ரஜினி சரிதம் 04: ஆறிலிருந்து எழுபது வரை: போலீஸிடம் சிக்கிய போக்கிரி ராஜா!

ரஜினி சரிதம் 04: ஆறிலிருந்து எழுபது வரை: போலீஸிடம் சிக்கிய போக்கிரி ராஜா!

ஒன்பது வயதில் ரஜினி தாயை இழந்தபோது, அந்த இழப்பின் வலிக்கு மருந்தாக அமைந்தவர் அவரது அண்ணி கலாவதி. 9-ம் வகுப்பு படித்தபோது பள்ளிக்கூடத்துக்கு உற்சாகமாகக் கிளம்பிக்கொண்டிருந்த ரஜினி, கண்கள் தீட்ட பெண்கள் பயன்படுத்தும் கருப்பு மை தொட்டு, ஸ்டைலாக தனக்கு மீசை வரைந்துகொண்டிருந்தார். அதைக் கவனித்துவிட்ட அண்ணன் சத்யநாராயணா ரஜினியைத் துவைத்து எடுத்துவிட்டார். ஆனால், எவ்வளவு அடி வாங்கினாலும் ரஜினியின் கண்களிலிருந்து துளி கண்ணீர் வரவில்லை.

வேலை முடிந்து வீடு திரும்பிய அப்பா ரானோஜி, நடந்ததைக் கேள்விப்பட்டார். அவருக்கும் ரஜினி மீது கோபம் எழுந்தது. தெருவில் விளையாடிக் கொண்டிருந்த ரஜினியை அழைத்துவரச் சொன்னார். காலையில் அண்ணனிடம் அடிவாங்கியதை மறந்துபோய் விளையாட்டில் மும்முரமாக இருந்த ரஜினி... ஆசையாக ‘அப்பா’ என்று கூவிக்கொண்டே ஓடிவந்தார். ஆனால், போலீஸ் லத்தியால் முதுகில் விளாசினார் ரானோஜி. மூன்றாவது அடி விழும் முன்பே ஓடிவந்து தடுத்தார் கலாவதி. “அப்படி என்ன செய்யக் கூடாததை செஞ்சுட்டான்னு மாத்தி மாத்தி அவனை அடிக்கிறீங்க?” என்று கோபப்பட்டார். “நானே அவனைச் சரி பண்றேன்... இனிமேல் அவன் மீது கை வைக்காதீங்க” என்று கலாவதி கடிந்து கொண்டார்.

அன்னையென வழிகாட்டிய அண்ணி

அன்று இரவு அண்ணன், அப்பா உட்பட யாரும் சாப்பிடவில்லை. தம்பியை அடித்துவிட்டோமே என்று அண்ணனும், யோசிக்காமல் மகனை அடித்துவிட்டோமே என்று அப்பாவும் குமுறிக் கொண்டிருந்தார்கள். மெல்ல... அண்ணனை நெருங்கி அவரோடு ஒட்டி அமர்ந்துகொண்டார் ரஜினி. உடனே தம்பியைக் கட்டி அணைத்துக்கொண்ட சத்யநாராயணா சமாதானமாகி சாப்பிட வந்தார். பிறகு அப்பாவிடம் போய், “இனிமே மீசை வரைய மாட்டேன்ப்பா” என்றார் ரஜினி. ரானோஜியும் மனம் ஆறினார். இதுபற்றி அண்ணன் சத்யநாராயணன் தன் நினைவுகளைப் பகிரும்போது:

“எதையும் மனதில் மூட்டை கட்டி வைத்துக்கொள்ளும் பழக்கம் சிறு வயது முதலே ரஜினிக்குக் கிடையாது. ஆனால், வாலிப வயதுக்குரிய அத்தனை அடாவடிகளையும் செய்திருக்கிறார். எவ்வளவு அடிவாங்கினாலும் அடங்காத பிள்ளையாக இருந்தார். அவரிடம் இளமையிலேயே அவ்வளவு எனர்ஜி உண்டு. நானும் அப்பாவும் அடித்ததில் ஒருமுறை முதுகில் காயம் ஏற்பட்டுவிட்டது. அந்தத் தழும்பை இப்போது பார்த்தாலும் எனக்குக் கண்ணீர் வந்துவிடும்.

வாலிப வயதில், அப்பாவுக்கும் எனக்கும் அடங்காமல் ஆட்டம் காட்டிய ரஜினியை, என் மனைவி கலாவதி, பக்தி மார்க்கத்துக்கு அழைத்துச் சென்றார். பெங்களூரு கோசாயி மடத்துக்குத் தொடர்ந்து அழைத்துச் சென்று அங்கே லங்கபாரதி சுவாமிகளிடம் நல்ல பழக்கங்களைக் கற்க வைத்தார். பின்னர், ராமகிருஷ்ண மடத்துக்கு அழைத்துப் போய் சேர்த்துவிட்டோம். அங்கே ராமசந்திர சுவாமி, புருஷோத்தம சுவாமி போன்ற சிறந்த ஆன்மிக ஆசிரியர்களிடம் ரஜினி வேத மந்திரங்களைக் கற்கும்படி எனது மனைவி ஏற்பாடு செய்தார்.

