நானொரு மேடைக் காதலன் - 28

நானொரு மேடைக் காதலன் - 28

நாகர்கோவில் தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரியில் புகுமுக வகுப்பு படிக்கும்போதே அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் படிக்கப் போகும் ஆசை என்னை துரத்திக்கொண்டே இருந்தது. தென்காசி திருவள்ளுவர் கழகத்தில் ‘மலரினும் மெல்லியது காமம்’ என்ற தலைப்பில் இரண்டரைமணி நேரம் கடலூர் தந்த பெரும்புலவர் நடேச முதலியார் அவர்களின் தமிழ்ப் பேச்சைக் கேட்டதுதான் காரணம். அவர் சொன்ன எல்லாச் செய்திகளையும் உள் வாங்கிக் கொள்கிற அறிவு எனக்கு இல்லாமல் இருந்தாலும் அவரது தமிழும் நடையும் என்னைத் திகைக்க வைத்தது; திக்குமுக்காட வைத்தது. என்னைத் திரும்பத் திரும்ப யோசிக்க வைத்தது. அவரது முறுவலிக்கிற முகம், முள் மீசை, முரட்டு கதர்ச் சட்டை, நெற்றி நிறைந்த நீறு, கரிய கொஞ்சம் கனத்த உருவம் எல்லாம் என் நினைவை விட்டு நீங்க மறுக்கிறது. முப்பாற் கடலில் மூழ்கி காமத்துப்பாலை அவர் கடைந்த விதமும் அப்போது அது கேட்டு நான் அடைந்த பரவசத்தையும் வெறும் வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை.

ஒன்றே முக்கால் அடி குறளில் முக்கால் அடியை எடுத்துக்கொண்டு அன்று நடேச முதலியார் எடுத்த வாமன அவதாரத்தை இப்போது நினைத்தாலும் நெஞ்சினிக்கிறது. பெரும் புலவர் நடேச முதலியார் அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியர் என்றறிந்தபோது நந்தனைப் போல் சிதம்பர ஆசை என்னுள் வளர்ந்தது. யாழ் நூல் தந்த பேரறிஞர் விபுலானந்த அடிகள், வழக்கறிஞர் பட்டம் பெற்று தமிழுக்காகத் தன்னை தந்த கா. சு. பிள்ளை, நாடும் ஏடும் போற்றிய நாவலர் சோம சுந்தர பாரதியார், இலக்கணக் கடல் வெள்ளை வாரணனார், முன்பனிக் காலம் தந்த பேராசிரியர் அ. சிதம்பரநாதன், பேராசிரியர் லெ. ப.கரு. இராமநாதன் செட்டியார், பேராசிரியர் கோ. சுப்பிரமணியபிள்ளை, பின்மொழிப்புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தரனார், தமிழின் தகுதியைத் தரணிக்கு எடுத்துரைத்த தன்னேரில்லாத் தமிழரிஞர் மொழிஞாயிறு தேவநேயப் பாவணர், மகோபாத்யாய பண்டித மணி கதிரேசச் செட்டியார் என அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த்துறைக்குத் தலைமை தாங்கியவர்களின் அருமை பெருமைகளைச் சொன்னால் அது தனி நூலாக விரியும். நித்தமும் தன் மகன் தனது கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும் என்று கருதிய கண்டிப்பு மிகுந்த என் தந்தையால் அண்ணாமலை ஆசை நிறைவேறாமல் போயிற்று.

வைகோவின் இயக்கத்தில் ஒரு சாலை மாணாக்கனைப் போல பிரச்சார அணிக்குத் தலைமை தாங்கிய நானும் மாணவர் அணிக்குத் தலைமை தாங்கிய பேராசிரியர் சபாபதி மோகனும் பழகினோம். பேராசிரியர் சபாபதி மோகன் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் வேதியல் துறை தலைவர். அவர் மூலமாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை சார்பில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் உரையாற்றுகின்ற வாய்ப்பைப் பெற்றேன். என்ன தலைப்பில் பேசுவது என்று கேட்டபோது எனது முடிவுக்கே விட்டுவிட்டார்கள். ‘ களத்தில் வீசிய கவிதைப்புயல்’ என்ற தலைப்பை அணி செய்ய அண்ணாமலைப் பல்கலைக் கழகம் வருகிறேன் என்று தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் தியாகராஜனுக்கு மடல் எழுதி அஞ்சல் செய்துவிட்டு ஆயத்தமானேன்.

