கண்ணான கண்ணே..!  - 16

கண்ணான கண்ணே..!  -  16

இந்த பூமி அழகியல் ததும்பும் இடம். ஆனால், இதில் பதின்பருவத்தில் பயணம் செய்வது என்பது மட்டும் பெரிய சவாலாகவே இருக்கிறது. பதின்ம வயது ஏன் இத்தனை சவால் நிறைந்ததாக இருக்கிறது தெரியுமா? அந்த வயதில்தான் நாம் நமது தடத்தைத் தேடுகிறோம். இந்த உலகத்தில் நாம் யார் என்ற அடையாளத்தை அடைய விரும்புகிறோம்.

இந்த உலகமே நமக்கு ஒரு தேநீர்க் கோப்பை போன்றதுதான். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் அந்தக் கோப்பையில் நிரப்பப்படும்.



நான் யார் என்பதை உண்ணும் உணவு, உடுத்தும் உடை, பேசும் மொழி ஆகியவற்றை வைத்து நீங்களே தீர்மானிக்கும்போது நீங்கள் உங்களை அறிந்திருப்பீர்கள். அதன் பின்னர் உங்களுக்கு அந்தச் சுயத்தைத் தவிர வேறு எதுவும் இச்சையூட்டுவதாக இருக்காது.

பதின்ம வயது இத்தனை சுகங்கள் நிறைந்தது. அந்தப் பயணம் உண்மையிலேயே சுகமானதாக சுவாரஸ்யமானதாக இருக்க வேண்டுமென்றால் உணவுப் பழக்கத்தைச் சீராக வைத்துக்கொள்ளுங்கள்.

அன்னம்தான் ஆனந்தத்துக்கான வழி என்று முதல் அத்தியாயத்திலேயே வலியுறுத்தியிருக்கிறேன். ஆதலால் உங்கள் உண
வுப் பழக்கத்தை இந்தப் பதின்ம வயதில் சீராக்குவீர்.

இன்றைய காலகட்டத்தில் பதின் வயது: ஒரு பார்வை… என்னுடைய காலகட்டத்தில் பதின்ம வயதுப் பயணம் ஆர்வமும் தேடலும் நிறைந்ததாக மட்டுமே இருந்தது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் பதின்ம வயதுப் பயணத்தில் பருவநிலை மாற்ற சவால்களையும் அதன் தாக்கங்களையும் அதிகமாகவே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

மாறிவரும் பருவநிலையால் விதவிதமான நோய்கள் தாக்குகின்றன. ஆரோக்கியத்தைக் கட்டமைக்கும் பதின்ம வயதில், தொற்றா நோய்கள் உடல் உள் உறுப்புகளைப் பதம் பார்க்கின்றன. குடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் காலநிலை மாற்றத்தால் அருகிவருவதால் அவற்றைக்கூட புரோபயோடிக் ட்ரிங் (PROBIOTIC DRINK) மூலம் உடலில் சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனையளிக்கிறது.

சர்க்கரை நோய், இதய நோய், இதய நாள தமணிகளைத் தாக்கும் நோய், புற்றுநோய், மன அழுத்தம் என பதின்ம வயதிலேயே பல்வேறு நோய்கள் ஆட்கொண்டுவிடுகின்றன. ஆனால், இவற்றையெல்லாம் நிச்சயம் வெல்ல முடியும். எதை உண்ண வேண்டும் என்பதைவிட எதை உண்ணவே கூடாது என்பதை அறிந்துகொள்வது மிக மிக முக்கியம்.

12 வயது முதல் 15 வயது குழந்தைகளுக்கான டாப் 3 உணவுகள் என்னென்ன?

அ. பருப்பு நெய் சாதமும், காய்கறிக் கூட்டும்

இந்தப் பப்பு சாதமெல்லாம் எங்க வீட்டுப் பாப்பாதான் சாப்பிடும் என நினைக்காதீர்கள். இரவு உணவில் கட்டாயமாக அரிசி சாதம், பருப்பு, நெய், காய்கறி கூட்டு இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இவற்றில் இருக்கும் அபரிமிதமான அமினோ அமிலம் உங்கள் உடல் வளர்ச்சிக்கு உந்துசக்தியாக இருக்கும். அதுமட்டுமல்லாமல் செரிமானத்தைச் சீராக்கி இரவுத் தூக்கத்தை இதமாக்கிக் கொடுக்கும். தினமும் அரிசி சாதமும் பருப்பும் திகட்டுகின்றன என்றால், பருப்புடன் சப்பாத்தி, கோதுமை பரோட்டா என மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், நிச்சயமாகக் காய்கறிக் கலவையை மறந்துவிடாதீர்கள். சில இரவுகளில் வெறும் பருப்புக் கடைசலுக்குப் பதில் முளைகட்டிய தானியக் கடைசலை எடுத்துக்கொள்ளலாம். அப்புறம், நீங்கள் சாப்பிடும் காய்கறி உள்ளூர் உற்பத்தி வகையறாவாக இருப்பது அவசியம். ப்ரோகோலி சூப் என்று வெளிநாட்டு உணவுக்குச் சென்றுவிடாதீர்கள்.

