Published On : 07 Sep 2019

பூர்விக நகர் கார்னர் பிளாட்

short-story

ஜீவ சிந்தன்
Jeevasinthan1959@ gmail com

வாகனத்திலிருந்து இறங்கியபோது காலை வெயில் இளஞ்சூட்டுடன் உறைத்தது. மனைகளின் நுழைவாயில். 'ஜில்ஜில்' நகர். வண்ணமாய் மின்னியது. கொடிகள் பல நிறங்களில் பறந்தன. சின்னங்களற்ற கொடிகள்.

என்னோடு வந்தவர்கள் நுழைவாயிலில் புகுந்து இடங்களை ரசித்தபடியே நடந்துகொண்டிருந்தார்கள். சுற்றுலாவுக்கு வந்த பள்ளிச் சிறுமிபோல் என் மனைவியும் உற்சாகமாக அங்குமிங்கும் பார்த்தபடி சென்றுகொண்டிருந்தாள்.

எனக்கு முன் நகர மனம் இல்லை. இறங்கிய இடத்திலேயே நின்றுகொண்டிருந்தேன் .

காரைக்குடியிலிருந்து வாடகை வாகனத்தில் இரண்டு மணிநேர பயணத்தில் வந்திருந்தோம். புத்தக வாசிப்பில் இருந்த நான், நன்றாகத் தூங்கிவிட்டிருந்தேன். இடத்தை நெருங்க யாரோ எழுப்பிவிட்டார்கள்.

நின்ற இடத்திலிருந்தே நாலாபக்கமும் திரும்பிப் பார்த்தேன். தெற்கில் கோயில் குதிரைகள். மேற்கில் கண்மாய் கலுங்கு. வடக்கில் ரயில்வே லைன். கிழக்கில் ஒற்றைப் பனை. பரிச்சயமான இடம்போல் தெரிந்தது.

கலுங்கைப் பார்க்க அமைந்திருந்தது நுழைவாயில். தண்ணீர் பெருகினால் ‘ஜில் ஜில்’ குளிர்ச்சிதான். பெயர் வைத்த சமர்த்துகளை நினைத்துக் கசந்து சிரித்தேன்.

சொந்த ஊரையே அப்பா வெறுத்தார். விவசாயம் கட்டுபடியாகவில்லை. ஒரே பையன். படிக்க வைக்க நிலங்களை விற்று, டவுனில் இடம் வாங்கிப் போய்விடலாம் என்று நினைத்தார். கூலி வேலையானாலும் பிழைத்துக்கொள்ளலாம் என்பது அவர் கணக்கு.
மதியத்திற்கு மேல் மானாமதுரை டவுனுக்குக் கிளம்பிவிடுவார். நடைதான். ஏதோ மடியில் பணம் இருப்பதைப் போல இடம் வாங்க தெருவெல்லாம் அலைவார். கையில் காலணா இருக்காது. எதிர்ப்படும் எவரிடமும் பேச்சுக் கொடுத்து விசாரிப்பார்.
இடத் தகவல் விரல் நுனிக்கு வந்துவிடும். நடந்தே அளந்து விடுவார். அப்பா காலம்வரை இடம் வாங்கவுமில்லை. ஊரைவிட்டுப் போகவுமில்லை.

அப்பா கடின உழைப்பாளி. எப்படியோ என்னைக் கல்லூரி வரை படிக்க வைத்தார். சின்ன உத்தியோகமும் கிடைத்தது. வெளியூரில் பெண் பார்த்து, திருமணமும் செய்துவைத்தார். திருமணமாகிச் சில ஆண்டுகளில் காரைக்குடிக்கு இடம்பெயர்ந்துவிட்டோம்.
ஓரளவுக்குச் சம்பாத்தியம் என்று ஓடிக்கொண்டிருந்த சமயத்தில் மனை ஆசை மனைவிக்கு வந்து
விட்டிருந்தது.

அதை அதிகரிப்பதுபோல் எங்கு பார்த்தாலும் மனை விளம்பரங்கள் ஆக்கிரமித்துவிட்டிருக்கின்றன.

காணும் இடமெல்லாம் ரியல் எஸ்டேட், புரமோட்டர்ஸ். கத்தை கத்தையாகக் காகித விளம்பரங்கள்.

நமது மனையிலிருந்து...

- பத்தே நிமிடங்களில் பத்திரகாளி கோவில்.
- ஐந்தே நிமிடங்களில் அய்யனார் கோவில்.
- அரசு மருத்துவமனை மிக அருகில்.
- 24 மணி நேர பஸ் வசதி.
- சர்வதேசத் தரத்தில் கல்விக்கூடங்கள்.
எதற்குமே பஞ்சம் இருக்காது.

“ஏதாவது வாங்கிப் போடுங்கண்ணே…” என்பார் அய்யாவு . “பிளாட் வாங்கினவன்தான் கோடீஸ்வரன்” என்பார் குருசாமி. “எங்கே வாங்கினாலும் சரி, கார்னர் பிளாட்டா இருக்கணும்” என்பார் செல்வம். எல்லாம் விளையாட்டாக இருந்தது எனக்கு.