முதல் மதிப்பெண் பெற கனவு காணுகிற ஒரு மாணவனைப் போல் தேர்வுக்குப் படிப்பதைப் போல் படித்தேன். அண்ணாமலை பல்கலைக் கழக மேடைக்குச் செல்ல ஆயத்தம் ஆனதைப் போல எந்த மேடைக்கும் ஆயத்தம் ஆனதில்லை. எனது உயரத்துக்கு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உரையாற்ற வாய்ப்புக் கிடைத்ததே பெரும் புண்ணியம். புண்ணியத்தைக் கண்ணியப்படுத்த வேண்டும் என்ற கவலை மிகக் கொண்டவனாக செய்திகளைச் சேகரித்தேன்.

“ நீல வானத்தில் கண் சிமிட்டும் நட்சத்திரங்களை, அந்த நட்சத்திரக் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கும் தங்க நிலாவை, ஆரவாரம் செய்யும் ஆழக் கடலை, அசைந்தாடும் பூங்கொடியை, புள்ளிக் கலாபம் விரித்து நாட்டியமாடும் தோகை மயிலை, குக்கூ குக்கூ எனக் கூவும் குயிலின் கூட்டத்தை, தண்ணீர் நிரம்பிய தடாகத்தை, தடாகத்தில் மலரும் தாமரையை, விளைந்ததால் விளைந்த செந்நெல்லை, செந்நெல் வரப்பில் பூத்துக் குலுங்கும் குவளையை, தாவும் மந்தியை, ஓடும் மானை, பச்சை மலையை, பச்சை மலையின் உச்சியில் இருந்து ஒழுகி வரும் வெள்ளி அருவியை எனக் கண்ணில் தட்டுப்படும் அழகை ஆராதிப்பதோடு ஒரு கவிஞனின் கடமை முடிந்துவிடாது.

அபலையின் கூக்குரலை, ஆதரவற்றவர்களின் கதறலை, அழுத்தப்பட்டவனின் பெருமூச்சை, அடி வாங்கியவனின் வலியை, பெற்ற தாயை, பிறந்த பொன்னாட்டின் மானத்தை, மானம் காக்க நடந்த சண்டையை, சண்டையில் பெற்ற விழுப்புண்ணை, சண்டையின் முடிவில் சவக்குழிக்கு அனுப்பப்பட்ட ஆதிக்கத்தை, அந்த ஆதிக்கம் ஆடிய தப்பாட்டங்களை, தப்பாட்டங்களுக்கு தாளம் போட்டு வாழ்ந்த வஞ்சகர்களை எல்லாம் படம் பிடிக்கவும் ஒரு கவிஞன் கடமைப்பட்டிருக்கிறான். அந்தக் கடமையைச் செய்யத் தவறினால் காலம் அவனை நிராகரித்துவிடும்; வரலாறு அவனை விழுங்கிவிடும்.

புறப்பொருள் வெண்பா மாலையும், புறநானூறும், பரணி இலக்கியங்களும் மண் காத்த மறவர் பெருமையைப் பாடி வைத்ததைப் படித்தால் தமிழனின் சூம்பிப் போகாத தோள்களையும் கூம்பிப் போகாத மனங்களையும் தரிசிக்கலாம். மேட்டுக்குடியின் அந்தப்புரத்திலும் கொலு மண்டபங்களிலும் செல்லப் பிள்ளையாகத் துள்ளி விளையாடிய கவிதைத் தென்றலை தெருக்களுக்கு சூறாவளியாக மாற்றிக் காட்டினான் மறுமலர்ச்சிக் கவிஞன் ஷெல்லி. 1792-ல்

