காதல் ஸ்கொயர் 28

காதல் ஸ்கொயர் 28

அன்றிரவு நெடுநேரம் முயன்றும் கௌதமுக்குத் தூக்கம் வரவேயில்லை. கண்களை மூடினாலே, நந்தினியின் கண்ணீர் மனதில் தோன்றி தொந்தரவு செய்துகொண்டேயிருந்தது. தான் செய்தது சரியா? நந்தினிக்காகப் பரிதாபப்பட்டு அவளைத் திருமணம் செய்துகொள்வதாகச் சொன்னால், பூஜாவின் கண்ணீருக்குப் பதில் என்ன? பூஜாவைக் காதலித்தது மட்டும்தான் நினைவில் இருக்கிறது என்ற சூழ்நிலையில், தான் எடுத்த முடிவு சரிதான். ஆனாலும் நந்தினியின் கண்ணீரை நினைக்க நினைக்க… அவனுக்குத் தூக்கமே வரவில்லை.


12 மணிக்கு மேல் கௌதம் லேசாகக் கண் அசந்தான். ஆனால், பத்து நிமிடத்திற்குள்ளேயே ஒரு விபரீதமான கனவு கண்டு விழித்துவிட்டான். கனவில் நந்தினி இதே அறையில், தொடர்ந்து கண்ணீர் விட்டுக்கொண்டேயிருக்கிறாள். அவளின் கண்ணீர் வீட்டை வெள்ளம் போல் சூழ… ஹாலில் இருக்கும் அம்மாவும் அப்பாவும் கண்ணீரில் மூழ்கி அடித்துச்செல்லப்படுகின்றனர். பின்னர் மாடி அறையில் நந்தினியும் அவனும் கண்ணீரில் மூழ்கியபோது விழிப்பு வந்துவிட்டது. விழித்தவுடன் லேசாகத் தலை வலித்தது.

அதன் பிறகு பொட்டுத் தூக்கம் விரவில்லை. தூக்கம்வராமல் புரண்டு புரண்டுபடுத்தான். எழுந்து சிறிது நேரம் புத்தகம் வாசிக்கத் தொடங்கினான். மனம் புத்தகத்தில்ஒன்றவே இல்லை. டிவி பார்க்கலாம் என்று கீழே ஹாலுக்கு வந்தான். டிவியில் எந்த சேனலைப் போட்டா
லும் ஆண்களோடு பெண்களும் வந்தார்கள். பெண்களைப் பார்த்தாலே பூஜாவும் நந்தினியும் நினைவுக்கு வந்தனர். நினைக்க நினைக்க… தலைவலி அதிகரித்துக்கொண்டே இருந்தது. டிவியை நிறுத்திவிட் ஹால் சோபாவிலேயே படுத்தான். அப்போதும் தூக்கம் வரவில்லை. தூக்கம் வராமல் சும்மா படுத்துக் கொண்டேயிருப்பது, பைத்தியம் பிடித்தாற்போல் இருந்தது. தலைவலியும் அதிகரித்துக்கொண்டேயிருந்தது. எழுந்து தலைவலி தைலம் தடவிப் பார்த்தான். அப்போதும் தலைவலி குறையவில்லை. மீண்டும் படுத்தான். மணி 2, 3, 4, 5 ஆகியும் ஒரு துளி தூக்கம்கூட வரவில்லை. இப்போது தலைவலி மிகவும் கடுமையாக… அம்மாவை எழுப்பி தலைவலி மாத்திரை கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால், அவர்கள் தூக்கம் கெட்டுவிடும் என்று ஆறு மணி வரை பல்லைக் கடித்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.


