Published On : 07 Sep 2019

இது ஒரு சொதப்பல் திருட்டுக் கும்பலின் கதை!- ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’ இயக்குநர் சுதர்

director-sudhar

உ.சந்தானலெட்சுமி
santhanalakshmi.u@hindutamil.co.in

தமிழ் சினிமாவில் இது ஜாலி திருடர்களின் யுகம். ஏதாவது ஒரு வித்தியாசமான பொருளைத் திருட அலையும் கூட்டத்தை வைத்து வரும் படங்கள், ரசிகர்களின் மனதைத் திருடவும் தவறுவதில்லை. அந்த வகையில் இன்னொரு ஜாலி திருட்டுக் கும்பலின் கதையாக வருகிறது ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இரண்டு வருடங்களாக இடியாப்பச் சிக்கலில் மாட்டிக் கொண்டிருந்த இந்தப் படத்தை ஒருவழியாகப் திரைக்குக் கொண்டுவருகிறார் இயக்குநர் சுதர். அவருடன் ஒரு பேட்டி:

 எம்ஜிஆர் ரசிகரா நீங்க... அவரது பாடல் வரியை டைட்டிலா வச்சிருக்கீங்க?

எம்ஜிஆர் படங்களும் பாடல்களும் ரொம்பப் பிடிக்கும். இந்தப் படத்தின் கதையோட தொடர்புடைய டைட்டிலா வைக்கணும்னு யோசிச்சப்ப இந்தப் பாடல் வரிதான் ஞாபகத்துக்கு வந்தது. மொத்த யூனிட்டுக்கும் இந்த டைட்டில் பிடிச்சிருந்தது. அதையே வச்சிட்டோம்!

அப்படியென்ன கதை?

ஐந்து பேர் சேர்ந்து, திருடுறதுக்குத் திட்டம் போடுறதுதான் படத்தோட கதை. திருட்டுல வழக்கமா சொதப்புற கும்பல்னாலும், ஒருகட்டத்துல பெருசா ஒரு திட்டத்துல இறங்குறாங்க. ஆமாம், கிரிக்கெட் உலகக் கோப்பையைத் திருடுறதுதான் அவங்களோட எய்ம். அதுக்காக அந்தக் கும்பல் போடுற திட்டத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருக்கோம். ஜாலியா பரபரன்னு நகர்ற படம் இது. ட்ரெய்லரைப் பார்த்துட்டு எக்கச்சமா வாழ்த்துப் பூங்கொத்துகள் வருது!

இயக்குநர் - நடிகர் பார்த்திபனும் இந்தப் படத்துல இருக்கார் போலயே..?

சின்ன வயசுல இருந்தே அவரோட படங்களைப் பார்த்து வளந்தவன் நான். நக்கல் நகைச்சுவைக்கு அவரை அடிச்சுக்க ஆளே இல்லை. இந்தப் படத்துலயும் அப்படிப்பட்ட வசனங்கள் இருக்கு. மனுஷன் பின்னியெடுத்திருக்கார். சில நேரங்கள்ல ஸ்பாட்ல அவரே சீனுக்கு ஏத்த மாதிரி, டயலாக்கெல்லாம் சொல்வார். மொத்த யூனிட்டும் அசந்து நிற்கும். ஸ்பாட்ல நடிகரா மட்டும்தான் இருப்பாரே தவிர, இயக்குநர் வேலையில தலையிடுறதெல்லாம் கிடையாது. அதே நேரத்துல, ஏதாவது சந்தேகம் கேட்டாலும் சொல்லித்தருவார். அவரை மாதிரி அனுபவமிக்க கலைஞரோடு வேலை செஞ்சதுல எனக்கு ரொம்பச் சந்தோஷம். ஹீரோ ‘கயல்’ சந்திரன், ஹீரோயின் சாட்னா டைட்டஸ், காமெடி நடிகர்கள் ஜானி, சாம்னு எல்லாருமே நல்ல ஒத்துழைப்பு தந்தாங்க. அந்த டீம் ஸ்பிரிட் படத்துல பிரமாதமா வொர்க்-அவுட் ஆகியிருக்கு.

 ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி மூலமா வந்திருக்கீங்க. அதைப் பற்றிச் சொல்லுங்க…

அந்த நிகழ்ச்சிதான் என்னை மாதிரி புது இயக்குநர்களுக்கு வாசலா இருந்துச்சு. இன்ஜினீயரிங் முடிச்சிட்டு, அஞ்சு வருஷம் ஐடியில வேலை பார்த்துட்டு இருந்தேன். சினிமா மேல ஆர்வம் இருந்துச்சு. யார்கிட்ட அசிஸ்டென்ட்டா சேரணும்னுகூட தெரியாத ஒரு சூழல்ல கைகொடுத்ததுதான் ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சி. அந்த ஷோவோட அஞ்சாவது சீசன்லதான் நான் கலந்துக்கிட்டேன். அதுல ஏழு குறும்படங்கள் எடுத்துப் பேர் வாங்கினேன். சினிமா டெக்னிக்ஸ் பற்றித் தெரிஞ்சுக்க அது ஒரு திறப்பா இருந்துச்சு.

பட வாய்ப்புத் தேடும்போதுகூட ‘நாளைய இயக்குநர்’ங்கிற அந்தப் பேர்தான் விசிட்டிங் கார்டா இருந்துச்சு. கார்த்திக் சுப்பாராஜ், நலன் குமாரசாமி, ‘முண்டாசுப்பட்டி’ ராம் எல்லாருமே இங்க இருந்து வந்தவங்கதான். அவங்க வரிசையில நானும் சினிமாவில் அறிமுகமாகிறது ரொம்பப் பெருமையா இருக்கு.

 சில படங்கள்ல நடிக்கவும் செஞ்சிருக்கீங்க… நடிப்புத் தொடருமா?

‘விழித்திரு’,‘நளனும் நந்தினியும்’னு ரெண்டு படங்கள்ல நடிச்சிருக்கேன். ரெண்டு படத்தோட இயக்குநர்களுமே நண்பர்கள், அதனால நடிச்சேன். அதோடு, சினிமால புழக்கத்துலயே இருக்கணும்கிறதுக்காக சினிமா சார்ந்து ஏதாவது பண்ணிட்டேதான் இருப்பேன். மத்தபடி, தொடர்ந்து நடிக்கணும்கிற ஆர்வம் இல்லை. அடுத்தடுத்து, நல்ல படங்கள் எடுக்கணும். அதுக்கான வேலையிலதான் இருக்கேன்.

 முதல் படம் ரிலீஸாகவே இவ்வளவு தாமதம் ஆகிருக்கே... ஒரு புதுமுக இயக்குநரா இந்தச் சிக்கலை எப்படிப் பார்க்கிறீங்க?
அது சொல்லவே முடியாத வலி. பெரிய படங்களுக்கே இந்தப் பிரச்சினைன்னா புதுசா வர்ற என்னை மாதிரி ஆட்களுக்கு இது பெரிய சோதனைதான். ஏன்னா, முதல் படம்தான் அவங்களோட அடுத்த வாய்ப்புக்கான விசிட்டிங் கார்டே. அதுவே, இல்லைன்னா அடுத்தடுத்து வேற எங்கேயும் வாய்ப்புத் தேட முடியாது. ஆனாலும், நம்பிக்கையை அடைகாக்கிற மாதிரி தக்கவைச்சு, படத்தோட ரிலீஸுக்காகக் காத்திட்டு இருக்கோம். எத்தனை சோதனை வந்தாலும் சினிமா நம்மளைக் கைவிடாதுன்னு என்னை மாதிரி நிறைய பேர் நம்புறோம். அந்த நம்பிக்கை நிச்சயம் பொய்க்காது!

You May Like

More From This Category

More From this Author


More From The Hindu - Tamil