போர்முனை டு தெருமுனை - 3: மலையுச்சியின் சவால்கள்

போர்முனை டு தெருமுனை - 3: மலையுச்சியின் சவால்கள்

முதுகில் பையோடு மலையேற்றத்துக்குத் தயாராகி நின்ற எங்களைப் பார்த்து, “அவசியமான எல்லா பொருட்களையும் எடுத்துக்கொண்டீர்களா?" என்றார் எங்கள் இமயமலைப் பயண வழிகாட்டி. தலையாட்டினோம். “தன்னம்பிக்கையை எடுத்துச் செல்கிறீர்களா?” என்றார் அடுத்தபடி. ஆச்சரியத்தோடு அவரைப் பார்த்தேன். அவர் தொடர்ந்தார், “தன்னம்பிக்கை இல்லாதவர்கள் இந்தப் பனிமலைப் பயணத்தை நிறைவுசெய்ய முடியாது.”

அவர் சொன்னது முற்றிலும் உண்மை. மாநகரங்களில் இருப்பதைப் போன்ற உதவிக் கட்டமைப்புகளோ, குடும்பக் கதகதப்போ, நண்பர் வட்டமோ பனிமலைகளில் கைக்கெட்டும் தூரத்தில் கிட்டுவதில்லை. பாதையில்லா பனிமலையில், மணிக்கொருதரம் மாறும் வானிலையில் பயணத்தை நிமிடந்தோறும் நகர்த்துவது தன்னம்பிக்கை மட்டுமே.

பலூன் சோதனை:

சமவெளியிலிருந்து மலையுச்சிக்குச் செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறைந்துகொண்டே வரும். ஒரு காற்றடைத்த பலூனை மலையடிவாரத்திலிருந்து மலையுச்சிக்கு எடுத்துச் சென்றால் என்ன ஆகும்? பலூன் விரிவடைந்து அளவில் பெரிதாகும். ஏன்? உச்சியில் காற்றின் அடர்த்தி குறைவு. அழுத்தமும் குறைவு. சமவெளிப் பகுதியில் காற்றழுத்தம் ஏறக்குறைய 1 `பார் ' (bar - இது அழுத்தத்தைக் குறிக்கும் அலகு). நாம் பிறந்ததிலிருந்து இந்தக் காற்றழுத்தத்தை அனுபவிப்பதால் நாம் அதை வித்தியாசமாக உணர்வதில்லை. மலையடிவாரத்தில் நாங்கள் பலூனை ஊதிக்கட்டியபோது அதன் மேல் 1 `பார்' காற்றழுத்தம் இருந்தது. உள்ளே அடைக்கப்பட்ட காற்றின் அழுத்தமும் 1 `பார்'. நாம் பலூனோடு மலை ஏற ஏற வெளிக்காற்றின் அழுத்தம் குறைய ஆரம்பிக்கும். உள்ளே அதிக அழுத்தம். வெளியே குறைந்த காற்றழுத்தம். என்ன நடக்கும்?

உள்ளிருக்கும் அதிக அழுத்தக் காற்று, பலூனை விரிவடையச் செய்யும். பலூன் விரிவடைவதால் உள்ளிருக்கும் காற்றின் அழுத்தம் குறையும். உள்ளும் வெளியிலும் காற்றழுத்தம் ஒரே அளவுக்கு வரும்போது பலூன் விரிவடைவது நிற்கும்.

மனிதர்கள் உயரமான மலையுச்சிகளுக்குச் சென்றால் என்ன நடக்கும்? ‘காயமே இது பொய்யடா. வெறும் காற்றடைத்த பையடா’ என்பது நமக்குத் தெரியும். மலை உயரங்களில் பலூனைப்போல, காற்றடைத்த பைகளின் தொகுதியான நம் நுரையீரல் விரிவடையும், காற்றுள்ள நம் வயிறும் புடைக்க ஆரம்பிக்கும், உடலின் எல்லா காற்றுக் குழாய்களும் விரிவடையும்!

அது மட்டுமல்ல, உயரங்களில் காற்றின் அடர்த்தி குறைவு என்பதால், அதிலிருக்கும் ஆக்சிஜனின் அளவும் குறைவாக இருக்கும். பனிமலைக் காற்றில் உங்கள் வீட்டில் இருப்பதைவிட ஏறக்குறை 40 சதவீதம் ஆக்சிஜன் குறைவு. சுவாசிக்கும்போது ஒவ்வொரு மூச்சிலும் உட்செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைவாக இருப்பதால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்க நமது சுவாச மண்டலம் வேகமாக இயங்க வேண்டும். இதனால் மூச்சிரைப்பு ஏற்படும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறையும்போது மூளையின் செயல்திறனும் குறையும். முடிவெடுக்கத் திணறுவோம்.