ஆறு மணி அடித்ததும் படுக்கை அறைக் கதவைத் திறந்தான். நைட் லேம்ப் வெளிச்சத்தில், அம்மாவும் அப்பாவும் தூங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது. ஏனோ தெரியவில்லை... அவர்களைப் பார்த்தவுடன் மனம் பொங்கி, அழுகை வரப் பார்த்தது. கட்டிலில் உட்கார்ந்து, “அம்மா…” என்று அழைத்தபோது அவனை அறியாமலே கண்ணீர் வர ஆரம்பித்தது. மீண்டும் ஒருமுறை “அம்மா…” என்று அழைத்தவுடன், சட்டென்று அம்மா, அப்பா இருவரும் கண்விழித்தனர். “கௌதம்… என்னாச்சு?” என்று சட்டென்று அம்மா எழுந்தார். அப்பா எழுந்து அவசரமாக ட்யூப் லைட்டைப் போட்டார். அம்மா, “என்னாச்சு கௌதம்? ஏன் அழற?” என்று கேட்டதுதான் தாமதம். கௌதம் பொங்கிப் பொங்கி அழுதபடி, “பேசாம அந்த ஆக்ஸிடென்ட்ல நான் செத்தே போயிருக்கலாம்மா” என்று கூற…அம்மாவும் அப்பாவும் பதற்றத்துடன், “ஏய்… என்னாச்சுப்பா?” என்றனர்.
“ராத்திரி ஃபுல்லா சுத்தமா தூங்கவே இல்லம்மா” என்றான் கெளதம். “ஏம்ப்பா…என்ன விஷயம் கௌதம்? ஏதா இருந்தாலும் எங்ககிட்ட சொல்லு…” என்று அப்பா கூற… கௌதம் அழுகையுடன் சொல்ல ஆரம்பித்தான். அவன் சொல்லி முடித்தவுடன் அம்மாவும் அப்பாவும் சில நிமிடங்கள் ஒன்றும் பேசத் தோன்றாமல், ஒருவரை ஒருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தனர்.


“அதைப் பத்தி நினைக்க நினைக்க ராத்திரி முழுசும் தூக்கமே வரல. பயங்கரமா தலைவலிக்குது” என்றான் கெளதம்.


“கௌதம்…நீ அதைப் பத்தில்லாம் இப்போதைக்கு நினைக்காத. நீ எதையாச்சும் நினைச்சு குழப்பிக்கிட்டு, உடம்பு கெட்டுப்போயிடும். இப்ப உடனே முடிவு எடுக்கணும்னு அவசியமில்ல. உனக்கு இப்ப 23 வயசுதான் ஆவுது. இந்தக் காலத்துல… இது கல்யாண வயசு கிடையாது. கொஞ்ச நாளைக்கி நீ பூஜா, நந்தினி ரெண்டு பேரையும் பாக்காத…நான் அவங்ககிட்ட பேசுறேன்” என்றபோது காலிங்பெல் அடித்தது. “இந்நேரத்துல யாரு வந்துருக்கா?” என்று அம்மா எழுந்து செல்ல…பின்னாலேயே கௌதமும் அப்பாவும் ஹாலுக்கு வந்தனர்.


அம்மா கதவைத் திறக்க…வெளியே நந்தினி நின்றுகொண்டிருந்தாள். நந்தினியைப் பார்த்தவுடனே கௌதமின் தலைவலி பன்மடங்கு அதிகரித்தது. அம்மா,  ‘வா…’ என்றுகூட சொல்லாமல் நிற்க… நந்தினி அவரைத் தாண்டிக்கொண்டு உள்ளே வந்தாள். அப்பாவைப் பார்த்து, “அங்கிள்…. நான் கௌதம்கிட்ட கொஞ்சம் தனியா பேசணும்” என்றாள். வேகமாக அவள் பின்னால் வந்த அம்மா, “நீ தனியால்லாம் பேச வேண்டியதில்ல. எங்க முன்னாடியே பேசலாம். கௌதம் எல்லா விஷயத்தையும் சொல்லிட்டான்” என்று சொன்னதுதான் தாமதம்… உடனே நந்தினி அழ ஆரம்பித்தாள். கௌதமுக்குத் தலைவலி இன்னும் அதிகமானது.


