"இனி தண்ணீரிலும் கார் ஓட்டலாம்!" - ஒரு கிராமத்து விஞ்ஞானியின் சவால்

"இனி தண்ணீரிலும் கார் ஓட்டலாம்!" - ஒரு கிராமத்து விஞ்ஞானியின் சவால்

கா.சு.வேலாயுதன்

“சும்மா இந்தூருக்கும் அந்தூருக்குமா ஓடிக்கிட்டே கெடக்கே... வண்டி என்ன தண்ணீலயா ஓடுது?”ஊருப் பக்கம் இப்போதும் இப்படிக் கேட்பவர்கள் உண்டு. அவர்கள் இனிமேல் அப்படிக் கேட்க முடியாது. ஏனென்று கேட்டால், தண்ணியிலும் வண்டி ஓட்ட முடியும் என்று கண்டுபிடித்து விட்டதாகச் சொல்கிறார் சவுந்தரராஜன்!

“தண்ணியில ஓடுற இன்ஜினைக் கண்டு பிடிச்சிருக்காராமே... அவர் வீடு எங்க இருக்கு?” என்று கேட்டாலே பலரும் சவுந்தரராஜன் வீட்டைக் காண்பித்துவிடு கிறார்கள். ஒரு புதிய தொழில் நுட்பத்தை உலகுக்கு அறிமுகப்படுத்தும் நாள் நெருங்கி விட்டதாகச் சவால் விடுகிறார் சவுந்தரராஜன். பதினோறாம் வகுப்பு மட்டுமே படித்த இவர், தனது கண்டுபிடிப்புக்கு ஜப்பான் அரசின் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறார். திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோயில், மூலனூர் சாலையில் உள்ள சிறிய வீட்டில் வசிக்கும் அந்தக் கிராமத்து விஞ்ஞானியை நேரில் சந்தித்தேன்.

“சொந்த ஊர் புள்ளசெல்லி பாளையம். அப்பா, அம்மாவுக்கு நான் ஒரே பையன். கவுருமென்டு ஸ்கூல்லதான் படிச்சேன். குடும்பக் கஷ்டம் காரணமா, ப்ளஸ் ஒன்லேயே படிப்பை நிறுத்திட்டேன். அப்பாவோட பங்காளிங்க கூட்டா வச்சிருந்த விசைத்தறிகளைக் கவனிக்க வேண்டியதாயிடுச்சு. கொஞ்ச நாள்ல அதுலயும் பங்கு பிரிச்சிட்டாங்க. வெவ்வேற தொழில்கள்ல இறங்கினேன். நண்பரோட சேர்ந்து பெட்ஷீட், தலையணையை சுலபமா செய்யற மெஷின்களை உருவாக்கினேன். அது நல்ல லாபம் தந்துச்சு. ஒரு கட்டத்துல, அதை என் பார்ட்னருக்கே விட்டுட்டேன். ஆராய்ச்சி மேல எனக்கு இருந்த ஆர்வம்தான் இதுக்கெல்லாம் காரணம்” என்று சொல்லும் சவுந்தரராஜன், விசைத்தறிகள் தொடங்கி, வீட்டில் இருந்த வில்லீஸ் ஜீப் வரை எல்லாவற்றையும் அக்குவேறு ஆணிவேறாகப் பிரித்து ஆராயும் பழக்கம் கொண்டவராகவே இருந்திருக்கிறார். அந்த உந்துதல் பல அரிய கண்டுபிடிப்புகளுக்கு இவருக்குத் துணை நின்றது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in