வனமே உன்னை வணங்குகிறேன்..! 13 - புலிகளைக் காக்கும் பூங்கா

வனமே உன்னை வணங்குகிறேன்..! 13 - புலிகளைக் காக்கும் பூங்கா

“பிறர் வாழ்வதற்கான மகிழ்ச்சியான இடமாக இந்த உலகை மாற்று…” 
- வேட்டை இலக்கியத்தில் குறிப்பிடத்தக்கவராக அறியப்படும் ஜிம் கார்பெட், ‘மர உச்சிகள்’ (Tree Tops) என்ற தனது கடைசிப் புத்தகத்தில் எழுதிய இறுதி வார்த்தைகள் இவை.

ஜிம் கார்பெட் தனது வாழ்நாளில் பல ஆட்கொல்லிப் புலிகள், சிறுத்தைகளைக் கொன்றிருக்கிறார். 436 பேரைக் கொன்ற சம்பாவாத் என்ற புலியையும், 400 பேரைக் கொன்ற சிறுத்தையையும் அவர் கொன்றார். அதனால்தான், உத்தராகண்ட் மாநிலத்தின் குமாவுன் மலைப்பகுதி மக்களால் அவர் இன்றளவும் குலதெய்வத்துக்கு நிகராகக் கொண்டாடப்படுகிறார். ஆட்கொல்லிப் புலிகள் பகலிலும், ஆட்கொல்லிச் சிறுத்தைகள் இரவிலும் மனித வேட்டையில் ஈடுபடும் என்பதையும் ஜிம் கார்பெட் கண்டறிந்து தனது நூலில் ஆவணப்படுத்தியிருக்கிறார். ஆட்கொல்லிப் புலிகள் தவிர மற்ற புலிகளை அவர் கொன்றதில்லை என்றே சொல்லப்படுகிறது.

ஈர இலையுதிர் காடு

இந்த வாரம் நாம் புலிகளின் கதைகளை இமயமலை அடிவாரத்தில் உத்தராகண்ட் மாநிலத்தில் நைனிடால், பவுரி கார்வால் என இரண்டு மாவட்டங்களில் அமைந்துள்ள ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவிலிருந்து கேட்போம். இது இந்தியாவின் முதல் தேசியப் பூங்கா மட்டுமல்ல, புலிகளைக் காப்பதற்காக அரசு கொண்டுவந்த ‘ப்ராஜெக்ட் டைகர்’ திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்ட முதல் பூங்காவும்கூட. இன்று இது இந்தியாவின் மிகப் பிரபலமான சூழல் இணக்கச் சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
ஈர இலையுதிர் காட்டு வகைக்குள் அடங்கும் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில், ஜூலை முதல் செப்டம்பர் வரை கடுமையான மழைக்காலம் என்பதால், மற்ற மாதங்களில்  இங்கு சென்றுவரலாம். நவம்பர் முதல் ஜூன் வரை மக்கள் பார்வைக்காக பூங்கா திறந்திருக்கும்.

110 வகை அரிய மரங்கள், புலி, சிறுத்தை, யானை, காட்டுப்பன்றி, கரடி, மான் வகைகள், முதலைகள் உள்ளிட்ட ஊர்வன, ஐநூற்றுக்கும் மேற்பட்ட பறவையினங்கள் என நீங்கள் உள்ளே நுழைந்தது முதல் திரும்பும்வரை கண்கள் விரிந்திருக்கும் வகையில் ஆச்சரியங்களை அள்ளிக்கொடுக்கும் பூங்கா இது.

மோடி விசிட்டும் பார்வாலியின் கதையும்

இந்த ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில்தான் அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்ட ‘மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற நிகழ்ச்சி படமாக்கப்பட்டது. வனப் பயணத்தைத் தொடங்கும் முன் விலங்குகளால் நேரும் ஆபத்தைத் தொகுப்பாளர் பேர் க்ரில்ஸ் சுட்டிக்காட்டியபோது, “நாம் இயற்கைக்கு உறுதுணையாக இல்லாவிட்டால் அது நமக்கு ஆபத்தானதாக அமைந்துவிடும்” என்ற கருத்தைப் பதிவு செய்தார் பிரதமர்; அது உண்மையும்கூட.

மோடி இங்கு வந்துசென்ற பின்னர் இந்தப் பூங்கா இன்னும் அதிகக் கவனம் பெற்றுள்ளது. பூங்காவின் மிகப் பிரபலமான பெண் புலி பார்வாலி. அது குறித்து செந்தில் குமரன் சொல்வதைக் கேளுங்கள்:

"நான் 2019 பிப்ரவரியில் ஜிம் கார்பெட் பூங்காவுக்குச் சென்றிருந்தேன். கடுமையான குளிர். இருந்தாலும் வனத்தின் வனப்பு என்னை பார்வாலியைப் பார்த்துவிட வேண்டும் என்று உந்தித்தள்ளியது. ஏனெனில் வனக்காவலர்கள் பார்வாலியின் அழகைப் பற்றிச் சொல்லியிருந்தனர்.