“கௌதம் விஷயத்தைச் சொல்லிட்டானா? நேத்து சாயங்காலம் பூஜா இருக்கானு நான் ஒண்ணும் பேசாம போய்ட்டேன். நேத்து நடுராத்திரி வரைக்கும் அழுதுகிட்டேயிருந்தேன். அப்பறம் விடிய விடிய தூக்கமே வரல…”
“நந்தினி… இப்பதான் கௌதம் கொஞ்
சம் கொஞ்சமா குணமாயிட்டிருக்கான். அதுக்குள்ள உங்க லவ்வப் பத்தி என்ன அவசரம்?”


“நான் பூஜாவைப் பத்தின பயத்துலதான் சொன்னேன். இல்லன்னா இப்போதைக்குச் சொல்லியிருக்க மாட்டேன்” என்றதற்கு அம்மா பதில் ஒன்றும் சொல்லவில்லை. அம்மாவின் அருகில் நெருங்கிய நந்தினி, “ஆன்ட்டி… இப்ப கௌதமுக்கு அடிபட்டுதுல்ல? அப்ப சப்போஸ்…அவன் காணாமப்போயி, யாராச்சும் ரெண்டு பேரு அவன அவங்க வீட்டுல கொண்டு போய் வச்சு, அம்மாப்பா மாதிரி பாத்துக்குறாங்கன்னு வையுங்க. ரெண்டு மாசம் கழிச்சு நீங்களும், அங்கிளும் போயி, ‘நாங்கதான் உங்கம்மாப்பா’னு சொல்றீங்க. அவன், ‘எனக்கு அதெல்லாம் ஞாபகமில்ல. ரெண்டு மாசமா இவங்கதான் பாத்துகிட்டாங்க. அதனால இவங்கதான் இனிமே எங்கம்மாப்பா’னு சொன்னா உங்களுக்கு எப்படி இருக்கும்?” என்றாள். அவள் கேட்பதில் உள்ள நியாயத்தை உணர்ந்து, மூவரும் எந்தப் பதிலும் சொல்லவில்லை.


கௌதமுக்கும் அவள் கேட்பது சரிதான் என்று தோன்ற… திடீரென்று அவனுடைய தலைவலி கிடுகிடுவென்று பன்மடங்கு அதிகரிக்க… கௌதம், “அம்மா…எனக்குப் பயங்கரமா தலை வலிக்குதும்மா…” என்று கூறிவிட்டு அப்படியே தலையைப் பிடித்துக்கொண்டு சோபாவில் படுத்தான். “கௌதம்…” என்று மூவரும் பாய்ந்து வந்தனர். அம்மா, “கௌதம்… உனக்கு ஒண்ணுமில்ல… கொஞ்சம் தூங்கி எந்திரிச்சின்னா சரியாயிடும்” என்றாள்.


“இல்லம்மா… தலைக்குள்ள என்னமோ பண்ற மாதிரி இருக்கு….. வாந்தி வர்ற மாதிரி இருக்கு…” என்று அவன் குமட்ட…அப்பாவின் முகம் மாறியது. சட்டென்று எழுந்த அப்பா, “வா… டாக்டர் மனோகர் ஹாஸ்பிட்டலுக்குப் போயிடலாம். நான் அவன்கிட்ட போன் பண்ணிச் சொல்றேன்” என்றார்.
அடுத்த பதினைந்தாவது நிமிடத்தில், அவர்கள் அடையாறில் இருந்த டாக்டர் மனோகரின் மருத்துவமனையில் இருந்தனர். மருத்துவமனையில் நுழைந்தபோது கௌதமின் தலைவலி உச்சத்தில் இருந்தது. அப்படியே மண்டை வெடித்து செத்துப்போய்விடுவோமா என்றெல்லாம் தோன்றியது. ஒரு ஊசியைப் போட்டுவிட்டு டாக்டர், “இப்ப நல்லா தூக்கம் வரும். கொஞ்ச நேரம் தூங்கி எந்திரிச்சான்னா சரியாப் போயிடும். அதுக்குப் பிறகும் தலைவலி இருந்துச்சுனா ஒரு எம்ஆர்ஐ எடுத்துப் பாத்திடலாம். அதுவரைக்கும் இங்கயே இருக்கட்டும்” என்றார்.


