உலகம் சுற்றும் சினிமா - 39: மின்மினிப் பூச்சிகளின் கல்லறை!; போரால் சீரழியும் மழலைகளின் கதை

கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃப்ளைஸ் (1988)
உலகம் சுற்றும் சினிமா - 39: மின்மினிப் பூச்சிகளின் கல்லறை!; போரால் சீரழியும் மழலைகளின் கதை

மனிதகுல வரலாற்றின் மிகப் பெரும் நகர்வுகள், பெரும்பாலும் போர்களின் பின்விளைவுகள்தான். சமூகத்தின் பொதுப் புத்தியில் போர் என்பது பெருமைக்குரிய விஷயமாகவும், ஆற்றலின் அடையாளமாகவுமே அடையாளப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

உண்மையில், போர் என்பது தனி மனிதர்களின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப்போடும் கொடிய விஷயம். போரின் வெற்றி, தோல்விகளைத் தாண்டி மனித உணர்வும், வாழ்வும் சிதைக்கப்படுவதே பெரும் வன்முறைதான். அந்த வகையில், போர் என்பது சமூகத்தின் தோல்வி என்பதை அழுத்தமாகப் பதிவு செய்த படம், 1988-ல் வெளிவந்த ‘கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃப்ளைஸ்’ (Grave of the Fireflies) எனும் ஜப்பானிய ‘அனிமே’ வகைத் திரைப்படம்!

உலக அரங்கில் ஜப்பானின் தனித்த அடையாளமாகத் திகழ்பவை ‘அனிமே’ வகைத் திரைப்படங்கள் மற்றும் தொடர்கள். தனித்துவமான அனிமேஷன்களால் உருவாக்கப்படும் வண்ணச் சித்திரப் படங்கள் இவை. நமது வட்டார வழக்கில் சொல்ல வேண்டுமென்றால் ‘பொம்மை படங்கள்’. பொதுவாக குழந்தைகளின் பொழுதுபோக்குக்காகக் கருதப்படும் இத்திரைமொழியைக் கொண்டு ஜப்பானியர்கள் கருத்துச் செறிவும், ஆழ்ந்த கதையம்சங்களும் கொண்ட பல படைப்புகளை உருவாக்கிவருகின்றனர். ‘கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃப்ளைஸ்' அப்படியான ஒரு முக்கியப் படைப்பு.

புகலிடம் தேடி அலையும் பூக்கள்

இரண்டாம் உலகப் போரின் இறுதிக் கட்டத்தில் ஜப்பானில் நடக்கும் கதை இது. கோபே நகரில் சிறுவனான செய்டா, அவனது நான்கு வயது தங்கை செட்ஸுகோ, அவனது தாயார் ஆகியோர் வசித்துவருவார்கள். அவனுடைய தந்தை ஜப்பான் கடற்படை அதிகாரியாகப் பணியாற்றிவருவார். அமெரிக்கப் போர் விமானங்களின் தாக்குதலிலிருந்து தப்பிக்க, பதுங்கு குழியை நோக்கி விரையும் வழியில் செய்டோவின் தாய் பலியாகிவிடுவார். தாயின் மரணத்தை தன் பச்சிளம் தங்கைக்குத் தெரியாமல் பார்த்துக்கொள்வான் செய்டா. அனைத்தையும் இழந்து, வேறு வழியில்லாமல் வேறு ஊரில் இருக்கும் தங்கள் அத்தையின் வீட்டுக்கு இருவரும் சென்று தஞ்சமடைவார்கள்.

தன் தந்தைக்கு செய்டா எழுதிய கடிதங்களுக்கும் பதில் வராது. நாளுக்கு நாள் அத்தையின் போக்கு மாறும். அந்த வீட்டில் அழையா விருந்தாளிகளாக உணரும் அண்ணனும் தங்கையும் வீட்டைவிட்டு வெளியேறுவார்கள். கைவிடப்பட்ட பதுங்கு குழி ஒன்றில் தங்கள் வாழ்க்கையைத் தொடர்வார்கள். போர் சூழல் அவர்களை என்ன செய்தது, அவர்களின் முடிவு என்னவானது என்பதே படத்தின் மீதிக் கதை.

