நிழற்சாலை

நிழற்சாலை

பழுப்பேறிய காலம்

ஒட்டிய கன்னத்துடன் இருந்தபோது அம்மாவுக்கு
சற்றே பல் வெளியே நீண்டிருக்கிறது
கறுப்பு வெள்ளைப் படமென்பதால்
அவள் சேலைக் கொசுவம்
ஈரமாக இருந்ததா எனத் தெரியவில்லை
அப்படித்தான் இருந்திருக்கும்
புகைப்படமெடுக்கப் போகுமுன்
வீட்டுவேலை முடித்து வந்திருப்பாள்
நாற்காலியில் அகன்ற கால்களுடன்
அமர்ந்த அப்பாவிடம் சாயாமல்
அம்மாவோரம் சாய்ந்த பெரியவனும்
அம்மாவின் இடுப்பில் அமர்ந்து
தோளில் முகம்சேர்த்த
சின்னவனுமாக
அது ஒரு பழைய குடும்பப் படம்
இப்போது அம்மா பக்கம்
சாய வேண்டியதில்லை எவரும்
அம்மாதான் யார் பக்கமாவது
சாய வேண்டியிருக்கிறது!
- உமா மோகன்

கான்க்ரீட்டில் கரைந்த வாசம்

கிராமத்து வளைவு நெளிவு
எலுமிச்சையோரக் காடுகள்
கடந்துவரும் வாசத்தில்
அவசரமாய் ஏறும்
வெள்ளை டவுன் பஸ்ஸும்
கொண்டுபோன
டிபன் பாக்ஸில்
இருந்த இட்லியும்
சட்னியோடு யாரோ
பசியாறிய பஸ்ஸில்
காலமாய்க் கரைந்துபோயின
மீசை முளைத்த நாட்கள்.
அதே பஸ்ஸை
கிராமம் செல்லும்போதெல்லாம்
இன்னும் தரிசிக்கிறேன்
எலுமிச்சை வாசம்
காற்றில் கரைந்து போன
தடத்தைத்தான் காணவில்லை.
கான்க்ரீட் காட்டில்
சிக்கியிருக்கலாம்.
அதன் நினைவில்
நானும் இருக்கலாம்.
- வீரசோழன் க.சோ. திருமாவளவன்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in