மண்.. மனம்.. மனிதர்கள்! - 19

‘விழா வேந்தன்' என்.கே.டி. முத்து
மண்.. மனம்.. மனிதர்கள்! -  19

நெடிய உருவம். பணிவான தலையசைப்பில் வணக்கம். தூய கதரில் வேட்டி - சட்டை. ஹெர்க்குலிஸ் சைக்கிளை மெல்ல அழுத்தி வரும் தோரணை. இது தூரத்து தோற்றம் .

இறுகியும் இளகியும் பழகித் தெளிந்த முகம். பளீரென்ற நெற்றித் திருநீரு. கலைகளுக்கு இளகும் கண்கள். குறைந்த வார்த்தைகளில் அன்பாராதனை. இது அருகாமைத் தோற்றம் .

என்.கே.டி முத்து!

பிறந்தது சேலம் ஜில்லா என்றாலும் பூர்வீகம் திருச்சி பொன் மலைக்கருகே கீழ்கல்கண்டார் கோட்டை.

சென்னை வந்து இறங்கி ஆரம்பத்தில் ரயில்வே துறையில் சீனியர் டைப்பிஸ்ட் பணியில் இருந்தவர் கலைகளின் மேல் அபரிமிதமான நாட்டம் கொண்டிருந்தார்.

நாளெல்லாம் அடிக்கும் டைப்பிங் ஒலியும் கேரேஜ் தள்ளும் ஓசையும் தாளக் கோர்வைகளாகவே கேட்கும் அளவுக்கு கலைகளோடு ஒன்றிப்போன அவர் ‘திருவட்டீஸ்வரர் சபா’ என்னும் புகழ்பெற்ற சபாவைத் துவங்கினார்.

1953 ல், மாதம் ஒரு ரூபாய் சந்தாவில் துவங்கப்பட்ட அந்த சபாவில் பாடாத விஐபி-க்களே இல்லை எனலாம்.

கர்நாடக சங்கீத மாமேதைகளான செம்பை, அரியக்குடி, மகாராஜபுரம் சந்தானம், எம்.எஸ்.அம்மா, டி.என்.கிருஷ்ணன், பாலமுரளி கிருஷ்ணா, எம் எல்.வசந்தகுமாரி என வரிசைப்படுத்திக் கொண்டே போகலாம்...

ஒரு கட்டத்தில் திரு.முத்து அவர்களின் கலையார்வத்தையும் நிர்வாகத் திறனையும் கண்ட என்.கே.திருமலாச்சாரியார் பள்ளி நிர்வாகம் தங்களது கலா மண்டபத்தை திரு. முத்து அவர்களிடம் ஒப்படைத்தது.

அதன்பின் திருவல்லிக்கேணி களைகட்ட ஆரம்பித்தது.

என்.கே.டி. கலா மண்டபத்தில் சிவாஜி, எம்.ஜி.ஆர், ஆர்.எஸ்.மனோகர், சஹஸ்ரநாமம், சோ, ஹெரான் ராமசாமி முதற்கொண்டு எத்தனையோ நாடக ஜாம்பாவன்களை மேடையேற்றியிருக்கிறார்.

நடிகர் சிவகுமார் அவர்களின் முதல் நாடகம் அங்கேதான் அரங்கேற்றப்பட்டது. பல்லாயிரக்கணக்கான நாடகங்கள். இசைக் கச்சேரிகள். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விழா!

காலப்போக்கில் அவர் என்.கே.டி. முத்து என்றே அழைக்கப்பட்டார்.

பிரபலங்களைத் தவிர்த்து எழுபது – எண்பதுகளில் அமெச்சூர் நாடகக் கலைஞர்களுக்கும் ஆபத்பாந்தவனாக இருந்தார்.

திருவல்லிக்கேணியை அமெச்சூர் நாடகக்காரர்களின் சொர்க்கம் என்றே சொல்லலாம் . அவர்களின் ஒரே நம்பிக்கை என்.கே.டி. முத்து.