மனைவியும் இடம் வாங்க என்னிடம் எவ்வளவோ சொல்லிப்பார்த்தும் எடுபடவில்லை என்பதால், ஒருகட்டத்தில் அவளே களத்தில் இறங்கிவிட்டாள். அவளோடு பலரும் சேர்ந்துகொண்டார்கள். ‘மாதச் சீட்டு; 25 ஆயிரத்தில் பிளாட்; சொற்பத் தொகை’ என்றார்கள். சில மாதங்கள் ஆனதும் மொத்தமும் செலுத்தினால், கைமேல் பத்திரம் என்றார்கள். அதற்கான ஏற்பாடுகளிலும் துரிதமாக இறங்கினார்கள். நான் ஆரம்பத்திலிருந்து ஆர்வம் காட்டவில்லை என்பதால், என்னிடம் நேரடியாகப் பணம் கேட்க என் மனைவி தயங்கினாள். பிள்ளைகளை விட்டுக் கேட்டாள். கொஞ்சம் கொடுத்தேன். ‘எங்கே பிளாட்? பக்கமா, தூரமா?’ எதையும் கேட்கவில்லை நான். இதோ மனைவியின் பகீரதப் பிரயத்தனம் காரணமாக இன்றைக்கு பிளாட் வாங்கும் சூழலும் வந்துவிட்டது.

இடங்களை நேரடியாகப் பார்த்து, பத்திரங்களை வாங்க வந்திருந்தோம். எல்லோரும் பிளாட் வேட்டையில் மூழ்கியிருக்க, பின்தங்கி நின்றிருந்த நானும் மெல்ல நடக்கத் தொடங்கினேன். கான்கிரீட் கற்களில் எழுத்துகளால் வீதி அடையாளங்கள். புலவர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் பெயர்களில் ... புஞ்சைகள் எல்லாம் வீடுகளற்ற வீதிகள்.

நடக்க நடக்க இந்த இடத்தைப் பற்றிய எண்ணங்கள் அலைமோதின. மல்லி, துவரை, மொச்சைச் செடிகளாய் பூத்துக்குலுங்கும் வாசம். வரகு, கம்பு, சோளம் முற்றி விளைந்த கதிர்கள். உழவும் களை எடுப்பும், கதிர் அறுப்பும் செய்த மனிதர்கள். மேய்ந்த விலங்குகள், பறவைகள். இவற்றின் சுவடுகளே இல்லாத சூழலுக்கு இந்த இடம் வந்துவிட்டிருக்கிறது. மனதில் என்னென்னவோ ஓடிக்கொண்டிருக்க, மனைகளின் கிழக்கைத் தொட்டுத் திரும்பி நின்றேன்.

அப்போதுதான் சட்டென்று நினைவுக்கு வந்தது. நுழைவாயில் மிகச் சரியாக எங்கள் பெரிய புஞ்சையின் மேற்கு (பொளி) எல்லையில் அமைக்கப்பட்டிருந்தது. புஞ்சையை நாங்கள் விற்று, ஏழெட்டு வருடங்கள் ஆகியிருந்தன.

ஆம், வடக்கில் ரயில்வே லைனைக் கடந்து சற்றுத் தொலைவு சென்றால் என் பூர்விக ஊரே வந்துவிடும். ஊரில் நல்ல தண்ணிக்கு வழியேயில்லை. கல்யாணமான புதிதில், ஊருக்கு வந்தால் ஒரு நாளைக்குக்கூட தங்க மாட்டாள் என் மனைவி. இப்போதோ என் ஊருக்கு மிக அருகில் பிளாட் வாங்கவே வந்திருக்கிறாள். நிலவரம் அறிந்தால் என்ன ஆவாளோ? கலக்கமாக இருந்தது.
கடைசியில் பார்த்தால், எங்கள் ஊர் புஞ்சைக் காட்டில்தான் இந்த ‘ஜில் ஜில் நகரே' அமைந்திருக்கிறது. இதுவரை இதற்கான மனை விளம்பரங்களை நான் பார்க்கவில்லை. சரி, இவர்கள் விளம்பரம் செய்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன். மனசுக்குள் சில வாசகங்கள் ஓடின.

- மதுரை மீனாட்சி ஆலயம் மிக அருகில் 70 கிலோமீட்டர் தூரம்.
- ராமேஸ்வரம் மிக மிக அருகில், 120 கிலோமீட்டர்தான்.
- விரைவில் பஸ் வசதி.
- அதி விரைவில் தண்ணீர் வசதி.
ஆக மொத்தம், ஜில் ஜில் நகர் - எனது பூர்விக நகரா?

மனைவி என்னை நோக்கி ஓடிவந்தாள். “ஏங்க…நமக்கு அதிர்ஷ்டம்னு சொல்றாங்க. நம்மது கார்னர் பிளாட்டாம்..!"
அவளைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை.

“ஓ… பூர்விக நகர் கார்னர் பிளாட்டா?” சொல்லியபடி அவளைப் பார்த்து பரிதாபமாகச் சிரித்தேன். என் கேள்வியில் இருந்த உள்ளர்த்தம் புரியாமல் மனம் கொள்ளாத சிரிப்புடன் என் கையை இறுகப் பற்றிக் குலுக்கினாள் என் மனைவி.

Related Articles

Popular Articles