வனமே உன்னை வணங்குகிறேன்..! - 4: பரளிக்காட்டுப் பரிசல் பயணம்

வனமே உன்னை வணங்குகிறேன்..! - 4: பரளிக்காட்டுப் பரிசல் பயணம்

பரபரப்பான வாழ்க்கையிலிருந்து விடுபட்டு குடும்பத்தோடு இயற்கையை ரசிக்க விரும்புகிறீர்களா? பரளிக்காடு மிகச் சரியான தேர்வாக இருக்கும். அப்படி என்ன விசேஷம் பரளிக்காட்டில்?

பரளிக்காட்டில் பரிசலில் செல்லும்போது நீரில் நறுமணத்தை உணர முடியும். அறிவியல் ரீதியாக ஆதாரம் இல்லை என்றாலும், கரையெல்லாம் நிறைத்திருந்த பூமரங்களும், பூச்செடிகளும் இந்த நறுமணத்துக்கு வழிவகுத்திருக்கலாம் என்கிறார்கள் பரளிக்காட்டுப் பரவசப் பயணத்தை அனுபவித்தவர்கள்.

இத்தனை ரம்மியமான பரளிக்காடு எங்கிருக்கிறது? எந்தக் காலகட்டத்தில் செல்லலாம், எப்படிச் செல்வது என்பதைப் பார்க்கலாம், வாருங்கள்.

வாழ்க்கையை மாற்றிய சுற்றுலா

மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து வழிந்தோடி வந்து கோவை மாவட்டத்தின் மிக முக்கியக் குடிநீர் ஆதாரமாகத் திகழும் பில்லூர் அணையை நிரப்பும் அத்திக்கடவு ஆற்றங்கரையில் சுமார் 18 மலையோர கிராமங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் பரளிக்காடு.
12 ஆண்டுகளுக்கு முன்னர் பரளிக்காடு சுற்றுலாத் தலமாக இல்லை. அங்கு இருளர் இன மக்கள் வாழ்கின்றனர். வெகு இயல்பாக இயற்கையோடு இயைந்து வாழும் மக்கள் அவர்கள். கால்நடைகள், கோழிகள் வளர்க்கின்றனர். தேன் எடுத்தலையும் ஒரு தொழிலாக மேற்கொள்கின்றனர். ஆனால், அந்த வருமானம் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக்கூட போதுமானதாக இல்லை. பரளிக்காடு சூழல் இணக்கச் சுற்றுலாத் தலமான பிறகு அவர்களின் நிலைமை சற்றே மேம்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். அதற்குக் காரணம், 2007-ல் மாவட்ட வன அலுவலராகப் பதவியேற்ற அன்வர்தீன். இந்த மக்களின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்தும் நோக்குடன், பரளிக்காட்டைச் சூழல் இணக்கச் சுற்றுலாத் தலமாக மாற்ற அனுமதி பெற்றுச் செயல்படுத்தியிருக்கிறார் அவர்.

பரளிக்காடு பில்லூர் அணையின் பின் நிலை நீர் பகுதி என்பதால் அங்கு மோட்டார் பொருத்தப்பட்ட படகுகளை இயக்குவது நீராதாரத்தைச் சீரழிப்பதாகிவிடும் என்று உணர்ந்த அவர், பரிசல்களை இயக்க முடிவு செய்தார். அதன்படி 17 பரிசல்கள் வாங்கப்பட்டன. பரிசல்களை முறையாகப் பாதுகாப்பாக இயக்குவது பரளிக்காடு கிராமவாசிகளுக்குக் கைவந்த கலை. பெண்கள் இயக்கும் பரிசல்களும் இருக்கின்றன.

எப்படிச் செல்வது?

