பாப்லோ தி பாஸ் 28: பாப்லோவிடம் சிக்கிய பலி ஆடு..!

பாப்லோ தி பாஸ் 28: பாப்லோவிடம் சிக்கிய பலி ஆடு..!

“எத்வார்தோ… இன்னும் சில மணி நேரத்துல லா கதீட்ரல் மேல தாக்குதல் நடத்தப் போறோம்..” – கொலம்பிய நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரஃபேல் பர்தோ, அந்நாட்டின் நீதித்துறை துணை அமைச்சர் எத்வார்தோ மெண்டோசாவிடம் சொன்னார்.

அந்தச் செய்தியைக் கேட்ட மெண்டோசா சந்தோஷமடைந்தார். ஆனால், அது நீடிக்கவில்லை.

“நீங்க அங்க போறீங்க...”

“நான்ன்... னா... ஆஆ... எதுக்கு?” மெண்டோசாவின் குரலில் பிசிறு தட்டியது.

“எல்லாத்தையும் சட்டப்பூர்வமாக்க...”

“சட்டப்பூர்வமாக்க..?”

“ஆமா… அந்த ஜெயில் மீது தாக்குதல் நடத்தி, பாப்லோவைக் கைது செய்து, அவனை வேற ஒரு ஜெயிலுக்கு மாற்றுவதை நீங்க முன்னாடி நின்னு செய்யணும்...”

தன்னை ஆபத்தில் தள்ளிவிடப் பார்க்கிறார்கள் என்பது மெண்டோசாவுக்குத் தெரிந்தது. யாரைக் குறை சொல்லியும் பயனில்லை. காரணம், கொலம்பிய அரசாங்கம் எப்போதும் அப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இவ்வளவு பெரிய ஆபத்தான செயலைச் செய்யும்போது எல்லோரும் தங்களுக்கான சுய பாதுகாப்பை உறுதி செய்துகொள்வது இயற்கைதான். அதைக் காரணமாக வைத்து இன்னொருவனை பலி கொடுப்பதும் இயற்கைதான். இந்தக் காரியத்தின் எந்தப் புள்ளியிலாவது ஏதேனும் ஒரு தவறு நடந்தால் கூட, அந்தப் பழியை, அந்த பலி ஆட்டின் மீது போட்டுவிடலாம்.

உள்ளுக்குள் சற்று கலக்கம் ஏற்பட்டாலும், பாப்லோவை வேறு சிறைக்கு மாற்றும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கொலம்பியாவுக்கு பாப்லோ என்பவன் மாபெரும் தொல்லை. அந்தத் தொல்லையை ஒழித்துக் கட்டுவதில் தனக்கும் பங்கிருக்கிறது என்பதை நினைத்துப் பின்னாளில் தான் பெருமைப்பட்டுக் கொள்ளலாம் என்று பெருமூச்செறிந்தார் மெண்டோசா.

லா கதீட்ரல் சிறையில் நடந்த கொலைகளுக்குப் பிறகு, இனியும் பாப்லோவை அங்கு தங்க வைப்பது மேலும் பல குற்றங்களுக்கு வழி அமைத்துக் கொடுக்கும் என்று கருதிய அதிபர் சீஸர் கவீரியா, பாப்லோவை நாட்டின் தலைநகரான பகோட்டாவில் உள்ள சிறைக்கு மாற்ற முடிவெடுத்தார். இதுதொடர்பாக பாப்லோவிடம் பேசினால், அவன் வழிக்கு வரமாட்டான். எனவே, தாக்குதல்தான் ஒரே தீர்வு என்று அவர் தீர்மானித்தார்.

“சரி பர்தோ… சொல்லுங்க. அங்க போய் நான் என்ன செய்யணும்?”

