ஹாட் லீக்ஸ்- கிஷோர் கிலியில் திமுக தலைகள்!

ஹாட் லீக்ஸ்- கிஷோர் கிலியில் திமுக தலைகள்!

கிஷோர் கிலியில் திமுக தலைகள்!

திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுக்கும் பொறுப்பை பிரசாந்த் கிஷோர் ஏற்றிருப்பது அந்தக் கட்சியிலுள்ள பல மூத்த தலைகளின் தூக்கத்துக்கு வேட்டு வைத்திருக்கிறது. இப்போதைக்கு திமுகவில் முக்கிய முடிவுகள் அனைத்துமே துர்கா ஸ்டாலினின் விருப்பப்படியே எடுக்கப்படுவதாக ஒரு செய்தி. துர்காவோ எ.வ.வேலு சொல்வதைத்தான் கேட்கிறாராம். இதுவும் போதாதுக்கு, துர்காவின் தங்கை ஜெயந்தியும் இப்போது கிச்சன் கேபினெட் அரசியல் செய்கிறாராம். இந்த நிலையில், பிரசாந்த் கிஷோர் டீமும் உள்ளே வருகிறது. கட்சிக்குள் யாரையெல்லாம் கட்டம் கட்ட வேண்டும் என திமுக தலைமை ஸ்கெட்ச் போடுகிறதோ அவர்கள் எல்லாம் இனி ஒவ்வொருவராக கழற்றிவிடப்படுவார்களாம். யாராவது காரணம் கேட்டால், “பிரசாந்த் கிஷோர் டீம் தந்த ரிப்போர்ட் படிதான் இந்த நடவடிக்கை” என்று தயக்கமில்லாமல் சொல்லப் போகிறார்களாம்.

உண்மையைச் சொன்னது குத்தமாங்க?

குமரி கிழக்கு, மேற்கு மாவட்டங்களின் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடந்த 3-ம் தேதி நாகர்கோவிலில் கூடியது. இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சியின் மாநில மீனவரணி தலைவர் சபீன், “குமரி கிழக்கு மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் வசந்தகுமார் எம்பி-யின் ஆதரவாளர்களுக்கு தான் அதிக அளவில் சீட் கொடுத்தீர்கள். அப்படியிருந்தும் ஜெயிக்க முடியவில்லையே... ஏன் என்று யோசித்தீர்களா? மக்களோடு நெருக்கமில்லாதவர்களுக்கு சீட் கொடுத்தால் இப்படித்தான் நடக்கும்” என்றார். இப்படிப் பேசிவிட்டு கீழே இறங்கிய அவரை ஒரு கும்பல் ரவுண்டுகட்டி தாக்கி மண்டையை உடைத்தது. இருந்தாலும் போலீஸுக்கு போகமுடியாதபடிக்கு சபீனை மேலிடத் தலைவர்கள் சமாதானம் செய்துவிட்டார்களாம். இந்த விஷயம் பாஜக தரப்புக்குத் தெரியவே, ‘அஞ்சு வருசமா ஒரு மீனவரைகூட தாக்காம பாத்துக்கிட்ட பொன்னார் எங்கே... ஓட்டுப் போட்டவனையே போட்டுத் தாக்கும் வசந்தகுமார் கூட்டம் எங்கே?’ என்று சமூக வலைதளத்தில் கண்டபடி வாரிக் கொண்டிருக்கிறார்கள். கடைசியாக கிடைத்த தகவல்; சபீனை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கியிருக்கிறது காங்கிரஸ் தலைமை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in