பாப்லோ தி பாஸ் 11: அமெரிக்காவின் இன்சல்ட்!

பாப்லோ தி பாஸ் 11: அமெரிக்காவின் இன்சல்ட்!

பாப்லோ சொன்னதைக்கேட்டு கஸ்தாவோ அதிர்ச்சி அடைந்தான். பெரும்பாலும் பாப்லோ சொல்கிற, செய்கிற செயல்களுக்கெல்லாம் அவ்வளவு எளிதில் அதிர்ச்சி அடையக் கூடியவன் அல்ல கஸ்தாவோ. பாப்லோ ஒரு விஷயம் செய்தால், அதற்குப் பின் யாருக்கும் தெரியாத ஆனால் நியாயமான ஒரு காரணம் இருக்கும் என்பதை அறிந்தவன் கஸ்தாவோ. நியாயம்..? ஆம்... அவரவர் வாழ்க்கைக்கு ஏற்றபடி அவரவர் வகுத்துக்கொள்கிற நியாயங்கள்!

கஸ்தாவோவே அதிர்ச்சி அடைந்தான் என்று சொன்னால், மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டிய அவசியமில்லை. பேரதிர்ச்சி, பேய் அடித்த அதிர்ச்சி என்கிற ரீதியில் கலவரமுற்றார்கள். கலக்கமுற்றார்கள்.

"பாப்லோ... நீ என்ன பேசுறேங்கிறது தெரிஞ்சுதான் பேசுறியா..?"

“ஆமா மை டியர் கஸின்...”

“ஃபூல்..”

"கஸ்தாவோ... என்னுடைய கனவை நீயுமா புரிஞ்சுக்கலை..? ''

"இது கனவில்ல பாப்லோ... நம்ம கல்லறைக்கு நாமே குழி தோண்டிக்கிற மாதிரி...''

கஸ்தாவோ சொன்னதைக் கேட்டு ‘பகபக'வென்று சிரித்தான் பாப்லோ. அவன் சிரிப்பதை கூலிங் கிளாஸ் அணிந்த கஸ்தாவோவின் கண்கள் இமைக்காமல் பார்த்தன. பாப்லோவின் சிரிப்பு அடங்கியதும் மெதுவாக ஆனால் அழுத்தமாக இப்படிச் சொன்னான் கஸ்தாவோ.

"ஆஃப்டர் ஆல், வி ஆர் பாண்டிட்ஸ் பாப்லோ...’’ சொல்லி விட்டு, தான் புகைத்துக்கொண்டிருந்த சிகரெட்டைக் கீழே போட்டுத் தன் பூட்ஸ் காலால் அழுத்தி அணைத்துவிட்டு, அந்த அறையிலிருந்து வெளியேறினான் கஸ்தாவோ.

***

ரிச்சர்ட் நிக்ஸன்
ரிச்சர்ட் நிக்ஸன்

கொக்கைன் பயன்பாடு கொலம்பியாவுக்கு மட்டுமே உரித்தான ஒன்று அல்ல. 1914-ம் ஆண்டு வரை அமெரிக்காவிலும் கொக்கைன் பயன்படுத்தப்பட்டு வந்தது. இன்றைக்கு உள்ள கொக்கோ கோலா குளிர்பானத்தில் தொடக்ககால‌ வெர்ஷன் குறிப்பிட்ட அளவு கொக்கைன் பயன்படுத்தப்பட்டது. சிகரெட்டிலும் சிறிது அளவு கலக்கப்பட்டது. `ஒரு குரோசின் கொடுங்க' என்று எந்த ஒரு மருத்துவரின் பரிந்துரைச் சீட்டும் இல்லாமல், மருந்துக் கடைகளில் `ஓவர் தி கவுன்ட்டர்' ஆக மருந்துகள் பலவற்றை வாங்குவது போல அந்தக் காலத்தில் கொக்கைனை மருந்துக் கடைகளில் வாங்கி மக்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள்.