எப்படிச் சாப்பிட வேண்டும்?

பதின்ம வயதுப் பிள்ளைகள் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? கையில் செல்போன் அல்லது தொலைக்காட்சி மீது கண் என்று தட்டைத் தேடித் தடவி சாப்பிட்டுக்கொண்டிருப்பார்கள். அப்படிச் சாப்பிடக் கூடாது. கையில் எவ்வித எலக்ட்ரானிக்ஸ் உபகரணமும் இருக்கக் கூடாது, சாப்பிடுவதில் எந்த நாகரிகமும் தேவையில்லை, வயிற்றுப் பசிக்கேற்ப சாப்பிடுங்கள். இரவு 8 மணிக்குள் சாப்பிட்டுவிடுங்கள். அப்புறம், இரவில் அரிசி உணவு இருப்பதை உறுதிசெய்யுங்கள்.

எனது க்ளையன்ட் கரீனா கபூரின் தட்டையான வயிற்றுக்குக் காரணம் என்ன தெரியுமா? அவர் இரவு உணவில் அரிசியைத் தவிர்க்கவே மாட்டார். ‘வீரே தீ வெடிங்’ படத்தில் நடிப்பதற்கு முன்னதாக, தட்டையான வயிறுக்காக என்னிடம் அவர் ஆலோசனை கேட்டபோது, இரவு உணவில் அரிசியைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்றுதான் அவருக்குப் பரிந்துரைத்தேன்.

உங்களுக்கு இன்னொரு வாய்ப்பும் தருகிறேன். தினமும் வெள்ளை சாதம் படு போர் என்று நீங்கள் நினைத்தால். ஏதாவது கிச்சடி, புலாவ், காய்கறி பிரியாணி என மாற்றிக்கொள்ளுங்கள். ஆனால், அது ரொம்ப காரசாரமாக, எண்ணெய்ப் பிசுபிசுப்புடன் கூடியதாக இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

ஆ. முந்திரியும் உலர் திராட்சையும்

முந்திரிப் பருப்பா? அது கொழுப்பாயிற்றே என்பதுதான் முதல் கேள்வியாக உங்களுக்கு உதிக்கும். ஆனால், நம்மில் பலருக்கும் முந்திரிப் பருப்பு தாது சத்துகளும், குறிப்பாக இரும்புச் சத்தும், மக்னீஸிய சத்தும் அதிகமாகக் கொண்டது என்பது தெரியாது.

முந்திரிப் பருப்பில் உள்ள நுண் ஊட்டச்சத்துகள் உடல் வலி, மூட்டு வலி, தசைப் பிடிப்புகளைச் சரிசெய்யக்கூடியவை. முந்திரிப் பருப்பில் பூஜ்ஜிய மில்லிகிராம்கூட கொழுப்பு இல்லை என்பதே நிதர்சனம். ஆனால், முந்திரி என்றால் கொழுப்பு என்று நாம் நம்பவைக்கப்பட்டிருக்கிறோம். ஊட்டச்சத்து கற்பிதங்களில் இதுவும் ஒன்று. நுண் ஊட்டச்சத்துகளைத் தவிர முந்திரியில் உள்ள நச்சுகளை அகற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் தன்மை மிகவும் முக்கியமானது. அதனால், முந்திரியைத் தவிர்க்காமல் இருப்பது நல்லது.

முந்திரியைப் பற்றிய தவறான புரிதல்களிலிருந்து விடுபடுவது அதைவிடவும் நல்லது.

பதின்ம வயதில் இனிப்பு சுவை பெருஞ்சுவையாக இருக்கும். எப்போதெல்லாம் இனிப்புக்கான ஆவல் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் கொஞ்சம் உலர் திராட்சைகளைச் சுவைக்கலாம். இரும்புச் சத்து, வைட்டமின் பி-6, பொட்டாசியம் இவைதான் உலர் திராட்சையின் சிறப்பு. அதுமட்டுமல்ல... நெஞ்செரிச்சல், வயிறு உப்புசம், ஒற்றைத் தலைவலி ஆகிய உபாதைகளையும்கூட உலர் திராட்சைகள் சரிசெய்யும்.

