உலகம் சுற்றும் சினிமா - 7: உள்ளுணர்வை உலுக்கும் பேய்ப் படம்

தி ஷைனிங் (1980)
உலகம் சுற்றும் சினிமா - 7: 
உள்ளுணர்வை உலுக்கும் பேய்ப் படம்

பேய் அல்லது திகில் படங்களுக்கு என்று எப்போதும் ஓர் ஈர்ப்பு உண்டு. மனதின் அடி ஆழத்தில் இருக்கும் பயங்களைப் பெரிய திரையில் உருவங்களாகப் பார்த்து மேலும் பயம் கொள்வது ஒரு வகையான போதை என்றே சொல்லலாம். கோர உருவம், இருட்டு, திடுக்கிடச் செய்யும் பின்னணி இசை போன்ற சூத்திரங்களின் துணையுடன் பேய்ப் படம் எடுப்பவர்கள் எல்லா நாடுகளிலும் உண்டு. நம்மூர் சினிமாக்களில் வெள்ளுடை ஆவிகள் ஏகப் பிரபலம். இப்படியான இலக்கணத்தை எல்லாம் 39 வருடங்களுக்கு முன்பே உடைத்தெறிந்த படம் ‘தி ஷைனிங்’.

திகில், அமானுஷ்ய நாவல்கள் மூலம் புகழ்பெற்ற ஸ்டீபன் கிங் 1977-ல் எழுதிய ‘தி ஷைனிங்’ நாவலைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்தப் படத்தின் இயக்குநர், ஸ்டான்லி குப்ரிக். ‘ஸ்பார்ட்டகஸ்’ (1960), ‘டாக்டர் ஸ்ட்ரேஞ்ச்லவ்’ (1964), ‘2001: எ ஸ்பேஸ் ஒடிசி’ (1968) போன்ற படங்கள் மூலம் திரைக்கலையின் எல்லைகளை விஸ்தரித்த மேதை இவர். இப்படிப்பட்ட மேதை எடுத்த பேய்ப் படம், வழக்கமான பேய்ப் படங்களில் ஒன்றாக இருக்குமா என்ன?

‘தி ஷைனிங்' கதை

கொலராடோ மலைத்தொடரில் உள்ள ‘ஓவர்லுக்' ஹோட்டல் பனிக்காலத்தில் மூடப்பட்டுவிடும். ஹோட்டல் மூடப்படும் சில மாத காலத்துக்கு அதைப் பராமரித்துக்கொள்ளும் வேலைக்கு ஜாக் டோரன்ஸ் (ஜாக் நிக்கல்ஸன்) சேர்கிறார். தன் மனைவி விண்டி, ஆறு வயது மகன் டேனியுடன் ஆளில்லாத பிரம்மாண்டமான ஹோட்டலில் தங்குவார்.

டேனிக்கு ஒரு கற்பனை நண்பன் உண்டு. பல புதிரான விஷயங்களை அவன் தனக்குச் சொல்வதாக டேனி கருதிக்கொள்வான். மனைவி விண்டி பேய்ப் பட ரசிகை. ஓவர்லுக் ஹோட்டல் ஜாகையின்போது ஜாக்கின் நடவடிக்கையில் ஏற்படும் மாற்றங்களே படத்தின் திசையைத் தீர்மானிக்கும். ஒரே இடத்தில் அடைபட்டுக் கிடப்பதால் ஏற்படும் ‘க்லாஸ்ட்ரோஃபோபிக்’ பாதிப்பு ஜாக்கைத் தாக்கும். மேலும், ஹோட்டலில் உள்ள அமானுஷ்ய சக்திகளும் அவரது குடும்பத்தை மிரட்ட ஆரம்பிக்கும். அதிலிருந்து அவர்கள் தப்பினார்களா இல்லையா என்பதே மீதிக் கதை.

படத்தின் ஆரம்பக் காட்சிகளில் ஹோட்டலின் தலைமை செஃப், டிக் ஹாலோரானும் டேனியும் பேசிக்கொள்ளும் வசனங்கள்தான் படத்தின் ஆதார முடிச்சு. "நானும் என் பாட்டியும் வாயே திறக்காமல், ஒருவரோடு ஒருவர் உரையாடிக்கொள்வோம். அதை அவள் ‘ஷைனிங்’ என்பாள்” என்று சொல்லும் டிக், “சில இடங்கள் மனிதர்களைப் போன்றவை. அவற்றில் சில, ‘ஷைனிங்’கை வெளிப்படுத்தும்” என்று ஓவர்லுக் ஹோட்டலைப் பற்றிச் சொல்லும்போதே நமக்கு முதுக்குத்தண்டு ஜில்லிட்டுவிடும்.

ஹோட்டலில் கொல்லப்பட்ட சிறுமிகளின் ஆவிகளை டேனி பார்க்கும் காட்சியில் இருக்கும் மர்மத்தனமும் அமானுஷ்யமும் மிரட்டி எடுத்துவிடும். நாவல் எழுதுவதாக அமர்ந்து டைப் அடித்துக்கொண்டே இருக்கும் ஜாக், பக்கம் பக்கமாக ஒரே வாசகத்தை எழுதி வைத்திருப்பதை விண்டி பார்த்து நடுங்கும் காட்சி, பாத்ரூமில் ஜாக்குடன் பேய் உரையாடும் காட்சி, கோடரியால் பாத்ரூம் கதவை ஜாக் உடைக்கும் காட்சி என்று படம் நம் உள்ளுணர்வையே உலுக்கியெடுத்துவிடும்.

