தலையங்கம்: `நிபா' அபாயத்தை வெல்வோம்!

தலையங்கம்: `நிபா' அபாயத்தை வெல்வோம்!

கடந்த ஆண்டைப் போலவே கேரளத்தை மீண்டும் அச்சுறுத்துகிறது நிபா வைரஸ். இதன் பாதிப்பு அண்டை மாநிலங்களிலும் பரவலாம் என்று எச்சரிக்கப்படுவதால் தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தருணம் இது.

எர்ணாகுளத்தில் கல்லூரி மாணவர் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது மே 30-ல், கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அவரும் அவரைச் சார்ந்த 300 பேரும் இப்போது தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். நிபா தாக்குதலுக்கு கடந்த ஆண்டு கேரளத்தில் 17 பேர் பலியானார்கள். நிபா வைரஸால் பாதிக்கப்படுகிறவர்களின் இறப்பு விகிதம் 89 சதவீதம் என்று கடந்த ஆண்டு அனுபவத்திலிருந்து தெரியவந்திருக்கிறது.

கடந்த முறை தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதால் நிபா தாக்குதலுக்கு தமிழகம் தப்பியது. இந்நிலையில், இந்த முறையும் தமிழகத்தில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்துவருவதாக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உறுதியளித்திருக்கிறார். தமிழக - கேரள எல்லை மாவட்டங்களில் சிறப்பு மருத்துவக் குழுக்கள், சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டு அறைகள் என்று பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசு கூறுகிறது.

அது மட்டும் போதாது. காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு, சுவாசப் பிரச்சினைகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால், வீட்டிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து மருத்துவமனைகளை அணுகுவது, விலங்குகள் கடித்த பழங்களைச் சாப்பிடாமல் தவிர்ப்பது என்று மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் தகவல்கள் பரவலாகச் சென்றடையச் செய்ய வேண்டும். இதுபோன்ற பாதிப்புகளுக்கான நிரந்தர மருத்துவப் பிரிவுகள், ஆராய்ச்சி மையங்களையும் தாமதிக்காமல் தொடங்க வேண்டும்.

பொது சுகாதாரத்தில் பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக திகழும் தமிழகம், இதுபோன்ற நடவடிக்கைகளில் காத்திரமாக இறங்கும் என்றும், இந்த முறையும் நிபா அபாயத்தை வெல்லும் என்றும் நம்புவோம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in