பெண் பிள்ளைகளுக்கு மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் வயிற்று வலியிலிருந்து விடுபட உலர் திராட்சைகளைக் கொடுக்கலாம். தினமும் கொஞ்சம் முந்திரியும், உலர் திராட்சையும் சாப்பிடுவது பள்ளிக்கூட அழுத்தத்தைக்கூட போக்கும் நிவாரணியாக இருக்கும்.

எப்படிச் சாப்பிடுவது?

பள்ளியில் காலை இடைவேளை நேரத்தில் கொஞ்சம் முந்திரியும் கொஞ்சம் உலர் திராட்சையும் கொறிக்கலாம். அல்லது பள்ளியிலிருந்து வீட்டுக்குப் பொடி நடையாகத் திரும்பும்போது ருசிக்கலாம். நீண்ட நேரம் படிக்கும்போது உலர் திராட்சையும் முந்திரியும் உற்சாகம் தரும். காஃபீன் நிறைந்த காபி போன்ற பானங்களைக் காட்டிலும் மூளைக்கு இயற்கையாகப் புத்துணர்ச்சி தரவல்லவை இவை. விசேஷ நாட்களில் அல்வாவில் இவற்றைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.

இ. தினம் தினம் விதவிதமாகச் சட்னி

அட, அதைத்தான் என் அம்மா தினமும் செய்கிறார். சாஸும், கெட்ச்-அப்பும் தர மறுக்கிறார் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் உங்கள் அம்மா உங்களுக்குச் சிறப்பாக உணவைத் திட்டமிட்டிருக்கிறார் என்று அர்த்தம். பதின்ம வயதில் நுண் ஊட்டச்சத்துக் குறைபாடுகளைப் போல் ஹிடன் ஹங்கர் (மறைமுகப் பசி) என்ற ஒரு பிணி தாக்குகிறது. ரத்தசோகை, வைட்டமின் டி குறைபாடு, வைட்டமின் பி12 குறைபாடு உள்ளவர்களை மறைமுகப் பசிப் பிணி கொண்டவர்கள் என நாங்கள் வகைப்படுத்துகிறோம்.
பசியைவிட இந்த மறைமுகப் பசிப் பிணி மனித வாழ்வின் இன்பத்தை அனுபவிக்கவிடாமல் மதிற் சுவராக அமைந்துவிடுகிறது.

இதன் நீட்சியாக உடல் பருமன், இருதய நோய், சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு போன்ற பல்வேறு தொற்றா நோய்கள் ஆட்கொள்ளத் தொடங்குகின்றன. பதின்ம வயதிலிருந்து அடுத்த பருவத்துக்குச் சென்றவுடனேயே இந்த நோய்களின் தாக்கம் வெளிப்பட்டுவிடுகின்றன.

பாரம்பரிய முறையில் சாப்பிடுவோமேயானால் இத்தகைய மறைமுகப் பசிப் பிணிக்குள் நாம் சிக்க மாட்டோம் என்பது நூறு சதவீதம் உறுதியான விஷயம். இந்திய உணவு வகைகளில் சட்னிகளுக்குச் சிறப்பிடம் இருக்கிறது. நம்மூரில் மட்டும்தான் இலை, தழை, பருப்பு வகைகள், பயறு வகைகள், தேங்காய், தக்காளி, கீரை என பற்பல வகையில் சட்னி செய்கிறோம். ஏன் மரப்பட்டைகள் மற்றும் வேர்களில் இருந்துகூட சட்னி செய்யும் பழக்கம் இங்கிருக்கிறது. எள்ளுச் சட்னி, கொள்ளு சட்னி, ஆளிவிதை சட்னி என்று சொல்லும்போதே வாசம் ஆட்கொள்ளும். கர்நாடகத்தில் உடுப்பி உணவகங்களில் செம்பருத்தியை வைத்துக்கூட சட்னி செய்கிறார்கள். இந்தச் சட்னி வகைகள் எல்லாம் நுண்ணூட்டச் சத்து நிறைந்தவை.

இவற்றைக் காலைச் சிற்றுண்டி, மதியம் அரிசி சாதத்துடன், இரவு உணவுடன் என எந்த வேளையிலும் சாப்பிட இயலும். இட்லி, தோசை, சப்பாத்தி, பரோட்டா என விதவிதமான உணவுகளுக்குத் தொட்டுக்கொள்ளலாம். இன்னொரு விஷயம் சொல்லட்டுமா?