“என்.கே.டி. முத்து மட்டும் தேதி கொடுத்துட்டா போதும். அப்புறம் ஜமாய்ச்சுரலாம்யா..!” என்று பெருங்கனவுகளோடு நாடகக்காரர்கள் வடசென்னையிலிருந்து வந்து ஸ்கிரிப்டோடு காத்திருப்பார்கள்.

முழு ஸ்கிரிப்ட்டையும் படித்துப் பார்த்து சென்சார் செய்த பின்தான் தேதி கொடுப்பார் முத்து சார். அந்தத் தேதியைத் தங்கக் கிரீடம் போல தலையில் தாங்கிக்கொண்டு போவார்கள் நாடக ஸ்வாசிகள்.

சுருங்கச் சொல்வதென்றால் என்.கே.டி கலா மண்டபம் என்பது அந்தக் காலத்து சன் டிவி.

மாலை வேளைகளில் மிகவும் உள் தள்ளி அமைந்திருக் கும் கலா மண்டபத்தின் வாயிலில் மண் தரையில் டேபிள் சேர் போடப்பட்டிருக்க, அதில் மங்கலான ட்யூப் லைட் வெளிச்சத்தில் இறுக்கமான முகத்தோடு என்.கே.டி. முத்து அமர்ந்திருப்பார்.

உள்ளே ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டிருக்க நாடகம் நடந்து கொண்டிருக்கும்.

சிவாஜியின் ‘தங்கப்பதக்கம்’ – சோவின் ‘உண்மையே உன் விலை என்ன ?’ – அல்லது அமெச்சூர் ட்ரூப்பின் ‘வானிலே ஒரு வெண்ணிலா’ அது எதுவாகயிருந்தாலும் அவருக்கு ஒன்றுதான்.

இடைவேளையில் மட்டும் உள்ளே சென்று மாலை மரியாதை செய்துவிட்டு மீண்டும் அங்கே வந்து அமர்ந்து கொள்வார்.

அந்த நேரம் பார்த்துதான் அடுத்த தேதிக்கு வரிசை கட்டுவார்கள் அமெச்சூர்கள். யாருக்கும் இல்லை என்று சொல்ல மாட்டார். யாரையும் தாழ்த்திப் பார்க்க மாட்டார்.

ஸ்கிரிப்ட் நன்றாக இல்லையென்றால், “கண்ணா, உன்னைப் பத்தி எனக்கு நல்லாவே தெரியும். உன் திறமைக்கு இன்னும் ஜோரா எழுதிண்டு வரலாம். ரெண்டு மாசம் கழிச்சு உனக்காகக் காத்திருப்பேன்...” என்று தட்டிக் கொடுத்து அனுப்புவார்.

வைகிறாரா வாழ்த்துகிறாரா என்பதையே புரிந்துகொள்ள முடியாதபடிக்கு இருக்கும் அவரது இறுகிய முகம்.

அவரை முதன் முதலில் நான் சந்தித்த நாள் நினைவிருக் கிறது. அது வைகாசி மாதமாக இருந்திருக்கலாம்.

எனது நாடக முன்னோடிகளான ஸ்ரீநிவாசன், நந்தகுமார் இருவரும் இணைந்து தயாரித்த அமெச்சூர் நாடகம் ஒன்றின் பூஜைக்குத் தலைமை தாங்க அவரை அழைக்கச் சென்றவர்கள் சிறுவனான என்னையும் கூட்டிப் போனார்கள்.

ஐஸ் அவுஸ் பஸ் ஸ்டாண்டுக்கு எதிரே பழைய பெட்ரோல் பங்க்குக்குப் பின்னால் அமைந்திருந்த பெரிய தொரு ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகைதான் என்.கே.டி. முத்து அவர்களின் அலுவலகம்.

கூட்டமான கூட்டம். அந்த சின்னஞ்சிறு தெருவை பாதி அடைத்தபடி சைக்கிள்கள் -ஸ்கூட்டர்கள் -நூற்றுக்கணக்கான செருப்பு ஜோடிகள்.

முத்து சாரின் ஏற்பாட்டில் பாட்டும் பஜனையுமாக உள்ளே ராதா கல்யாண வைபோகம் விமரிசையாக நடந்து கொண்டிருந்தது.

