நீரோடிய காலம் 19: சமணர்களின் அட்சய திருதியை!

நீரோடிய காலம் 19: சமணர்களின் அட்சய திருதியை!

உலகின் தொன்மையான மதங்களுள் ஒன்று சமணம். தமிழ்நாட்டிலும் ஒருங்கிணைந்த தஞ்சையிலும்கூட சமணத்துக்குத் தொன்மையான வரலாறுஇருக்கிறது. பவுத்தம் அருகிவிட்டாலும் சமணம் இன்னும் தஞ்சையில் உயிரோடு இருக்கிறது. சமணர்களில் கணிசமானவர்கள் தஞ்சையில் இருக்கிறார்கள். அவர்களுக்கான ஜினாலயங்களும் (சமணக் கோயில்கள்) தஞ்சையில் நிறைய இருக்கின்றன.

‘நீரோடிய காலம்’ தொடரில் இந்து, பவுத்தம் போன்றவற்றின் தடங்களைப் பார்த்திருக்கிறோம். இப்போது தஞ்சையில் பதிந்த சமணத்தின் தடம் பற்றிய தேடல்.

தஞ்சை கரந்தட்டான்குடியில் இருக்கிறது ஸ்ரீஆதீஸ்வர ஸ்வாமி ஜினாலயம். மொத்தம் 24 தீர்த்தங்கரர்களில் மகாவீரர் இறுதி தீர்த்தங்கரர் என்றால் ஆதீஸ்வரர் எனும் ரிஷப தேவர் முதலாவது தீர்த்தங்கரர். அவருக்கான ஜினாலயம்தான் இது. இதன் கருவறை 600 ஆண்டுகளுக்கு முற்பட்டது. சுற்றியுள்ளவையெல்லாம் பிற்பாடு எடுத்துக்கட்டியது.

நாம் அங்கே போன சமயம் ஆடிமாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை. ஜ்வாலாமாலினி அம்மனுக்கு உற்சவ நாள் அது. எட்டாவது தீர்த்தங்கரரான சந்திரப் பிரபரின் காலத்தில் சேவை செய்த யட்சினிதான் ஜ்வாலாமாலினி அம்மன். இந்த அம்மனைக் குலதெய்வம் போன்று வழிபடும் நிறைய சமணர்கள் உள்ளனர். பணிநிமித்தம் வெளியூர் போனவர்கள்கூட இந்த நாளில் ஆண்டுதோறும் இங்குவந்து கலந்துகொள்கிறார்கள்.

இந்த விழாவன்று காலையில் அம்மனுக்கும் மூலவருக்கும் அபிஷேகம், ஆராதனை நடைபெறும். மூலவருக்கு மட்டும் விசேஷமாக பஞ்சாமிர்த அபிஷேகம். பருப்பு வகைகள், பழ வகைகள், தேங்காய், பால், சந்தனம் எல்லாவற்றையும் கலக்காமல் தனித்தனியாகவே இந்தப் பஞ்சாமிர்த அபிஷேகம் நடைபெறும். மற்ற எல்லா சன்னிதிகளுக்கும் பாலாபிஷேகம்தான். இரவில்தான் உற்சவம்.

நான் சென்றது மாலை நேரம். கருவறைக்கு முன்னால் நீண்ட இரு வரிசைகளில் எதிரெதிராய்ப் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னால் குத்துவிளக்குகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. சமண வேத மந்திரங்கள் போன்ற ஒன்றை அந்தப் பெண்கள் ஒரே குரலில், அழகான தாளத்துடன் ஒலித்துக்கொண்டிருந்தார்கள்.

அந்தக் கோயிலின் அறங்காவலர் அப்பாண்டைராஜ் என்னை வரவேற்றார். அரசு கூட்டுறவுத் தணிக்கை அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணிநிமித்தம் 25 ஆண்டுகள் காஞ்சிபுரத்தில் இருந்துவிட்டு, ஓய்வுபெற்றதும் பூர்விக மண்ணான தஞ்சைக்குத் திரும்பிவிட்டார்.

“சமணர்கள் என்றாலே வட இந்தியாவிலிருந்து வந்த சேட்டுகள் மட்டும்தான் என்றுதானே பெரும்பாலானோர் நினைக்கிறார்கள்?” என்று ஆரம்பித்தேன்.

“அப்படித்தான் பலரும் நினைக்கிறார்

கள். ஆனால், நீங்கள் எந்த அளவுக்குத் தமிழரோ அந்த அளவுக்கு நாங்களும் தமிழர்தான். 2,300 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்நாட்டில் சமணம் இருக்கிறது. கிமு 2-ம் நூற்றாண்டில் கிடைத்த கல்வெட்டை வைத்து கல்வெட்டு எழுத்தியல் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் சமணத்தின் தொன்மையை உறுதிப்படுத்துகிறார்.”

