அக நிலக் கனவு வெளிப்பாடு

அக நிலக் கனவு வெளிப்பாடு

கணேசகுமாரன்

இசைக்காத இசைக்குறிப்புகள் என்ற தனது முதல் கவிதைத் தொகுப்புக்குப் பின் கவிஞராக தன்னை வலுவாக அடையாளப்படுத்திக்கொண்ட வேல்கண்ணனின் இரண்டாவது கவிதைத் தொகுப்பாக வந்திருக்கிறது ‘பாம்புகள் மேயும் கனவு நிலம்’. எளிமையே வெல்லும் என்பது போல் மிகக் கையடக்கமான கவிதைத் தொகுப்பு. பொதுவாக எல்லாக் கவிதைகளிலும் கவிஞரே தென்படுகிறார். அவரின் பார்வையின் வழி உலகைக் காணும் போக்கும் அவருக்கான அனுபவங்களும் கவிதைகளாய் விரிகின்றன. காணக் கிடைக்காத மலர் என்ற தொகுப்பின் முதல் கவிதையே இரண்டு கவிதையாய் பிரிந்து கனவுத்தன்மையைப் பூர்த்தி செய்து தலைப்புக்கு நியாயம் சேர்க்கிறது.

நிகழ் கவிதையில் காணப்படும் இசைத்தன்மை வேல்கண்ணனின் முந்தைய தொகுப்பிலிருந்து  மாறுபட்டிருக்கும் இத்தொகுப்பினை அடையாளம் காட்டுகிறது. அகச்சிக்கல்களைப் புனையும் பெரும்பாலான கவிதைகள் அதீத உழைப்பைக் கொண்டிருக்கின்றன. ‘கடலை சமுத்திரம் என்றே சொல்வார் அப்பா...’ எனத் தொடங்கும் கவிதை முடியும் தறுவாயில் அதீத மன அதிர்வை உண்டுபண்ணிச் செல்கிறது. ‘நேரிசை இயம்பிய நிலவின் மகரந்தம்...’ என்ற வெகு அழகான தலைப்பு கொண்ட கவிதையும் காதல் ததும்பப் பேசுகிறது. நிலவுகள் என்ற பொருந்தாச் சொல்லை மறந்துவிட்டு அக்கவிதையை நன்றாகவே ரசிக்கலாம். வழிகளை மாற்றிக்கொள்பவன் கவிதையும் துயரம் பேசுகிறதென்றாலும் வாழ்வில் எல்லோரும் ஒருமுறை கடந்து வந்திருக்கும் வழி என்பதில் கவிதை, மனதினை மென்மையாய் அசைக்கிறது. மேலும் காலம் காலமாய் தரையிறங்கிக்கொண்டிருக்கும் இறகொன்று வேல்கண்ணனிடமும் இருக்கிறது.

அசாதாரணமான படிம வெளிப்பாடுகளும் மிகச் சாதாரணமான வார்த்தை பிரயோகங்களும் ஒன்றெனக் கலந்து கிடக்கின்றன கவிதைகளில். குறைந்த ஒளியில் நிறைந்திருக்கும் அதே கணம் என்னைப் பிடிக்காததை என்னைத் தவிர்த்து எல்லோரிடமும் சொல்லிச் செல்லும் கவி வெளிப்பாடும் முரண்படுகின்றன. மன்னவளே... என்ற கவிதையில் வரும் முலை குறியீடு தனித்து துருத்தித் தெரிவதை ஆசிரியர் கவனித்திருக்கலாம். ‘வெயில் வெயிலான வெயிலானதைப் பற்றி’ என்ற வரி தரும் அதிர்ச்சி மதிப்பீடுகள் தொகுப்பில் பல இடங்களில் காணக் கிடைக்கின்றன. தொகுப்பின் தலைப்புக் கவிதையில் வரும் நிம்மி வேறெங்கும் தென்படாத நிலையில் கேள்விக்குறியாகிறாள். எளிமையான அனுபவத்தை விவரிக்கும் கவிதை கூட ‘ சிதறி உடையும் நட்சத்திரங்களின் கொப்பளிக்கும் குருதியில் மிதக்கிறது இலைநரம்பு’ எனக் கடினமான படிமத்தில் ஆயாசமடைகிறது. வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட கவிதைகளைத் தொகுக்கும்போது கவனமாயிருத்தல் வேண்டும். ஒரு கவிதையின் சாயலிலோ அல்லது அக்கவிதையின் தொடர்ச்சியாகவோ அடுத்த கவிதையும் இடம் பெற்றிருப்பது தற்செயலானதா திட்டமிட்டதாவெனத் தெரியவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in