என்று பாகிஸ்தான் அரசு தப்புக் கணக்கு போட்டது. ஆனால், நடந்ததோ வேறு. தங்கள் நாட்டுக்குள் பாகிஸ்தான் விமானம் குண்டுமழை பொழிந்ததும் வீறுகொண்டு எழுந்த இந்தியா, அத்தனை சக்திகளையும் திரட்டி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தது.

 பாகிஸ்தான் ராணுவத்தால் 13 நாட்களுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியவில்லை. இறுதியில் பாகிஸ்தான் படைகள் இந்தியாவிடம் முழுமையாகச் சரணடைந்தன. இதற்கான ஒப்பந்தத்தில் 1971-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி பாகிஸ்தான் கையெழுத் திட்டது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக பாகிஸ்தா னிடம் இருந்து பிரிந்த கிழக்கு பாகிஸ்தான், வங்க தேசம் என்ற தனி நாடாக உருவெடுத்தது. அந்நாட்டு ராணுவ தளபதி இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திடுவதைத்தான் இங்கே படமாக்கி உள்ளார் பிரபல இந்திய புகைப்பட நிபுணரான ரகு ராய்.

ரகு ராய்

இந்தியாவின் முன்னணி புகைப்படக் கலைஞர்களில் ஒருவரான ரகு ராய் (Raghu Rai) 1942-ம் ஆண்டு ஜங் என்ற ஊரில் பிறந்தார். தனது மூத்த சகோதரரான ஷரம்பால் சவுத்திரியிடம் இருந்து புகைப்பட கலையின் நுணுக்கங்களைக் கற்றுக்கொண்ட இவர், 1965-ம் ஆண்டு ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் போட்டோகிராபராக பணியைத் தொடங்கினார். பின்னர் ‘சண்டே’ ‘மேக்னம் போட்டோஸ்’ உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் இவர் பணிபுரிந்தார். சுதந்திர இந்தியாவின் பல்வேறு முக்கியத் தருணங்களைப் படம் பிடித்துள்ள இவர், 18 புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

இந்தியாவின் பத்மஸ்ரீ, அமெரிக்காவின் சிறந்த புகைப்படக்காரர் (1992) விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in