ஆனால் 1914-ல், `கொக்கைன் பயன்படுத்தும் கறுப்பர் இன மக்கள் சிலர் வெள்ளையர்களைத் தாக்குகிறார்கள்' என்று கூறி, கொக்கைன் விற்பனைக்கு முதன்முதலாகத் தடை விதித்தது அமெரிக்கா. எனினும், கொக்கைன் பயன்படுத்துவோரை அது ஒன்றும் செய்ய வில்லை. 1970-ம் ஆண்டில்தான் விற்பனையோடு பயன்பாட்டுக்கும் சேர்த்துத் தடை விதிக்கப்பட்ட‌து. இந்தச் சட்டம்தான் பாப்லோவைத் துரத்தி வந்த `டி.இ.ஏ' (ட்ரக் என்ஃபோர்ஸ்மென்ட் அட்மினிஸ் டிரேஷன்) எனும் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு உருவாகவும் காரணமாக அமைந்தது.

அமெரிக்காவின் அதிபராக ரிச்சர்ட் நிக்ஸன் இருந்த காலம் அது. அவருடைய காலத்தில்தான் ‘போதைக்கு எதிரான யுத்தம்' (வார் ஆன் ட்ரக்ஸ்) எனும் சொற்றொடர் அறிமுகமானது. என்றாலும் அவருக்கு முன்பே அதிபராக இருந்த ஃபிராங்க்ளின் டி.ரூஸ்வெல்ட், போதைப் பொருட்களைத் தடை செய்ய முயற்சிகள் மேற்கொண்டார்.

ரொனால்ட் ரீகன் - நான்ஸி ரீகன்
ரொனால்ட் ரீகன் - நான்ஸி ரீகன்

நிக்ஸனுக்குப் பிறகு 1981-ம் ஆண்டு அதிபராகப் பொறுப்பேற்றார் ரொனால்ட் ரீகன். அடுத்த ஆண்டே போதைப் பொருள் கடத்தலுக்கு எதிரான நிக்ஸனின் திட்டங்கள் சிலவற்றை விரிவுபடுத்தியதுடன், புதிதாகச் சில திட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். அதில் ஒன்றுதான் ‘எக்ஸ்ட்ரடிஷன்'. அதாவது, தங்கள் நாட்டைச் சேர்ந்த குற்றவாளியை வேறொரு நாட்டிடம் ஒப்படைப்பது. பாப்லோ தன் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்துக்காவது பயந்தான் என்றால் அது இதற்கு மட்டும்தான். அமெரிக்காவின் இந்த‌ச் செயல் இதர நாடுகளுக்கு ஒரு‘இன்சல்ட்' என்று அவன் கருதினான்.

போதைப் பொருட்களை ‘மக்களின் முதல் எதிரி' என்று நிக்ஸன் அழைத்தார் என்றால், அவற்றைக் கடத்துவதை ‘அமெரிக்க நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்' என்றார் ரீகன். அப்படி என்றால் ரீகனின் பார்வையில் பாப்லோ போன்றவர்கள் எல்லாம் தீவிரவாதிகள். அந்த நாட்களில் அமெரிக்காவின் பெரும்பாலான இளைஞர்கள் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தார்கள். அவர்களை மீட்டெடுக்க ‘ஜஸ்ட் ஸே நோ' எனும் பிரச்சாரத்தை ரீகனின் மனைவி நான்ஸி ரீகன் மேற்கொண்டார். அது போதைப் பொருட்களுக்கு எதிரான யுத்தத்தை மேலும் தீவிரமாக்கியது. இந்தத் தருணத்தில்தான் பாப்லோ அந்த முடிவை எடுத்தான்.

***

Chemist_Niemann_Albert
Chemist_Niemann_Albert

“வேண்டாம் பாப்லோ... நீ செய்யப் போற பெரிய தப்பு இதுதான்” எச்சரித்தார் பாப்லோ வின் அண்ணன் ராப‌ர்ட்டோ.

“நமக்கு என்ன குறை ராபர்ட்டோ..? பசிக்குச் சாப்பாடு இல்லையா... படுக்க இடமில்லையா..? எண்ண முடியாத அளவுக்குப் பணம் இருக்கு. நம்ம குடும்பங்கள் நல்லா இருக்கு. போதும். இனி, சட்டப்பூர்வமான வழியில நான் மக்களுக்கு உதவப் போறேன். இந்தத் தொழிலில்ல இருந்து விலகி இருக்கப் போறேன்”.

“அப்புறம் உன் இஷ்டம்...”

இப்படிப் பலரும் மனம் உடைந்து போகும் அளவுக்கு பாப்லோ அப்படி என்னதான் சொன்னான்..?

“கொலம்பியாவின் அடுத்த அதிபர் நான்தான்..!”

(திகில் நீளும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in