விமர்சனங்கள்

படம் வெளியானபோது, விமர்சகர்கள் இப்படத்தின் நுட்பத்தைக் கவனிக்கத் தவறிவிட்டார்கள். பேய்ப் படம் போல இல்லையே என்ற பேச்சுகள் எழுந்தன. ஆனால், படம் மெல்ல மெல்ல பிரபலமாகி ரசிகர்களை ஈர்த்தது. ஒருகட்டத்தில், ‘கல்ட்’ அந்தஸ்தைப் பெற்றுவிட்ட இந்தப் படம் உலகமெங்கும் உள்ள திரைக்கலைஞர்களின் சேகரிப்பில் தனியிடம் பெற்ற படைப்பாகத் திகழ்கிறது.
நாவலாசிரியர் ஸ்டீபன் கிங்குக்கும் இந்தப் படம் திருப்தி தரவில்லை. நாவலில் வரும் பல காட்சிகள், கதாபாத்திரங்கள், கதாபாத்திரத்தின் தன்மைகளைப் படத்தில் குப்ரிக் காட்டவில்லை என்று குற்றம்சாட்டினார். இத்தனைக்கும் தன் நாவலுக்கு முழு திரைக்கதையும் எழுதியிருந்தாராம் கிங். அதைச் சட்டை செய்யாமல், புகழ்பெற்ற பெண் நாவலாசிரியரான டயேன் ஜான்ஸனுடன் இணைந்து 11 வாரங்களில் படத்துக்கான திரைக்கதையை எழுதி படத்தை எடுத்துவிட்டார் குப்ரிக்.

தன் நாவலின் முழு வீரியத்தையும் காட்ட வேண்டும் என்ற முனைப்பில் இருந்த கிங், அதே பெயரில் ஒரு தொலைக்காட்சித் தொடர் உருவாக்கத்திலும் ஈடுபட்டார். அவரது மேற்பார்வையில், மிக் கேரிஸ் இயக்கத்தில் அந்தத் தொடர் படுதோல்வியடைந்தது. நாவலின் அடிச்சரடை வைத்துக்கொண்டு திரைக்கதையை வடிவமைப்பது எப்படி என்பதைக் குப்ரிக் நேர்த்தியாகச் செய்துகாட்டியிருந்தார். அந்தத் தெளிவுதான் 39 ஆண்டுகள் கழித்தும் நம்மை இப்படத்தைப் பற்றி வியக்க வைக்கிறது.

ஜாக் டோரன்ஸ் வேடத்தில் நடித்திருக்கும் ஜாக் நிக்கல்ஸன் நடிப்பில் ராட்சசத்தனம் காட்டியிருப்பார். “விண்டி... லைட் ஆஃப் மை லைஃப்” என்று கோரச் சிரிப்புடன் மனைவியை மிரட்டிக்கொண்டே நடந்துவரும் காட்சி ஒரு சோறு பதம். ஜாக் நிக்கல்ஸனின் நடிப்பையும் கிங் கடுமையாக விமர்சித்தார் என்பது வேறு கதை. கால ஓட்டத்தில் ஜாக் டோரன்ஸ் கதாபாத்திரம், சைக்கோ கொலைகாரக் கதாபாத்திரங்களுக்கு ஒரு முன்மாதிரியாகிப் போனது.

படத்தில் இடம்பெறும் சம்பவங்களின் பின்னணி என்ன? முன் ஜென்மத் தொடர்ச்சியா, பேய்களின் விளையாட்டா, மனநோயா என்ற கணிப்பை நம்மிடமே விட்டுவிடுகிறார் குப்ரிக். “தெளிவுக்கும், தெளிவின்மைக்கும் இடையே ஊடாடும் மனித இருப்பை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளே ஸ்டான்லி குப்ரிக்கின் படங்கள்” என்று விமர்சகர்கள் சொல்வது ஏன் என்பது இந்தப் படத்தைப் பார்த்தால் புரியும்.

விரைவில் பாகம்-2

‘தி ஷைனிங்’ நாவலின் தொடர்ச்சியாக 2013-ல், ‘டாக்டர் ஸ்லீப்’ என்னும் நாவலை ஸ்டீபன் கிங் எழுதினார். அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, வருகிற நவம்பர் மாதம் அதே பெயரில் திரைப்படம் வெளியாகவுள்ளது. வளர்ந்துவிட்ட டேனிதான் இந்தக் கதையின் நாயகன். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அவனைப் பழிவாங்கத் துடித்துக்கொண்டிருக்கும் ‘ஓவர்லுக்’ ஹோட்டலின் அமானுஷ்ய சக்திகள் அவனது வாழ்வில் குறுக்கிடுவதாக நீளும் கதை இது. ‘தி ஷைனிங்’ படத்தின் ரசிகர்கள் இப்படத்தையும் தரிசிக்க தவிப்புடன் காத்திருக்கிறார்கள்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in