பிறந்த ஷெல்லி மாணவனாக இருந்த காலத்தில் டிஹோல்பேக் தீட்டிய பொருள் முதல் கொள்கையைப் படித்து துண்டறிக்கை ஒன்றை வெளியிட்டார். ‘நாத்திகத்தின் தேவை’ என்பது அதன் தலைப்பு. அதற்காக ஷெல்லி ஈட்டன் கல்லூரியில் இருந்தும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். தாமஸ் பெயின் எழுதிய நூலை விற்ற பாவத்துக்காக தண்டிக்கப்பட்ட ஈட்டனுக்குக் குரல் கொடுத்ததே ஷெல்லியின் முதல் படைப்பாயிற்று.

அரசியல் கொடுங்கோலையும் பழமைக்குப் பாதுகாவலாக இருந்த கிறிஸ்தவக் கோட்பாடுகளையும் அந்தக் கவிதையில் தாக்கினான். ‘விதைத்தீர்கள்; அறுக்கவில்லை. நெய்தீர்கள்; உடுத்தவில்லை. உழைத்தீர்கள்; அனுபவிக்கவில்லை. இனி வாளையும் கேடயத்தையும் உங்களுக்காக உருவாக்குங்கள். வீறுகொண்ட உரிமைக்குரல் வெளியெங்கும் சிதறட்டும். அடக்குமுறை சிம்மாசனங்கள் அடிமைகளால் சிதையட்டும்’ களத்திலே இப்படி கவிதையை வாளாக வீசிய ஷெல்லி இத்தாலியில் இருந்து நிரந்தரமாக நாடு கடத்தப்பட்டான்.

அன்கில்மரின் என்ற பெண், கவிதை எழுதவும் படிக்கவும் துணிந்தாள் என்ற காரணத்துக்காக ஊசி நூல் கொண்டு அவளது வாயைத் தைத்தார்கள் ஆணாதிக்கம் கொண்ட ரஷ்யர்கள். அந்த 19-ம் நூற்றாண்டுச் சூழலில்தான் அன்ன அஃமதேவா கவிதையை ஆயுதமாக ஏந்துகிறார். அடுக்கடுக்கான துன்பங்களால் துயரப்பட்டுக் கிடக்கிறான் மகன் லிவ்குமிலியோவ். அன்ன-வின் கணவர் எதிர்ப் புரட்சியில் ஈடுபட்டார் என்பதற்காக மரண தண்டனை விதித்துக் கொல்லப்பட்டார். மகன் கைது செய்யப்பட்டு கடின உழைப்பு முகாம்களில் அடைக்கப்படுகிறான். மகன் கதி என்னாயிற்று என்று கண் கலங்கியவராய் சிறை வாசலில் நிற்கிறார் அன்ன. கவிதை பிறக்கிறது. ‘அமைதியான டான் நதி ஓடுகிறது. மஞ்சள் நிலா ஒளி சிந்துகிறது. நிலா வெளிச்சம் வீட்டுக்குள் வருகிறது. கணவன் புதைக்கப்பட்டான். மகனோ இப்போது முந்நூறாவது வரிசையில் கையில் பொட்டலத்துடன் சிறை அருகில். இப்போது உன் கண்ணீர் ஒரு தாயின் கண்ணீர். காலடிப் பனியின் மீது அவை எரிகின்றன. சிறை வெளி மரங்கள் காவலில் நிற்கின்றன. எல்லாம் அமைதியாக இருக்கின்றன. ஆனால், எத்தனை மக்கள் குற்றம் இழைக்காமல் உயிரை விடுகின்றனர்’ நிரபராதிகளுக்காக கனிந்த கவிதையில் கண்ணீர் வடிகிறது.