கோவை வனக் கோட்டம், காரமடை வனச்சரகத்துக்கு உட்பட்ட பகுதியான பரளிக்காட்டுக்குச் செல்லும் பாதை, அவ்வளவு சுமூகமானதாக இருக்காது என்பதை முதலிலேயே பதிவுசெய்கிறோம். காட்டு வழி அப்படி இருப்பதுதான் காட்டுயிர்களுக்குப் பாதுகாப்பானது என்பதால் குறிப்பிட்ட தூரம் கரடுமுரடு பயணம்தான். அதுவும் ஓர் அனுபவம்தானே.

கோவையிலிருந்து சரியாக 67.5 கிலோமீட்டர் தூரத்தில் இந்த இடம் அமைந்துள்ளது. ஆனால், நீங்கள் அப்படியே அந்த வனப் பகுதிக்குள் சென்றுவிட இயலாது. அதற்கு வனத் துறையிடம் குறைந்தது ஒரு வாரத்துக்கு முன்னதாக அனுமதி பெற வேண்டும். http://coimbatorewilderness.com/ என்ற இணையதளத்தில் பரளிக்காடு செல்ல முன்பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு முன்பதிவு செய்தால் அவர்கள் நமக்கான பயணத் தேதி, ஏற்பாடு விவரங்களைத் தெரிவிப்பார்கள். கட்டணத்தையும் ஆன்லைனிலேயே செலுத்தலாம். பெரியவர்கள் என்றால் ஒரு நபருக்கு 500 ரூபாய், குழந்தைகளுக்குத் 300 ரூபாய். சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மட்டும்தான் பரளிக்காட்டுக்குச் செல்லஇயலும். அதுவும் ஒரு நாளைக்கு இத்தனை பேர் என்ற அளவில்தான் அனுமதிக்கிறார்கள். சூழல் இணக்கச் சுற்றுலாவின் அடிப்படையே வனத்துக்கு அழுத்தம் தராமல் வனத்தை அறிமுகப்படுத்துவதுதான். அதனால்தான் இத்தனை கட்டுப்பாடுகள்!

சிறப்பம்சங்கள்

பரளிக்காட்டின் சிறப்பம்சமே பரிசல் பயணம் என்பதால் நிச்சயமாக நீங்கள் காலை 10 மணிக்கு அங்கு இருந்தாக வேண்டும். காரமடை சோதனைச் சாவடியில் சிறு சோதனைக்குப் பின் பயணத்தைத் தொடர்ந்தால் சில நிமிடங்களில் நீங்கள் நகர வாழ்க்கையிலிருந்து முற்றிலுமாகத் துண்டிக்கப்பட்டிருப்பீர்கள். அதிர்ஷ்டம் இருந்தால் வழியில் மான்கள், முள்ளம்பன்றிகள், யானைகள், சிறுத்தைகள், காட்டெருமைகள் போன்ற விலங்குகள் கண்ணில் படலாம்.

“பச்சைச் சீருடை, முகத்தில் புன்னகையுடன் ஒருகோப்பை சுக்குக் காபியை கையில் கொடுத்து வரவேற்பார்கள் வனத் துறையால் நியமிக்கப்பட்ட உள்ளூர் மக்கள். அதை நீங்கள் அருந்தி முடிப்பதற்குள் பரிசல்கள் தயாராகும். ஒரு பரிசலில் 4 பேர், ஒரு பரிசல் ஓட்டி என்று பிரித்து அனுப்பப்படுவீர்கள். நிச்சயமாக லைஃப் ஜாக்கெட் வழங்கப்படும். பரிசலில் ஏறி அமர்ந்து பாருங்கள்… அப்புறம் ஏதாவது பாடலை நிச்சயம் முணுமுணுப்பீர்கள்” என்று தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்கிறார் கோவையைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர் ஆபிரஹாம்.

“45 நிமிடங்கள் சில்லென்ற காற்றின் ஊடே உங்கள் பரிசல் புகுந்துசெல்ல சிறு தொலைவில் ஒரு மேடு வரும். அங்கே இறக்கிவிடுவார்கள். சிறிது நேரம் நீங்கள் அங்கு உலவலாம். இருவாச்சிப் பறவைகள் (Indian great HornBill) உட்பட இன்னும் சில நீர்ப்பறவைகளைப் பார்க்கலாம். தவறியும் நீங்கள் அங்கே சிறு குப்பைகூட போட்டுவிட முடியாது.