ராம்கங்கா நதியின் ஒரு புறம் திக்காலோ ஜோனும் மறுபுறம் பாரோ என்ற பாறைகள் நிறைந்த பகுதியும் உள்ளன. பார்வாலி என்ற பெண் புலி, நதிக்கு அடுத்துள்ள பாறைகள் நிறைந்த பகுதியைத்தான் தனது எல்லையாக வரையறுத்து வைத்துள்ளது. அதனால்தான் அதன் பெயர் பார்வாலி (பாறைகளில் வசிப்பவள்). ராயல் பெங்கால் வகையைச் சேர்ந்த புலி இது. இதுவரை 3 முறை குட்டிகளை ஈன்ற பார்வாலியால் முதல் 2 பிரசவங்களில் பெற்ற 6 குட்டிகளையும் காப்பாற்ற இயலவில்லை. மூன்றாவது முறையாக 3 குட்டிகளை ஈன்றது. இப்போது அவற்றிற்கு இரண்டரை வயதாகிவிட்டது. அவை மூன்றும் தனித்தனியாகப் பிரிந்துசெல்லும் அளவுக்கு வளர்ந்துவிட்டன.

தரிசனம் தந்த புலி

பார்வாலி எங்கள் கண்ணில் பட்டுவிடாதா என்று ஆர்வத்துடன் பயணப்பட்ட எங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் வாய்த்தது. எல்லோரும் சொன்னதுபோல் மிகவும் அழகாக இருந்தது பார்வாலி. நாங்கள் பார்த்தபோது அதன் வாயில் ஒரு மான் குட்டி இருந்தது. அதைக் கவ்விக்கொண்டு புதர் மறைவில் இருந்த குட்டிகளிடம் கொண்டு கொடுத்தது. சிறிது நேரத்தில் தண்ணீர் குடிக்க குட்டிகளை அழைத்துச் சென்றது.

நான் எப்போதுமே வனத்துக்குள் விலங்குகளைப் பார்த்துவிட்டால் முதலில் அவற்றை என் கண்களால் ரசிப்பேன். அதன் பின்னரே கேமராவைக் கையில் எடுப்பேன். நீங்கள் பார்க்கும் அந்தத் தருணத்தில் அந்த விலங்கும் உங்களை நேருக்கு நேர் பார்க்கும், சில நேரங்களில் உற்று நோக்கும். அந்தப் பார்வைப் பரிமாற்றம், இயற்கைக்கு நீங்கள் என்றுமே தீங்கு செய்யாத வகையில் உங்களைச் செம்மைப்படுத்திவிடும். வனத்தை கண்களால் தரிசியுங்கள். தேவைப்பட்டால் மட்டுமே அவற்றை புகைப்படமாக எடுங்கள். பார்வாலியைப் போலவே கார்பெட் பூங்காவில் க்ராஸ்லாண்ட் ஃபீமேல் என்ற பெண் புலி இருக்கிறது. இந்தப் புலிக்கும் 2 குட்டிகள் இருக்கின்றன. அவற்றையும் காணத் தவறாதீர்கள்" என்கிறார் செந்தில்.

வனக் கதைகளைப் படங்களாகக் காண செந்தில் குமரனின் (https://www.facebook.com/N.Senthilkumaran)  என்ற ஃபேஸ்புக் பக்கத்திலும், இன்ஸ்டாகிராமில் (https://www.instagram.com/p/B0lIxPqBfyB/?igshid=rfc8co2ex6q3) என்ற முகவரியிலும் இணைந்திருங்கள்.

ப்ராஜக்ட் டைகர்: ஏன், எதற்கு?

பென்ச், நாகர்ஹோளே, ஜிம் கார்பெட் என புலிகள் காப்பகங்களை நாம் மூன்று வாரங்களாகச் சுற்றி வந்துள்ளோம். புலிக் கதைகளைக் கேட்டதோடு கடந்துவிடாமல் புலிகளின் அவசியத்தை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளுங்கள். புலிகள் திட்டம் பற்றி எடுத்துக் கூறுங்கள்.

பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சட்டப் பொதுக்குழு கூட்டம் 1969-ல், டெல்லியில் நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் புலிகள் உட்பட பல உயிரினங்கள் அழியும் ஆபத்தில் உள்ளன என அறிவுறுத்தப்பட்டது. இதற்கான நடவடிக்கையாக, இந்திய வன விலங்குகள் வாரியத்தின் ஆலோசனையின் அடிப்படையில் 1970-ல், வன விலங்கு வேட்டை முதலில் தடை செய்யப்பட்டது. 1972-ல், வன விலங்குப் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.

புலிகளைப் பாதுகாக்க, அவற்றின் வாழ்வாதாரங் களைத் தூய்மை கெடாமல் மீட்டெடுக்க 1973 ஏப்ரல் 1-ல், கார்பெட் தேசிய பூங்காவில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ‘ப்ராஜெக்ட் டைகர்’ எனும் திட்டத்தைத் தொடங்கிவைத்தார். இப்படித்தான் புலிகள் திட்டம் உருவானது, இதையெல்லாம் நண்பர்களுக்கு எடுத்துரையுங்கள்.

1973-ல், இந்தியாவில் 1,872 புலிகள் மட்டுமே இருந்தன. 2018-ல், எடுக்கப்பட்ட புலிகள் கணக்கெடுப்பில் 2,967 புலிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. புலிகளின் எல்லை 93,697 சதுர கிலோமீட்டரில் இருந்து 2018-ல், 3.5 லட்சம் சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது. புலிகளின் எல்லை விரிவடைவது வனத்தின் செழிப்பு மேலோங்குவதற்கு அடையாளம்.

அடுத்த வாரம் மற்றுமொரு சூழல் இணக்கச் சுற்றுலா மையத்தில் சந்திப்போம்.

படங்கள் உதவி: ந.செந்தில் குமரன்

(பயணம் தொடரும்…)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in