டாப் ஓப்பனாக இருக்கும் தன்னுடைய மாரீஸ் டூரர் காரில் கிருஷ்ணர் படத்தை அலங்கரித்து வைத்து பக்தர்கள் சூழ ஜானவாசமாக மாட வீதிகளைச் சுற்றி அழைத்து வந்து பந்தல் சேர்த்தார் என்.கே.டி முத்து.

ராதா கல்யாணம் இனிதே முடிய, பாகவதர்கள் வரிசையாக அமர்ந்து சாப்பிட்டு முடித்து எழுந்த நேரம் தன் அங்கவஸ்திரத்தை உதறி எடுத்த என்.கே.டி முத்து, நெடுஞ்சாண் கிடையாக தரையில் வீழ்ந்து வெற்று உடம்போடு “ஹரி...ஹரி...” என்று கண்கள் செருக உச்சரித்தபடியே பாகவதர்களின் எச்சில் இலைகளின் மீது உருண்டு புரண்டு கொண்டிருந்தார்!

இறுகிய முகத்தோடு அமர்ந்திருப்பவருக்கு பின்னே இப்படி ஒரு பரிமாணமா என்று வியந்து நின்றோம். அதன் பிறகு அவர் மேல் இருந்த அச்சம் நீங்கிவிட நெருங்கிப் பேசி தேதி வாங்கிக்கொண்டு கிளம்பினோம்.

எத்தனையோ அமெச்சூர்களை ஆளாக்கிப் பார்த்திருக்கிறார் என்.கே.டி. முத்து.

எண்பது மற்றும் தொண்ணூறுகளில் நகரில் அவர் கலந்துகொள்ளாத விழாக்களே இல்லை எனலாம். வாழ்நாளில் குறைந்தது 5 ஆயிரம் விழாக்களுக்காவது அவர் தலைமை ஏற்றிருப்பார்.

எம்ஜிஆரும் – கலைஞரும் ஒரே மேடையில் நின்று என்.கே.டி. முத்துவுக்கு ‘நாடகப் பாதுகாவலர்’ என்ற பட்டத்தைக் கொடுத்து வாழ்த்தியது கலை வரலாறு!

அவரது கலையார்வத்தைக் கண்டு வியந்த ஜெமினி கணேசன், ‘விழா வேந்தன்’ என்ற பட்டத்தைக் கொடுத்தார்.

கலைஞர் கருணாநிதி அவர்களின் ‘தென்பாண்டி சிங்கம்’ வரலாற்று நாடகத்தை பழைய கலைவாணர் அரங்கத்தில் ஹெரான் ராமசாமியை வைத்துப் பிரம் மாண்டமாக அரங்கேற்றிக் காட்டினார் முத்து சார்.

சினிமாவுக்கு வானளாவிய கட் அவுட் வைப்பதில் கலைப்புலி தாணு பேரெடுத்தவர் என்றால், நாடகத்துக்கு பிரம்மாண்டமான கட் அவுட் வைத்து சாதித்தவர் என்.கே.டி முத்து.

நாடக இசைவிழாக்கள் மட்டுமல்ல இலக்கியத் துக்கும் அவர் அபரிமிதமான பங்களித்திருக்கிறார். உரத்த சிந்தனை அமைப்புக்கு எவ்வளவோ செய்திருக்கிறார்.

என் சொந்த அனுபவம் ஒன்று. கல்லூரிப் பருவத் தில் நான் நடத்திக்கொண்டிருந்த ‘வெண்ணிலா இலக்கிய வீதி’யின் ஆண்டு விழா வந்தது. திரு. கமல்ஹாசன் தலைமை. விழாவுக்கு என்.கே.டி முத்து சார்தான் புரவலர்.

இன்விடேஷன், ஷீல்டு என நான் நீட்டிய லிஸ்டில் எல்லாவற்றிற்கும் அவர் டிக் அடித்துவிட, போஸ்டர் விஷயத்தில் மட்டும் பிடிவாதமாக நச்சரித்துக் கொண்டிருந்தேன்.

