அர்ப்பணிப்பான எழுத்து

அர்ப்பணிப்பான எழுத்து

கணேசகுமாரன்
ganeshkumar.k@kamadenu.in

40 வருடங்களுக்கும் மேலாக கதை உலகில் இயங்கும் சாரு நிவேதிதாவின் சிறுகதைக்கான ஆதிக்கத்தை நினைவூட்டும் விதமாக ந. முருகேச பாண்டியன் தொகுத்திருக்கும் இச்சிறிய படைப்புக்கு மென்மை வரவேற்பும் வாழ்த்துகளும். சாரு  என்றாலே சட்டென்று நினைவுக்கு வருவது ஜீரோ டிகிரி, எக்ஸைல் என்று நாவல் வரிசைகளும் கட்டுரைகளும் இருக்க இனிமேல் முள் சிறுகதையும் வாசகரின் நினைவுக்கு வருவது இத்தொகுப்பின் வெற்றி எனலாம். எழுத வந்த புதிதில் சாரு சிறுகதைகளில் முயன்றிருக்கும் துணிச்சல் செயல்பாடுகளை எண்ணும்போது ஆச்சரியம் பீறிடுகிறது. குறிப்பாக முள் சிறுகதையில் அத்தைக்கும் அச்சிறுவனுக்கும் இடையில் இருக்கும் உறவின் ஊசலாட்டத்தை முள் நுனியில் கையாண்ட விதம் இப்போதைய கதையாளர்களுக்கு சவால் விடுகிறது.

தற்போதைய சாருவின் கலகக்குரலுக்கு அடித்தளம் போல் இருக்கிறது ‘கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொல்லிக்கொண்டது’ கதை. கதை தொடங்கியதிலிருந்தே உள்ளே வாசகனை இழுக்கும் உத்தியில் சரளமான எழுத்து நடையில் ரசனையாய் வெல்கிறார் சாரு. திடீரென்று டெல்லி வீதியில் கதைசொல்லி கதையை மாற்றும் இடத்தில் நான் லீனியர், பின் நவீனத்துவம் போன்ற உத்திகளை எத்தனை அநாயசமாக எழுத்தாளர் உள் நுழைத்திருக்கிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. ‘எழுதுகிறவனின் பங்கு ஐம்பது சதவீதம்தான். மீதியெல்லாம் வாசிப்பவனுடையது’ என்று கதையில் வரும் வரி வாசிக்கையில் இப்போதுள்ள எழுத்துச் சூழலின் சகிப்புத்தன்மை நினைத்து பெருமூச்சு விடத் தோன்றுகிறது.

 ‘நட்சத்திரங்களிடமிருந்து செய்தி கொண்டு வந்தவர்களும் பிணந்தின்னிகளும்’ என்ற தலைப்பில் ஒரு கதை. சொல்லப்போனால் இது கதை அல்ல. நெக்ரோஃபீலியா என்ற அதீத உணர்வு குறித்த விளக்கத் தொகுப்பு. சாரு வெல்வது எந்த இடத்தில் என்றால் முதல் வார்த்தையிலிருந்து இறுதி வார்த்தை வரை வாசகனை இமைக்க விடாமல் வாசிக்கச் செய்த எழுத்து சுவாரசியத்தில். பத்து பக்க சுவாரசிய விளக்கத்துக்கு அவர் உழைத்திருக்கும் உழைப்புக்கு சல்யூட் வைக்கத் தோன்றுகிறது. நாவலுக்கும் கட்டுரைகளுக்கும் மெனக்கெடும் இப்போதைய எழுத்தாளர்கள் சிறுகதைக்கு இந்த அளவுக்கான தேடல் தருகிறார்களா என்பது கேள்விக்குறியே.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in