என்னை எழுத்தாளனாக்கிய என் அம்மா!- ஓர் அச்சகத் தொழிலாளியின் அடடே சாதனை

என்னை எழுத்தாளனாக்கிய என் அம்மா!- ஓர் அச்சகத் தொழிலாளியின் அடடே சாதனை

எம்.சோபியா

தினமும் கோடிக்கணக்கான எழுத்துகளை, லட்சக்கணக்கான பிரதிகளில் வார்த்தெடுத்தாலும், அச்சகத் தொழிலாளர்கள் பலருக்கு அதை ஆழ்ந்து வாசிக்கக்கூட நேரமிருப்பதில்லை. எழுத்தாளர் ஸ்வரமஞ்சரி அதற்கு விதிவிலக்கு. அச்சுத் தொழிலாளியான இவர் சுமார் 30 சிறுகதைகள், கவிதைகள், நாடகங்களை எழுதியிருக்கிறார். ஆர்.கே.நாராயண், ஆன்டன் செக்காவ், கார்சியா மோர்கோஸ் உள்ளிட்டோரின் ஆங்கிலச் சிறுகதைகளைச் சிற்றிதழ்களுக்காகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். ‘யயாதியின் கடிதங்கள்' என்ற சிறுகதைத் தொகுப்பும், மதுரை, சென்னை, இலங்கை வானொலிகளில் வாசிக்கப்பட்ட சிறுகதைகளும் இவரை வாசிப்புலகிற்கு அறிமுகம் செய்தவை. சில வானொலி நாடகங்களையும் எழுதியிருக்கிறார். இவரது ஒரு சிறுகதை டிவி நாடகமாகியிருக்கிறது.

ஸ்வரமஞ்சரியைச் சந்திக்க சிவகாசி போய் இறங்கிய என்னை, நண்பருடன், வயதான பெரியவர் ஒருவரும் வரவேற்றார். பஞ்சாய் நரைத்த மீசை முடி, ஏற்றிக்கட்டிய கைலி, காலில் ரப்பர் செருப்புடன் இருந்த அவரை யாரென்று நண்பரிடம் கேட்டேன். ``இவர்தான் நீங்க தேடிவந்த ஒண்டிவீரன். ஸ்வரமஞ்சரி என்பது இவரது புனைப்பெயர்'' என்று நண்பர் சொல்ல, அவரது எளிமை ஒரு கணம் என்னைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. இத்தனைக்கும் அவரது இருமகள்களும் வங்கிப்பணியில் இருப்பவர்கள்.

``அய்யா நீங்களா...'' என்று கைகளை இறுகப்பற்றினேன். வறுமையில் வாடும் ஒரு அச்சகத்தொழிலாளி பற்றி அவர் எழுதிய ‘ஏதோவொன்று' எனும் சிறுகதையை இப்போதுதான் படித்தது போல பசுமையாக ஞாபகம் இருக்கிறது. பகலெல்லாம் அச்சகத்தில் மாடாய் உழைத்துவிட்டு, உடலில் தெம்பில்லாமல் அசந்து தூங்கும் கணவனை இரவில் சுரண்டி எழுப்புகிறாள் மனைவி. அவனுக்கு எந்த உணர்வும் தோன்றவும் இல்லை. அதற்கேற்ற ஓய்வையோ, உணவையோ அவனது உடல் பெற்றதுமில்லை என்பதால் திரும்பிப் படுத்துக்கொள்கிறான். அதிகாலை 4 மணிக்கு மீண்டும் மனைவி சுரண்டி எழுப்புகிறாள். 4 மைல் தள்ளிப்போய் சைக்கிளில் தண்ணீர் எடுத்து வர வேண்டும். தவிர்க்கவே இயலாத வேலை அது. அரைத்தூக்கத்தில் எழுந்து, சைக்கிளை அழுத்தி தண்ணீருக்குப் போவான் அவன். வறுமையும், ஓய்வற்ற உழைப்பும், அதன் பொருட்டு கணவன் மனைவி இடையே பேசியும், பேசாமலும் நிகழ்கிற உணர்வுப் பரிமாற்றமும் நம்மைச் சிலிர்க்க வைக்கும்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in