பேசும் படம் - 29: கஸ்தூர்பாவின் கடைசி நாட்கள்

பேசும் படம் - 29: கஸ்தூர்பாவின் கடைசி நாட்கள்

மகாத்மா காந்தியின் கடைசி 10 ஆண்டுகால வாழ்க்கையை அருகில் இருந்து படம் பிடித்தவர் என்ற பெருமை அவரது உறவினர்களில் ஒருவரான (grandnephew) கனு காந்திக்கு உண்டு. ‘காந்தியின் கைத்தடி’ என்று செல்லமாக அழைக்கப்பட்ட கனு காந்தி, 1936-ம் ஆண்டில் தனது 19-வது வயதில் வார்தாவில் உள்ள காந்தியின் சேவாகிராம் ஆசிரமத்துக்கு வந்தார். அன்றிலிருந்து அதன் ஊழியர்களில் ஒருவராகப் பணியாற்றிய அவர், ஆசிரமத்தின் கணக்கு வழக்குகளைப் பார்த்துவந்தார்.

புகைப்படத் துறையில் விருப்பம் கொண்டிருந்த அவருக்கு, மகாத்மா காந்தியின் தினசரி நடவடிக்கைகளைப் படம்பிடிக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டது. தனது விருப்பத்தை மகாத்மா காந்தியிடம் தெரிவித்தார்.

இதைக் கேட்ட மகாத்மா காந்தி, “உன் விருப்பத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், நீ என்னைப் படம் பிடிக்க 3 நிபந்தனைகளை விதிக்கிறேன். முதல் நிபந்தனையாக, படம் எடுக்கும்போது ஃபிளாஷை பயன்படுத்தக் கூடாது. இரண்டாவது, என்னை போஸ் கொடுக்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. மூன்றாது, என்னைப் படமெடுக்க ஆகும் செலவை சேவாகிராம் ஆசிரமம் ஏற்றுக் கொள்ளாது” என்று கூறினார். இதை ஏற்றுக்கொண்ட கனு காந்தி அன்றைய தினம் முதல் காந்தி இறக்கும் வரை சுமார் 10 ஆண்டுகாலம், காந்தியுடனேயே இருந்து அவரது வாழ்க்கையில் நடந்த முக்கியச் சம்பவங்களைப் படம் பிடித்தார். அவ்வாறு அவர் படம் பிடித்த முக்கியச் சம்பவங்களில் ஒன்று கஸ்தூர்பா காந்தியின் மறைவு.

 காந்தியும் கஸ்தூர்பாவும் 1869-ம் ஆண்டு போர்பந்தரில் பிறந்தவர்கள். மகாத்மா காந்தியை கஸ்தூர்பா தனது 13-வது வயதில் கரம்பிடித்தார். திருமணம் நடந்த நாள் முதல், தன் கணவரின் லட்சியங்களுக்குத் துணையாக இருந்து வந்தார் கஸ்தூர்பா காந்தி. மகாத்மா காந்தி பொதுவாழ்க்கையில் தீவிரமாக இருந்ததால், குடும்பப் பொறுப்புகளை கஸ்தூர்பாவே ஏற்று வந்தார். அத்துடன் காந்தியுடன் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு சிறையும் சென்றார்.

1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு இயக்க போராட்டத்தின்போது காந்தியுடன் கஸ்தூர்பாவும் கைதானார். இருவரும் புனேயில் உள்ள ஆகாகான் மாளிகையில் சிறை வைக்கப்பட்டனர். இந்தச் சூழ்நிலையில் கஸ்தூர்பாவின் உடல்நிலை நலிவடையத் தொடங்கியது. நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சியால் அவர் கடுமையாக பாதிக்கப்பட்டார். நோயுற்ற காரணத்தால் அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று பலரும் ஆங்கிலேய அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். ஆனால், கஸ்தூர்பாவை விடுவிக்க மறுத்த அரசு, அவருக்குத் தேவையான சிகிச்சைகளை அளிக்க முன்வந்தது.

அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக டாக்டர் கிளைடர், டாக்டர் நய்யார் ஆகியோர் அனுப்பப்பட்டனர். ஆனால், அவர்களின் சிகிச்சையை ஏற்க மறுத்தார் கஸ்தூர்பா. மகாத்மா காந்திக்கு சிகிச்சை அளித்த இயற்கை மருத்துவரான டாக்டர் தின்ஷா மேத்தாவோ, அல்லது வேறு யாராவது ஆயுர்வேத மருத்துவர்களோதான் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தார். ஆனால், அதையும் மீறி அலோபதி மருத்துவர்கள் அவருக்கு மருத்துவம் பார்த்தனர். இருப்பினும் கஸ்தூர்பாவின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தன் இறுதிக்காலம் நெருங்கியதை உணர்ந்த கஸ்தூர்பா, மகன்கள் பேரக்குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரைக் காண விரும்பினார். குறிப்பாக, காந்தியால் அதிகம் வெறுக்கப்பட்ட ஹரிலாலை காண விரும்பினார். இதைத்தொடர்ந்து ஆங்கிலேய அரசு ஆகாகான் மாளிகைக்குள் அவர்களை அனுமதித்தது. இறுதிக்கட்டத்தில் தாயைப் பார்க்க வந்திருந்த ஹரிலால் நன்றாகக் குடித்திருந்ததால், பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டார். மகனின் நிலையைப் பார்த்து கஸ்தூர்பா தன் தலையில் அடித்துக்கொண்டார்.

கஸ்தூர்பாவை மரணம் நெருங்கியதை உணர்ந்த மகாத்மா காந்தி, அவருக்கு உணவுகளைக் கொடுப்பதை நிறுத்தி, தண்ணீரும், தேனும் மட்டும் கொடுக்குமாறு கூறினார். இறுதியில் 1944-ம் ஆண்டு பிப்ரவரி 22-ம் தேதி காந்தியின் மடியில் தலைவைத்துப் படுத்தவாறு கஸ்தூர்பா உயிர்நீத்தார். கஸ்தூர்பாவின் மறைவுக்குப் பிறகு சோகமே உருவாக அவரது உடலுக்கு அருகில் காந்தி அமர்ந்திருப்பதைத்தான் இங்கே காட்சிப்படுத்தி உள்ளார் கனு காந்தி.

தனது வாழ்க்கையில் எத்தனையோ பேரின் இறப்புகளைப் பார்த்த காந்தியால், கஸ்தூர்பாவின் இறப்பைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. கஸ்தூர்பாவின் மறைவைப் பற்றி குறிப்பிட்டுள்ள காந்தி, “அவர் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

கனு காந்தி

கனு காந்தி (kanu gandhi) 1917-ம் ஆண்டில் பிறந்தவர். இவரது தந்தையான நரன்தாஸ் காந்தி, மகாத்மா காந்தியின் மருமகன் ஆவார். மகாத்மா காந்தியைப் பின்பற்றி சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட கனு காந்தி, தனது 15-வது வயதில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றதற்காகச் சிறையில் அடைக்கப்பட்டார். டாக்டராக விரும்பிய இவர், பின்னர் அந்த ஆசையைக் கைவிட்டு காந்தியின் ஆசிரமத்தில் சேர்ந்து பணியாற்றினார். 1937-ம் ஆண்டு முதல் காந்தியின் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை இவர் அருகிலிருந்து படம் பிடித்துள்ளார். காந்தியின் மறைவுக்குப் பிறகு ராஜ்கோட் சென்ற கனு காந்தி, அங்கு கஸ்தூர்பாவின் நினைவாக கிராம சேவை மையம் ஒன்றை நடத்திவந்தார். 1986-ம் ஆண்டு மாரடைப்பால் இவர் காலமானார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in