நான்கு மணி நேரத்திற்குப் பிறகு கௌதம் கண் விழித்தபோது, அந்த அறையில் கௌதமின் அம்மா, அப்பா, நந்தினி, அருண் மற்றும் பெங்களுரிலிருந்து வந்திருந்த கௌதம் மற்றும் அருணின் பேட்ச்மேட்டான விஷ்வாவும் இருந்தனர். மெல்ல கண் விழித்த கௌதம் தன் அம்மாவைப் பார்த்து புன்னகைத்தான்.
“இப்ப தலைவலி எப்படி இருக்கு?”
“தலைவலில்லாம் இல்லம்மா…” என்ற கௌதம் சுற்றி நின்ற மற்றவர்களை நிதானமாகப் பார்த்து புன்னகைத்தான். விஷ்வாவைப் பார்த்தவுடன், “டேய்… விஷ்வா? நீ எங்க இங்க?” என்றவுடன் அருண், விஷ்வாவைப் பார்த்து விழித்தான். திடீரென்று முகம் பிரகாசமான அருண், “டாக்டர்…” என்று கத்திவிட்டான். “என்ன?” என்று டாக்டர் திரும்பிப் பார்த்தார்.


“டாக்டர்… ஒரு நிமிஷம்…” என்று டாக்டர் மனோகரை வெளியே அழைத்துச் சென்றான் அருண். அவர்கள் பின்னால் கௌதமின் அப்பாவும் அம்மாவும் சென்றனர். வெளியே வந்தவுடன் அருண் சத்தமாக, “டாக்டர்… கௌதமுக்குப் பழைய நினைப்புல்லாம் வந்துடுச்சுன்னு நினைக்கிறேன்” என்றான்.


“என்ன உளர்றீங்க?”
“அவன் விஷ்வாவ விசாரிச்சான்ல? விஷ்வா… எங்களுக்கு ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்டெல்லாம் கிடையாது. கோத்தகிரில பக்கத்து ரூம். லேசா பழக்கம்… அவ்ளோதான். ஆக்ஸிடென்ட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, விஷ்வா அவன் தங்கச்சி கல்யாணம்னு எங்களுக்கெல்லாம் பத்திரிகை கொடுத்தான். தங்கச்சி கல்யாண ஏற்பாடெல்லாம் இருக்குன்னு, ஆக்ஸிடென்ட்டுக்கு முந்தின நாளே அவன் கோத்தகிரிலருந்து கிளம்பிப் போய்ட்டான். ஆக்ஸிடென்ட் ஆன பிறகும் கல்யாண வேலை பிஸில, அவன் கௌதம வந்து பாக்கவே இல்ல. என்கிட்ட ஃபோன் பண்ணி விசாரிச்சதோட சரி. தங்கச்சி கல்யாணம் முடிஞ்சு, அப்படியே எங்க கம்பெனியோட பெங்களூரு பிராஞ்ச்ல போய் ஜாயின்ட் பண்ணிட்டான். இப்ப ஒரு வேலையா சென்னை ஆபீஸ் வந்தான். அப்படியே கௌதமைப் பாத்துட்டுப் போலாம்னு வந்தான். அவனப் பாத்தவுடனே கௌதம் ஞாபகமா விஷ்வான்னு சொல்றான்னா, அப்ப பழசெல்லாம் ஞாபகத்துக்கு வந்துருச்சுன்னுதானே அர்த்தம்…”
“இந்த ரெண்டு மாசத்துல, நீ எப்பயாச்சும் விஷ்வா போட்டோவைக் காமிச்சு ஏதாச்சும் சொல்லியிருக்கியா?”
“எதுவும் சொன்னதில்ல. மோர்ஓவர்… நான் அவன்கிட்ட காமிச்ச போட்டோஸ்ல விஷ்வாவே கிடையாது” என்று கூற… அனைவரும் பரபரப்புடன் கௌதமின் அறையை நோக்கி நடந்தனர். அவர்கள் அறைக்குள் நுழைந்தபோது, கௌதம், நந்தினியை உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தான்.


(தொடரும்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in