அமைச்சரவைக்கே அனைத்து அதிகாரமும்... ஆளுநர் - முதல்வர் மோதலுக்கு முடிவுரை எழுதிய தீர்ப்பு!

அமைச்சரவைக்கே அனைத்து அதிகாரமும்... ஆளுநர் - முதல்வர் மோதலுக்கு முடிவுரை எழுதிய தீர்ப்பு!

ஆளுநர்களை வைத்து அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு தனது கைப்பிடிக்குள் வைத்திருக்க நினைக்கும் இந்தத் தருணத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்றை எழுதியிருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘டெல்லி மாநில அமைச்சரவையின் அறிவுரைப்படிதான் அங்குள்ள துணை நிலை ஆளுநர் செயல்பட முடியும். அவருக்கெனத் தனிப்பட்ட அதிகாரம் ஏதும் கிடையாது.’ என்பதே அந்த அதி முக்கியத் தீர்ப்பு.

யாருக்கு அதிகாரம் என்பதில் டெல்லியில் முதல்வர்களுக்கும் ஆளுநர்களுக்கும் நீண்ட காலமாகவே சர்ச்சை நீடிக்கிறது. இந்த நிலையில், 2013-ல் அர்விந்த் கேஜ்ரிவால் டெல்லி முதல்வரானபோது சட்டப்பேரவையில் லோக்பால் மசோதாவை அறிமுகப்படுத்தினார். அதற்கு, டெல்லியின் அப்போதைய துணை நிலை ஆளுநர் நஜீப்ஜங்கின் ஒப்புதல் பெறவில்லை என சர்ச்சை கிளம்பியது. அந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக 49 நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் கேஜ்ரிவால்.

2015-ல், கேஜ்ரிவால் தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சி அமைத்ததும், மறுபடியும் முதல்வர் - ஆளுநர் மோதல் முச்சந்திக்கு வந்தது. தங்களால் நியமிக்கப்பட்ட துணை நிலை ஆளுநர் அனில் பைஜலை வைத்து கேஜ்ரிவால் அரசுக்குக் குடைச்சல்கொடுத்தது மத்திய பாஜக அரசு. இதனால், டெல்லிவாசிகளுக்கும் ஆம் ஆத்மி ஆட்சி மீது அவ நம்பிக்கை உருவானது. வெறுத்துப்போன ஆம் ஆத்மி கட்சியினர், “இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், டெல்லிக்கு இன்னும் கிடைக்கவில்லை” என மத்திய அரசைக் கடுமையாகச் சாடிவந்தனர்.

இந்த விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக ஆளுநர், மத்திய அரசுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் 2016-ல் வழக்குத் தொடுத்தார் கேஜ்ரிவால். அந்த வழக்கில், “அனைத்து அதிகாரமும் துணைநிலை ஆளுநருக்கே” என தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியது கேஜ்ரிவால் அரசு. அதில்தான், ``அனைத்து அதிகாரமும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கே... ஆளுநர் அதன் அறிவுரைப்படிதான் செயல்பட முடியும்” எனக் கடந்த 4-ம் தேதி தீர்ப்பு எழுதப்பட்டிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in