தளிர்க் கரங்களின் வலி

இப்படத்தில் போரைப் பற்றி நேரடியாகக் குறை கூறும் காட்சிகள் இல்லை என்பது குறிப்பிடத்தக்க விஷயம். போரினால் பதிக்கப்படும் இரண்டு குழந்தைகளும் எந்நேரமும் சோகமாக இருப்பதாகவும், வலிந்து காட்சிகள் திணிக்கப்படவில்லை. குண்டு மழை பொழிந்த அடுத்த நாள் அடிபட்டவர்களின் வேதனை சூழ்ந்துள்ள மருத்துவமனையில் சில குழந்தைகள் விளையாடிக்கொண்டிருப்பார்கள். துப்பாக்கிகளையும் குண்டுகளையும் அவர்கள் சட்டை செய்வதில்லை. குழந்தைகளின் இயல்பு அதுதானே!

செட்ஸுகோவும் அதேபோல்தான். அமெரிக்க விமானங்களின் குண்டு மழை பொழிந்தாலும், மிட்டாய் டப்பாவைக் கழுவிய தண்ணீரை அண்ணன் ஆசையாகத் தரும்போது அதைக் குடித்துத் துள்ளிக்குதிக்கும் செட்ஸுகோவை, போர் இருண்ட பிரதேசத்துக்குள் இழுத்துச் சென்றுவிடுகிறது. மின்மினிப் பூச்சிகள் ஏன் சீக்கிரம் இறந்துவிடுகின்றன என்று அழுதுகொண்டே அவற்றுக்குக் கல்லறை கட்டும் அந்தப் பிஞ்சுக் கைகளால் போரின் கனத்தைத் தாங்க முடியுமா என்ன?

சிறுகதை - அனிமே - திரைப்படம்:

ஜப்பானிய எழுத்தாளரான அகியுகி நொசாகா 1967-ல் எழுதிய ‘கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃப்ளைஸ்’ என்ற சிறுகதையைத் தழுவியே இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டது. அகியுகி நொசாகா தன்னுடைய சிறுவயதில் எதிர்கொண்ட சோகங்களோடு சிறிது கற்பனை கலந்து எழுதிய கதை இது. பலரும் இக்கதையைத் திரைப்படமாக எடுப்பதற்காக அகியுகியிடம் கேட்டபோது அவர் சம்மதிக்கவில்லை. தன் கதையில் உள்ள இடங்களையும், மனிதர்களையும் அவர்களது உணர்வுகளையும் திரைப்படத்தில் கொண்டுவர முடியாது என்ற எண்ணம்தான் அவரது மறுப்புக்குக் காரணம்.

ஆனால், இக்கதையை அனிமே வடிவத்தில் எடுக்கலாம் என்று அனிமே படைப்புகளுக்குப் பிரபலமான ஜூப்லி நிறுவனம் அவரை அணுகியது. மாதிரிப் படங்களைக் காட்டியதும் ஒப்புக்கொண்டார் அகியுகி. அனிமே திரைப்படங்கள் எடுப்பதில் பிரபலமான ஈசாவ் டாக்கஹாடோ இத்திரைப்படத்தை இயக்கி, உலக சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தார். இதே கதை 2005-ல் அனிமேவாக அல்லாமல் வழக்கமான திரைப்படமாக வெளிவந்தது. அனிமே ‘கிரேவ் ஆஃப் தி ஃபயர்ஃப்ளைஸ்’ திரைப்படத்திலிருந்து பெருமளவு மாற்றி அமைக்கப்பட்டிருந்த அத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடவில்லை.

போரின் நீட்சி வெற்றி அல்லது தோல்வி அல்ல; வறுமையும், வேதனையும், பசியும் மட்டுமே. இது போரில் பங்குபெறும் எல்லாத் தரப்புக்கும் பொதுவான ஒன்று. தனிமனிதர்களுக்குப் போர் ஏற்படுத்திய பாதிப்புக்கு, வெற்றியும் தோல்வியும் என்றைக்கும் மருந்திடாது. தன் தந்தை இறந்திருக்கக்கூடும் என்பதை அறியும் செய்டோ அடுத்த சில நிமிடங்களில் பேசும் வசனம், “எனக்குப் பசிக்கிறது...” என்பதே.

மானுடத்தின் பெரும் எதிரி பசி. அந்தப் பசியின் கோரப் பிடியில் தங்கள் மினுமினுப்பை இழந்த இரண்டு மின்மினிப் பூச்சிகளின் இக்கதை உலகுக்குச் சொல்லும் செய்தி ஒன்றுதான். உங்கள் குண்டுகளின் வெப்பத்தால் மின்மினிப் பூச்சிகளை எரித்துவிடாதீர்கள். அவை சிறகடித்துப் பறந்து உலகைப் பிரகாசிக்கச் செய்யட்டும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in