“சார், வெண்ணிலா ஆண்டு விழாவுக்கு பத்து பிட் போஸ்டர் அடிச்சே ஆகணும் சார்...”

“எதுக்கு அவ்ளோ...நாலு பிட் போதாதா..?”

“நாலு வரைக்கும் வந்துட்டீங்க... அந்தப் பக்கம் ஆறுதான சார்...”

“அசடாட்டம் அடம் பிடிக்காத. பத்து பிட்டு ஒட்ட எங்க இருக்கு செவுரு..?”

“அதெல்லாம் தேடி ஒட்டிக்குறோம் சார். அதுக்குக் கம்மியா ஒட்டுனா இலக்கியத்துக்கு மதிப்பிருக்காது சார்...”

“இங்க பாரு... மதிப்புங்குறது தானா வரும். எத்தன பிட்டுன்னு பாத்து வராது...”

“இருக்கலாம் சார். ஆனா, அதை நீங்க சொல்லக் கூடாது..!”

“இதாண்டா உங்கிட்ட பிடிச்ச விஷயம்... சரி, பிரஸ்ஸுக்கு போன் பண்றேன்... டிசைனைக் கொண்டு குடுத்துரு...” என்றவர் சற்றே பின்னுக்கு சாய்ந்து கண்களை மூடி சிரித்துக் கொண்டிருந்தார்.

அனேகமாக, சோவின் ஒன்பது நாடகங்கள் ஒன்றி ணைந்த நாடக விழா ஒன்றிற்கு 40 பிட் போஸ்டர் அடித்து நகரெங்கும் ஒட்டி அலறவிட்டதை நினைத்துக் கொண்டிருந்திருப்பார்.

எதைச் செய்தாலும் தாராளம் - தனித்துவம் – பிரம் மாண்டம். அதுதான் முத்து சார்.

கலைகளின் வளர்ச்சிக்காக அயராது பாடுபட்ட என்.கே. டி. முத்து அவர்களுக்கு 70 சபாக்கள் ஒன்று சேர்ந்து பாராட்டு விழா எடுத்தது நகரில் நடந்திராத அதிசயம்.

கலைப்பங்களிப்பைப் போலவே முத்து சார் சத்தமில்லாமல் செய்து வந்த சமூகப் பங்களிப்பும் மிகப் பெரிது.

ஒவ்வொரு ஆண்டும் தைப்பொங்கலுக்கு முன்தினம் அவரது அலுவலகம் களை கட்டும். திருவல்லிக்கேணியைச் சுற்றியுள்ள குப்பங்களில் வாழும் எளிய மக்கள் சுமார் 500 பேராவது அங்கே கூடி வருவார்கள்.

அவர்களுக்காக தரமான காதி வேட்டி - சேலைகளை வாங்கி வந்து பொங்கல் பரிசாக அன்போடு கொடுப்பார் என்.கே.டி. முத்து.

அனைவரையும் வரிசையாக அமர வைத்து, கடந்த ஆண்டு தங்களுக்குள் சண்டை சச்சரவு இல்லாமல் அவர்கள் வாழ்ந்த விதத்தைப் பாராட்டியும், இந்த ஆண்டும் அப்படியே ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று வாழ்த்தியும் பேசும் என்.கே.டி. முத்து...

பெயர் பட்டியல் படிக்கப்பட அவரவர்கள் இருக்கும் இடத்துக்கே சென்று பணிந்து குனிந்து பொங்கல் பரிசினை அளிப்பார். தயாள குணத்தையும் கடந்து அவரது கலாச்சாரமும் பண்பும் எளிய மக்களை நெகிழச் செய்யும் .

முத்து சாரின் நெடிய வாழ்வில் குறித்துச் சொல்ல வேண்டியது ஒன்றுண்டு.

ஆம், எதற்காகவும் எந்தப் பிரதிபலனையும் யாரிடமிருந் தும் எதிர்பார்க்காமல் வாழ்ந்தவர் முத்து சார். அதுதான் அவரது மேன்மையே.