“ஒண்ணும் கவலைப்படாதீங்க மெண்டோசா… எல்லாமே கட்டுப்பாட்டுல இருக்கு. அந்த சிறைக்குக் காவல் இருக்கிற தளபதிக்கிட்ட இந்த மாதிரின்னு சொல்லுங்க. மத்ததை அவர் பார்த்துப்பார்”

பர்தோ இவ்வளவு தூரம் சொல்கிறார் என்றால், நிச்சயம் அந்தத் தளபதியிடமும் என்ன செய்ய வேண்டும் என்பதை விளக்கியிருப்பார். தான் போய்ச் சேரும் நேரத்துக்குள் தாக்குதல் எல்லாம் முடிந்து பாப்லோவைக் கைது செய்து வைத்திருப்பார்கள், அவனை ஒரு ஜீப்பில் ஏற்றிவிட்டு, போலீஸாரோ அல்லது ராணுவத்தினரோ நீட்டும் ஆவணத்தில் கையெழுத்துப் போட்டுவிட்டு வந்துவிடலாம் என்று நினைத்தார் மெண்டோசா. அவருக்குள் சற்றுத் துணிவு பிறப்பதை அவர் உணர்ந்தார். அது கொடுத்த வேகத்தில், அடுத்த சில மணி நேரங்களில் கதீட்ரல் சிறை வாசலில் இருந்தார்.

வந்து இறங்கியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அங்கிருந்த தளபதியிடம் விசாரித்தார்.

“இன்னும் ஏன் தாக்குதல் நடத்தாம இருக்கீங்க..?”

“தாக்குதலா… எங்களுக்கு வேற மாதிரி ஆர்டர் கொடுத்திருக்காங்க...”

“.. … …”

“அதாவது, சிறைக்குள்ளாற யாரையும் போக விடக்கூடாது. சிறையைச் சுத்தி வளைச்சா மட்டும் போதும்.”

மெண்டோசா அதிர்ந்தார். அதை உணர்ந்த அந்தத் தளபதி இப்படிச் சொன்னார்:

“அவங்களுக்கு பாப்லோ தேவையா இருந்தா, இப்பவே தாக்குதல் நடத்தி உள்ள போய் அவனை இழுத்துட்டு வந்துடு வேன். ஆனா, அதுக்கான ஆர்டர் எனக்கு வரணும்...”

“ஜெனரல்… எனக்கு இதைப் பத்தி எல்லாம் ஐடியா கிடையாது. நாளைக்குக் காலை வரை காத்திருக்கலாம்னு சொல்றதுக்கு எனக்கு அதிகாரம் கிடையாது. இன்னைக்கு நைட்டே காரியத்தை முடிக்கணும்...”

“சரி அப்போ பகோட்டாவுக்கு போன் பண்ணி கேட்டுடறேன்...”

தளபதி, அதிபர் அலுவலகத் தைத் தொடர்புகொண்டார். மெண்டோசாவின் திட்டத்தைச் சொன்னார். இணைப்பு  துண்டிக் கப்பட்டது. ஒரு பத்து நிமிட இடை வெளி. ஜெனரலின் போன் அலறி யது. மெண்டோசாவைக் கேட்டது.

“மெண்டோசா…” 

“யெஸ் பிரெஸிடென்ட்...”

“அங்கு என்ன நடக்குதுன்னு சூப்பர்வைஸ் செய்யத்தானே உங் களை அனுப்பினோம். நீங்க ஏன் தேவையில்லாம தலையிடறீங்க...” அதிபர் கவீரியாவின் கோபம் கலந்த குரலில் நீண்ட நாள் நண்ப னின் அக்கறையும் தெரிந்தது. 

ஆனால், அதிபரிடம் எல்லாவற் றையும் விளக்கிச் சொல்வதற்கு மெண்டோசாவுக்கு நேரம் இல்லை. இந்த விஷயத்தில் யாரும் எந்த ஒரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ள முன்வராதது மெண்டோசாவுக்குக் கவலை அளித்தது. எனவே, எல்லா பொறுப்பையும் தானே ஏற்றுக்கொள்ள முன் வந்தார்.

“ஏதாச்சும் செஞ்சாகணும் பிரெஸிடென்ட்...”

பதிலுக்குக் கூடக் காத்திருக் காமல் போனைத் துண்டித்தார்.

“இன்னைக்கு இரவே நாம செயல்படணும். இப்பவே…” ஜெனரலுக்கு உத்தரவிட்டார் மெண்டோசா. ஆனாலும் தளபதி தயங்கினார்.
அவர் தயங்குவதைப் பார்த்த மெண்டோசா, சிறை வளாகத்துக் குள் சென்றார். 

