மனைவிக்கு ரிட்டயர்மென்ட் கிஃப்ட்! - ஆவணப்படம் கொடுத்து அசத்திய கணவர் 

மனைவிக்கு ரிட்டயர்மென்ட் கிஃப்ட்! - ஆவணப்படம் கொடுத்து அசத்திய கணவர் 

என்.சுவாமிநாதன்
swaminathan.n@kamadenu.in

பணியிலிருந்து ஓய்வுபெறும் நாள் என்பது ஒவ்வொருவருக்குமே உணர்வுபூர்வமானது. ஓய்வுபெறும் நிகழ்ச்சியில் வாழ்க்கைத் துணையும் வந்திருந்தால் அந்த உணர்வு இரட்டிப்பாகிவிடும் என்பதும் வழக்கம்தான். ஆனால், ஆசிரியர் பணியிலிருந்து தன் மனைவி ஓய்வுபெறும் நிகழ்ச்சியில், அவரைப் பற்றிய ஆவணப்படத்தைத் திரையிட்டு மனைவியை ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைத்திருக்கிறார் எழுத்தாளர் நாறும்பூநாதன்.

திருநெல்வேலியில் பள்ளித் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்த சிவகாமசுந்தரி என்ற உஷா, சமீபத்தில் பணியிலிருந்து ஓய்வுபெற்றார். ஓய்வுபெறும் நிகழ்ச்சியில், அவரிடம் பயின்ற மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். வண்ண
தாசன் தொடங்கி ஏராளமான இலக்கியவாதிகளும் வந்திருந்து வாழ்த்தினர். அத்தனையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த உஷாவின் கணவர் நாறும்பூநாதன், யாரும் எதிர்பாராதவிதமாக, அந்த ஆவணப் படத்தைத் திரையிட்டார்.
30 நிமிடங்கள் ஓடும் அந்த ஆவணப்படத்தில் உஷாவின் ஆசிரியப் பணி குறித்த தகவல்களுடன், அவரைப் பற்றி அவரது மாணவிகள் பேசும் காணொலிகளின் தொகுப்பும் இடம்பெற்றது. முன்கூட்டியே அவர்களிடம் பேசி, வாட்ஸ்-அப்  மூலம் மனைவிக்கே தெரியாமல் காணொலிகளை வாங்கியிருந்தார் நாறும்பூநாதன்.

நெல்லைக்கே உரிய ‘பரணிவாசத்தோடு’ எழுதக்கூடியவரான நாறும்பூநாதன் அற்புதமான ரசனையுடன் அவற்றைத் தொகுத்திருந்தது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. அப்போது உஷா கண்ணீர் மல்கிய கண்களுடன் நாறும்பூநாதனைப் பார்த்தது அங்கிருந்த அனைவரையும் உருகச் செய்தது.

மறுநாள் அவர்கள் வீட்டுக்குச் சென்று நானும் அந்தத் தம்பதியை வாழ்த்தினேன். பெருமிதம் பொங்கும் குரலில் பேசத் தொடங்குகிறார் நாறும்பூநாதன். “உஷா ஆரம்பத்துல வேதியியல் ஆசிரியையாகவும், அப்புறம் தலைமையாசிரியையாகவும் இருந்தாங்க. வேலையில அத்தனை அர்ப்பணிப்பு, ஈடுபாடு காட்டுவாங்க. பல வருசத்துக்கு முன்னாடி அவுங்ககிட்ட படிச்ச ஸ்டூடண்ட்ஸ்கூட தேடிவந்து பார்த்துப் பேசிட்டு போறதைப் பார்த்திருக்கேன். திருநெல்வேலி மாநகரப் பகுதியான மகாராஜா நகரில், அறநிலையத் துறை நிர்வகிக்கும் ஸ்கூல்லதான் வேலை பார்த்தாங்க. அது டவுன் பகுதின்னாலும் கிராமப்பகுதி பிள்ளைங்கதான் அங்க அதிகம். அவங்களோட படிப்புல உஷா அவ்ளோ அக்கறை எடுத்துக்கிட்டாங்க.

சில பிள்ளைகளுக்கு ஹாஸ்டல் ஃபீஸை இவங்களே கட்டிடுவாங்க. தன்னோட மாணவிகள் மேல இவங்க வச்சிருந்த அன்பை ஆவணப்படுத்தணும்னு அடிக்கடி தோணும். இவங்க ரிட்டயர்மென்ட் ஃபங்ஷன்ல அதை நிறைவேத்திட்டேன்” என்கிறார் புன்னகையுடன்.