அவருக்கு இருந்த அரசாங்கத் தொடர்பில் நாலைந்து கலைமாமணிகளை வாங்கிப் போட்டிருக்கலாம். அவருக்கு இருந்த மக்கள் தொடர்பில் குறைந்தது ஒரு கவுன்சிலருக்காவது நின்று பார்த்திருக்கலாம்.

செய்யவில்லை முத்து சார். ஒரு கர்மயோகியைப் போல் தன் கடன் மக்களுக்கு வழங்கிக் கொண்டிருப்பது என்றே வாழ்ந்தார்.

அவரது அந்தப் புண்ணிய பலன்தான் இன்று அவரது மகன் என்.கே.டி. ஜெயகோபால் பிரபலமான யோகா குருவாக நம்மிடையே பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இந்திய ராணுவம் - இந்திய கிரிக்கெட் அணி – கார்ப்ப ரேட்காரர்கள் என்று சகலருக்கும் யோகா சொல்லிக் கொடுக்கும் ஜெயகோபால் தன் தந்தை சொல்படி சுற்றி யுள்ள குப்பங்களுக்கும் செல்கிறார்.

சொந்த செலவில் ஷாமியானா போட்டு எளிய மக்களுக்கு பேரன்போடு யோகா கற்றுக் கொடுக்கிறார். அச்சன் வழியில் எச்சம்.

80 வயது நிறைந்து வாழ்ந்த முத்து சார், 2016-ன் இறுதி மாதங்களில் இறைவனோடு கலக்க விரும்பியவர் போலவே இருந்தார்.

இறுதி நாட்களை கலைஞர்களோடு கழிக்க விரும்பி யவர், தன் மகனை விட்டு மார்கழி கச்சேரிகளாக பத்து நாட்களுக்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். அதன் முடிவில் எளியவர்களுக்கு தைப் பொங்கல் பரிசைக் கொடுத்துவிட்டு விடை பெற்றுக் கொள்ளலாம் என்று ஆசைப்பட்டவர் போலவே காணப்பட்டார்.

ஆனால், தேதி கொடுத்தே பழகிய முத்து சாருக்கு காலம் ஒதுக்கிய தேதி 29.12.2016.

கலைவிழாவுக்கு முன்பே காலமானார். நாடகக் கலையுலகம் திரண்டு வந்தது. ஏழை எளிய மக்கள் அலுவலக வாசலில் கூடி தலையிலடித்துக்கொண்டு புலம்பிக் கதறினார்கள்.

இறுதி மரியாதை செலுத்திய நடிகர் சிவகுமார் சொன்னார்...

“முத்து சார் வாழ்வாங்கு வாழ்ந்து நிறைய செஞ் சிட்டுப் போயிட்டாரு. அவருக்காக கண் கலங்கறதுல அர்த்தமில்ல. வேணும்னா அவர் மாதிரி வாழ முடிய லையேன்னு நினைச்சு கண் கலங்கிக்கலாம்...”

உண்மை! என்.கே.டி முத்து சாரைப் போல வாழ்வது ஒரு வரம்!

விழா வேந்தனாக எத்தனையோ மேடைகளைக் கண்ட முத்து சார், “அது என்னப்பா தகன மேடையாமே..?” என்று அங்கேயும் அழைத்துப் போகச் சொன்னார்.

மயிலை இடுகாட்டில் கால பைரவர் மேடையில் இருத்தி சாம்பிராணி மரியாதை செய்யப்பட்டது.

முடிந்தது விழா என்பதாக ஏதோ ஒப்பனை அறைக்குள் செல்வது போல் தகன அறைக்குள் சென்றவர், மாயா வேடம் அறுத்துக் கலைத்துச் சிலிர்த்துக் குழைந்து அண்டத்தில் கலந்தார்.

வெளியேறி வரும்போது தகன அறைக்கு மேலிருந்த புகை போக்கியைக் கவனித்தேன்.

ஆடி அசைந்து வெளிவந்து கொண்டிருந்த முத்து சாரின் ஈமப் புகையில் சிவ நடனம்!

(சந்திப்போம்)

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in