“செனோர் வைஸ் மினிஸ்டர்… வெல்கம்” என்று அவரை வரவேற்றார், சிறை வளாகத்துக் குள்ளிருந்த கேப்டன். அரசு அதிகாரிகள் உள்ளே வந்தால், அவர்களுக்குச் சிறைத் தகவலைத் தருவது அவரின் வழக்கம். இந்த நிமிடம், இவ்வளவு பேர், இவ்வளவு ஆயுதங்களுடன், இங்கே இருக்கிறார்கள் என்று அவரிடம் ஒரு கணக்கைச் சொன்னார் கேப்டன். 

“ஆனா, எல்லோரும் அமைதியா இருக்காங்க...”

அந்த ‘அமைதி’ என்ற சொல், மெண்டோசாவைக் கலக்க மூட்டி யது. அவரது உடல் நடுங்கியது. குளிரால் அல்ல. பாப்லோவை நேருக்கு நேர் சந்திக்கப் போகிறோம் என்ற அச்சம்தான். 

அந்தச் சிறை வளாக செக் போஸ்ட்டில் இருந்து பாப்லோ தங்கியிருக்கும் அறைக்கு, கரடு முரடான பாதையில் ஜீப்பில்தான் செல்ல வேண்டும். அவரும் சிறைத்துறை இயக்குநர் கர்னல் ஹெர்னாண்டோ நவாஸ் ரூபி யோவும் சென்றார்கள். பாப்லோ தங்கியிருந்த அந்தக் கட்டிடத்தில் ஒரே ஒரு பல்பு மட்டும் எரிந்து கொண்டிருந்தது.

பதுங்குதலே சிறந்த ஆயுதம்..!

பாப்லோவின் சிகாரியோக்களிடம் அன்றைய காலத்தின் லேசர் வசதி கொண்ட ’கோல்ட் ஏ.ஆர்.-15’ துப்பாக்கிகள், ’ஹெக்லர்’ இயந்திரத் துப்பாக்கி, ’பியெத்ரோ பெரெட்டா’ போன்ற அதிநவீன துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தனர். என்றாலும், சிறைக்குள், தனக்கென்று எந்த ஆயுதத்தையும் பாப்லோ வைத்துக்கொள்ளவில்லை. தன்னைச் சுற்றியிருக்கும் தன் அடியாட்களே தனக்கான பாதுகாப்பு என்று நம்பினான்.

லா கதீட்ரல் சிறையைச் சுற்றி அடர்ந்த மரங்கள் இருந்தன. உள்ளே சென்றால், நீண்டு கொண்டே செல்லும் விஸ்தீரனமான காடு. பகல் நேரத்தில் கூட, டார்ச் அடித்துக்கொண்டுதான் செல்ல வேண்டும். அப்படியான காட்டுக்குள் மரங்களுக்கிடையில் மரத்தால் செய்யப்பட்ட சின்னச் சின்ன கேபின்கள் இருந்தன. ஒரு ஆள் படுத்து உறங்கும் அளவுக்கான கேபின்கள் அவை. எல்லாம் பாப்லோவின் ஏற்பாடுதான். 

கொலம்பிய அரசு தன்னை எப்போது வேண்டுமானாலும் கொலை செய்யலாம் என்பதை பாப்லோ உணர்ந்திருந்தான். ஏதேனும் ஒரு சமயத்தில் திடீரென்று அந்தச் சிறையின் மீது குண்டு வீசப்படலாம் அல்லது ராணுவத்தினர் உள்ளே நுழையலாம் என்று கருதிய பாப்லோ, அப்படி ஒரு சம்பவம் நடந்தால், மிக விரைவாகப் பதுங்கிக் கொள்வதற்கு ஒரு இடம் தேவை என்பதை உணர்ந்தான்.

அதனால்தான் அந்தக் காட்டில் இப்படி ஒரு ஏற்பாடு. இந்த ஏற்பாடு பாப்லோவின் ஆட்கள் பலருக்கே தெரியாது. மேலும், காட்டின் மீது குண்டு போட்டு தங்கள் ஆயுதங்களை கொலம்பிய ராணுவத்தினர் வீணடிக்க மாட்டார்கள் என்று நம்பியதாலும் பாப்லோ இப்படி ஒரு விஷயத்தைச் செய்தான். அந்த ஏற்பாடு சில சமயங்களில் அவனுக்கு உதவின.

(திகில் நீளும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in