வண்ணத்துப் பூச்சியின் நிறம் சாம்பல்

வண்ணத்துப் பூச்சியின் நிறம் சாம்பல்

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in


ஒரு காதல் செய்து விடுகிறோம்
மற்றவை எல்லாம்
போலச் செய்கிறோம்
என்பதான பின்னட்டைக் குறிப்பு மொத்தத்தையும் கூறிச் செல்கிறது உட
லாடும் நதியின் அலைகளை. நோய் களைந்த மார்பின் கவிதையில் வரும்...
யாதொன்றுக்கும் மேலாக
கவிழ்த்து வைத்த பால் கிண்ணமொன்று
நிதம் தவறாமல்
கனவில் வருவதுதான்
தாளாத தீயெனத் தவிக்கிறது

வலியின் அழகியல் சுடுவது அதிகமாக வலிக்கிறது கவிஞரே. பெரும்பாலும் இருவருக்குமான உரையாடல்கள் அல்லது பரிமாற்றங்
களாக விரிகின்றன கவிதைகள். காதலுக்குச் சமமாக காமமும் உடன்வருவது கவிஞர் லதா அருணாச்சலம் வெற்றிகொள்ளும் இடங்கள். வெவ்வேறு கவிதைகள் வெவ்வேறு இடங்களில் தங்களைமுடிச்சிட்டுக் கொள்கின்றன. வானம் இல்லையென்றான துயரத்தின் பின்னணியில் இளைப்பாற காட்சிப்பிழை போதும் என்று தன்னைத் தேற்றிக்கொள்ளும் மனம்தான் பின்பொரு இடத்தில் வாழ்தல் கடினமல்லவென்று பாவனையாவது செய்துகொள்ளலாம் என்று பேசிப்போகிறது. பிரிதலின் பொருட்டு பகிரும் கணங்கள் யாவும் சந்தோச நொடிகளை ஞாபகப்படுத்திப் போகும் ஒன்றாய் அமைந்துள்ளது. எந்த இரவையும் மலரையும் தேநீரையும் முத்தத்தையும் குற்றம் சொல்லவில்லை கவிஞர். அதற்காகவே வெளிச்ச வாழ்த்துகள்.

இந்தப் பிரிவு என்னைக் கொல்கிறது என்பதைக்கூட என் கழுத்திலிருந்து நழுவிக் காணாமல் போகும் உன் முத்தம் என்கிறார். ஏனோ காதல் என்று வருகையில் உருகியும் பெருகியும் தன்னை அடையாளப்படுத்தும் கவிஞர், தொகுப்பின் சில இடங்களில் தென்படும் அம்மாவின் ஞாபகங்களை வலியுடன் கைகளில் தந்துபோகிறார். கலவிக்குப் பிந்தைய மூச்சில் அலையும் பெருந்தீயெனப் பல கவிதைகள் இரவின் நிறத்தை நீலம் பூசிப் போகிறது. தன் கவி மனத்தை எவ்விதப் பாசாங்குமின்றி வெளிப்படுத்தும் லதா அருணாச்சலம் தன் எழுத்து இன்னதென்றுதான் என்பதில் தீர்மானமாய் இருக்கிறார்.

பழுக்கிற இரும்பின்
செந்தழல் வர்ணத்தில்
மோகித்து
அங்கேயே வளையப்
பறந்துகொண்டிருக்கும்
வண்ணத்துப் பூச்சியின்
இறகுகளாய்தான்
எந்தச் சாம்பல் வண்ணமும்
காணக் கிடைக்கிறது

கவிதை வரிகளில் வெளிப்படும் வண்ணங்களைத் தாண்டி அக்கவிதை முடிந்தபின்பு நமக்குக் கிடைக்கும் வண்ணம்தான் தாள முடியாததாய் இருக்கிறது. இனி எல்லா வண்ணத்துப் பூச்சிகளும் சாம்பல் நிறத்தில்தான் பறக்குமா என்ற கேள்விக்கு பதிலெதுவும் இல்லைதான். மீண்டும் மீண்டும் தென்படும் படிமங்களைத் தவிர்த்திருக்கலாம்.

மெலிதாய் அசையும்
நிறை சூலியின்
வயிற்றுப் பிள்ளையாய்... என்பதே,
பனிக்குட
வெது வெதுப்பில்
நீந்தும் மழலையாய்... 
என இன்னொரு இடத்தில் வருகிறது. அது போலவே தேநீர், மழை, குடை...

ஒரு மிடறு அருந்த உலர்ந்து போகும் நதியைப் போல் சிலர். என்றாலும் அன்பின் வரிகள் எழுதுவதற்கும் பிரிவின் கையொப்பம் இடுவதற்கும் வசதியாய் எப்போதும் இருக்கிறது ஓர் உள்ளங்கை என்ற விதத்தில் ஆறுதல் கொள்ளலாம் லதா.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in