வெறும் வாய்ச்சொல் வீரனாக இல்லாமல் தன் மக்களுக்காக களத்தில் பலியானான் ஹங்கேரியக் கவிஞன் சாந்தோர் பெட்டோபி. அவரைப் போன்ற இலட்சியக் கவிஞர்கள் ஒரு கையில் எழுதுகோலையும் மறு கையில் ஆயுதத்தையும் ஏந்தி நின்றனர். அவர்களின் கவிதைகளும் தியாகங்களும் சாதனைகளை நிகழ்த்திக் காட்டிய சங்கு சக்கரங்களாகத் திகழ்ந்தன. உலகச் சரித்திரத்தில் இப்படிப்பட்ட கவிஞர்களை அதிகமாகப் பெற்ற நாடு என்ற புகழ் பல்கேரியாவைப் போய்ச் சேர்கிறது. மரபுதனை உடைத்தெறிந்த இந்த மக்கள் கவிஞர்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டினர். மகத்தான சக்தி அவர்களுக்குள் மறைந்து கிடப்பதை ஊமைகளுக்கு உணர்த்தினார்கள்.

பென்னம் பெரிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சின்னஞ்சிறிய வியட்நாமின் மக்கள் சத்திய ஆவேசத்தோடு எதிர்த்தனர். அந்த மக்களைத் தன் கவிதைச் சிந்துகளால் தூக்கி நிறுத்தி ஊக்கத்தையும் நம்பிக்கையும் ஊட்டினான் ஹோசிமின். ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிற போரின் முன்னால் நின்றதோடு கரங்களையே ஆயுதமாக்கி பகைவரை வீழ்த்துகிற வல்லமையையும் நெஞ்சுரத்தையும் தம் மக்களுக்குக் கவிதைகள் மூலம் வழங்கினார் . ‘மூங்கில் கழிகளால் எதிரியின் விமானங்களை எதிர்ப்போம். வெட்டுக் கிளிகள் நாளை யானையை வீழ்த்தும்’ என்று கவிதையின் மூலம் சபதம் செய்த ஹோசிமின் சாதித்தும் காட்டினார்.

பல்கேரியாவில் பள்ளி ஆசிரியரின் மகனாகப் பிறந்த கியோமிலே இலக்கிய ஆர்வத்தில் சின்னஞ்சிறு வயதில் கையெழுத்துப் பத்திரிகை ஒன்றை நடத்தினார். முதல் உலகப் போரில் படை வீரனாகப் பணியாற்றியபோது ஒரு கண்ணை இழந்தார். செயற்கைப் பளிங்குக் கண்ணைப் பொருத்திக்கொண்டார். 1923- ல் பிரதமரைக் கொன்று எதிரிகள் பல்கேரியாவைக் கைப்பற்றிய பிறகு மக்களைத் திரட்டிப் போராடினார் கியோமிலேவ். தீச்சுடர் என்ற ஏட்டில் பசுத்தோல் போர்த்திய ஃபாஸிஸ்டுகளைப் பாடல் கணைகளால் தாக்கியதற்காக கியோமிலேவ் கொல்லப்பட்டார். ‘தேவர்களை வெல்ல மேலுலகில் படையெடுப்போம். நம் இதயத்தில் விதைக்கப்பட்ட துப்பாக்கி குண்டுகளுடன் சொர்க்கத்தைச் சுற்றி வளைப்போம். அரியணையில் இருப்போரை அடியோடு வீழ்த்துவோம். வானவரையும் வானத்தையும் துயரம் ததும்பும் இந்தப் பூமிக்குக் கொண்டு வருவோம். அது நடந்தே தீரும். நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.’ இப்படிப் பாடிய கவிஞனின் மரணம் 30 ஆண்டுகள் மறைத்தே வைக்கப்பட்டன. 2-ம் உலகப்போரின் முடிவில் ஃபாஸிஸ்டுகளின் மீது நடந்த பகிரங்க விசாரணையின் போதுதான், கழுத்துக் கயிற்றால் கட்டப்பட்டு புதைக்கப்பட்ட இரகசியம் பூமிக்குத் தெரிந்தது. ஒரு மண்டையோட்டில் பளிங்குக் கண் இருந்ததைக் கொண்டுதான் கியோமிலேவை அடையாளம் காண முடிந்தது.