“அது மட்டுமா, சிலப்பதிகாரம், வளையாபதி, சீவக சிந்தாமணி போன்ற காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் என்று இலக்கியங்களிலும் சமணத் தடங்கள் இருக்கின்றன அல்லவா!” என்று கேட்டேன்.

“இவ்வளவு ஏன், திருவள்ளுவரையே சமண சமயத்தவர் என்றுதான் பெரும்பாலானோரும் கருதுகிறார்கள்” என்றார் அப்பாண்டைராஜ்.

“அது சரி உங்கள் பேரே வித்தியாசமாக இருக்கிறதே? பெயர்க் காரணம் என்ன?” என்று கேட்டேன்.

“அப்பாண்டை ராஜன் என்ற பெயரில் பல சமணர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். 23-வது தீர்த்தங்கரரான பார்சுவநாதருக்கு வழங்கப்படும் பெயர்களில் ஒன்று அது. மேல்சித்தாமூரில் உள்ள சமண மடமான ஜினகாஞ்சி மடத்தில் இருக்கும் பார்சுவநாதருக்கு சிம்மபுரிநாதர் என்று பெயர். அதுபோல உளுந்தூர்பேட்டைக்கு அருகில் உள்ள திருநறுங்குன்றத்தில் ஒரு ஜினாலயம் உள்ளது. குந்தவை கால ஜினாலயம் அது. அங்கு பார்சுவநாதரின் பிம்பம் வைக்கப்பட்டிருக்கிறது. அங்கே அவருக்கு அப்பாண்டைய நாதர் என்று பெயர். அவரைக் குலதெய்வமாக வழிபடுபவர்கள் நிறைய பேர் உண்டு. அந்தக் குடும்பங்களில் கண்டிப்பாக ஒருவருக்கு அப்பாண்டை நாதர் என்ற பெயர் இருக்கும். எங்கள் குடும்பம் அந்தப் பரம்பரையில் வந்தது. அதனால்தான் எனக்கு இந்தப் பெயர்” என்றார்.

“இன்றைக்குத் தமிழ்நாட்டில் எவ்வளவு சமணர்கள் இருக்கிறார்கள் என்ற கணக்கு இருக்கிறதா?” என்று கேட்டேன்.

“2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் சமணர்களின் எண்ணிக்கை 80 ஆயிரம். அதில் வட இந்தியர்களும் அடக்கம். தமிழ் பேசும் சமணர்களும் தமிழகம் முழுக்க ஏராளமாகச் சிதறிக்கிடக்கிறார்கள். நாங்கள் மிகவும் சிரமப்பட்டு அவர்களை மட்டும் கணக்கெடுத்தோம். எங்கள் கணக்கெடுப்பின்படி கிட்டத்தட்ட நாற்பதாயிரம் தமிழ்ச் சமணர்கள் இருக்கலாம் என்று தெரியவந்தது. மீதியுள்ளவர்கள்தான் வட இந்தியர்கள்” என்றார் அப்பாண்டைராஜ்.

“ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் சமணர்கள் அதிகம் உள்ள பகுதிகள் எவையெவை?” என்று கேட்டேன்.

“தஞ்சாவூர், மன்னார்குடி, திருவாரூர், கும்பகோணம், தீபங்குடி போன்ற ஊர்களில் 140 குடும்பங்கள் இருக்கின்றன. இதற்கு முன்னாடி நிறைய பேர் வாழ்ந்ததற்கு நிறைய சான்றுகள் கிடைத்திருக்கின்றன. ஜம்புலிங்கம், மணி.மாறன், தில்லை கோவிந்தராஜன் போன்றோர் கள ஆய்வு செய்தபோது ஏராளமான சமணச் சிலைகளையும் இன்னபிற தடங்களையும் கண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 34 இடங்களில் சமணச் சிற்பங்கள் கிடைத்திருப்பதாக ‘தஞ்சையில் சமணம்’ என்ற நூலில் அவர்கள் பட்டியலிடுகிறார்கள். அவர்கள் முதலில் பார்த்த சிற்பங்களில் சில பிறகு மறைந்துபோனதாகவும் கூறுகிறார்கள்” என்றார்.