ரஜினியின் கலை ஆர்வத்துக்கும், ஆன்மிக நாட்டத்துக்கும் பெங்களூரு ராமகிருஷ்ண மடத்தில்தான் விதை ஊன்றப்பட்டது. அங்கே மாணவர்களைக் கொண்டு இயங்கும் ஒரு நாடகக் குழு உண்டு. அங்கு நடத்தப்பட்ட ஆண்டுவிழா நாடகத்தில் விவசாயி கதாபாத்திரத்தில் ஈடுபாட்டுடன் நடித்தார் ரஜினி. அப்போது அவருக்கு 14 வயது. அந்த விழாவுக்குச் சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த புகழ்பெற்ற கன்னடக் கவிஞர் தாரா பேந்த்ரே, எழுத்தாளர் தத்தாரி ராமசந்திர ராவ் ஆகியோர், ரஜினியின் நடிப்பைப் பாராட்டிவிட்டு ‘இவர் எதிர்காலத்தில் மக்கள் போற்றும் நடிகராக வருவார்' என்று வாழ்த்தினார்கள். அவர்களது வாக்கு பலித்துவிட்டது” என்கிறார்.

இளமை வேகம்

ராமகிருஷ்ண மடத்தின் நாடகத்தில் நடித்த ரஜினி, தான் படித்த ஏ.பி.எஸ் உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வருடமும் நாடகங்களில் நடித்திருக்கிறார். தனது உயர்நிலைப் பள்ளிக் காலம் குறித்து ரஜினி குறிப்பிடாமல் இல்லை. “சிறுவயதில் நான் செய்த அட்டகாசங்களுக்கு அளவே இல்லை. ‘பிஞ்சிலேயே பழுத்துவிட்டது’ என்று திட்டு வாங்கியிருக்கிறேன். அப்பா, அண்ணன் ஆகியோரின் கண்டிப்பும் உதைகளும் என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தன. அதேநேரம், ராமகிருஷ்ணா மடத்தில் தியானம், பிரார்த்தனை, பிராணயாமம் என்று கற்றுக்கொண்டது எனது முரட்டுத்தனத்தைக் குறைத்தது” என்று கூறியிருக்கிறார் ரஜினி.

எஸ்.எஸ்.எல்.சி முடித்து, பி.யூ.சி சேர்ந்தபோது ரஜினியிடம் மீண்டும் முரட்டுக் குணம் வந்து ஒட்டிக்கொண்டது. அப்போது ரஜினியின் நண்பர்கள் குழுவில் ராமசந்திரா, அரசப்பா, சந்திரா, ராஜண்ணா, மாரி என ஆறு பேர். இந்தக் குழு யாருக்கும் அடங்காத முரட்டுக் காளைகளாகத் திரிந்ததை ரஜினியின் எதிர்வீட்டு நண்பரான ராமசந்திரா பகிர்ந்திருக்கிறார்.

“16 வயசுல ரஜினி நெருப்பு மாதிரி இருப்பார். பி.யூ.சி படிக்கிறபோது ஜிம்மில் சேர்ந்து உடம்பை டெவலப் செய்தார். நாங்கள் வீட்டுக்குத் தெரியாமல் சிகரெட் பிடிப்போம். யாரிடமும் மாட்டக்கூடாது என்பதற்காக கெங்கேரிக்குப் போய், பேபி பாக்கெட் சாராயம் வாங்கிக் குடித்துவிட்டு வருவோம். ‘நீ ஒரு பாக்கெட் சாராயம் குடித்தால், நான் இரண்டு பாக்கெட் குடிச்சுக் காட்றேன் பார்’ என்று சவால் விட்டு செய்துகாட்டுவார் ரஜினி.

மற்றவர்கள் நம்மை மட்டுமே பார்க்க வேண்டும், அனைவரது பார்வையையும் தன் மீது திருப்ப வேண்டும் என்கிற வெறி அவரிடம் அப்போதே உண்டு. பிற்காலத்தில் சினிமாவில் காட்டிய ஸ்டைலை அந்த வயதிலேயே அவரிடம் நாங்கள் கண்டோம். கோலிக் குண்டு மட்டுமல்ல; கிரிக்கெட்டும் அவரைப்போல் ஆட முடியாது. அவ்வளவு கெட்டிக்காரர்.