ஆர்.திவ்யபாரதி
ஆர்.திவ்யபாரதி

மதிய உணவுக்குப் பின் ட்ரெக்கிங் அழைத்துச் செல்கிறார்கள். ட்ரெக்கிங் விரும்பாதவர்கள் அத்திக்கடவு ஆற்றில் குளிக்க அழைத்துச் செல்லப்படுகிறார்கள். தூய்மையான, அமைதியான ரம்மியமான சூழலில் இருந்துவிட்டு திரும்பினால் புதிதாய்ப் பிறந்தது போன்ற அனுபவம் கிடைப்பது உறுதி. அதற்காகவே பரளிக்காடு சென்று திரும்பலாம். ஒருவேளை, அங்கு தங்க வேண்டும் என்றால் பூச்சிப்பாறை எனும் இடத்தில் வனத் துறைக்குச் சொந்தமான தங்கும் இடம் இருக்கிறது. அங்கு தங்கியிருந்தும் பரளிக்காட்டை ரசிக்கலாம்" என்கிறார் ஆபிரஹாம்.

K_Ananthan

தந்தையும்… மகளும் ஆற்றும் கடமை

‘சூழல் இணக்கச் சுற்றுலா அவசியமா?’ என்று கேள்வி எழுப்பினால், ‘வனம் என்ன காட்சிப் பொருளா?’ என்று ஆவேசமடையும் சூழலியல் ஆர்வலர்கள் ஒருபுறம் இருக்க, வனத்துக்கு அழுத்தம் கொடுக்காமல் அதைக் கண்டு ரசிப்பதை ஊக்குவிக்கும் ஆர்வலர்களும் உண்டு. இதில், திருப்பூரைச் சேர்ந்த விவசாயி ஆர்.ராமமூர்த்தியும் அவரது மகள் ஆர்.திவ்யபாரதியும் இரண்டாவது ரகம். இவர்கள் தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகளில் சூழல் இணக்கச் சுற்றுலா குறித்து விழிப்புணர்வூட்டும் பணியைச் செய்கிறார்கள்.

ராமமூர்த்தி
ராமமூர்த்தி

“சிறு வயதிலிருந்தே யானைகள் பிடிக்கும். யானைகளைப் பார்ப்பதற்காகவே வனப் பகுதிகளுக்குச் செல்வேன். என் மகள் வளர்ந்த பின்னர் வன விலங்குகளைப் புகைப்படம் எடுப்பதில் சிறப்பு நாட்டம் கொண்டவராக உருவாகியிருந்தார். அவருடன் பல வனங்களுக்கும் சென்றிருக்கிறேன். யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் காண வேண்டும் என்று எங்களால் இயன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்” என்கிறார் ராமமூர்த்தி.

தந்தையின் உற்சாகத்தில் சற்றும் குறையாது பேசும் திவ்யா, “வனப் பகுதிகளில் சுய கட்டுப்பாடு அவசியம். அதுவே சூழல் இணக்கச் சுற்றுலா. அதைத்தான் நாங்கள் இளம் தலைமுறையினரிடம் போதிக்கிறோம்” என்கிறார். சூழல் இணக்கச் சுற்றுலா பற்றிய விழிப்புணர்வை இவர்களைப் போல் சில இயற்கை ஆர்வலர்கள் செய்துவருவது ஆக்கபூர்வமான விஷயம்.

இந்த வாரம் பரளிக்காடு பரிசல் பயணத்தை ரசித்த உங்களை அடுத்த வாரம் சதுப்புக்காட்டுக்குக் கூட்டிச்செல்கிறோம்.

(பயணம் தொடரும்...)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in