“பெரும்பண்ணையூர் அருகாமையில் தீபங்குடி மிகவும் முக்கியமான சமண ஊர். அந்த ஊரில் பழமையான சமண ஆலயம் உண்டு. அதற்கு அருகில் உள்ள ஊரிலும் பிரம்ம தேவருக்கு ஒரு சிறிய ஜினாலயம் இருக்கிறது. பிரம்ம தேவர் ஒரு இயக்கன். இயக்கனின் பெண்பால் இயக்கி. இவர்களெல்லோரும் பரிவார தேவதைகள் போல. தஞ்சை மாவட்டத்தில் சமண வரலாற்றைப் பொறுத்தவரை தீபங்குடிதான் பழமையானது. கலிங்கத்துப்பரணி பாடிய செயங்கொண்டார் அங்கு வாழ்ந்திருக்கிறார். ‘உமது ஊர் எந்த ஊர்?’ என்று செயங்கொண்டானை குலோத்துக்கச் சோழன் கேட்கிறார். ‘கோபங் கடியும் தீபங்குடி’ என்கிறார் செயங்கொண்டார். ‘தீபங்குடி பத்து’ என்றும் பாடல்கள் பாடியிருக்கிறார். அதில் சமணர்களின் வாழ்க்கை முறை அழகாகப் பதிவாகியிருக்கிறது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஜினாலயம் அது” என்றார்.

“இந்துக்களுக்கு தீபாவளி, தமிழர்களுக்குப் பொங்கல் போல் உங்களுக்கு…” என்று கேட்டு முடிப்பதற்கு முன்பே சிரித்துக்கொண்டே குறுக்கிடுகிறார் அப்பாண்டைராஜ்.

“இது கொஞ்சம் சர்ச்சையான விஷயம். தப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். தீபாவளியே சமணப் பண்டிகை என்று சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். ‘சமணமும் தமிழும்’ நூலில் மயிலை சீனி. வேங்கடசாமி, சமணர்கள் கொண்டாடிய தீபாவளிதான் தற்போது இந்துக்களின் பண்டிகையாக மாறியிருக்கிறது என்று கூறியிருப்பார். அதற்குக் காரணம் ஒன்றையும் கூறுகிறார். 24-வது தீர்த்தங்

கரரான மகாவீரர் முக்தி அடைந்த தினம் தீபாவளி என்கிறார் அவர். அறிவு ஒளியான மகாவீரர் மறைந்துவிட்டார்; அந்த ஒளி மறைந்துவிட்டதால் இந்த உலகம் இருண்டுவிட்டது; இதனால்தான் விளக்கேற்றி ஒளியூட்டுகிறோம். ‘தீப ஆவளி’ என்றால் தீப விளக்குகளின் வரிசை என்று அர்த்தம். இதுவே ‘தீபாவளி’யாக மருவியிருக்கிறது என்கிறார் மயிலை சீனி.வேங்கடசாமி” என்றார் அப்பாண்டைராஜ்.

“இப்போதும் தீபாவளி கொண்டாடுகிறீர்களா?” என்று கேட்டேன்.

“சிற்சில மாற்றங்களுடன் கொண்டாடுகிறோம். தீபங்களை வரிசையாக வைத்துக் கொண்டாடுகிறோம். காலத்தின் போக்கில் வெடியும் வெடிக்கிறோம். இது தவிர, மகாவீரர் ஜெயந்தியும் முக்கியமான பண்டிகை. அதேபோல் வீர சாசன ஜெயந்தியையும் கொண்டாடுகிறோம். மகாவீரர் கேவல ஞானம் பெற்றதும் உரை நிகழ்த்த ஆரம்பிக்கும் தினத்தின் நினைவாகக் கொண்டாடும் பண்டிகை இது. அட்சய திருதியையும் சமண வேர்களைக் கொண்ட பண்டிகை என்பது உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார்.

“அப்படியா?” என்று மறுகேள்வி கேட்டேன்.

“ஆமாம்! சமணர்களைப் பொறுத்தவரை அது தானம் வழங்கும் நாள். பற்றுக்களைத் துறக்க வேண்டிய அந்த நாளை பொருள் மீது பற்று கொள்ளும் நாளாக மாற்றியதுதான் துயரம். அட்சய திருதியையை வியாபார நோக்கில் ஆக்கி, அன்று ஒரு கிராம் தங்கமாவது வாங்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திவிட்டார்கள்” என்றார் வருத்தத்துடன்.

இந்திய அளவிலும் தமிழக அளவிலும் வரலாற்று ரீதியாகவும் கலை கலாச்சாரரீதியாகவும் சமணம் ஆற்றிய பணிகள் ஏராளம். அதன் வாழும் சாட்சிகளான தஞ்சை சமணர்களை அவர்களின் கொண்டாட்டமான நாளொன்றில் சந்தித்தது குதூகலத்தைக் கொடுத்தது. தஞ்சையில் சமணத்துக்கு காவிரி இன்னும் காலகாலமாக நீரூற்றுவாள் என்ற நம்பிக்கையுடன் அப்பாண்டைராஜுவிடம் விடைபெற்றுப் புறப்பட்டேன்.

(சுற்றுவோம்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in