உறக்கப் பை :

பனிமலையில் இன்னொரு கூடுதல் பிரச்சினையும் உண்டு. அது உறைநிலைக்கும் குறைவான வெப்பநிலை. நான் பதினாலாயிரம் அடி உயரத்தில் கூடாரத்தில் தங்கிய பகுதியில், வெப்பநிலை ஏறக்குறைய மைனஸ் 10 டிகிரி செல்சியஸ். நான் தங்கிய பகுதி பாறைகளால் நிறைந்திருந்தது. தடங்கல்களின்றி நடப்பதற்கே சிரமப்பட வேண்டும். அதிலும் அருகிலே ஆழமான செங்குத்து மலைப்பிளவுகள் நிறைய. இரவில் கம்பளிப் போர்வையெல்லாம் உதவாது. எனவே, உறங்குவதற்கு எனப் பல அடுக்குக் குளிர்காப்பு விரிப்புகளால் தைக்கப்பட்ட உறக்கப் பை (Sleep bag) தான் சிறந்த வழி.

உறக்கப் பையா... எப்படி இருக்கும்? 

துணிக் கடைகளில் மாப்பிள்ளை கோட்டுகள், ‘ஸிப்’ (Zip) வைத்த நீளப் பையில் தொங்கவிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். அதைப்போல ஆளுயர நீளத்தில் இருக்கும் இந்த உறக்கப் பை. நாம் உள்ளே படுத்துக்கொண்டு ஸிப்பை மூடிக்
கொள்ள வேண்டும். படிப்பதற்கே சுவாரசியமாக இருக்கிறதே, உறங்கினால் அலாதியான அனுபவமாக இருக்குமே என்கிறீர்களா? எனக்கும் அப்படித்தான் தோன்றியது. வாழ்வின் உயரமான உறக்க அனுபவம் எனும் உற்சாகத்துடன், கூடாரத்தில் எனது உறக்கப் பைக்குள் நுழைந்து ஸிப்பை மூடினேன்.

சில நிமிடங்களில் மூச்சிரைக்க ஆரம்பித்தது. காற்றுக்காக ஸிப்பை மெல்லத் திறந்தேன். காற்று வந்தது, மைனஸ் 10 டிகிரியில். ஒரு சில நிமிடங்கள் சகித்துக்கொண்டு மறுபடியும் ஸிப்பை மூடினேன். இப்படியாக, எனது உயரமான உறக்க அனுபவம் எப்படி இருந்தது தெரியுமா? இரவு முழுவதும் ஸிப்பைத் திறப்பதும் மூடுவதுமாக!

நான் ஒரு இரவுதான் உச்சபட்ச உயரத்தில் தங்கினேன். ஆனால், மாதக்கணக்கில், உறைநிலைக்குக் கீழான வெப்பநிலையில், குறைவான ஆக்சிஜனை சுவாசித்து, வீங்கும் நுரையீரலைச் சகித்துக்கொண்டு, இரவும் பகலும் கண்விழித்து போர்க்கருவி ஏந்தி நாடுகாக்கும் நம் ராணுவ வீரர்களை நினைத்துப்பாருங்கள். கண்களில் நீர் பனிக்க நம் வீரர்களுக்கு வணக்கம் செய்வோம்.
பனிச்சிகரங்களில் உயிரோடிருப்பதே ஒரு சாதனை என எண்ணுமிடத்தில், தங்கள் உயிரைப் பிடித்துக்கொண்டு, கோடிக்கணக்கான இந்தியர்களின் உயிருக்கும் உத்தரவாதம் தர, இரவு பகலாகக் களமாடும் நம் நிஜ கதாநாயகர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குடும்பத்தை விட்டு, வரவேற்பறையின் சாயங்கால சந்தோஷங்களை விட்டு, அலைபேசிகளின் தொடர்பு எல்லைகளை விட்டு, வீட்டுச் சாப்பாட்டை விட்டு, வயதான பெற்றோரின் அருகாமையை விட்டு…நம் ராணுவ வீரர்களின் இந்த அடர்த்தியான ரத்தத் தியாகங்களால் நிறைந்திருக்கிறது, நாம் அலைபேசியில் கழிக்கும் இந்தியச் சுதந்திரம்.

ஹாப்போ கலன்:

உயரங்களில் மனிதர்களுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவை மலை சுகவீனம் (Mountain sickness) என்பர். குறிப்பாக எட்டாயிரம் அடிக்கு மேல் உள்ள உயரங்களில் புழங்கும் ராணுவ வீரர்கள் ‘அதி உயர நுரையீரல் நீர்வீக்கம்’ (High Altitude Pulmonary Oedema-HAPO) என்ற ஹாப்போ நோயினால் பாதிக்கப்படுகின்றனர். இது உயிருக்கு ஆபத்தானது. ஹாப்போவினால் பாதிக்கப்பட்டவர்களின் உயிரைக் காப்பாற்ற உடனடியாக மலையடிவாரத்துக்குக் கொண்டு சென்றாக வேண்டும். தரைவழி வாகனங்களில் மலையிறங்க அதிக நேரம் பிடிக்கும். ஹெலிகாப்டர் தரையிறங்க தோதில்லாத பனி மலைகளில், மோசமான வானிலையால் எல்லாவிதப் போக்குவரத்தும் முடங்கினால் என்ன செய்வது?