எட்டாத உயரத்தில் இருந்த இலக்கிய வானத்தை வளைத்து அதனை எளியவர்களின் கையில் தவழும்படிச் செய்தான் ரஷ்யாவில் மாக்ஸிம் கார்க்கி. சீனாவில் லூசன். ‘எனது கவிதை பட்டினிக்கு ரொட்டியாகத் திகழட்டும். போராடும் பஞ்சைகளின் கையில் செங்கொடியை அது சேர்க்கட்டும். பலம் வாய்ந்த விலங்குகளையும் பழமைச் சிறைகளையும் நொறுக்கட்டும்’ என்றான் ஜார்ஜி ஜாகரோவ். ஆதரவற்றவர்களின் பிணங்களையும் அபலைகளின் எலும்புகளையும் அளவுகோலாக வைத்து இந்தச் சமுதாயத்தின் அழுகிப் போன யோக்கியதையைத் தோலுரித்துக் காட்டியவன் சிலி தேசத்து பாப்லோ நெரூடா. அடக்குமுறை காரணமாக 1948- ல் நாட்டை விட்டுப்போன பின்னால் ஏகாதிபத்திய கைக்கூலிகளால் படுகொலை செய்யப்பட்டான் பாப்லோ நெரூடா.

ரத்த தாகம் கொண்ட சர்வாதிகாரத்தின் காலடியில் மிதிபட்ட தனது தாய்நாட்டின் இழந்த கோலத்தை ‘தென்னை மரங்களுக்கு இடையில் உடைந்த எலும்புகளால் நிரப்பப்பட்ட புதைகுழிகள். தொண்டைக்குழியில் இருந்து புறப்படும் மொழியில்லாத மவுனமாக மரண ஓலங்கள். அழுபவர்களைக் காண முடியவில்லை. அழுகுரலைக் கேட்க முடிவதில்லை’ இப்படிச் சித்தரித்த நெரூடா இன்றும் நினைக்கப்படுகிறான். வட அயர்லாந்தை இங்கிலாந்தின் பிடியில் இருந்து பிரித்தெடுக்கப் போராடி, சிறைச்சாலைக்குள் உண்ணா நோன்பிருந்து உயிர் துறந்த பொபி சாண்ட்ஸ். தனது அஸ்திவாரத்தைப் பலப்படுத்துவதற்காக அதிகார தேவதைகள் இடும் ஆணைகளையும் அவர்களது ஐந்தாம் படைகள் வகுக்கின்ற வியூகங்களையும் அம்பலப்படுத்தி 22 ஆண்டு காலம் இருண்ட சிறையில் இருந்த மார்க்கோஸ் அநா. ஏமாற்றங்களின் சுருதி பேதத்தை தனது கவிதை யாழில் எதிரொலித்த ஜெர்மனியின் பெரும் கவிஞன் ஹென்ரிச் ஹெய்னே. வாஷிங்டனிலிருந்து ஆட்டிவைக்கப்பட்ட பொம்மை சர்க்காரால் வியட்நாமில் சதிக்குற்றம் சாட்டப்பட்டு சுடப்பட்ட நகாயன் வாண்ட்ராயன் மரணத்தைப் பாடிய ஹரிஸ்டோ பொடோவ். தாஜிக்ஸ்தானே நீ என் உயிர்; நீ எனது முகமென்று தனது தாய்மொழியை உயிராக நினைத்த தாஜிக்ஸ்தானின் ரசூல் கம்ஸாதேவ். பாலஸ்தீனத்தின் மகமது டார்விஷ், அமெரிக்காவின் வால்ட் விட்மன், செனகல் நாட்டின் சென்கோர், லெபனானின் கலீல் ஜிப்ரான், இவர்கள் கவிதை எல்லாம் களத்தில் வீசிய புயல்கள். அதையெல்லாம் வரலாற்றுச் சிறப்புமிக்க நான் அண்ணாந்து பார்த்து வியந்த அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் மைய மண்டபத்தில் வீசியிருக்கிறேன். பேசியிருக்கிறேன்’’ இப்படிப் பேசிவிட்டு குளிரூட்டப்பட்ட அரங்கில் இருந்த மாணவச் செல்வங்களின் அன்புப் பிடியில் இருந்து நான் வெளியேற வெகு நேரமாயிற்று.

(இன்னும் பேசுவேன்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in