இப்படி விதவிதமாக சட்னி வகைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் பதின்ம வயது பெண் பிள்ளைகளின் முகத்தைப் பருக்கள் பதம் பார்க்கவே பார்க்காது. ரத்த சர்க்கரை அளவு சீராக இருக்கும். கடலை சட்னியையும் பாதாம் சட்னியையும்கூட ஒருகை பார்க்கலாம். உங்கள் தேகத்தைக் கட்டுக்கோப்பாக வைக்கும். சாண்ட்விச்சில் கடைகளில் கிடைக்கும் சாஸைவிட வீட்டில் செய்யும் புதினா சட்னியைப் புகுத்திப்பாருங்கள். சட்னியைத் தாளிதம் செய்ய நாம் பயன்படுத்தும் அரைத் தேக்கரண்டி கடுகு எண்ணெய்யோ, நல்லெண்ணெய்யோ அல்லது கடலை எண்ணெய்யோகூட உடலுக்கு நலம் சேர்க்கக்கூடியதே.

பன்னிரெண்டு வயதிலிருந்து பதினைந்து வயது வரையிலான குழந்தைகளுக்கான டாப் 3 உணவு வகைகள் இவை மட்டும்தான் என்று கூற மாட்டேன். ஆனால், இவை எடுத்துச் சொல்வதற்குச் சிறந்த உதாரணங்கள். எளிமையாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடியவை என்பதால் இவற்றைப் பட்டியலிட்டுள்ளேன். உங்கள் பதின் பருவப் பிள்ளைகளை இந்த உணவுப் பழக்கவழக்கத்துக்குள் அவர்களின் ஒப்புதலோடு கொண்டுவாருங்கள்.

ஒரு முக்கியக் குறிப்பு

இதுவரை என்ன சாப்பிட வேண்டும் என்று பட்டியலிட்டேன் அல்லவா? இப்போது மிக முக்கியமான குறிப்பைப் பகிர்கிறேன். தயவுசெய்து வெளியில் உணவகங்களில், சாட் கார்னர்களில் சாப்பிடும் பழக்கத்தை வழக்கமாக்காதீர்கள். பெரும்பாலும் கடை உணவைத் தவிர்ப்பதே மிகவும் சிறந்தது. பீட்சா, பாஸ்தா, பர்கர் எல்லாம் அந்தந்த நாடுகளின் உணவுகளே தவிர நமக்கானவை அல்ல.

சில உணவகங்கள் உள்ளூர் உணவுகளைத் தரமாக தயாரித்து வழங்குகின்றன. எப்போதாவது உணவகத்தில் சாப்பிடும் ஆர்வமோ வாய்ப்போ கிடைத்தால் அப்படியான உணவகங்களைத் தேர்வுசெய்யுங்கள்.

ஒவ்வொரு முறையும் பீட்சா கார்னரிலும் பர்கர் பாயின்டிலும் பதின்ம வயதுப் பிள்ளைகள் எதையோ பேசிக்கொண்டு அந்த உணவு வகைகளை வேகமாக உள்ளே தள்ளுவதைப் பார்க்கும்போது அவர்களின் பெற்றோர் பிள்ளை வளர்ப்புப் பொறுப்பிலிருந்து விலகிவிட்டனர் என்றே தோன்றும்.

இன்றைய காலகட்டத்தில் 16, 17 வயதிலேயே வயதைத் தாண்டிய தோற்றத்துடன் குழந்தைகளைப் பார்க்க முடிகிறது. 15 வயது சிறுமி ஒரு குழந்தைக்குத் தாய் போன்ற உடல் மற்றும் முகத் தோற்றத்தில் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முறையற்ற உணவுப் பழக்கவழக்கத்தைத் தவிர வேறு காரணமே இல்லை. ஸ்லிம் என்று சொல்லப்படும் ஒல்லியான ஆரோக்கியமான தேகம் கொண்ட பிள்ளைகளைப் பார்ப்பதே இப்போது அரிதாகிவிட்டடது.

நம் ஒவ்வொருவரின் வயிற்றிலும் ஒரு நெருப்பு எரிந்துகொண்டிருக்கிறது. அந்த நெருப்பு பிரகாசமாக எரியட்டும். அப்படி எரிய வேண்டுமானால் உள்ளூர் உணவை, பருவத்தில் கிடைக்கும் உணவை, பாரம்பரிய உணவைச் சாப்பிடுங்கள். ஆரோக்கியமாக 
வாழுங்கள்!

(வளர்வோம்… வளர்ப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in