ராணுவ விஞ்ஞானிகள் இதற்காக ஒரு உபகரணத்தை உண்டாக்கினார்கள். அதன் பெயர் `ஹாப்போ கலன்' (HAPO Chamber). எப்படி வேலை செய்கிறது இந்த ஹாப்போ கலன்?

ராக்கெட் வேகத்தில் பறந்துசெல்லும் என்று நினைக்கிறீர்களா? இல்லை. இதைப் போக்குவரத்துப் பிரச்சினையாகப் பார்க்காமல் மாற்றி யோசித்தார்கள் ராணுவ விஞ்ஞானிகள். இந்த அத்தியாயத்தின் தொடக்கத்தில் பார்த்தோம். உயரம் அதிகரிக்க அதிகரிக்கக் காற்றழுத்தம் குறையும். அதற்கு எதிர் திசையில் யோசியுங்கள். உயரம் குறைய காற்றழுத்தம் அதிகமாகும். இதுதான் சூட்சுமம்.

ராணுவ விஞ்ஞானிகள் ஒரு ஆள் படுக்கும் அளவுக்கு ஒரு கலனை உருவாக்கி அதில் காற்றழுத்தத்தை அதிகரிக்கும் அமைப்பைப் பொருத்தினார்கள். ஹாப்போ பாதிப்புள்ள வீரரை இந்தக் கலனில் படுக்கவைத்து, அதன் காற்றழுத்தத்தை அதிகரித்தால், அவரின் உடல் எட்டாயிரம் அடிக்குக் கீழுள்ள சூழ்நிலையை உணரும். சுவாசக்கோளாறு சரிப்படும். அதாவது, பாதிக்கப்பட்ட வீரரை மலையுச்சியிலேயே வைத்து, சமவெளியின் வளிமண்டலத்தைச் சிறிய கலனில் உருவாக்கும் நுட்பம் இது.

கலனில் காற்றின் அழுத்தத்தை அதிகரிக்க, மின்சாரத்தில் அல்லது மின்கலனில் இயங்கும் அழுத்தமேற்றிகள் உண்டு. மின்சாரமில்லை, மின்கலன் தீர்ந்தால் என்ன செய்வது? அதற்கும் ஒரு வழி உண்டு. மிதிவண்டிக்குக் காற்றடிப்பது போன்ற மிதி அழுத்தமேற்றியும் இதில் பொருத்தப்பட்டிருக்கும். இந்த ஹாப்போ கலன் நைலான் துணியாலானது. ஏறக்குறைய 5 கிலோ எடை கொண்டது.

படை வீரர்களுக்காக உருவாக்கப்பட்ட ஹாப்போ கலன், பனிமலைக்குப் புனிதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் மலைவாழ் வயோதிகர்களுக்கும் மிகவும் உதவிகரமாக இருக்கும். ஹாப்போ கலனை இரண்டு பேர் சுமந்து செல்ல
லாம். வாகனத்தில் வைத்து அருகிலிருக்கும் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லலாம்.

இந்த  ஹாப்போ கலனைப் பரவலாக உற்பத்தி செய்யும் பொருட்டு இத்தொழில்நுட்பம் சில தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்து
கொள்ளப்பட்டிருக்கிறது.

சியாச்சின் பனிப்பாறையில் பணியிலிருந்த ஒரு ராணுவ அதிகாரியோடு என் உரையாடல் இதோ...

நான்: அங்கே எவ்வளவு வெப்பநிலை இருக்கும்?
அவர்: தோராயமாக மைனஸ் 60 டிகிரி.
நான்: ஏன் தோராயமாக?
அவர்: அதற்கு மேல் வெப்பமானி வேலை செய்யாது!

நாமெல்லாம் மார்கழிக் குளிருக்கே உதடு வெடித்து அல்லல்படுகிறோம். ராணுவ வீரர்களோ வெப்பமானியே உறைந்துபோகும் வெப்பநிலையில் நமக்காகக் கடமையாற்றுகிறார்கள்.

உயிர் நடுங்கும் கடுங்குளிரிலும், வெண்பனியில் பிரதிபலித்துக் கண்களைக் குருடாக்கும் சூரிய ஒளியிலும் சேவையாற்றும் வீரர்கள் எப்படித் தமது தோலைப் பாதுகாக்கிறார்கள்?

இந்திய ராணுவ விஞ்ஞானிகள் நமது கர்ம வீரர்களின் சருமம் காக்க என்ன செய்கிறார்கள்? விஞ்ஞானிகள் படைத்தளித்த ‘தோல்’காப்பியங்கள் என்னென்ன?

(பேசுவோம்)

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in