“என்னோட இந்தக் குணத்துக்கு அடிப்படையே என் கணவர்தான்” என்று சற்றே தயக்கத்துடன் பேசத் தொடங்குகிறார் உஷா. “உலகின் கொடூரங்களிலேயே ரொம்ப மோசமானது ஒரு குழந்தை தன் அப்பா, அம்மா, ஆசிரியருக்குப் பயப்படுறதுதான்னு போலந்து நாட்டின் கல்வியாளர் ஜானுஸ் கோர்ச்சாக் சொல்வார். ஒரு குழந்தை அல்லது மாணவி தன்னோட மனசின் அடியாழத்திலிருந்து உங்களை நம்பும்போது அவங்களுக்கு நன்றியோடு இருங்கள். அந்த நம்பிக்கைதான் உங்களுக்குக் கிடைக்கும் உயர்ந்த விருதுங்குறது கோர்ச்சாக்கோட வார்த்தைகள். இதையெல்லாம் என்கிட்ட அடிக்கடி சொல்லி ஊக்கப்படுத்துவார் என் கணவர். சாதனை பண்ணின பெண்களைப் பத்தி நிறைய சொல்லுவார். என்னோட மாமனார் ராமகிருஷ்ணன்தான் ஸ்கூல்ல எனக்குத் தமிழாசிரியர். நேர மேலாண்மை தொடங்கி பல விஷயங்களுக்கு அவங்க எனக்கு முன்னுதாரணம்” என்று சொல்லும் உஷா, நான்கு வருடங்களுக்கு முன்னர் நாறும்பூநாதன் வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஓய்வுபெற்ற அதே தேதியில் இப்போது (மே 31) ஓய்வுபெற்றிருக்கிறார்.
“பேங்க் வேலையிலேருந்து இவர் விருப்ப ஓய்வு வாங்கின கதையையும் கேட்டுடுங்க. மனுஷர் எவ்ளோ வித்தியாசமானவர்ன்னு தெரியும்” என்கிறார் உஷா. “ஆமாங்க. மனிதாபிமானம் இல்லாத சூழல்ல வேலை பார்க்கப் பிடிக்காம வெளியில வந்துட்டேன்.

பழிவாங்குற தன்மையோட நிறுவனம் நடந்துகிட்டா அங்க நமக்கு என்ன வேலை? எனக்கு இதய அறுவை சிகிச்சை செய்திருந்த நிலையிலும், சொந்த மாவட்டத்தில் இருந்த கிளைக்குக்கூட ட்ரான்ஸ்ஃபர் தர மறுத்துட்டாங்க. ஒரு எழுத்தாளரா என்னால இதைப் பொறுத்துக்க முடியல. ஆறு வருஷம் சர்வீஸ் இருக்கும்போதே விஆர்எஸ் வாங்கிட்டேன். மாசம் 80 ஆயிரம் ரூபாய் சம்பளம்
வாங்கிட்டு இருந்தேன். வேலையை விட்டுறவான்னு உஷாகிட்ட கேட்டேன். ‘உங்க உடல்நலனும், மனநலனும்தான் முக்கியம். பிடிக்கலைன்னா விட்டுருங்க… நீங்க வீட்ல இருந்து நிறைய எழுதுங்க’ன்னு சொன்னாங்க. எத்தனை வீட்டில் இது நடக்கும்?” என்று நெகிழ்கிறார் நாறும்பூநாதன்.

“என்னோட அப்பா நல்லாசிரியர் விருது வாங்கினவர். நான் எம்.எஸ்.சி முடிச்சுட்டு பேங்க் வேலையில சேர்ந்தப்ப, அப்பா திருப்தி இல்லாமத்தான் அனுப்பி வைச்சார். நான் டீச்சர் வேலைக்கு போகணும்ன்னு அவருக்கு அவ்ளோ ஆசை. ஆனா, என்னால ஒரு டீச்சரம்மாவுக்கு வீட்டுக்காரராத்தான் ஆக முடிஞ்சது” என்று நாறும்பூநாதன் சொன்னதும் சிரிப்பலை வீட்டை வியாபித்துக்கொள்கிறது.

படங்கள்: மு.லெட்சுமி அருண் 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in