ஒருமுறை, சாலையில் சென்ற ஒரு பெண்ணைக் கூட்டமாக நின்றுகொண்டு கிண்டல் செய்துவிட்டோம். அந்தப் பெண் துணிச்சலாகப் போய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து விட்டார். அவ்வளவுதான் ஜெயநகர் போலீஸ் வந்து எங்களை அள்ளிக்கொண்டுபோய் செமத்தியாகக் கவனித்தார்கள். பிறகு ரஜினியின் அப்பா போலீஸ் என்று தெரிந்ததும் எச்சரிக்கை செய்து அனுப்பினார்கள். அந்த அளவுக்கு நாங்கள் முரட்டுக் காளைகளாக இருந்தோம்” என்கிறார் ராமசந்திரா.

சென்னை விஜயம்

அப்பாவின் வற்புறுத்தலால் கல்லூரியில் பி.யூ.சி-யில் சேர்ந்தாரே தவிர சில மாதங்களிலேயே கல்லூரிப் படிப்பு ரஜினிக்குப் பாகற்காயாகக் கசந்தது. படிப்பிலிருந்து தப்பிக்க என்ன வழி என்று யோசித்துக் கொண்டிருந்தபோதுதான் கல்விக் கட்டணம் செலுத்த அப்பா கொடுத்த 200 ரூபாய் ரஜினிக்குத் தைரியத்தைக் கொடுத்துவிட்டது. அந்தப் பணத்தில் சென்னைக்கு ரயில் டிக்கெட் எடுத்துக்கொண்டு, வீட்டில் சொல்லாமல் கொள்ளாமல் கிளம்பிவிட்டார்.

பள்ளியில் படிக்கும் காலத்திலேயே நண்பர்களுடன் சினிமா பார்க்கும் பழக்கம் ரஜினிக்கு இருந்தது. ஆனால், ரஜினிக்கு சினிமாவில் நடிக்கும் ஆசையோ எண்ணமோ அப்போது இல்லை. வந்தாரை வாழவைக்கும் சென்னையில் நல்ல வேலை கிடைக்கும், கைநிறையச் சம்பாதிக்கலாம் என்ற எண்ணத்துடன்தான் முதன்முறையாகச் சென்னைக்கு வந்தார் ரஜினி.

ஆனால், சென்னையில் வேலை கிடைப்பது அத்தனை எளிதல்ல என்பது அங்கு வந்த பிறகு தான் புரிந்தது. கையிலிருந்த பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைந்துகொண்டே வர, ரஜினிக்கு மனதில் பயம் கவ்வியது. தச்சுப்பட்டறை ஒன்றில் வேலை கிடைத்தது. ஆனால், அவர்கள் கொடுத்த இரண்டு ரூபாய் சம்பளமும் வேலையும் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அத்துடன், தன்னைத் தேடி அண்ணனும் அண்ணியும் அப்பாவும் எப்படித் தவிப்பார்களோ என்ற கவலை ரஜினியை வாட்டத் தொடங்கியது. எனவே, பெங்களூருவுக்கே திரும்பிச் சென்றார்.

மீண்டும் அழைத்த தமிழ் மண்

வீடு திரும்பியதும், கோபமாக இருந்த அண்ணனிடம் நடந்தவற்றைச் சொன்னார். தம்பி தன் தோள் அளவுக்கு வளர்ந்துவிட்டதால், அவரை அடிக்காமல், புத்திமதிகள் சொன்ன சத்யநாராயணா, “நல்ல வேலை அமையும்வரை உனக்குப் பிடித்த வேலை எதுவானாலும் அதை பெங்களூருவிலேயே செய். அப்பாவை வருந்தச் செய்யாதே” என்றார். அண்ணன் சொன்னத்தைக் கேட்டு, பெங்களூருவில் ஒரு மளிகைக் கடையில் வேலைக்குச் சேர்ந்தார் ரஜினி.

சில நாட்கள் ஓடியிருக்கும். ‘எப்படித்தான் ஒரே இடத்தில் நின்றுகொண்டு, நாள் முழுவதும் வேலை செய்ய இவர்களுக்குப் பிடிக்கிறது?’ என்று தன்னைத் தானே கேட்டுக்கொண்டு, மீண்டும் சென்னைக்கு ரயில் ஏறினார் ரஜினி . கடந்தமுறை நல்ல வேலை தராமல் அலைக்கழித்த சென்னை, இந்த முறை, அவரை போலீஸ் ‘லாக் அப்’பில் வைத்தது. பிளாட் ஃபார்மில் தூங்கிய ரஜினியை சந்தேகக் கேஸில் பிடித்துக்கொண்டுபோனது சென்னை மாநகரக் காவல்.

அப்படியும் ரஜினிக்கு சென்னை பிடித்துப்போகக் காரணமாக அமைந்தது ஒரு திரைப்படம்!

(சரிதம் பேசும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in